news-details
சிறப்புக்கட்டுரை
ஆடுகளின் வாசனையில்... கார்மல் அடிகளார்

அந்தத் தெய்வத்தைப் பார்க்கிற பாக்கியம் கிடைக்குமான்னு ஏங்குனதுண்டு. ஆனா, அந்த தேவமாதா புண்ணியத்துல இன்னைக்கு நிறைவேறிடுச்சி! ஆமா, நான் சொல்றது சத்தியம்! எங்க பாதரு எங்க ஊர் மக்களை வாழ வெச்ச தெய்வம்என்று அந்த அம்மையார் மேற்கத்தி மாவட்டத் தமிழில் இழுத்துச் சொன்னபோது கண்களிலிருந்து அனிச்சையாக நீர் கொட்டியது.

அறுபது வயது மதிக்கத்தக்க அந்த  அம்மையார், தந்தை கார்மல் அடிகளாரின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக  அடிகளாரின் சொந்த ஊரான இராசாவூர் என்ற கிராமத்திற்கு வந்திருந்தார். இராசாவூரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குமரி மாவட்டத்தின் மேற்கத்தி மலையகமான  கடையாலுமூடு என்ற ஊரிலிருந்து ஊர்தி அமர்த்தி வந்திருந்தவர்களில் ஒருவர் அந்த அம்மையார், தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என்ற நிலையிலும், தந்தையை எப்படியாவது ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்திருப்பதாகக் கூறினார். அவர் சொல்லில்  புதைந்திருந்த அன்பில் உண்மை மட்டுமே வெளிப்பட்டது

இராசாவூரின் புகழ்பெற்ற திருத்தலமான புனித மிக்கேல் அதிதூதர் பேராலயத்திலிருந்து கிளைப்பங்கான வடக்கு இராசாவூர் புனித காணிக்கை அன்னை ஆலயத்தை நோக்கி வரவேற்புப் பவனி செல்ல ஆயத்தமான நேரம்ஊர் பொதுமக்கள்  புடைசூழ கூடியிருந்த அந்த நேரம் உணர்வுகளின் சங்கமமாகக் காட்சியளித்தது. தொலைதூரத்திலிருந்து வண்டி பிடித்துவந்த பலரும் தந்தை அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் முண்டியடித்துக் கொண்டு அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த தந்தை அவர்கள் வந்திருந்த மக்களின் அன்பு வளையத்திற்குள் சிக்குண்டு கிடந்தார். பொக்கை வாய் மலர முதுமையின் நடுக்கங்களின் ஊடாகச் சலிக்காமல் அவர்களுக்கு ஆசிர் அளித்துக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியை ஊர் மக்களோடு நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த ஆயர் பெருமக்களும் பங்குப் பணியாளர்களும் நெகிழ்ச்சியுடன் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர்.

இந்தக் காட்சி மட்டுமே நூற்றாண்டின் நிறைவுநாளில் நின்றவாறு இன்றுவரை இறைப்பணியாற்ற இயங்கிக்கொண்டிருக்கும் தந்தை கார்மல் அடிகளாரின் இயல்பை எடுத்துரைக்கும் நிகழ்சாட்சியமாகத் திகழ்ந்தது.

இவர்தான் தந்தை கார்மல்!

அன்பின் நிறைகுடம்! சொல்லொண்ணா அன்புக்குச் சொந்தக்காரர்! கன்னியாகுமரி மாவட்டம் இராசாவூர் என்னும் வயலும் வயல் சார்ந்த மருத நில மண்ணில் 1925-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 16-ஆம் நாள் பிறந்தார்.

செல்வத்திற்குக் குறைவில்லாத வேளாண்மை சார்ந்த கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தவர் என்றாலும், கல்வியோடு கழனிப் பணிகளையும் கவனித்துக் கொண்டிருந்த பொழுதுதான் இறையழைப்பிற்கிணங்க கோட்டாறு குருமடத்தில் இணைந்தார்.

மேய்ச்சல் நிலத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவருக்கு, இறையியல் நிலத்தில் ஆடுகளை  மேய்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. இராசாவூர் பங்குத்தளத்தின் முதல் இறைப்பணியாளராக உருவான  கார்மல் அடிகளாருக்கு ஒரு  தனித்துவமான குணமிருந்ததுஇடக்கை அறியாமல் வலக் கையால் வாரி வழங்கும் குணம்! ஏழைபாழைகள் என்றால் அவரது இரக்கத்தின் கரங்கள் துடிக்கத் தொடங்கிவிடும். சட்டைப் பைக்குள் நுழையும் கரங்களுக்கு எண்ணிக்கை எப்படித் தெரியும்? அப்படித் தான் கொடுத்துக் கொடுத்து ஏழைகளின் வாழ்க்கையில்  இன்பத்தைப் பரவச் செய்வார்.

அவர் ஒரு நட்பு விரும்பி! இளையோர் என்றாலும், தன்னைவிட மூப்பு என்றாலும் அனைவரையும்நண்பரேஎன்று அழைப்பதன் மூலமாகத் தனது நட்பு வட்டத்தை இரட்டிப்பாக்கியவர். அந்த நட்புக்குச் சாதி, மதம் என்ற சாயமும் கிடையாது. அனைவரிடத்திலும் நட்பு பாராட்டினார். அவருக்குள் இருந்த அன்பும் நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. ஆனால், அவரது அன்பான பேச்சைவிட செயல்களே அவரது அடையாளமாக மாறியது.

அவர் ஒரு திறந்த புத்தகம்: வெளிநாட்டவர்களின் நட்பைப் பெற்ற அவர் அந்த நட்பின் மூலமாக இருப்போருக்கும் இல்லாதவர்களுக்குமான பொருளியல் பாலமாகத் திகழவேண்டும் என்று நினைத்தார். தான் பணியாற்றிய பங்குத்தளங்களில் வாழும் மக்களின் இன்னல்களைப் போக்க இரக்கத்தின் கரங்களை இயன்றவரைக்கும் நீட்டினார். அவரால் கல்வி, வேலைவாய்ப்புப் பெற்ற விளிம்பு நிலை மக்களின் உயர்வில் இன்பத்தைக் கண்டார்.

பொருளாதாரப் பிரச்சினைகள், கல்வி உதவி, குடியிருப்புப் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு ஆகிய பல பிரச்சினைகளின் நிமித்தமாக நித்தம் நித்தம் தன்னைத் தேடி வருவோருக்காகத் தட்டாமல் திறந்தது அவரது கதவு! கேட்காமல் கிடைத்தன உதவிகள்ஆனாலும், எந்த நிலையிலும் தன்னை உயர்த்தவில்லை. ‘தாழ்ச்சியே எழுச்சிஎன்று நம்பினார். இன்றுவரைக்கும்நான் உலகம் அறியாத சாமானியன்என்றுதான் கூறுவார். அவர் ஆசைப்பட்டிருந்தால் வெளிநாட்டு நண்பர்களின் அழைப்பை ஏற்று உலகத்தின் அனைத்து மூலைகளுக்கும் சென்று திரும்பியிருக்க முடியும். ஆனால், அவர் பங்குத்தளத்தை விட்டு வேறு எங்குச் செல்வதையும் விரும்பாதவர்.

திருவிழாக்காலங்களில் ஏழைபாழைகளுக்கு வழங்குவதற்காக அவர் இருப்பிடத்தில் துணிமணி மூட்டைகள் காட்சியளிக்கும். ஆனால், பிறிதொரு  சமயங்களில்  மாற்று உடையில்லாமல் இடுப்பில்  போர்வையைக் கட்டிக்கொண்டிருக்கும் காட்சிகளையும் அருள்பணியாளர்கள் சிலர் பார்த்து வியந்திருக்கின்றனர்.

மக்களோடு மக்களாய் வாழ்ந்தார். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணியாளர்களுக்கு விடுத்த வேண்டுகோளில்மேய்ப்பர்கள் ஆடுகளின் வாசனையில்தான் வாழவேண்டும்என்று கேட்டுக் கொண்டார். அந்தச் சொல்லாடல் தந்தை கார்மல் அடிகளாருக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியது.   

கோட்டாறு பங்குத்தளத்தில் முதல் பணியைத் தொடங்கிய அருள்தந்தை பின்னர் மிடாலம், இராசாக்கமங்கலம்துறை, வாணியக்குடி, காரங்காடு, கீழ இராமன்புதூர், கீழ் ஆசாரிபள்ளம், கடையால், ஆரோக்கியபுரம், நல்லாயன்புரம், சூழால், புதுக்கடை, மற்றும் கொட்டில்பாடு ஆகிய பங்குத்தளங்களில் தனது இறைப்பணியைச் செவ்வனே செய்து முடித்திருந்தார்.

பிட்டுக்கொடுத்த அப்பத்திற்கு அப்பால் பங்கு மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்து, பங்கு மக்களின் இதயத்தைத் தொட்டெடுத்து வாழ்ந்தார். அனைவரின் வாழ்க்கைப் பின்னணியையும் உணர்ந்து அதற்கேற்றவாறு செயலாற்றியவர்

புற்று நோயால் பாத்திக்கப்பட்ட கடையாலுமூடைச் சேர்ந்த அந்த அம்மையார் மேலும் கூறுகையில், “ஆண்டவன் புண்ணியத்துல எங்கக் குடும் பத்துக்கு எந்தக் குறைவும் கிடையாது. அதனால பாதர்கிட்டயிருந்து எந்த உதவியும் எங்களுக்குத் தேவைப்படலை. ஆனா, எங்க ஊர்ல இருக்கிற இல்லாத சனங்களைத் தூக்கிப்பிடிச்சவரு இவருஎன்று கூறினார்பங்குமக்களைத் தன் நெஞ்சாங் கூட்டுக்குள் வைத்துக் காத்துக்கொண்டதால்தான் இன்றுவரைக்கும் அந்த மக்கள் அவரைக் காணத் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.  

1956-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை மெய்யங்கடவுளை மையமாகக் கொண்டு மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரது பாடு ஆடுகளோடு கழிந்தது. தான் வேளாண் நிலத்தில் மந்தையோடு பட்ட அனுபவங்களின் பிறிதொரு தொகுப்பாக மறைபரப்புப்பணி அமைந்ததை  இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

இறையியல் தத்துவங்களை எதார்த்தமாக மக்களிடம் எடுத்துச்சென்றார். சென்ற இடத்திலெல்லாம் தனது அன்பு  முத்திரையைப்  பதித்துப் பங்கு மக்களின் வாழ்க்கையோடு சங்கமித்தார்.

எல்லா நிலையிலும் சிரிக்கத் தெரிந்த முகம்!

எந்த நிலையிலும் கொடுக்கத் தெரிந்த குணம்!

எந்த நிலையிலும் தன்னைத் தாழ்த்தத் தெரிந்த மனம்!

இன்று நூறாண்டை முடித்து நூற்றியோராவது ஆண்டில்  அடியெடுத்து  வைக்கும் அருள் தந்தை கார்மல் அவர்களை அனைவரும்   கொண்டாடுவோம்.