news-details
சிறப்புக்கட்டுரை
“எல்லாரையும் சமூகத்திலே மாண்புமிக்கவர்களாக உயர்த்த வேண்டும்!”

மதுரை உயர்மறைமாவட்டப் புதிய பேராயர் மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களுடன் ஒரு நேர்காணல்!

அன்புப் பேராயர் அவர்களே! முதலாவதாக, தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழானநம் வாழ்வுவார இதழின் நிர்வாகத்தினர், வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துகளையும் செபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்! மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகத் திருத்தந்தையால் தாங்கள் நியமிக்கப்பட்டது குறித்துத் தங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

உணர்வுகள் என்று சொல்லும்போது, தொடக்கத்தில் ஒரு குழப்ப நிலையாகத்தான் இருந்தது. அதாவது, மதுரை உயர்மறைமாவட்டத் திருத்தூது நிர்வாகியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று திருத்தந்தையின் இந்தியத் தூதர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டபோது, ‘இது தற்காலிகமானதுஎன்றுதான் குறிப்பிட்டார். ஆகவே, மகிழ்வோடு அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால், தற்போது மீண்டுமாகத் தொலைப்பேசியில் இந்த நியமனம் குறித்துத் தொடர்பு கொண்டபோது நான் வியப்படைந்தேன்! இது நான் எதிர்பார்க்காத ஒன்று. என்னுடைய பணிகள் திருமுழுக்கு யோவானுடைய பணிகளைப் போன்று வரவிருக்கும் பேராயருக்கான வழியை ஆயத்தம் செய்யும், தயாரிப்புப் பணியாகத்தான் நான் முதலிலே இதை ஏற்றுக்கொண்டேன். அதில் நான் தெளிவாகவும் இருந்தேன். மதுரை உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்களிடமும் இச் செய்தியை நான் முன்பே தெளிவாகப் பகிர்ந்துகொண்டேன். ஆனால், அங்கேயே பேராயராக நியமனம் பெறும்போது எனக்கு அது பெரும் வியப்பாகத்தான் இருந்தது. ‘முன்பு தற்காலிகமான பணி என்றுதானே குறிப்பிட்டீர்கள்என்று திருத்தந்தையின் இந்தியத் தூதரிடம் வினவியபோது, ‘இது திருத்தந்தையின் ஆணைஎன்று கூறினார். ஆகவே, அதனை வியப்போடு ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சூழலாகத்தான் அமைந்தது.”

கடந்த எட்டு மாதங்களாக மதுரை உயர்மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாகப் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி சில வார்த்தைகள்...

அது ஒரு நல்ல அனுபவமாகத்தான் அமைந்தது. மதுரையில் குருத்துவக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றிய காலங்களில் மதுரையைப் பற்றி அறிவேன். ஆனால், மதுரை உயர்மறைமாவட்டக் குருக்கள், சிறப்பாக நிர்வாகப் பணிகளை அதிகமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது அங்கு நியமனம் பெற்றபோது இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. குருக்கள் அனைவரும் பாசமாக இருந்தார்கள்; நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள். சில பிரச்சினைகள் இருந்தன; அதில் தீர்வு காணவேண்டும் என்பதில் எல்லாருமே ஆர்வமாக இருந்தார்கள். மேலும், அவர்கள் மத்தியிலே ஒருநீதி உணர்வுஇருந்ததை என்னால் காண முடிந்தது. அதாவது, ‘நமது மறைமாவட்டம் நன்றாக இருக்கவேண்டும்என்ற ஓர் உணர்வு அவர்களிடத்திலே மேலோங்கியிருந்தது. நான் அவ்வப்போது அங்குச் சென்றாலும், பணிகள் சற்றுக் கடினமாக அமைந்தாலும்மகிழ்வாக  மன நிறைவாகத்தான் இருந்ததுபணிகள் அத்தகைய மகிழ்வைத் தருவதற்கு குருக்களே காரணமாக அமைந்தார்கள்.”

பாளை மறைமாவட்டத்தின் ஆயராக ஆற்றிய பணிகளை நன்றியோடு நினைவுகூரும் நீங்கள், பேராயராகப் பணி உயர்வு பெறும் இவ்வேளையில், பாளையங்கோட்டை  இறைச்சமூகத்திற்குத் தாங்கள் விடுக்கும் செய்தி...

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகள், 8 மாதங்களாகப் பணியாற்றி இருக்கிறேன். அது பெரும் மகிழ்ச்சியான அனுபவம். அது என்னுடைய சொந்த மறைமாவட்டம். அதே மறைமாவட்டத்தில் குருவாக இருந்தேன்; பின்பு முதன்மைக் குருவாகப் பணியாற்றினேன். ஆகவே, பங்குகளை எல்லாம் நன்கு அறிவேன். அருள்பணியாளர்களை நன்கு அறிவேன். எனவே, பெரும் மகிழ்வோடு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அது கடவுள் எனக்குக் கொடுத்த ஒரு கொடையாகவே பார்க்கிறேன். அது ஓர் இறைப்பணி. இந்தக் காலச்சூழலில் அப்பணியை மேற்கொள்ள இறைவன் எனக்குக் கொடுத்த ஒரு வாய்ப்பு. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு இருதயராஜ் அவர்கள் தொடக்கக் காலத்திலிருந்தே மிகச் சிறப்பாகப் பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். அதன்பிறகு வந்த மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்கள் இன்னும் அடுத்தத் தளத்திற்குச் சிறப்பாக எடுத்துச் சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து நான் கடந்த 5 ஆண்டுகள், 8 மாதங்கள் இந்தப் பணிகளைத் திறம்படச் செய்ய இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்திருந்தார். அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், இறைமக்கள் என யாவரும் இணைந்து மேற்கொண்ட பல பணிகள் குறிப்பிடத்தக்கவை. அனைவருடைய நல்ல ஒத்துழைப்பும் நிறைவான அன்பும் கிடைக்கப் பெற்றேன். ஆகவே, பணிகள் மேம்பட வாய்ப்புக் கிட்டியது. அத்தகைய பணிகளைத் தொடர்ந்து இம்மண்ணிலே நிகழ்த்த வேண்டும் என நான் இறைவனை வேண்டுகிறேன். என்னை மிகவும் நேசித்த, பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய பாளை மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கும் இருபால் துறவியருக்கும் இறைமக்களுக்கும் எனது நன்றியையும் செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன். நான் மேற்கொண்டிருக்கும் இந்தப் புதிய பணிக்காகவும், மதுரை உயர்மறைமாவட்டப் பணித்தளத்தில் பணிகள் திறம்பட அமைந்திடவும் எனக்காக வேண்டிக்கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.”

தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டின் மறைபரப்புப் பணியின் மையத்தளமாக விளங்கிய மதுரை மறைத்தளத்தில் இனிவரும் காலங்களில் தாங்கள் முன்னெடுக்கவிருக்கும் இறையாட்சிப் பணிகளைப் பற்றி உங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

மதுரை உயர்மறைமாவட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பணித்தளம். தென் தமிழ்நாட்டின் மறைமாவட்டங்களிலேயே தொன்மையானது திருச்சி என்று கூறினாலும், சேசு சபை குருக்களால் உருவாக்கப்பட்ட இந்த மதுரை மறைபரப்புப் பணித்தளம்தான் தென்னகப் பகுதியில் முதல் மறைபரப்புப் பணித்தளமாக விளங்கியது. இன்று உருவாகியிருக்கும் அத்தனை மறைமாவட்டங்களும் இவர்களுடைய மறைபரப்புப் பணியின் விளைச்சல் என்றே கூற வேண்டும். ஆகவே, சேசு சபையாரின் பணிகள் இங்கு அளப்பரிய பணிகள். மேலை நாடுகளிலிருந்து வந்த பல சேசு சபையார் இங்குப் பணியாற்றினாலும் இராபர்ட் தெ நொபிலி, அருளானந்தர், கான்ஸ்டன்டைன் பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவர் ஆகியோரின் பணிகள் இங்குக் குறிப்பிடத்தக்கவை. தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை உள்வாங்கிய இறையாட்சிப் பணிகளை அவர்கள் மேற்கொண்டார்கள். மக்களுடைய வாழ்வோடு தங்களுடைய பணி வாழ்வை இணைத்துக்கொண்டார்கள். பிற மதத்தவரோடும் நல்லுறவு கொண்டவர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். அவர்களின் சமூக, ஆன்மிக, கலாச்சார, தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிப் பணிகள் மகத்தானவை. இத்தகைய கூறுகளால்தான் கிறித்தவ மதிப்பீடுகளை அவர்களால் எளிதாக எல்லாத் தளங்களுக்கும் எடுத்துச் செல்ல முடிந்தது.

ஆனால், இன்றைய காலச்சூழலில் நேரடியாக மறைபரப்புப் பணி என்பது சவால் நிறைந்தது. ஆனால், மறைபரப்புப் பணிக்காக அழைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே நம்முடைய முன்னோர்களின் மறைப்பணிக் கட்டமைப்புகளை உள்வாங்கி மீண்டும் மொழி, கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகள் வயிலாகக் கிறித்தவ மதிப்பீடுகளை எடுத்துச் செல்லக்கூடிய வழிமுறைகளைக் காணவேண்டும். மற்ற மதத்தவரோடு உரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்பதும் எனது ஆவலாக இருக்கிறது. மேலும், சேசு சபை மறைப்பணியாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக நான் பார்ப்பது புனித அருளானந்தர். அவர் இவ்வுயர் மறைமாவட்டத்தின் பாதுகாவலர். அவருடைய மறைப்பணி செயல்பாடு என்பதுதியாகம்நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. இறையரசு மதிப்பீடுகளுக்காகத் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தவர்; மறைச்சாட்சியானவர். அத்தகைய தியாக மனப்பான்மை இன்றைய மறைபரப்புப் பணியாளர்களாகிய நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மலரவேண்டும் என ஆசைப்படுகிறேன். அத்தகைய எண்ணத்தில் மறைபரப்புப் பணியை மேற்கொள்கின்றபோது, பலரையும் நம்மை நோக்கி ஈர்க்க முடியும் என்று உளமார நம்புகிறேன்.”

கலை, இலக்கியம், தொன்மையான கலாச்சாரம், உலகறியும் தமிழர் பண்பாடு, மதநல்லிணக்கம் எனப் பெருமைகொள்ளும் மதுரை மண்ணுக்கானபல்சமய உறவைமேம்படுத்தத் தாங்கள் கொண்டிருக்கும் கனவுகள்...

நீங்கள் குறிப்பிட்டதுபோல, இந்த மதுரை மறைப்பணித்தளம் பல்சமய உரையாடலுக்கு மிகவும் பெயர் பெற்றது. சேசு சபை மறைப்பணியாளர்கள் காலந்தொட்டு இன்றுவரை, இங்கு மதநல்லிணக்கம் என்பது பலராலும் வரவேற்கத்தக்கதாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருக்கிறது. பல்வேறு மறைத்தளங்களுக்கு எடுத்துக்காட்டான ஒரு செயல்பாடாக இங்கு அது பார்க்கப்படுகிறது. அப்பணிகள் தொடரவேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம். மதத்தைக் கடந்து மக்களின் வாழ்வாதார மேம்பாடு, மனிதநேயம், மனித உரிமைகள் எனப் பல தளங்களில் மக்களுக்கான அடிப்படைக் கூறுகளைப் பெறுவதற்கு இன்று நல் மனம் கொண்டோர் மதத்தைக் கடந்து மனிதநேயத்தில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. ஆகவே, மதநல்லிணக்கம் என்பது பெயரளவில் இல்லாமல், உறவாலும் உணர்வாலும் ஒன்றிக்கக்கூடிய வலுவான ஒரு கூட்டமைப்பாக அது மலர வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. ஒவ்வொரு மதத்திலும் இருக்கக்கூடிய வளமான கூறுகளை, தன்மைகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு புரிதலை மற்ற மதத் தலைவர்களோடு இணைந்து பயணிக்கக் கூடிய ஒரு சமூகத்தைப் படைக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருக்கிறது. அத்தகைய உறவு, பல சமூகப் பணிகளுக்கு வழிகாட்டும் என்பதால் அதை முன்னெடுக்க மனதார விருப்பம் கொண்டிருக்கிறேன். மதுரை மண்ணுக்கான இந்தப் பல்சமயக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்னைச் சந்தித்தார்கள். அது மிகவும் மகிழ்ச்சிக்குரிய தருணமாக இருந்தது. அவர்களிடமும் நான் இதை வலியுறுத்தியிருக்கிறேன். ‘இணைந்து பயணிப்போம்; சேர்ந்து பல பணிகளை முன்னெடுப்போம்என உறுதி அளித்திருக்கிறேன். மக்களின் மாண்பு காக்கப்பட நாம் ஒன்றிணைய வேண்டும் என அவர்களிடத்திலே வலியுறுத்தியிருக்கிறேன்.”

ஆன்மிகம் செழிக்கும் மதுரை மறைத்தளத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இலக்கு மக்களின் மேம்பாட்டுக்கான தங்களின் செயல்திட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுங்களேன்...

இது இன்று எல்லாப் பணித்தளங்களிலும் நாம் சந்திக்கக்கூடிய ஒரு பெரும் சவால். அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பது மட்டுமல்ல, அந்த நம்பிக்கை செயல் வடிவம் பெறக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதிலே நான் உறுதியாக இருக்கிறேன். திருத்தூதர் யாக்கோபு குறிப்பிடுவதுபோல, செயல் இல்லாத நம்பிக்கை செத்ததாகிப் போய்விடும்.’ இவ்வேளையில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் வெளிக்கொணர்ந்தகடவுள் அன்பாக இருக்கிறார்என்னும் திருத்தூது மடலில் அவர் குறிப்பிடுவதை நினைவுகூர்கிறேன். அதாவது, ‘நாம் ஆண்டவரை அன்பு செய்கிறோம் என்றால், பிறரை அன்பு செய்யாமல், தேவையில் இருப்போருக்கு உதவி செய்யாமல் நம்மால் இருக்க முடியாதுஎன்று குறிப்பிடுவார். ஆகவே, தேவையில் இருப்பவருக்கு உதவி என்பது நம்முடைய கிறித்தவ அடிப்படைப் பண்பாகிறது. இப்பணியை மதுரை உயர்மறைமாவட்டத்தில் மேற்கொள்ள தமிழ்நாடு ஆயர் பேரவை முன்னெடுத்திருக்கும் சமூக-பொருளாதாரக் கணக்கீட்டுத் தரவுகள் கிடைக்கின்றபோது மக்களுடைய வாழ்வாதாரம், அடிப்படைத் தேவை, எதிர்காலத் திட்டம் என்பவை எல்லாம் தெளிவுபடுத்தப்பட்டு மறைமாவட்ட மேய்ப்புப்பணி சார்ந்த அமைப்புகள், பல்நோக்குச் சமூக மன்றம், மற்றப் பணிக்குழுக்கள் ஒத்துழைப்போடு கல்விப் பணி, சமூக மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் நான் இவ்வேளையில் குறிப்பிட விரும்புகிறேன். அடிப்படையில் அனைத்துப் பணிகளும் எல்லாரையும் சமூகத்திலே மாண்புமிக்கவர்களாக உயர்த்தவேண்டும் என்பதுதான் எனது அடிப்படை நோக்கமாக இருக்கிறது.”

யூபிலி 2025-ஆம் ஆண்டில் பயணிக்கும் நாம், ‘கூட்டொருங்கியக்கத் திரு அவையாகமலர மதுரை இறைச்சமூகத்திற்குத் தாங்கள் விடுக்கும் அழைப்பு என்ன?

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலத்தின் தேவை அறிந்து திரு அவையின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்குத் தந்த ஓர் அற்புதமான அடித்தளம் இந்த யூபிலி-2025 கொண்டாட்டம். இதன் மையச்சிந்தனையாகஎதிர்நோக்கின் திருப்பயணிகளாக... கூட்டொருங்கியக்கத் திரு அவையாகப் பயணிப்போம்என்று வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் கூடிய இந்த மாமன்றம் ஆவணங்களை வெளிக்கொணரக் கூடிய மன்றமாக அல்லாமல், செயல்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய ஒரு சிறப்பு மாமன்றமாக அமைந்தது. அதன் செயல்திட்டங்களாகக் குறிப்பிடத்தக்க வகையில், திரு அவையில் எல்லாரையும் மதிக்கவேண்டும், எல்லாரிடமும் உறவாட வேண்டும், எல்லாருடைய கருத்தையும் கேட்டுப்பெற வேண்டும் என்பன அடிப்படையான கூறுகளாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வழிமுறையில் குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து தூய ஆவியின் தூண்டுதலைப் பெற்று, மறைமாவட்ட அமைப்புகள் மூலம் சிறப்பான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். ஆகவே, அதன் அடிப்படையில் ஒன்றாக இணைந்து, ஆன்மிகத்தில் வளர்ந்து பல திட்டங்களை உயர்மறைமாவட்டத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள அனைவரும் இணைந்து பயணிக்க விரும்புகிறேன்.

இதன் நீட்சியாக, செயல்திட்டமாக ஏற்கெனவே மறைமாவட்டங்களில், பங்குத்தளங்களில் இருக்கின்ற அமைப்புகளை வலுப்படுத்தவேண்டும். நமது புதிய திருத்தந்தை லியோ அவர்கள் திருத்தந்தை பிரான்சிசின் வழிநின்றுதிரு அவை புனிதர்களின் கூடாரம் அல்ல; பாவிகளின் மருத்துவமனைஎன்று குறிப்பிடுகிறார். அதாவது, எல்லாரையும் உள்ளடக்கிய, இயேசு குறிப்பிட்டதுபோலநீதிமான்களை அல்ல, பாவிகளையே தேடி வந்தேன்என்னும் சிந்தனையில் யாவரையும் உள்ளடக்கிய திரு அவையை உருவாக்க எல்லாரும் இணைந்து செயல்பட அழைக்கிறேன்.”

பொன்விழா காணும்நம் வாழ்வுவார இதழின் வாசகர்களுக்குத் தங்களுடைய செய்தி....

நம் வாழ்வு வார இதழ் பொன்விழா காண்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பொன்விழாக் கொண்டாட்டத்தில் நானும் கலந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. இன்றைய காலச்சூழலில் தொலைத்தொடர்பு அல்லது ஊடகத் தொடர்பு என்பது தவிர்க்க முடியாதது. இன்னும் குறிப்பாக, எண்ணிமத் தொழில்நுட்பத்தில் இன்று ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள அவசியமானதாக ஊடகம் பார்க்கப்படுகிறது. அந்தக் கோணத்தில்நம் வாழ்வுவார இதழ் அப்பணிகளைத் திறம்பட மேற்கொண்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக, ‘நம் வாழ்வுவார இதழில் அண்மைக் காலங்களில் வெளிவரும் ஆசிரியர் பக்க கட்டுரை, மற்ற அரசியல்-சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள் யாவும் மிகச் சிறப்பாக இருப்பது பாராட்டுதற்குரியது. ஆன்மிகத்தை மையம் கொண்ட நமது வாழ்வானது, காலச்சூழலுக்கு ஏற்ப சமூக-அரசியல் தளத்தில் நாம் தெளிவுபெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை முன்வைத்து, படைப்புகள் வெளிவருவது பாராட்டுதற்குரியது. உளவியல், தன்னம்பிக்கை கட்டுரைகள், மரியன்னை பக்திமுயற்சி, திருவழிபாட்டுக் குறிப்புகள், மறையுரை, உலகளாவிய திரு அவைச் செய்திகள் எனப் பல மலர்கள் கோர்த்த பூமாலையாககதம்பமாகஇம்மலர் மணம் வீசுவது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

ஒரு சிறு இதழாக இருந்தாலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது வியப்பளிக்கிறது. இதற்கான உங்கள் பணிகள் குறிப்பிடத்தக்கவை. இப்பணியைத் திறம்பட மேற்கொண்டிருக்கும் முதன்மை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் குழு உறுப்பினர்களை மனதாரப் பாராட்டுகிறேன். இது இன்னுமாக வளர வேண்டும்; பல்வேறு மக்களுடைய கரங்களிலும் குடும்பங்களிலும் இது தவழ வேண்டும்.

தற்போதுNamvazhvu E-news paperவெளிக்கொணர இருப்பதற்கு எனது வாழ்த்துகள்! இது இன்று காலத்தின் தேவையாகவே பார்க்கிறேன். இளையோர் மற்றும் எண்ணிமத் தொழில்நுட்பத்தில் பயணிக்கும் யாவரையும் நாம் சென்றடைய இந்த முயற்சி பயனளிக்கும் என நம்புகிறேன். உங்களுடைய பணி தொடர வாழ்த்துகிறேன்.

தமிழ்நாடு கத்தோலிக்க இறைமக்கள் இவ்விதழுக்குப் பேராதரவு நல்குவதோடு, இதனுடைய வளர்ச்சியில் நீங்களும் பங்களிப்புச் செய்ய அன்போடு வேண்டுகிறேன். எல்லாருடைய கரங்களிலும் இவ்விதழ் தவழவேண்டும்; வாசிப்பு மலர வேண்டும்; புதிய சமூகம் புலரவேண்டும்! என ஆசிக்கிறேன்.”

இறுதியாக, பேராயர் அவர்களே! மதுரை உயர்மறைமாவட்டத்தில் தங்களின் பணி சிறக்க மீண்டும்நம் வாழ்வுதனது வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்குகிறது.