2013-ஆம் ஆண்டு திருத்தந்தையாகப் பொறுப்பேற்றதிலிருந்து திரு அவையைக் கூட்டியக்கத் திரு அவையாக இயங்கச் செய்ய திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்டுள்ள செயல்திட்டங்களில் சிறப்பிடம் பெறுவது பெண்களுக்கான தலைமைத்துவமும் பாலின சமத்துவமும் என்றால் அது மிகையாகாது.
2024-ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் 27-ஆம் நாள் நிறைவுபெற்ற 16-வது அகில உலக ஆயர் மாமன்றத்தின் நிறைவில், ஆயர் மாமன்ற உயர்மட்டக் குழுவை (General Secretariat of the synod)
திருத்தந்தை அறிவித்தபோது,
ஆயர் அல்லாத இரண்டு நபர்களைத் (பெண்களை) திருத்தந்தை அறிவித்தார். மொத்தம் 17 நபர்கள் கொண்ட இந்த அமைப்பில் 15 ஆயர்களுடன்
ஆயர் அல்லாதவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் பெண்கள் என்ற தனிச்சிறப்பில், ஒருவர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த மரியா லியா ஜெர்லினோ பொதுநிலைப் பெண்மணியாவார். மற்றொருவர் ஆளுநரின் மறைப்பரப்பு அருள்சகோதரிகள் அவையைச் சார்ந்த முன்னாள் தலைமை அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா ஆவார். திருத்தந்தையின்
சமத்துவப் பார்வைக்கும், கூட்டியக்கத் திரு அவையின் பாலினச் சமத்துவத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இதுவரை
திரு அவையின் தலைமைத்துவ வரலாற்றில், பணிநிலை பங்களிப்பு சமத்துவத் திரு அவைக்கான முன் முயற்சியில் இச்செயல்பாடு மிகவும் போற்றுதற்குரிய செயல்பாடாக அமைந்திருந்தது.
இந்தச்
சூழலில்தான் 2025-ஆம் ஆண்டு யூபிலி ஆண்டாக மலர்ந்திருக்கும் வேளையில் அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா அவர்களை சனவரி 6-ஆம் தேதி திருக்காட்சிப் பெருவிழா அன்று துறவியர் மற்றும் அர்ப் பணிக்கப்பட்டோரின் பேராயத்துக்கான தலைவராகத் திருத்தந்தை நியமித்துள்ளார். திரு அவையின் வரலாற்றில் 2025 ஆண்டு காலப் பயணத்தில் கூட்டியக்கத் திரு அவையைச் செயல்பாட்டு நிலைக்குக் கொணரும் நம் திருத்தந்தையின் செயல்திட்டங்களில் இது ஒரு புரட்சி என்றே கருதப்படுகிறது. இதுவரை கர்தினால்களும் பேராயர்களும் ஆயர்களும் மட்டுமே வத்திக்கான் திருப்பீடப் பேராயங்களுக்குத் (Vatican Dicastries) தலைவர்களாக
நியமிக்கப்பட்டிருந்த
நிலையில், இப்போது ஒரு பெண்ணை, ஓர் அருள்சகோதரியைத் துறவியர் பேராயத்துக்கான தலைமைப் பொறுப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் நியமனம் செய்திருப்பது, இந்த யூபிலி ஆண்டில் அவர் காட்டும் சமத்துவப் பார்வை, பெண்ணிய மாண்பு போற்றப்பட முன்வைக்கும் வழி காட்டுதல் எனப் பெருமையோடு குறிப்பிட வேண்டும். 2023-ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பேராயத்தின் செயலராக அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா அவர்கள் பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு
அவைச் சட்டத்தின் வழி காட்டுதல்படி திருப்பீடப் பேராயங்களுக்கான தலைமைப் பொறுப்பில் ஆயர் நிலையில் இருப்பவர்களே நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற நிலையை மதிக்கும் வண்ணம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சலேசியத் துறவியான கர்தினால் ஏஞ்சல் பெர்னாண்டஸ் அந்திரே அவர்களை, துறவியர் மற்றும் அர்ப்பணிக்கப்பட்டோரின் திருப்பீடப் பேராயத்துக்கு இணைத்தலைவராக (pro-perfect) சனவரி
6-ஆம் தேதி அறிவித்துள்ளார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். அருள்சகோதரி தலைவராகவும் (Prefect), கர்தினால்
அவர்கள் இணைத்தலைவராகவும் (pro-perfect) திரு அவையில்
திருப்பீடப் பேராயங்களில் இதுவரை நிகழ்ந்திராத ஒன்று. இதை விளம்பரத்திற்காகவோ, சுயமதிப்புக்காகவோ, வெற்றுப் புரட்சிக்காகவோ செய்யாமல் திரு அவையின் வடிவத்திலும் இயல்பிலும் பணியிலும் பங்கேற்பிலும்
புதுப்பித்தலையும் சமத்துவத்தையும் கொண்டு வரும் நம் திருத்தந்தையின் சீரிய முயற்சியின் வழிகாட்டுதலின் எதார்த்தமே!
இந்தப்
புதிய நியமனங்கள் போன்று திரு அவை அனைத்து மட்டங்களிலும் நிகழ வேண்டும் என்பதே அவர் விருப்பம். துறவியர் பேராயத்துக்கான உதவிச் செயலர்களாக நியமனம் பெற்றிருப்பவர்களில் ஒருவர் கிளரீசியச் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் அயிட்டோர் ஜிமெனெஸ் ஒச்சாவே அவர்களோடு மற்றொரு அருள்சகோதரி கார்மென் ரோஸ் நோர்த்தெஸ் அவர்களும் இடம்பெற்றிருப்பது பாலினச் சமத்துவத்தையும், திரு அவையின் இணைந்த பங்களிப்பையும் அனைத்து நிலையினரின் பங்கேற்பையும் எடுத்துக் காட்டுகிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் திரு அவையில் பெண்களுக்கான சமத்துவத்தையும், அவர்களின் தலைமைத்துவப் பங்கேற்பையும் ஈடுபடுத்த வத்திக்கானின் உயர்மட்டப் பொறுப்புகளில் பல்வேறு அருள்சகோதரிகளையும், பொதுநிலை சகோதரிகளையும் ஏற்கெனவே நியமித்திருப்பதையும் இங்கே பெருமையோடு நாம் நினைவுகூர வேண்டும். வத்திக்கான் அரசுப் பணியில் (Government of the Vatican city state) இரண்டாவது உயர் தலைமைப் பொறுப்பில் பிரான்சிஸ்கன் அருள்சகோதரி இரபேலா பெத்ரினி அவர்கள் ஏற்கெனவே பணியாற்றுவது இங்கே நோக்கத்தக்கது. இந்தப் பொறுப்பில் முதல் பெண்ணாக இவர்தான் நம் திருத்தந்தையால் நியமனம் செய்யப்பட்டவர். அது போலவே, ஒருங்கிணைந்த மானிட மாண்பு மற்றும் வளர்ச்சிக்கான ஆணையத்தின் ஆலயங்களில் உயர் பொறுப்பில் அருள்சகோதரி அலெக்சாந்தரா ஸ்மெரில்லி அவர்களும், அகில உலக ஆயர் மாமன்றத்தின் துணைச் செயலராக அருள்சகோதரி நற்காலி பெக்குவார்ட் அவர்களும் பணியாற்றி வருகின்றனர். அருள்சகோதரிகள் மட்டுமல்லாது பொதுநிலைச் சகோதரிகள் (laywomen) கபிரியோ கம்பினோ, லிண்டா கிசோனி இருவரும் பொது நிலையினர், குடும்பம் மற்றும் மானிட வாழ்வுப் பேராயத்துக்கான துணைச் செயலர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
உடனடியாகத்
திரு அவையின் திரு நிலைகளில் பெண்களை ஈடுபடுத்தி பணிகளில் சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற அழைப்புக்கு, திருத்தந்தையின் முன்முயற்சியாகவும், அவரின் நேரியச் செயல்பாடாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்தச் சமத்துவமும் பங்களிப்பும் பங்கேற்பும் தலத் திரு அவைகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது அவா!