news-details
சிறப்புக்கட்டுரை
ஆடை அரசியல் (அரசியல் இல்லாத வாழ்வியலா? – 02)

அரசியல் இல்லா வாழ்வியலில், இன்று நாம் அணிந்துகொள்ளப் போவது அல்லது உடுத்திக் கொள்ளப் போவது... ஆடை அல்லது உடையைத்தான்.

பரம்பரை பரம்பரையாக, பாரம்பரியமாக நாம் அணிந்துகொண்டு வரும் ஆடைகளில், அப்படி என்ன அரசியல் சாயம் படிந்திருக்கிறது? என்றுகூட எண்ணத் தோன்றலாம். இந்த எண்ணம் நம் இளைய தலைமுறைக்கு வியப்பாகக்கூட இருக்கலாம். ‘பிடித்த உடையை வாங்கப் போகிறோம்; அதை அணிந்துகொள்ளப் போகிறோம்; பயன்படுத்திய பின் அதைத் தூக்கி எறியப் போகிறோம். இதிலென்ன அரசியல்?’ என்று மேம்போக்காகச் சிந்திக்கும் வாய்ப்பு இன்றைய இளைய தலைமுறைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

இன்றைக்குப் பெரும்பாலான இளையவர்கள் நோயாளிகளாகிவிட்டதற்கான காரணம் என்ன என்று கேட்டுப் பாருங்கள். மாறிவிட்ட மேற்கத்திய உணவுமுறை, மது, புகை, தீயபழக்க வழக்கங்கள் என்று பட்டியலிடுவார்கள். ஆனால், தம் உடலோடு இறுகப் பிடித்து ஒட்டியிருக்கும் ஆடைகளே தமக்கு நலக்கேட்டை உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்த விழிப்புணர்வை அவர்களுக்குத் தரும் சூழலும் இல்லை, இந்தச் சமுதாயத்தில்.

இன்றைக்குத் திருமணமான பலருக்குக் குழந்தைகள் தாமதமாகப் பிறப்பதற்கு அல்லது குழந்தைக்காக மருத்துவரை நாடிச்செல்வதன் பின்னணியில், பல அதிர்ச்சியூட்டும் காரணங்களில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக, அவர்கள் அணிந்திருக்கும் தொடையை இறுகப் பற்றிப் பிடித்திருக்கும் நவநாகரிக உடைகளும் காரணம் என்று நம் பாரம்பரிய அறிவியல் கூறுகிறது. இவை நம் உடலின் உள்பாகங்களுக்குள் ஏற்படுத்தும் தீமைகள், நமக்குத் தெரியாமலேயே போய்விடுகின்றன.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியைக் கட்டி வாழ்ந்தவர்கள், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தவர்கள்; மேற்கத்தியப் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து வரும் இளையவர்கள் குழந்தைக்காக அலைந்து கொண்டிருப்பவர்கள்என்று நம் தமிழ் முன்னோர் ஒருவர் கூறியிருப்பது உடை அரசியலின் அடிப்படையில்தான். பாரம்பரிய உடையை மறந்ததன் விளைவே இது என்பது நம் கிராமத்துபெருசுகளின் உரத்தச் சத்தமாக ஒலித்துக் கொண்டிருக்கிறதுவரலாறு குறித்தோ, பண்பாடு குறித்தோ அறிந்துகொள்ளும் ஆர்வம் இன்றைய தலைமுறை களுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டும், வெறும் பொழுதுபோக்குகளின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வேதனையும் அறிவார்ந்த பெருமக்களின் கூற்றாக இருக்கிறது. ஓர் இனம் அழிவதற்கு அந்த இனத்தின் மொழி அழிவது எவ்வாறு முக்கியக் காரணமோ, அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நமது கலாச்சாரமும், பண்பாடும்.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல் (குறள் 1021)

என்கிறது குறள்குடிப்பெருமைக்குரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை என்பதே இதன் பொருள். அந்தப் பெருமை என்பது நம் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதுதானே தவிர, தவிர்ப்பது அல்ல என்பதை இன்றைய இளசுகள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது யார்? இதனைப் பயன்படுத்தித்தான் ஓர் உள்நோக்க அரசியல் நம் ஆடைகளின் வழியாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இந்த ஊடுருவல் இன்று நேற்று தொடங்கியது அல்ல; ஆதிக்கச் சமூகம் ஆடையை என்று கைப்பற்றியதோ, அன்றிலிருந்து தொடங்கியதுதான் ஆடை அரசியல். அந்த ஆதிக்கச் சமூகம் சிலைகளில், பாறைகளில் வெட்டப்பட்ட, செதுக்கப்பட்ட சிற்பங்களில், குகை ஓவியங்களில், மனிதக் கலைவடிவங்களில் ஆடைவழி அடையாளங்களாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்றன.

மேலோர், கீழோர் என்பவர்க்கான ஆடை வடிவங்கள் அன்றே தீர்மானிக்கப் பெற்றிருந்தனசமூகத்தின் உயர் வகுப்பினர் மெல்லிய மஸ்லின் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பட்டுத்துணிகளில், ஓவியங்களாக மிளிர்ந்து கொண்டிருந்தனர். பொதுவகுப்பினர் பருத்தி, கம்பளி, கைத்தறி போன்றவற்றில் காட்சி அளித்தனர். ஆனால், இந்த ஆடை பாகுபாடு என்பது பெண்களின் தலைமையில் இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்தபோது இல்லை என்றும், பாலினப் பாகுபாடு கிடையாது என்றும் குறிப்பிடுகிறார் ஆடை வரலாற்றைப் பற்றி எழுதி வரும் சகோ. சிந்துஜா. பின்னாளில்தான் ஆடை என்பது அதிகாரவர்க்கம் தன் அதிகாரத்தைச் செலுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வந்தது, வந்து கொண்டிருந்தது; இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

வர்ணங்கள், வண்ணங்களாக மக்களின் ஆடை மீது அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. சாதி, சமுதாய, மத அடையாளங்கள் என்ற வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு, நம் ஆடை அரசியல் கந்தல் கந்தலாகக் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இனத்தையே, மொழியையே, ஒரு கலாச்சாரத்தையே, பண்பாட்டையே வேரோடு அழித்துப் போடும் அளவிற்கு ஆடை அரசியல் வளர்ந்து கொண்டிருக்கிறது.

அன்றுஏழை விவசாயிகளும் நெசவாளர்களும் அரை ஆடையுடன் இருக்கையில், எனக்கு மட்டும் பாதம் தொடங்கி தலைப்பாகை வரை ஏன் இத்தனை ஆடம்பரம்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அரை ஆடைக்கு மாறியது மகாத்மா காந்தியின் ஆடை அரசியல். கௌரவமான ஆடை அணிய மறுக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அண்ணல் Dr. அம்பேத்கர் கோட்டும், சூட்டும் அணிந்து நம்பிக்கை ஊட்டியது மற்றொரு வகையான ஆடை அரசியல்.

தோளில் போடப் பயந்து, கைகளின் கக்கத்தில் துண்டை இடுக்கிக் கொண்டு, குனிந்த தலை குனிந்தபடியே இருக்க தெருவைக் கடந்தவர்களின் தலைக்குனிவை நிமிர்த்த, தங்கள் தோள்களின்மீது துண்டுகளைத் தொங்கவிட்டு, வாழ்வியல் கம்பீரத்தைக் கற்றுக்கொடுத்த திராவிடத் தலைமைகளின் தோள் துண்டு அரசியலும், உடை சார்ந்த அரசியலின் வெளிப்பாடுதான்.

அன்று எண்ணற்றப் பேதங்களுக்கிடையிலும், குளிருக்குப் போர்த்திக்கொள்ளும் போர்வையாக இருந்தது ஆடை அரசியல். இன்றோ வெறுப்பரசியலின் விளைவாக வெயிலுக்குப் போர்த்திக் கொண்ட கம்பளியாகத் திரிகிறது ஆடை அரசியல். இதில் தங்களை அறியாமலேயே இளைய சமுதாயம் சிக்கிக்கொண்டிருக்கிறது.

பாரம்பரியம் மறந்தால் வாழ்வே பாழாகும் என்பதே வரலாறு. திருவிவிலியம் கூறும் நிகழ்வாக ஏவாள் தந்த கனியை ஆதாம் என்று சுவைத்துப் பார்க்கத் தொடங்கினானோ அன்றே பிறந்ததுதான் ஆடை. அந்த ஆடையை, ஆதிமனிதர்கள் தங்கள் உடல்களைப் பல்வேறு இயற்கை இன்னல்களிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள் என்பதே ஆதி மனித வரலாறு.

மனித வரலாறு மாற்றம் பெற்றாலும், மாறாதது ஆடை என்பதே உண்மை. காரணம், ஆடை மனிதனின் உடலோடு மட்டுமல்ல, உணர்வோடும் ஒன்றியிருக்கும் ஒன்று; வாழ்வியலோடு அரசியல் கலந்திருப்பது போல.   இனி... உடைக்குப்பின் உணவுதானே!

(தொடரும்)