news-details
ஆன்மிகம்
எதிர்நோக்கின் திருப்பயணி அன்னை மரியா! (எதிர்நோக்குடன் பயணிக்கும் திரு அவை – 03)

எந்த ஒரு பயணத்தையும் தொடங்குவதற்கு முன்பாகவும் அதனை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிப்பதையும், அது நிறைவுற்றதும் அன்னை மரியாவுக்கு நன்றி கூறுவதையும் வழக்கமாகக் கொண்டவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இந்த ஆண்டு நாம் கொண்டாடும் ‘நம்பிக்கையின் யூபிலி-2025’ -ஆம் ஆண்டிற்கான ஆணை மடல் ஒன்றை ‘SPES NON CONFUNDIT- எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது (உரோ 5:5) என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024 -ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் நாளன்று வெளியிட்டார். திரு அவையின் நம்பிக்கையாளர்களாகிய நாம் அனைவரும் இவ்வாண்டை நம்பிக்கை ஆண்டாகவும், அதனை ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள் எனும் கருப்பொருளில் சிந்தித்துப் பயணிக்கவும் அவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். 25 முத்தான வழிகாட்டுதல்களைக் கொண்ட தனது ஆணை மடலில் 24-வது கருத்தாக இடம்பெற்றிருப்பது ‘எதிர்நோக்கின் திருப்பயணி அன்னை மரியா என்பதாகும்.

எதிர்நோக்கின் உச்ச சாட்சியாய் அன்னை மரியா

திரு அவையில் ஏறக்குறைய 1600-க்கும் மேற்பட்ட பெயர்களில் அன்னை மரியாவை அழைப்பதும், விழா கொண்டாடுவதும் மற்றும் ஆலயங்கள் கட்டி அவர் பாதுகாப்பிலும் அரவணைப்பிலும் வாழ்வதும் கத்தோலிக்கத் திரு அவையில் நடைமுறையில் உள்ளது. ஏன்? கி.பி. 431-இல் எபேசு நகரப் பொது அவையில்  ‘அன்னை மரியா கடவுளின் தாய் என்று உறுதி செய்யப்பட்டு மறைக்கோட்பாடாக அறிவிக்கப்பட்டது. ‘மரியா இறைவனின் தாய் என்பது நம்பிக்கை கோட்பாடு மட்டுமல்ல, அதேவேளையில் என்றென்றும் ‘மனிதரில் கடவுள், கடவுளில் மனிதர் என்பதன் நம்பிக்கையின் கோட்பாடாகவும் இருக்கிறது என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். எதிர்நோக்கு என்பது இறையியல் நல்லொழுக்கம், நற்செயல்களில் தன்னைத் தாரைவார்ப்பது, கண்களால் காண முடியாத ஒன்றைக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்வதாகும்.

கடவுளின் விருப்பத்தை ஏற்று செயல்பட்டவர் அன்னை மரியா (லூக் 1:26-38)

கபிரியேல் வானதூதரின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்ட அன்னை மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்று கூறி, இறைவனின் மீட்புத் திட்டத்திற்குத் தன்னையே முற்றிலுமாகக் கையளித்தார்; கீழ்ப்படிந்து நடந்தார். உடலால் கருத்தரிக்கும் முன்பே உள்ளத்தால் கருத்தரித்தார்; மண்ணுலகிற்கு மீட்பு உண்டாகக் காரணமாக இருந்தார், இணை மீட்பரானார்.

தேவையில் இருப்பவருக்கு உதவும் நல்லுள்ளம் கொண்டவர் அன்னை மரியா (லூக் 1:39-45)

உதவி என்பது பிறர் தேவையை உள்ளுணர்ந்து, தன்னலமின்றி விரைந்து சென்று உதவுவதாகும். உள்ளுணர்தல் என்பது பிறர் சொல்லித் தெரிந்துகொள்வதல்ல; கேளாமலேயே உணர்ந்துகொள்வது.  விரைந்து செல்லுதல் என்பது உதவி தேவைப்படும் அந்த நொடியிலேயே விரைந்து சென்று உதவுதலாகும். வயதான நிலையில் எலிசபெத்து கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் 130 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு, மூன்று மாதங்கள் தங்கி உதவுகிறார். “பணிவிடை பெற அன்று, பணிவுடை புரியவே வந்தேன் (மாற் 10:45) எனும் தனது மகனின் வார்த்தைக்கு உயிர் கொடுத்தவர் அன்னை மரியா.

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்ந்தவர் அன்னை மரியா (மத் 12:46-50)

சிமியோன் இறைவாக்கினரின் (லூக் 2:34-35) வார்த்தைகளைக் கேட்டபோதும், ஏரோதின் வார்த்தைகளைக் கேட்டபோதும் (மத் 2:14-15) உள்ளத்தில் வருத்தங்களையும் கவலைகளையும் எதிர்கொண்டபொழுதிலும், கடவுளுடைய அருளால், ஆறுதலால், அவரது இரக்கத்தால், கனிவால் அனைத்தையும் தாங்கினார். எனவேதான் சிலுவையடியில் அன்னை மரியா தாயிருக்க பிள்ளை சாகும் சங்கடங்கள் கொஞ்சமோ! சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால் தாங்குமோ! அப்படி இருந்தும் அன்னை அமைதி காத்தார். எதிர்நோக்கின் திருப்பயணிகள் துன்பத்தைத் தாங்கிக்கொள்வர். அன்பு செய்வர். அன்னை மரியா அனைத்தையும் தாங்கினார். கடவுளையே சுமக்கின்ற பேற்றினைப் பெற்றார்.

புது வாழ்வின் எதிர்நோக்கு அன்னை மரியா

கானாவூர் திருமண விழா அன்னை மரியாவின் சமூக அக்கறை மற்றும் ஈடுபாட்டுக்கான ஒரு சிறந்த உதாரணம். அன்னை மரியாவின் எதிர்நோக்கு சமூக ஈடுபாட்டை இந்த உலகிற்கு உரக்கச் சொல்கிறது. திருமண நிகழ்வில் திராட்சை இரசம் நிரப்பப்பட்ட ஆறு கற்சாடிகள் என்பது குறையுள்ள எண். அவற்றில் விளிம்புவரை நிரப்பப்பட்ட நீர் இரசமாய் மாறியது நிறைவின் வெளிப்பாடு. குறையுள்ளதை நிறைவாக்கியவர் அன்னை மரியா. இயேசுவின் மாட்சி வெளிப்படக் காரணமாக இருந்தவரும் அவரே. வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் திராட்சை இரசம் தீர்ந்து வாடும் நமக்காகப் பரிந்து பேச அவர் நம்மோடு இருக்கிறார். மனித மாண்பிழந்து, அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கும் மக்களின் சார்பாக, குரல் இழந்தவர்களின் குரலாக வாழ நம்மை அழைக்கிறார். பிளவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் களைந்து, வாழ்வில் ‘திராட்சை இரசம் இன்றி இருப்போருக்காகக் குரல் கொடுக்க நம்மை அழைக்கிறார். சமூகத்தில் பாதுகாப்பற்ற பெண்கள், சிறார்கள், பாலினப் புதுமையினர், புலம்பெயர்ந்தோர், கையறு நிலையிலுள்ளோர் யாவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட நம்மை அழைக்கிறார்.

சமூக அரசியல், தீய சக்திகளோடு போராட திறனின்றித் தவிக்கும் ஏழை எளியவர்கள், போதை பொருள்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் அடிமையானவர்கள் - இவர்களுக்கெல்லாம் உற்ற துணையாய் தானிருப்பதாக மெக்சிகோ நாடு குவாதலூப்பே நகர் காட்சியில் கடவுளின் தாயாக “உன் தாய் நான் அருகில் இல்லையா?” (Nican Mopohua, No.119) எனத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

நம்பிக்கையோடு திருப்பயணத்தில் தளர்வுறாது எதிர்நோக்கிச் செல்வோம். நம் வாழ்வில் தடைகள் இருக்கலாம்; பக்குவமாய்த் தாண்டிச் செல்வோம். பயம் இருக்கலாம்; பதற்றப்படாமல் முன்னோக்கிப் பயணிப்போம். நம் தாய் நம்மோடு இருக்கிறார். திருத்தந்தை குறிப்பிடுவதுபோல, நம் இதயங்களிலும் இல்லங்களிலும் ‘உள்ளே வாருங்கள் அன்னையே என்று அவரை வாயார அழைப்போம். நாளை என்பது நலமாய் விடியும். நம்பிக்கைதானே வாழ்க்கை! நம்பிக்கையோடு பயணிப்போம்.