news-details
சிறப்புக்கட்டுரை
வெண்கலப் பாத்திரக் கடைக்குள் புகுந்த மத யானை!

சனவரி 20 அன்று அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ளார். அமெரிக்க சனநாயகத்தின் வரலாற்றில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருகுற்றவாளிதண்டனையைத் தலையில் சுமந்துகொண்டு அதிபராகப் பதவியேற்பது இதுவே முதல்முறை.

சனநாயக விழுமியங்கள், பாராளுமன்ற மரபுகள், காலங்காலமாகப் பின்பற்றி வருகின்ற நடைமுறைகள் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், ‘தான்என்ற ஆணவத்தோடு, ‘தன்னைமட்டுமே முன்னிறுத்திச் செயல்படும் டிரம்ப், தனது நடவடிக்கைகள், செயல்முறைகள், அணுகுமுறைகள் என எதையும் மாற்றிக்கொள்ளாமல் அமெரிக்க நாட்டை மீண்டும் ஆட்சி செய்கிறார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரம், உலகின் மிகப்பெரிய இராணுவம், உலகின் மிகப்பெரிய சந்தை, அறிவியல்-தொழில்நுட்ப ஆற்றலின் சிகரம்... இவை எல்லாவற்றிற்கும் மேலாக உலகின் மிகப்பெரிய சனநாயகம் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டு அங்கீகாரம் பெற்றிருக்கும் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றுள்ளது அமெரிக்க மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் ஏதாவது ஒருவகையில் பாதிக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பதில் ஐயமில்லை.

தான்என்ற அகங்காரத்தையும், ‘தங்களிடம் இல்லாதது  எதுவும் இல்லைஎன்ற தற்பெருமையும், உலக நாடுகள் அனைத்தையும் மேலாண்மை செய்து, உலகை ஒழுங்குபடுத்தும் தகுதி தங்களிடம் மட்டுமே இருக்கிறது என்ற அகம்பாவமும் சராசரி அமெரிக்கரின் மரபணுக் குணங்கள். மேனாள் அமெரிக்க உள்துறை செயலர் கூறியது போல அவர்களைப் பொறுத்தவரைஅமெரிக்கா உலகின் எந்த நாட்டாலும், யாராலும் தவிர்க்க முடியாத ஒரே நாடு.”

தங்களது நாட்டைப் பற்றிய பெருமிதமும், தங்களது தகுதிகளின் மீது தன்னம்பிக்கையும், தாய்நாட்டுப் பற்றும்  அனைவருக்கும் இயற்கையானதே!  ‘தன்னால் முடியும்என்பது தன்னம்பிக்கை; ‘தன்னால் மட்டுமே முடியும்என்பது ஆணவம்! இந்த ஆணவமே ஒரு நாட்டின் தலைவரை வழிநடத்தும் கொள்கையாக இருந்தால், அந்த நாட்டின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்என்பதைப் பதவியேற்பதற்கு முன்னரே டிரம்ப் வெளிப்படுத்தத் துவங்கிவிட்டார்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின்ஓவல்அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் டிரம்ப்பின் கைகளில் இருக்கும் அதிகாரங்கள் சாதாரணமானவையல்ல. கடந்த முறை அவர் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்குப் போதுமான பெரும்பான்மை இருக்கவில்லை. இந்த முறை அவருக்குப் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை உள்ளது. நமது நாட்டைப்போல நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தான் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமும் அங்கே இல்லை. அவருக்குப் பிடித்தமான யாரையும் அவர் அமைச்சராக வைத்துக்கொள்ளலாம். நமது வீட்டுக் குழந்தைகளுக்குபீசாஆர்டர் செய்து அனுப்புவதைவிட, வேகமாக அவரால் உலகம்  முழுவதையும் கண்ணிமைக்கும் நேரத்தில் இருபது முறை எரித்துச் சாம்பலாக்கும் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களைத் தாங்கிய 5044 அதிவேக ஏவுகணைகளை எந்த நாட்டை நோக்கியும் ஏவமுடியும்.

இறுமாப்பு உடையவன் கைகளில் அதிகாரமும் ஆயுதமும் கிடைத்தால்  எப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழக்கூடும் என்பதை உலக வரலாற்றின் பல பக்கங்களில் பார்த்துள்ளோம். தங்கள் கரங்களில் இருக்கும் அதிகாரத்தை வைத்து அடுத்த நாட்டவர்களது நிலங்களையும் வளங்களையும் கைப்பற்றுவதுதான் அவர்களது முதல் நோக்கமாக இருக்கும்.

ஆட்சியில் அமர்ந்தவுடன் அண்டை நாடான கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டதோடு மட்டுமில்லாமல், அப்படி இணைத்துக்கொள்ள கனடா உடன்படவில்லையென்றால், அந்நாட்டின்மீது பல பொருளாதாரத் தடைகளை விதிக்க இருப்பதாகவும்  மிரட்டுகிறார் டிரம்ப். டென்மார்க் நாட்டுக்குச் சொந்தமான கிரீன்லாந்து தீவினைத் தங்களுக்கு  விற்றுவிட வேண்டும் என்று கேட்கிறார். ஆர்ட்டிக் துருவப் பிரதேசமான இந்தத் தீவு அமெரிக்காவுக்கு அருகில் உள்ளது. அமெரிக்காவுக்கு இங்கே ஒரு விமானத்தளம் இருக்கிறது. 57,000 மக்கள் மட்டுமே வாழும் இந்தத் தீவில் சமீபத்தில் நடத்தப்பட்ட  புவியியல் ஆய்வு, மின்சார வாகனங்கள் மற்றும் அதற்கான பேட்டரிகள் செய்ய அவசியமான 34 மூலப்பொருள்களில், 25 பொருள்கள் ஏராளமாக இந்தத் தீவில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தீவைச் சுற்றி 28,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் பனிப்பாறைகள் உருகத் துவங்கியுள்ளன. அதற்குக் கீழே ஏராளமான பெட்ரோலிய கச்சா எண்ணெயும் எரிவாயுவும் மண்டிக்கிடப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. “அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவும், உலக நாடுகளின் நன்மைக்காகவும் கிரீன்லாந்து அமெரிக்காவுக்குச் சொந்தமானதாகவும், அதன் ஆட்சியிலும் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறதுஎன்று டிரம்ப் அறிவித்த சில நாள்களில், டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் கிரீன்லாந்துக்குச் சென்று சில ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளார். குடியரசுக் கட்சியைச் சார்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்தும் அதிகாரத்தை டிரம்புக்கு வழங்க ஒரு சட்ட முன்வடிவைத் தயார் செய்து, சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது  டிரம்ப் பனாமா கால்வாயின் நிர்வாகத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஒப்படைக்கத் தவறினால் இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்ற நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

மெக்சிகோ வளைகுடாவைஇனிமேல்அமெரிக்க வளைகுடாஎன்று அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ், கலிபோர்னியா, நேவடா, ஊட்டா, கொலராடோவின் பெரும்பகுதி, நியூ மெக்சிகோ, அரிசோனா ஆகிய நிலப்பரப்புகள் அனைத்தும் ஒரு காலத்தில்  மெக்சிகோ நாடாகவே இருந்தன. அந்நாட்டின்மீது யுத்தம் நடத்தி அந்நாட்டின் பரப்பளவில் 55% பகுதிகளைசமாதான ஒப்பந்தம்என்கிற பெயரில் அமெரிக்கா அப்பகுதிகளைத் தன்னோடு இணைத்துக்கொண்டது. அதற்காக அமெரிக்கா மெக்சிகோவுக்கு 15 மில்லியன் டாலர்களை வழங்கியது. ஓர் ஏக்கருக்கு  5 சென்ட் என்ற ஈனக்கிரயத்தில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், மியான்மர், பங்களாதேஷ் போன்ற நாடுகளையெல்லாம் சேர்த்துஅகண்ட பாரதம்அமைக்க வேண்டும் என்று சில சங்கிகள் நம் நாட்டில் பேசிவருவது போல, கனடா, மெக்சிகோ, கிரீன்லாந்து போன்ற பகுதிகளைச் சேர்த்துஅகண்ட அமெரிக்காஅமைத்திட வேண்டும் என்பது டிரம்பின் பேராசை.

அந்நிய நாடுகளின் நிலங்களின் மீதும், வளங்களின் மீதும் கண்வைத்துவிட்ட டிரம்ப், அவைகளை வளைத்துப்போட தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் வரி வசூலுக்காகIRS (Internal revenue serviceஎன்ற அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரவேண்டிய வரிகள், கட்டணங்கள், ஈவு தொகைகள் ஆகியவற்றை வசூலிக்கத் தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் ERS (External revenue serviceஎன்ற அமைப்பை உடனடியாகத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியைச் செய்யும் நாடுகளோடு கடந்த காலங்களில் போடப்பட்ட  வணிக ஒப்பந்தங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்குச் சாதகமாகவும் அமெரிக்க நலனுக்குப் பாதகமாகவும் இருக்கிறதாம். இதனால் அமெரிக்க மக்கள் மிகவும் அதிகமான வரிகளைக் கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாகவும் அதனைக் குறைப்பதற்காக அயல்நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்பவர்களிடம் இருந்து அதிகக் கட்டணங்களையும் வரிகளையும் வசூலிப்பதே டிரம்பின் திட்டம். இதனால் கனடாவும் மெக்சிகோவும் மிக அதிகமாகப் பாதிக்கப்படும். கனடாவின் பொருளாதாரம் படுபாதாளத்திற்குச் சென்றுவிடும். ஏற்கெனவே பல பொருளாதாரச் சிக்கல்களில் மூழ்கித் தவிக்கும் மெக்சிகோ திவாலாவதைத் தவிர வேறு வழியில்லை. சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஜப்பான்  மற்றும் இந்தியாவும் இந்த நடவடிக்கையால் வெகுவாகப் பாதிக்கப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் டிரம்பின் இந்தத் தாக்குதலைச் சமாளிப்பது இந்தியாவுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அமெரிக்க ஏற்றுமதியை அதிகரித்தும், அமெரிக்க இறக்குமதிகளுக்கு மிக அதிகமாக வரி விதித்தும் தங்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும்வணிக உபரித் தொகையினை (trade surplusகுறைக்க டிரம்ப் திட்டமிடுகிறார். இத்தகைய நடவடிக்கைகள் உலகப் பொருளாதார விநியோகச்  சங்கிலியில் (world economic supply chain) பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதனால் உலகம் தழுவிய பொருளாதார மந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அநேகம்.

மீண்டும் அமெரிக்காவைப் பிரம்மாண்டமாகக் கட்டமைப்போம் (Make America great again) என்ற டிரம்பின் திட்டத்தைச் செயல்படுத்த அவர் எடுக்க இருக்கும் பல முன்னெடுப்புகளால் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் வெகுவாக மாறும். அமெரிக்க உற்பத்திகளைப் பாதுகாக்க அதனைச் சுற்றி அவர் அமைக்க உத்தேசித்துள்ளபாதுகாப்பு வளையம்உலகளாவிய வணிகச் சுதந்திரத்துக்குப் பெரும் நெருக்கடியைத் தரும். புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் நிரந்தரமற்றதாக மாறிவிடும். புவிவெப்பமயமாக்குதலைத் தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கிப்போகும் அபாயத்தைத் தவிர்க்க முடியாது. டிரம்பைப் பொறுத்தவரை புவிவெப்பமயமாதல் என்பது ஓர் அறிவியல் மோசடி. அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளிடம் இருந்து  பணம் கரக்க விஞ்ஞானிகள் சிலர் தயாரித்துள்ள கட்டுக்கதை.

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சட்டம் போன்ற அனைத்து நாடுகளின் உறவுகளைப் பேணி வளர்க்கின்ற எந்த அமைப்புகளிலும் டிரம்புக்கு நம்பிக்கையில்லை. அமெரிக்க நலன் மட்டுமே முக்கியம். உலக நன்மைகளைப் பற்றிச் சிந்திக்கவும், அதற்காகப் பணம் செலவழிக்கவும் அமெரிக்கா இனிமேல் முன்வராது என்பதே அவரது நிலைப்பாடு.

இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் மோடிக்கும் டிரம்புக்கும் தனிப்பட்ட நட்பு இருப்பதால் டிரம்பின் பதவிக்காலம் பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்காவில் இருக்கும் சங்கிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவரது நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவழி அமெரிக்கர்களைக் காண்பித்து, இந்தியர்களை டிரம்ப் மிகவும் நம்பி நேசிப்பவர் என்று கூறுகிறார்கள். ஆனால், இது வரை பொருளாதார ரீதியாக இந்தியாவுக்குப் பெரும் நன்மைகள் நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

டிரம்ப் அரசு பின்பற்ற இருக்கும்பி-1Àவிசா நடைமுறைகளைக் காரணம் காட்டி பல இந்தியத் தொழில் விற்பன்னர்களைப் பல நிறுவனங்கள் வேலைகளிலிருந்து நீக்கத் துவங்கிவிட்டன. பல பெரிய அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியத் தொழில்நுட்பவியலாளர்களை வேலைகளில் அமர்த்தி, அதற்கான உத்தரவாத கடிதங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கியிருந்ததால் அவர்களும் அமெரிக்க வேலைவாய்ப்பினை நம்பி ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருந்த வேலைகளில் இருந்து விலகிவிட்டனர். இப்போது அவர்களுக்கெல்லாம் வழங்கப்பட்டிருந்த வேலை வாய்ப்புகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டிரம்ப் நிர்வாகம் எடுக்க இருக்கின்ற கொள்கை முடிவுகளைச் சுட்டிக்காட்டித் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துவிட்டனர்.

அமெரிக்க டாலருக்குச் சளி பிடித்தால் இந்திய ரூபாய்க்குக் காய்ச்சல் வரும் என்பார்கள்! இப்போது ஜன்னியே வந்துவிடும் என்று பயமாக இருக்கிறதுஎன்று இந்திய ஏற்றுமதியாளர் ஒருவர் அச்சப்பட்டார்.

மதம் பிடித்த யானை வெண்கலப் பாத்திரக் கடைக்குள் புகுந்த கதைதான் நினைவுக்கு வருகிறது. எலான் மஸ்க், விவேக் இராமசாமி போன்ற இதயமற்ற உலகக் கோடீஸ்வரர்களின் கூட்டு முயற்சியே டிரம்பின் வெற்றி. நவீனத் தொழில்நுட்பங்களும் பெரும் பணமும் கலப்படமற்ற சுயநலமும் ஒன்றுசேர்ந்து பொய்யான தகவல்களையும், தவறான பிரச்சாரங்களையும் பயன்படுத்தி பொதுமக்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் தங்களுடைய விருப்பத்திற்கிணங்க வளைக்க முடியும் என்பதற்கு நடந்து முடிந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.

உலகப் பணக்காரர்களின் பெரும் செல்வத்தையும், வரைமுறையில்லாத பொருளாதாரச் சுரண்டல்களையும் பாதுகாப்பது மட்டுமே டிரம்ப் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க முடியும். தங்களது இந்த முயற்சியில் வெற்றியை ருசித்துவிட்ட இவர்கள், தற்போது உலகம் முழுவதும் இருக்கின்ற இடதுசாரி சனநாயக அரசுகளைக் குறிவைக்கத் துவங்கிவிட்டனர்.

உலகெங்கிலும் வலதுசாரி, பாசிச அரசுகளைச் சனநாயகத்தின் முகமூடியில் அமைப்பதே டிரம்ப் - எலான் மஸ்க் பாவக்கூட்டங்களின் நோக்கம். சனநாயகம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கைக் கொடை அரசியல் சக்திகள், உலகம் முழுவதும் கவனமாக இருக்க வேண்டும்.