“கடவுள் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்” (தொநூ 2:7). “கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார். ஆணும்-பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்” (தொநூ 1:27).
இவ்வாறு
கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதன் ஆதிப்பெற்றோர்களின் கீழ்ப்படியாமையால் படைத்தவனின் பாதையிலிருந்து விலகி, தீயவழிகளில் சென்று, கண்போன போக்கில் கால் சென்று, கால்போன போக்கில் மனிதன் சென்று, தான் தோன்றித்தனமாக வாழத் தொடங்கினான்.
தூய
ஆவியாரின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் (கலா 5:22) போன்றவற்றால் செறிவூட்டப்பட்ட மனிதன், மனிதநேயம் வற்றிப் போய், அற்றுப் போய், கல்மனம் படைத்தவனாக மாறிவிட்டான், மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்.
அந்த
நாள் முதல் இந்த நாள் வரை கடவுள் படைத்த வானம் மாறவில்லை; வான்மதியும், மீனும், கடல் காற்றும், மலரும் மண்ணும், கொடியும், சோலையும் மாறவில்லை. ஆனால் மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்.
கடவுள்
படைத்த அத்தனை உயிர்களும் உருவான காலத்திலிருந்து இன்று வரை தன்னுடைய தன்மை மாறாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, வாழ்ந்து கொண்டிருக்கின்றன, வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதன் மட்டும் ஏனோ தன் தன்மை மாறி, தடம் மாறி, தடுமாறி, உரு மாறி, உடல் மாறி, உள்ளம் மாறி, கள்ளம் கொண்டு, கொள்ளை உள்ளம் கொண்டு, கபடம் கொண்டு, கொலைவெறி கொண்டு, களியாட்டம் கொண்டு, காமவெறி கொண்டு, பொறாமை கொண்டு, மதியிழந்து, மானமிழந்து, பகுத்தறிவை இழந்து, பகிர்ந்துண்ணலை இழந்து, பொறுமை இழந்து, பொறுப்புணர்வை இழந்து சாத்தானின் பாதையில் வாழத் தொடங்கிவிட்டான். மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்.
“தாயின் வயிற்றில் உன்னை நான் உருவாக்குமுன்பே அறிந்திருந்தேன். நீ பிறக்குமுன்பே உன்னை
திருநிலைப்படுத்தினேன்” (எரே 1:5)
என்ற இறைவாக்கினரின் கூற்றுப்படி, மனிதனைத் தேர்ந்தெடுத்துப் படைத்தார் இறைவன். ‘படைத்தான் படைப்பெல்லாம் மனுவிற்காக; மனுவைப் படைத்தான் தன்னை வணங்க’ என்ற வார்த்தைகளின்படி மனிதன் தம்மை வணங்க வேண்டும், தம் கூக்குரலுக்கு இணங்க வேண்டும், தம் வழிகளைப் பின்பற்ற வேண்டும், தம் போதனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார் இறைவன். ஆனால், மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறி விட்டான்.
“உன்மீது நீ அன்பு கூர்வதுபோல்
உனக்கு அடுத்திருப்பவரை அன்பு கூர்வாயாக”
(மாற் 12:31) என்ற தெய்வத்தின் வார்த்தையை மறந்து,
‘இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும்
பிறன்கான் செயல்’
என்ற
தெய்வீகப் புலவரின் வரிகளை மறந்து வாழப் பழகிக்கொண்ட மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான். இவ்வாறு வாழ்ந்த மனிதன் தன் வாழ்க்கையில் சாதித்தது என்ன? என்று சிந்தித்தால்... ஒன்றுமில்லை! “நூறாண்டு காலம் வாழ்த்தியவர்கள் எல்லாம் ஒருவர் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையில் வாழும்பொழுது ‘செத்துத் தொலையிறாள்லயே’ என்று
கட்டிய மனைவியும், ஒட்டிய உறவுகளும் எரிச்சல்படுவார்கள், ஏளனமாய் பேசிக் கொள்வார்கள், இறப்புக்காகக் காத்திருப்பார்கள், ‘அண்ணன் எப்ப இறப்பான், திண்ணை எப்ப காலியாகும்’ என்ற
ஏக்கத்தோடு வாழ்வார்கள்
‘கண்ணே, மணியே, கட்டிக் கரும்பே, தங்கமே, வைரமே’ என்று கொஞ்சிய தாயும், ‘என் உயிரே நீங்கதான்’
என்று சொன்ன தாரமும் இறந்து பிணமானபின் உடன் வரவா போகிறார்கள்? ‘உன்னை நொடிகூட பிரிந்திருக்க முடியாது’
என்று மாயாஜாலம் காட்டியவர்கள் எல்லாம் பிணமானபின் தொடக்கூட அருகில் வரமாட்டார்கள். சுருங்கச் சொன்னால் மனிதன் ‘இடிந்த மதிலுக்கும் (குட்டிச் சுவர்) சிதைந்த வேலிக்கும் ஒப்பாவார்கள்’ (திபா
62:3) என்பதே மனிதன் தன் நெறிகெட்ட வாழ்க்கையால் தேடிக்கொண்ட சொத்தாகும்.
‘ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?’ என்று கவிஞர் கண்ணதாசன் மனிதனின் வாழ்க்கைப் பாதையைக் கேள்விக் கணைகளால் துளைக்கிறான், தொடுக்கிறான். இதையே ஒளவையாரும்,
“பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட
மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு
ஆவிதான்
போயினபின் யாரோ அனுபவிப்பார்
பாவி
காள் அந்தப் பணம்”
தன்
‘நல்வழி’ பாடலில்
கேள்விகள் மூலமாக ஏவுகணைகளை ஏவுகிறார். எனவே, மனிதன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், அரசன் முதல் ஆண்டி வரை, வாழ்க்கையில் தொடர்ந்து வருவது பாய் மற்றும் நோய் இந்த இரண்டுதான். ‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?’ என்று கவிஞர் கூறுவது போல, இறுதியில் எல்லாரும் பிணத்தை கைவிட்ட நிலையில், ‘மண்’ மட்டுந்தான் அந்தப் பிணத்தை வா... வா... என்று வரவேற்று அழைத்து, ‘மகனே, மகளே நான் இருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு’ என்று தழுவிக்கொள்ளும். மனிதனுக்கு வாழ்க்கையில் மிஞ்சுவது மண் மட்டுமே. இதைத்தான் “நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்
அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்;
மண்ணுக்கே திரும்புவாய் (தொநூ 3:19) என்று திருவிவிலியம் விளக்குகிறது.
இந்த
நிகழ்வை நினைத்துப் பார்ப்பதற்காகத்தான் திருநீற்றுப் புதன் கொண்டாடப்படுகிறது. அன்றிலிருந்துதான் தவக்காலம் ஆரம்பமாகிறது. தவக்காலம் என்பது தியாகத்தின் காலம், அருளடையாளங்களின் காலம், நோன்பின் காலம், நல்ல நோக்கங்களை நிறைவேற்றும் காலம், கொடைகளின் காலம், தடைகளை உடைத்தெறியும் காலம், மனக் கட்டுப்பாட்டின் காலம், பிறர் மனத்தைத் தொட்டுப்பார்க்கும் காலம், செபத்தின் காலம், தவத்தின் காலம், ஆண்டவரோடு ஒன்றிணையும் காலம், ஒன்றிப்பின் காலம்.
இத்தவக்காலம்
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’
என்று பாடிய வள்ளலாரின் காலம், ‘மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ’
என்ற பாரதியாரின் பாடலை மெய்ப்பிக்கும் காலம், மகாத்மா காந்தியடிகள் கண்ட அகிம்சையின் காலம், அறத்தின் காலம், பிறரை நேசிக்கும் காலம், ஆசிக்கும் காலம், கடவுளை மட்டுமே இதயத்தின் ஆழத்தில் பூசிக்கும் காலம், வெறுப்பகற்றும் காலம், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று
முழங்கிய வள்ளுவரின் வரிகளை வாழ்வாக்குவதன் காலம், உடலை ஒறுத்து, ஊனியல்புகளை வெறுத்து, தீச் செயல்களை அறுத்து, கோபத்தைப் பொறுத்து வாழ வேண்டிய காலம்.
தவக்காலத்தில்
பக்தி முயற்சிகளில் முழு மனத்துடனும், முழுமையாகவும் பங்கேற்போம். தவக்காலத்தில் காவியுடை அணிவது முக்கியமல்ல, பாவியாய் வாழாமல் இருப்பதே முக்கியம். நோன்பு இருப்பது முக்கியமல்ல, பிறரை நோகடிக்காமல் வாழ்வதே முக்கியம். வெளிவேடக்காரரைப் போல் முகவாட்டமாயிருந்து (மத் 6:16) தாடி வளர்ப்பது முக்கியமல்ல, ஒழுக்கச் செயல்களை நாடிச் செல்வதே, ஏழைகளைத் தேடிச் செல்வதே முக்கியம். செபமாலையோ, சிலுவையோ அணிந்துகொள்வது முக்கியமல்ல, பிறர் தோளில் சிலுவைகளைச் சுமத்தாமல் இருப்பதே முக்கியம்.
சமூக
ஊடகங்கள் நம்மையும் நம் குழந்தைகளையும் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்ட, குடும்பங்களில் முழுமையாகப் புகுந்துகொண்ட இக்காலத்தில் ஆலயங்கள் அனைத்தும் ஆளரவமற்றே காணப்படுகின்றன. பக்தி முயற்சிகள் தேய்ந்துகொண்டே வருவது வருத்தத்திற்குரியதாகும். தெய்வ நம்பிக்கையை விட ஊடகங்களுக்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவம் முதன்மையாகப் பார்க்கப்படுகிறது.
எனவே,
இத்தவக்காலத்திலாவது திருப்பலிகளில் குறிப்பாக ஞாயிறு திருப்பலியில் தவறாது, முறையாகப் பங்கேற்போம். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் சிலுவைப்பாதையில் கலந்து கொண்டு கல்வாரிப் பாதையைத் தியானிப்போம். பக்தி நிகழ்ச்சிகளை உடலால், உள்ளத்தால், சொல்லால், செயலால் நிரப்புவோம்.
தம்மைக்
கொடுத்த இயேசுவுக்கு
நம்மைக்
கொடுக்கத் தயாராவோம்!
கல்மனம்
கரையட்டும் இயேசுவை நோக்கி
கைகளும்
விரியட்டும்!