news-details
சிறப்புக்கட்டுரை
போலி உலகம் (வலையும் வாழ்வும் – 02)

எனக்கு அப்போது சிறு வயது. திடீரென்று இரவைக் கிழித்து வந்தது பக்கத்து வீட்டு அழுகைக் குரல். ஓர் அழுகைக் குரல் பலர் சேர்ந்துகொண்டதால் ஒப்பாரி ஆனது. ஏன்? என்ன ஆச்சு? இதயம் சில நிமிடங்கள் தறிக்கெட்டோடும் ஓட்டுநர் இல்லா வாகனம் போல வேகமெடுத்தது. ஒரு நிமிடம் அதிர்ந்துபோய் என்னவென்று பார்ப்பதற்குள், பக்கத்து வீடு அக்கம்பக்கத்தினரால் சூழ்ந்திருந்தது. கூட்டத்திற்குள் புகுந்து ஒருவழியாய்ப் பக்கத்து வீட்டு கதவருகில் போய் நின்றேன். “எங்களை விட்டுப் போய்ட்டீயே. இனி எங்களுக்கென்று யாரு இருக்கா?”

யாரோ இறந்து போயிருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இறந்து போனவரின் உடல் அங்கு இல்லை. சிறிது நேரம் ஆழ்தூக்கத்தில் எழுப்பி விடப்பட்ட சிறுவன் போல ஒன்றும் புரியாதிருந்த எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை புலப்படத் தொடங்கியது. வெளிநாட்டிலிருந்து வந்த கடிதத்தால் வந்த பிரச்சினை அது. அந்த வீட்டின் நபர் ஒருவர் வெளிநாட்டில் இறந்துவிட்டதாகவும், அவருடைய உடலை ஒப்படைக்கக் கொஞ்சம் செலவாகும் என்றும், எனவே குறிப்பிடப்பட்ட தொகையை அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மணியார்டர் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வீட்டில் அழுகையும் ஒப்பாரியும் ஒருபுறம் அரங்கேறினாலும், மற்றொரு புறம் ஒன்றும் புரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குப் போன் போட்டும், தெரிந்தவரிடம் பேசியும் உண்மை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். இன்றைய காலத்தைப் போன்று அன்றைய காலத்தில் போன் போட்டுப் பேசுவதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பனம்பழம் பழுத்து விழுந்தது போன்று கடைசியாக உண்மையும் விழுந்து உடைந்தது. இறந்ததாகக் கருதப்பட்டவர் உயிரோடு நலமாக இருப்பதாகவும், யாரோ அக்குடும்பத்தை நன்கு அறிந்தவர் பணத்தாசையில் அம்மனிதர் இறந்ததாகக் கடிதம் எழுதியதும் தெரிய வந்தது.

ஏமாறுபவர் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்என்பதைப் போன்று காலங்கள் கடந்தாலும், அறிவும் தொழில்நுட்பமும் வளர்ந்தாலும் ஏமாறுபவர்களுக்கும் ஏமாற்றுபவர்களுக்குமான தொடர் பந்தம் இந்த நவீன காலத்திலும் தினந்தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. ஹெட்செட் போடாமல்சத்தம் அதிகம் வைத்து, பிறருக்குத் தொந்தரவாக இருக்கும் என்னும் நினைப்பே இல்லாமல் இரயில் அல்லது பேருந்தில் செல்லும்போது சமூக ஊடகங்களில் வலம் வரும் டிரெண்டிங் வீடியோக்களைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருக்கும் ஏராளமான பயணிகளைப் பார்த்திருப்போம். இந்த வீடியோக்கள் பத்தில் இரண்டு போலியானது என்று ஆய்வு ஒன்று கூறுவது ஆச்சரியமாக உள்ளது இல்லையா!

டீப்டிரேஸ்என்ற நிறுவனம் 2019-இல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் சமூக ஊடகங்களில் ஆய்வு செய்யப்பட்ட ஏராளமான பதிவுகளில் 15,000 வீடியோக்கள் போலியானவை என்ற உண்மையைச் சொன்னது. இந்த எண்ணிக்கை இன்றைய தினத்தில் 83% அதிகரித்திருக்கின்றதாம். ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் சுமார் 30 இலட்சம் படங்களும் சுமார் 7,20,000 மணிநேர வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்றுதி கான்வர்சேசன்என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் எத்தனை பதிவுகள் போலியானவை என்பது யாருக்கும் தெரியாது.

செயற்கை நுண்ணறிவின் வருகைக்குப் பிறகு எதுவும் சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ‘டீப்பேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலமாக யாரையும் யாராகவும் மாற்றலாம், யாருடைய குரலையும் மாற்றியமைக்கலாம்.

சமூக ஊடகங்களின் வீடியோக்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருடைய வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் போலியாக வலம் வந்து கொண்டிருக்கின்றது என்பது தெரியாது. அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாமானியர்கள் என்று யாரையும் இந்தடீப்பேக்தொழில்நுட்பம் விட்டு வைப்பதில்லை. பிறரை மிரட்டிப் பணம் பறிப்பதற்காக, ஆபாசப் படம் தயாரிப்பதற்காக, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, ஒருவருடைய நற்பெயரைக் கெடுப்பதற்காக, மக்கள் மத்தியில் போலி கருத்தியலைத் திணிப்பதற்காகடீப்பேக்பயன்படுத்தப்படுகின்றது.

மனிதனுக்கு எப்போதுமே கடவுளைப்போல் படைக்கின்ற செயலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை உண்டு. இதனைத் தொடக்கநிலை சோதனை எனலாம். இதுவே அவனை இன்று படைப்பாளியாக மாறச்செய்கின்றது. கடவுள்ஒளி தோன்றுகஎன்கின்றார், ஒளி தோன்றியது என்று திரு விவிலியத்தில் வாசிக்கின்றோம். அதேபோன்று நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் மனிதன்தோன்றுகஎன்கின்றான். அனைத்தும் கண்முன் தோன்றுகின்றது.

அறிவியலின் வளர்ச்சியைஓகோஎன்று பாராட்டினாலும், அது உருவாக்கும் ஆபத்தை அறியாமல் கடந்துபோக முடியாது.

கடவுள் படைப்பில் போலி என்று எதுவும் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டிருந்தது. மனிதனின் படைப்பில் போலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. போலிச் செய்தி, போலி முகங்கள், போலிக் குரல்கள், போலி முகவரிகள், போலி அடையாளங்கள் என்று எல்லாம் போலியாகவே உள்ளன.

இந்தப் போலி உலகிலிருந்து உண்மையைப் பகுத்தறிவது என்பது நம் முன் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால் என்றே நினைக்கின்றேன். போலிகளுக்கு முகமும் முகவரியும் தந்த மனிதனை என்னவென்பது?