news-details
ஆன்மிகம்
நல்ல மனநிலையே இறைவேண்டல்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் - 35

இறைவேண்டல் என்றால் சொற்களால் ஆனது என்னும் பார்வையை விரிவுபடுத்தி, மனநிலை, செயல்கள், வாழ்வு எனப் பல தளங்களும் இணைந்ததே முழுமையான இறைவேண்டல் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மட்டுமல்ல, இறைவேண்டலின் தொடக்கமே நம் மனநிலைதான் (Attitude) என்பதையும் நாம் மனத்தில் பதிக்க வேண்டும். எனவேதான், “நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள் (லூக் 8:18) என்றார் இயேசு.

நல்ல மனநிலையோடு ஏறெடுக்கப்படாத இறைவேண்டல் இறைவனால் புறக்கணிக்கப்படும் என்பதைப் பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையில் (லூக் 18:9-14) இயேசு எடுத்துக் கூறினார். “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது (மத் 15:8) என்ற எசாயாவின் மேற்கோள் வழியாக நல்ல மனநிலையில்லாத புகழ்ச்சியின் பயனற்றத் தன்மையை எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கின்றார்.

அதுபோல, உறவின் மனநிலை இல்லாத பலியோ, காணிக்கையோ இறைவனுக்கு ஏற்புடையது அல்ல (மத் 5:23-24) என்பதையும் வலியுறுத்திக் கூறினார் இயேசு. மனிதரைத் தீட்டுப்படுத்துவது உணவல்ல; மாறாக, “தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன (மத் 15:20) என்றும் தெளிவுபடுத்தினார். இவையெல்லாம் ஒருவரின் மனநிலை அவரது சொற்களைவிட, செயல்களைவிட அதிக வலிமையானது என்பதையும், நல்ல மனநிலையில்லாமல் செய்யும் வேண்டல்கள், செயல்கள் பயன்தரா என்பதையும் எடுத்துரைக்கின்றன. நேர்மறை மனநிலை, எதிர்மறை மனநிலை என்று உளவியலாளர் கூறுவதுபோல, ஊனியல் மனநிலை, ஆவிக்குரிய மனநிலை என்று பகுத்துக் கூறுகிறார் புனித பவுல். “ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே. ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும் (உரோ 8:6). எனவே, நாம் ஆவிக்குரிய மனநிலை கொள்ள அழைப்பு விடுக்கிறார். மேலும், “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் (பிலி 2:5) என்றும் அறிவுறுத்துகிறார். இயேசுவிடம் இருந்த மனநிலை வேறு ஒன்றுமில்லை, சாவு மட்டும் தந்தைக்குப் பணிந்திருக்க வேண்டும் என்பதே இயேசுவின் மனநிலை (பிலி2:6-11). நம் வாழ்வில் பலவிதமான மனநிலைகள் இருக்கின்றன. திருவிவிலியம் காட்டும் சில நேர்மறை மனநிலைகளைப் பார்ப்போம்.

1. இறைவனைப் பற்றிய மனநிலை: இறைவனே நம் வாழ்வின் முதல்வர் மற்றும் அனைத்தும் என்பதை ஏற்று, அவரையே முதன்மையாகவும் முழுதாகவும் அன்பு செய்ய வேண்டும். “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக (மாற் 12:30). “மனிதருக்குக் கீழ்ப்படிவதைவிட, கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” (திப 5:29)

2. இறைவேண்டல் பற்றிய மனநிலை:நீங்கள் செபம் செய்யும்போது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம். நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார் (மத் 6:8).

3. உலகம் பற்றிய மனநிலை:கடவுள் உலகை நல்லதென்று கண்டார் (தொநூ 1:31). ‘தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்கு உலகை அன்பு செய்தார் (யோவா 3:16). நாமும் அவ்வாறே உலகத்தைப் பார்ப்போம்.

4. மனிதர்கள் பற்றிய மனநிலை:ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள் (எபே 4:32). “மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுங்கள் (பிலி 2:3).

5. நம்மைப் பற்றிய மனநிலை: இறைவன் நமது தந்தை. எனவே, நாம் பேறுபெற்றவர்கள். கடவுளின் உள்ளங்கைகளில் நாம் பொறிக்கப்பட்டுள்ளோம் (எசா 49:16). “ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன் (எசா 49:5). “இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான் (1கொரி 15:10).

6. துன்பம் பற்றிய மனநிலை: துன்பத்தின் வழியாகவே நன்மையும் வெற்றியும் பிறக்கும் என்பதே இயேசுவின் சிலுவைச் சாவு நமக்குக் கற்றுத்தரும் பாடம். எனவே, துன்பத்தை நேர்மறையாகப் பார்க்க அழைக்கிறது இறைமொழி. “கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டுகொள்ளுங்கள். ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டுவிடுகின்றனர் (1பேது 4:1)

7. செல்வம் பற்றிய மனநிலை:எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது (மத் 6:24). “பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள் (எபி 13: 5).

8. பணி பற்றிய மனநிலை:நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்லஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள் (கொலோ 3:23).

9. நம்பிக்கை மனநிலை:நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை (2கொரி 4:8). “உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண் டுள்ளார் (1பேது 5:7).

10. வாழ்வு பற்றிய மனநிலை: அனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன (2கொரி 4:15). எனவே, “எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றிகூறுங்கள் (1தெச 5:16-18).

மேற்காணும் நேர்மறை மனநிலைகளோடு இறைவேண்டல் செய்தால்தான் நமது இறைவேண்டல் இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். இல்லாவிடில், நம் இறைவேண்டல் பயனற்றதாகிவிடும். உண்மையில் நல்ல மனநிலையே ஓர் இறைவேண்டல்தான் என்பதை உணர்வோம். “தூய்மையான உள்ளம், நல்ல மனச்சான்று, வெளிவேடமற்ற விசுவாசம் ஆகியவற்றினின்று அன்பைத் தூண்டுவதே நான் கொடுத்த கட்டளையின் நோக்கம் (1திமொ 1:5) என்னும் இறைமொழியின்படி வாழ்வோம்.