திராவிடம் என்பது புனைவு, திராவிடம் என்பது மாயை. திராவிடம் என்பது நிலப்பரப்பா? திராவிடம் என்பது இனமா? திராவிடம் என்பது மொழியா? தற்குறிகளால் இவ்வாறான கேள்விகள் இன்று எழுப்பப்படுகின்றன. இது குறித்த கற்பனை வாதங்கள் அடுக்கப்படுகின்றன.
திராவிடம்
என்பது இனம்; திராவிடம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை உள்ளடக்கியது; திராவிடம் என்பது ஒரு
மொழிக்குடும்பம் சார்ந்தது; திராவிடம் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவக் கருத்தியலை உள்ளடக்கியது. இன்று திராவிடம்
என்ற மொழிவாரிக் குடும்பம், பெருங் கலாச்சாரச் சமூகமாக உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது
என்பதே உண்மை.
வேட்டையாடுதல் எனும்
கற்காலம் முடிந்து, நதிக்கரை நாகரிகங்களாகச் சமூக அமைப்பு உருபெற்ற காலம். மனிதர்கள் இயற்கை வழிபாட்டை முன்னெடுத்த பொழுதுகள்; எதை, எவற்றைக் கண்டு பயந்தார்களோ, அவைகளை வழிபட்ட முற்காலம். பாம்பைக் கண்டு பயந்தார்கள். நாகத்தை வழிபட்ட மக்கள் நாகர்கள். புரட்சியாளர் அம்பேத்கர் வரையறுக்கிறார்: “நாகர்களும் திராவிடர்களும் ஒருவரே!” இந்திய வரலாறு என்பதே ஆரிய,
திராவிடப் போராட்டம் என்பதுதான் (அம்பேத்கர் எழுத்துகள், பேச்சுகள் நூல்கள், தொகுப்பு 14 பக்கம்
78 முதல் 95 வரை).
இந்திய
நிலப்பரப்பில் வட இந்தியாவில், தென்னிந்தியாவில்,
நேபாளம் தொடங்கி பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களே நாகர்கள்; அவர்களே பிற்காலத்தில் திராவிடர்கள். தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது புதிய கட்டுரையில் எழுதுகிறார்: “திராவிடம்
என்பது மரபினம். அது தெலுங்கராக,
கன்னடராக, மலையாளியாக, தமிழராகப் பிரிந்து, திராவிடராக ஒருங்கிணைகிறார்கள்.”
சிந்து
சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதே! அது திராவிடத்தின் பழமையை வெளிப்படுத்துவதாகும். ஆகவே, சிந்து சமவெளி நாகரிகம்
திராவிட நாகரிகம் அல்ல என
மடைமாற்ற நடந்த வலதுசாரிக் கருத்தியல்கள், தொல்லியல் ஆய்வாளர்களால் முறியடிக்கப்பட்டன.
சிந்து
சமவெளி நாகரிகம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் சர். ஜான் மார்ஷல் தன் ஆய்வுகளின் அடிப்படையில் இவ்வாறு முடிவு செய்து அறிவிக்கிறார்: “சிந்து சமவெளி நாகரிகத்தைக் கட்டமைத்தவர்கள் திராவிடர்களே!” திராவிடம் மூத்த முதல் நாகரிகம். இன்றுவரை இந்தியாவில் பல பழங்குடி மக்களின்
பேச்சு மொழிகளில், திராவிட மொழிகளின் வேர்ச்சொற்கள் விரவிக் கிடப்பதே ஆதாரம்.
பல
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து போன லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம் திராவிடர்கள் தோன்றிய நிலப்பகுதி என
அறியப்படுகிறது. அது அழிந்துபோன பழைய திராவிட நாடு. பின் ஆரியர்களின் வருகைக்கு முன்னே இந்தியாவெங்கும் பரவி வாழ்ந்த ஆதிக் குடிமக்களே திராவிடர்கள். இது மரபணுச் சோதனை அடிப்படையில் 65,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூத்த இனம் என ஹார்வேர்டு
பல்கலைக் கழகம் மரபணுக் குறியீடு, உயிரியல் மொழியியல் ஆய்வுகள் அடிப்படையில் அறிவிப்பு செய்தார்கள். உலகெங்கும் உள்ள ஆய்வாளர்களின் ஒப்புதலின் பேரில் திராவிட இனம் மூத்த முதல் இனம் என இறுதி முடிவு
எட்டப்பட்டது.
தொன்மையான
மரபணு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் முனைவர் பிச்சப்பன் அவர்கள் ‘திராவிட புதிர்’ என்ற நூலில், திராவிடர்கள் ஆதிகுடிகள் என்றும், அவர்கள் மரபணு ரீதியாகத் தென்னிந்தியா முழுவதும் வாழ்கிறார்கள் எனவும் உறுதிபட உரைக்கிறார். 2008-ஆம் ஆண்டு ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் புலம் பெயர்ந்த மக்கள் குறித்த 18 பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அதில் ‘திராவிடம் என்பது மொழி வழிக் குடும்பம்; அது ஒரு பழமையான கலாச்சாரம்’ என
உறுதிபட அறிவிக்கப்பட்டது.
4,500 ஆண்டுகள் தொன்மைமிக்கது
திராவிட மொழிக் குடும்பம். அது 86 மொழிகளை உள்ளடக்கிய 215 மில்லியன்
மக்கள் பேசுகிற தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சில சிறு
அளவிலான பழங்குடி மக்கள் பேசும்
மொழிகளை உள்ளடக்கியதாகும்.
திராவிட மொழிகள் தென்னிந்திய திராவிட
மொழி பேசும் மாநிலங்களில் அலுவல் மொழியாகவும், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் அலுவல்
மொழிகளில் ஒன்றாகவும் பெருமை கொள்கின்றன.
திராவிடம்
என்ற சொல்லை உருவாக்கிய இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்த தொன்மையை நிலைநாட்டினார். இக்காலத்தே, தமிழ்நாடு ஆளுநர் ‘ஆரிய
ரவி’
அவர்கள் கால்டுவெல் மேல் சீறி பாய்ந்த கடந்தகால நிகழ்வை வாசகர்களுக்கு நினைவூட்டுவது என் தார்மீகக் கடமையாகும்.
அது
ஆரிய, திராவிட யுத்தத்தின் சிறு பகுதியாகும். ஒரு மொழியியல் அறிஞரை, ஆளுநர் ‘ஆரிய ரவி’ அடிப்படைக்
கல்வி மட்டுமே கற்றவர் என்று கூறியது ஆரிய மோகத்தின் உச்சம். தமிழிற்கு இலக்கணம், இலக்கியம் எனக் கிறித்தவர்களின் சீரிய தொண்டை நினைவுகூர்வது இவ்விடத்தில் சாலச் சிறந்தது.
18 -ஆம் நூற்றாண்டு.
மொழியியல் குறித்த ஆய்வுகள் தேசத்தில் இல்லாத காலம். கால்டுவெல் மொழியியலில் ஆர்வம் கொண்டவர். 15 ஆண்டுகள் கடுமையாகத் திராவிட மொழிகள் குறித்து (தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், படுகா, கொரகா, கொடலா, கொடகு, துளு, கோண்டி, பிரஹஜ்ய், குருக், சௌரியா, புனியா, குரும்பா மற்றும் சில திராவிட
மொழிகள்) ஆய்வுகள் மேற்கொண்டார். 1856 -ஆம் ஆண்டு ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற
நூலை வெளியிடுகிறார். இன்றுவரை திராவிட மொழிக்குடும்பம் குறித்த
விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிற அந்த நூலைக் கால்டுவெல் எழுதிப் பெருமை பெற்றார்.
எதுவாயினும்,
காலங்காலமாகத் திராவிடம் குறித்த வாதங்களும் விவாதங்களும் எழுவதுண்டு. நாம் திராவிடப் பரப்பு, மரபணுத் தொன்மை, மொழித் தொன்மை குறித்து விவரித்து
விட்டோம். இருப்பினும் அன்று ம.பொ. சிவஞானம்,
ஆதித்தனார், ஈ.வெ.கி.
சம்பத், பொதுவுடமை கல்யாண சுந்தரம் போன்றோர் திராவிடம் என்பதை மறுத்து தமிழ் தேசியம் பேசினார்கள். இன்று இவர்கள் இனம், மொழி என்ற
திராவிட வாதத்தை மறுக்கிறார்கள். தேவை இல்லை; எளிதானது இதுதான். நாம் தேசத்தால் இந்தியர்கள். நாம் இனத்தால் திராவிடர்கள். மொழியால் தமிழர்கள்!