சிறந்த இறையியல் மேதையாக, பேராசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக அறியப்பட்டவர் லூயிஸ் (C.S. Lewis- 1898-1963). இவர் 1942-ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் BBC வானொலியில் வழங்கிய உரைகளைத் தொகுத்து ‘குறைந்தபட்ச கிறித்தவம்’ (Mere Christianity) என்ற நூலை 1952 -ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் தொடக்க உரையிலேயே ‘பெரும் பாவம்’ (The Great Sin) என்ற தலைப்பில் அகந்தையைப் பற்றிய ஆழமான கருத்துகளைக் கூறியுள்ளார். ‘எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இந்த உலகில் வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதுதான் ஆணவம்’ என்று அவர் தன் நூலில் எழுதுகிறார்.
தொடர்ந்து
லூயிஸ் ஆணவத்தின் மற்றொரு தவறான கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ‘பல்வேறு குறைபாடோடு இருக்கும் மனிதர்கள் இணைந்து மகிழ வாய்ப்புண்டு. ஆனால், ஆணவத்தில் ஊறிப் போனவர்கள் இணைந்து வருவது இயலாத செயல். அப்படியே அவர்கள் சேர்ந்துவந்தாலும், தங்களுள் யார் பெரியவர் என்பதை நிரூபிக்கும் போட்டி உருவாகும். இந்தப் போட்டியாலும் ஒப்புமையாலும் ஆணவத்தில் சிக்கியவர்கள் கடவுளோடும் தொடர்பு கொள்ள முடியாது. அவர்களைப் பொருத்தவரைக் கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.’
தலையாய
பாவம் ஆணவம் என்றால், தலையாய புண்ணியம் தாழ்ச்சி. தாழ்ச்சி என்பது உண்மை நிலை; உயர்ந்த நிலை; துணிவு நிலை; தன் இயலாமையை உணரும் நிலை; தன்னைப் பற்றிய நேர்மையான மனநிலை. தன்னிடம் உள்ள நிறை-குறைகள் முழுவதும் அறிந்த ஒருவர், தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதே தாழ்ச்சி அல்லது பணிவு.
இன்றைய
மூன்று வாசகங்களும் குறிப்பிடும் திருவிவிலிய மாந்தர்கள் - இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்கள் பவுல், பேதுரு ஆகிய மூவரையும் இறைவன் தம் பணிக்கென அழைக்கின்ற போது, அவர்கள் தங்கள் குறைகளைத் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, இறையழைப்புக்குத் தங்களையே கையளிக்கின்றனர். எவரொருவர் ஆண்டவர்முன் தன்னையே தாழ்த்திக் கொள்கிறாரோ அவரைத்தானே கடவுள் உயர்த்துகிறார் (லூக் 14:11; யாக் 4:10). தாழ்ச்சி உள்ளவர்களுக்குத்தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார் (சீரா 3:19).
இன்றைய
முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பையும், அவரது பணியையும் பற்றிப் பேசுகிறது. எசாயாவின் அழைப்பு கி.மு. 742 -ஆம்
ஆண்டில் உசியா அரசர் ஆணவத்தால் தொழுநோய் பிடித்து இறந்தபோது (1குறி 26:16,21) நிகழ்கிறது. இந்நிகழ்வு ஆண்டவர் அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சியாக அமைகிறது. ஆண்டவர் அரியணைமீது அமர்ந்திருப்பதும், தொங்கலாடைக் கோவிலை நிரப்பி நிற்பதும், செராபீன்கள் சூழ்ந்து நிற்பதும் ஆண்டவருடைய மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன. ‘செராபீன்’
என்றால் எபிரேயத்தில் ‘எரிந்து கொண்டிருப்பது’ அல்லது
‘எரிபவை’ என்பது
பொருள். இந்தச் செராபீன்கள், ‘படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர்’ என்று பாடிக்கொண்டிருக்கின்றனர்.
இறைவனின்
மாட்சியைக் கண்ணாரக் கண்ட எசாயா “தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்” எனத் தன் நிலையை உணர்ந்து அறிக்கையிடுகிறார் (6:5). ஆண்டவரது முன்னிலையில் தான் தூய்மையற்றவராக உணர்கிறார். இந்த உணர்வு அவரது குற்றங்களால் வருகின்ற உணர்வு அன்று; மாறாக, மனித நிலையினால் வருகின்ற உணர்வு. ஆண்டவர் அவரது அச்சத்தைப் போக்குகின்றார். செராபீன்களில் ஒருவர் நெருப்புப்பொறி ஒன்றை எடுத்து எசாயாவின் உதடுகளைத் தூய்மைப்படுத்துகின்றார். இச்செயலால் எசாயா முழுவதுமாகத் தூய்மையாக்கப்படுகின்றார்.
‘யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?’ என இறைவன் கேட்கும்போது,
தூய உதடுகளைப் பெற்ற எசாயா, ‘இதோ, நானிருக்கிறேன், அடியேனை அனுப்பும்’
என்கிறார்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், பவுல் கொரிந்து நகரத் திரு அவையில் விளங்கிய ஒரு பிரச்சினை பற்றிப் பேசுகிறார். கொரிந்து நகரக் கிறித்தவர்களில் சிலர், ஒரு சில கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் உயிர்த்தெழுதலே இல்லை என்று வாதித்து வந்தனர். கிரேக்கச் சிந்தனை உடலை ஆன்மாவின் சிறை என்று கருதியதால், உடலை வெறுத்தது. இச்சிந்தனையை எதிர்த்து ‘உயிர்த்தெழுதலே கிறித்தவ நம்பிக்கைக்கு அடிப்படை’
என்று வலியுறுத்துகின்றார் பவுல். உயிர்ப்பின்போது நம் உடலும் மாற்றம் பெறும் எனவும் போதிக்கிறார். இறந்தவர்கள் உயிர்பெற்றெழுவார்கள் என்று கொரிந்து நகர திரு அவைக்குப் பவுல் இறையியல் விளக்கம் தருகின்றார். ‘கிறிஸ்து நமக்காக இறந்தார், அடக்கம் செய்யப்பட்டார், உயிருடன் எழுப்பப்பட்டார்’ - இதுதான்
தொடக்கத் திரு அவைக்குத் திருத்தூதர்கள் வழங்கிய நற்செய்தி. இதே நம்பிக்கை அறிக்கையை எந்த மாற்றமுமின்றி பவுலும் அறிவிக்கிறார்.
திருத்தூதர்களுக்குத்
தோன்றிய இயேசு, இறுதியாக, காலம் தப்பிப் பிறந்த குழந்தையைப் போன்ற தனக்கும் தோன்றியதாகப் பேசுகின்றார் பவுல். அதே நேரத்தில், திரு அவையைத் துன்புறுத்திய குற்றவுணர்வுக்கு ஆளான அவர், இயேசுவின் அழைப்பைக் கண்டதும், ‘நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன்’ எனத்
தன் குற்றநிலையை உணர்கிறார் (1கொரி 5:8). தன்னிடம் உள்ள நிறை-குறைகளை முழுவதும் அறிந்த ஒருவர், தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதுதானே பணிவு!
இன்றைய
நற்செய்தி வாசகத்தில், இயேசு தம் சீடரை அழைக்கும் நிகழ்வையும், இந்நிகழ்வோடு கெனசரேத்து ஏரியில் பெருமளவு மீன்பிடித்த நிகழ்வையும் இணைத்து லூக்கா பதிவு செய்கிறார். கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்த இயேசு, சீமோனின் படகில் உரிமையோடு ஏறுகிறார். படகையே போதிக்கும் ஒரு தளமாக மாற்றுகிறார். படகில் இருந்த அனைவரும் இயேசுவின் போதனையை உற்றுக் கவனிக்கின்றனர். இரவு முழுவதும் உழைத்தும் மீன் எதுவும் கிடைக்கவில்லையே என்ற கவலையில் இருந்த சீமோனின் உள்ளத்தில் இயேசுவின் போதனைகள் மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்தச் சூழலில்தான் இயேசு, ‘ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்’
என்கிறார். ‘இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை’ என்று
தயங்கிய பேதுரு, இருப்பினும், ‘உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’ என்று
கூறி வலைகளைப் போடுகிறார். மிகுதியான மீன்பாடு கிடைக்கின்றது. உடனே, பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்கிறார்.
கடவுள் ஒருவரது வாழ்க்கையில் தலையிடும்போது வெளிப்படும் பயம் இதுவாகும் (எசா 6:5; எரே 1:6; விப 3:11).
இவ்வாறாக,
இன்றைய மூன்று வாசகங்களிலும் எசாயாவும் பவுலும் பேதுருவும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அழைக்கப்பட்டபோது, தூயவரான கடவுளின்முன் இறைப்பணியாற்ற தங்களை முற்றிலும் ‘தகுதியற்றவர்களாக’ உணர்கின்றனர்.
தங்கள் குறைகளையும் சிறுமையையும் மனத்தாழ்மையையும் உள்ளபடியே வெளிப்படுத்துகின்றனர். இவர்களின் இதயத் தாழ்ச்சி அச்சத்திலும் பாவ உணர்விலும் வெளிப்பட்டதல்ல; மாறாக, வியப்பிலும் தாழ்ச்சியிலும் கூறப்பட்டவை. குறையுள்ள இம்மூவரும் நிறையுள்ள இறைவனின் தொடுதலுக்குத் தங்களை அனுமதிக்கின்றனர். கடவுள் அவர்களை நிறைவுள்ளவராக்குகின்றார்.
‘மேன்மை அடையத் தாழ்மையே வழி’
(நீமொ 18:12). ‘தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்’ என்கிறார் புனித அகுஸ்தின். ‘திரு அவையில் இருக்கும் மேய்ப்பர்கள் தாழ்ச்சி எனும் பாதையைக் காட்டாவிடில், அவர்கள் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியாது’
எனும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று இங்கே ஆழமாகப் பொருள்படுகிறது (பிப்ரவரி 7, 2020).
ஆணவம்
பாராட்டுபவர்களால் தங்களிடமுள்ள பல வீனத்தைத் தெளிவாகப்
பார்க்க இயலாது. நம்மிடமுள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளாதபோது அவற்றைத் திருத்துவது இயலாத செயல். குறைகள் திருத்தப்படாதிருந்தால் அதன் எதிர்விளைவுகள் துன்பத்தைச் சுமந்து வரும். அதேவேளை தாழ்ச்சி மனம் கடவுளிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும், நம் குறைகளைத் திருத்திப் புதுவாழ்வுக்கு இட்டுச் செல்லும். ‘தாழ்ச்சியே ஒருவரைக் கடவுளுக்கும் உடன் வாழும் சகோதரர்களுக்கும் நெருக்கமானவர்களாக மாற்றும் திறன்கொண்டது’ என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ் (நவ. 06, 2023). ஒருமுறை அன்னை தெரேசா தன் அன்பு மற்றும் அறப்பணிகளைப் பற்றிப் பேசும்போது, “நாங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் இவ்வுலகில் நடைபெறும் பணிகளோடு ஒப்பிடும்போது அவை கடலின் ஒரு துளிக்குச் சமம்” என்னும் வாக்கு இங்கே எண்ணிப் பார்க்கத் தோன்றுகின்றது.
எனவே,
நம்மை நெருங்கிவர விரும்பும் இயேசுவை நம் இதயங்களில் வரவேற்க நாம் தயாராக இருப்போம். நம்முடைய தினசரி வாழ்விலும் குடும்ப வாழ்விலும் உறவுகளை அனுபவிப்பதிலும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தோல்விகளைச் சந்திக்கும் வேளையில் நம் மனம் எனும் படகில் இயேசுவை ஏற்றி அவர் நமக்கு இடும் கட்டளைகளை நிறைவேற்றுவோம். நம்முடைய அன்றாட நிகழ்வில் நம்மை நோக்கி வரும் இறைவனின் அழைப்பை உணரும் வரத்தைக் கேட்போம். கோபுரத்தில் இருந்தபோது ஆடாத ஆட்டம் ஆடியவர்களைக் காலம் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருக்கிறது என்பதை மறக்கமுடியுமோ? தாழ்ச்சி ஏன் இவ்வளவு விரும்பத்தக்கதெனின், கடவுளிடம் மிக நெருங்குவதற்கு இதுவே வழிவகுக்கும். ‘அனைத்துக்கும் மேலானவரை நெருங்க, தாழ்ச்சியில் மேலோங்க வேண்டும்’
- கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்.
“ஓ மானிடா, உன்
கடவுளுக்கு முன்பாகத் தாழ்ச்சியோடு நடந்துகொள்வதைத் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?” (மீக் 6:8).