news-details
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 23, 2025 ஆண்டின் பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) 1சாமு 26:2,7-9, 12-13,22-23; 1கொரி 15:45-49; லூக் 6:27-38 (வெறுப்பற்ற வாழ்வு தெய்வீகமானது!)

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், ஒரு சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்த சிறாரின் மனநலம் பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டது. அடுத்து என்ன செயல் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ளாமல், சிறார் மற்றும் வளரிளம் பருவத்திலேயே பல கொலைகளைச் செய்து, சீர்த்திருத்தப் பள்ளியில் இவர்கள் இருப்பதற்குக் காரணம்இவர்கள் சிறுவயதில் வெறுக்கப்பட்டதேஎன அந்தப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்தது.

அந்த ஆய்வில், ஓர் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஒரு சிறுவன் கூறியது: “என் அப்பா என்னை வெறுத்தார். ஏனெனில், அவர் எனது இரண்டாவது அப்பா. என் வீட்டில் நாய் குட்டிக்குக் காட்டிய அன்பைக்கூட அவர் என்னிடம் காட்டியதில்லை. அவருக்குப் பிறந்த என் தம்பி மீதுதான் அவ்வளவு பாசம். நான் மனத்தளவில் தனிமைப்படுத்தப்பட்டேன். நான் விளையாட்டு வீரனாகிக் குடும்பத்திற்குப் பெருமை தேடித்தர வேண்டுமென விரும்பிய அவர், அதற்காகச் சிறந்த பயிற்சியாளர் ஒருவரை நியமித்தார். என்னை வெறுத்த அவருக்கு நான் ஏன் பெருமை தேடித் தரவேண்டும்? அதற்கு மாறாக, நான் அவருக்கு அவமானத்தைத் தேடித்தர விரும்பினேன். அவர் குற்ற உணர்வால் காலமெல்லாம் கண்ணீரில் துடிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டேன்என்றான்.

1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதிக்கும், ஜூலை 15-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அந்நாட்டின் ஹமூட்டு மற்றும் துட்சி இனத்தவர் ஒருவரையொருவர் கொன்று பழிதீர்த்துக் கொண்டனர். இதில், ஐந்து இலட்சம் முதல், பத்து இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர். இவர்களில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் துட்சி இனத்தவர். இந்த இனப் படுகொலைகளுக்குக் காரணம், இவ்விரு இனத்தவரும் ஒருவர் மற்றவர் மீது கொண்டிருந்த வெறுப்புணர்வே!

இவ்விரு நிகழ்வுகளிலும் ஒருவர் மற்றவர்மீது காட்டுகின்ற வெறுப்பு அத்தனை பேரையும் கொலைக் குற்றவாளிகளாக்கி விட்டது. ஏன் இவ்வளவு வெறுப்பு? அன்பும் அறமும், ஈகையும் ஈரமும், கனிவும் பரிவும், நேயமும் தியாகமும் ஏன் மனிதர்கள் மனத்திலிருந்து மறைந்துவிட்டன? கடவுள் அன்பே வடிவானவர்! அவர் சாயலில்தானே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்! அவரைப் போன்றுதானே நாம் இருக்கவேண்டும்!

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 7-ஆம் ஞாயிற்றுக்கிழமைக்குள் நுழைகிறோம். இன்றைய மூன்று வாசகங்களும் பகைமையைப் போக்கவும் வெறுப்பை வேரறுக்கவும் மன்னிப்பை வளர்க்கவும் நம்மை அழைக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், தன்மீது பகைமை காட்டிய சவுலைக் கொல்லாமல் அமைதியாகச் செல்லும் தாவீதின் உயர்ந்த மனத்தைப் பார்க்கிறோம். சவுல் இஸ்ரயேலின் முதல் அரசர். சாமுவேல், சவுலை எண்ணெயால் அருள்பொழிவு செய்து திருநிலைப்படுத்தினார் (1சாமு 10:1). அவர்தான் சிதறுண்டு கிடந்த இஸ்ரயேலின் பன்னிரு குலங்களை ஒன்றாகச் சேர்த்து, அன்றைய ஆற்றல்மிக்க வேற்றின எதிரியான பெலிஸ்தியருக்கு எதிராகப் போர் தொடுத்து வெற்றி கண்டார். காலப்போக்கில் சவுல் கடவுளுக்கும் சாமுவேலுக்கும் கீழ்ப்படிதலின்றித் தனக்குச் சரியாகப்பட்டதைச் செய்ய முனைந்தார் (1சாமு 15). எனவே, சவுல் அரசாட்சியில் இருக்கும்போதே சாமுவேல் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்தார் (16:13). தாவீது படைக்கலத்தின்மீது நம்பிக்கை வைக்காது, கடவுளையே நம்பி கோலியாத்தை வீழ்த்தினார். கோலியாத்தை வென்றதில் தாவீதின் ஆற்றல் மற்றும் போரிடும் திறன் மற்றவர்களால் அதிகம் பேசப்பட, இது சவுலின் பொறாமையைத் தூண்டி எழுப்பியது.

மனத்திற்குள் தோன்றும் பொறாமை, ‘அழித்துவிடு, தீங்கு செய், வெறுப்புக்கொள் - இப்படித்தான் மனத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும். இந்த அகத் தூண்டுதலுக்குச் செவிகொடுப்பவர்கள் மறுகணமே குற்றவாளியாகிவிடுகிறார்கள். வளமை குன்றாமல் நம் வாழ்க்கை எப்போதுமிருக்க ஒருபோதும் பொறாமை நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொறாமை கொண்டு பிறரை அழிக்க முயற்சி செய்பவர்கள் தங்களையே அழித்துக்கொள்கின்றனர். தாவீதுமீது பொறாமை கொண்ட சவுலும் பல நேரங்களில், பல இடங்களில் தாவீதைக் கொல்ல முயற்சி செய்கிறார். தாவீது சவுலிடமிருந்து தப்பி பாலைநிலத்தில் தஞ்சம் புகுகிறார். தாவீதைக் கொல்லும் வெறியுடன் அலைந்து திரிந்த சவுல், களைப்புற்று ஓரிடத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரருகே அவரது ஈட்டியும் நிலத்தில் குத்தப்பட்டு நிற்கிறது. சவுலைக் கொல்லும் வாய்ப்பு இப்போது தாவீதின் கரங்களில் வாய்த்துள்ளது. இந்த நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.

உறங்கும் எதிரி, ஊன்றப்பட்ட ஈட்டி, உயிரை எடுக்கத் தயாராக இருந்த தோழர் அபிசாய் என அனைத்தும் தனக்கு ஆதரவாக இருந்தபோதிலும், “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” (1சாமு 26:9) என்று கூறி, மன்னன் சவுலை உயிரோடு விட்டுவிட்டுச் செல்கிறார். அத்துடன் நின்றுவிடாமல், சவுல் தன் தவறை உணர்ந்து, நல்வழி திரும்பவேண்டும் என்ற ஆவலில், சவுலின் ஈட்டியைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறார். சற்றுத் தொலைவில் தாவீது நின்று கொண்டு, “அரசே உம் ஈட்டி இதோ உள்ளது. இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டு போகட்டும். அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப, ஆண்டவர் உம்மை ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை (26:22-23) என்ற தாவீதின் வார்த்தைகள் நம் மனங்களில் ஊற்றெடுக்கும் பகைமை உணர்வுகளைக் களைந்தெறிவதற்கான வழிகளைச் சொல்லித் தருகின்றன.

பகைவருக்கு எதிராக நம் கரங்களை உயர்த்துவதற்குப் பதில் அவர்களை அரவணைக்க, ஆசியளிக்க நம் கரங்களை உயர்த்த வேண்டும் என்ற மேலான வாழ்வியல் சிந்தனையை இயேசு இன்றைய நற்செய்தியில் கற்றுத்தருகிறார். இன்றைய நற்செய்திப் பகுதி சென்ற வாரம் நாம் கேட்ட சமவெளிப் பொழிவின் தொடர்ச்சியாக உள்ளது. சமவெளிப் பொழிவு முழுவதிலும், குறிப்பாக, இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு வழங்கும் அறிவுரைகளும் நடைமுறை வாழ்வுக்கு எள்ளளவும் உதவாத அறிவுரைகள் போலவே தோன்றுகின்றன. காரணம், இந்த உலகம் அன்றிலிருந்து இன்று வரை, பகைவருக்குப் பகைமை, வெறுப்போருக்கு வெறுப்பு, உதவி செய்வோருக்கு உதவி, இரக்கம் காட்டுவோருக்கு இரக்கம், அன்பு செய்வோருக்கு அன்பு, சபிப்போருக்குச் சாபம் என்றுதானே சொல்லித் தந்துள்ளது. ஆனால், இன்றைய நற்செய்தியில் இயேசுவோ, “பகைவரிடம் அன்பு, வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்காக இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு அங்கி, கேட்பவருக்குக் கொடுத்தல், பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து திருப்பிக் கேட்காமல் இருத்தல்…” என மிக அழகாக அடுக்கிக்கொண்டு செல்கிறார்.

மனித அறிவுக்கு அப்பாற்பட்ட, மிக அசாதாரணமான அறிவுரைகளாக அல்லது சவால்களாக இயேசுவின் போதனைகள் தோன்றினாலும், இவற்றைப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்துகிறார். இறையாட்சியின் மக்கள் சாதாரண மற்ற மக்களைப்போல இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. நம்முடைய வாழ்வியலும் அறநெறியும் ஆன்மிகமும் மற்றவர்களைவிட உயர்ந்ததாக, சிறந்ததாக இருக்கவேண்டும். பழிக்குப் பழி, தவறு செய்வோருக்குத் தண்டனை என்ற கருத்தோடு நாம் நின்றுவிட்டால், காந்தியடிகள் கூறுவதுபோல, “இந்த உலகமே பார்வையற்றதாகிவிடும்.”

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் குறிப்பிடுவதுபோல, நாம் அனைவரும் விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருக்க வேண்டும். மனித இயல்பை நாம் கொண்டிருந்தாலும், ஆவிக்குரிய இயல்புகளை இறைவன் நமக்குத் தந்துள்ளார். தம் மகனின் உயிர்ப்பின் வழியாக இயேசு உயிர் தருபவராக மாறுகிறார். எனவே, நாம் கிறிஸ்துவின் தெய்வீக இயல்பின்படி வாழ வேண்டும்.

மனித இயல்பில் வாழ்ந்தாலும் விண்ணக ஆவிக்குரிய இயல்பில் வாழ்ந்த மாமனிதர்களை வரலாறு என்றுமே மறக்கவில்லை. தன்னைச் சுட்ட துருக்கிய இளைஞர் முகமது அலி அஃகாவைச் சிறையில் சென்று சந்தித்து, ஆரத்தழுவி முத்தமிட்ட திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால், தன்னுடைய கணவர் கிரகாம் ஸ்டெயின்ஸ், தன் இரு மகன்கள் பிலிப் மற்றும் திமோத்தி ஆகியோரை உயிரோடு எரித்துக் கொலை செய்த தாராசிங்கை மன்னித்த ஸ்டெயின்ஸின் மனைவி, பேருந்தில் அருள்சகோதரி இராணி மரியாவைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த சமுந்தர் சிங்கை மன்னித்த இராணி மரியாவின் உடன் சகோதரி செல்மி பவுல் போன்ற அனைவரும் புனித அன்னை தெரசா கூறுவதுபோல, “வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும், நேசிப்பது நாமாக இருப்போம்எனும் கூற்றின்படி வாழ்ந்து காட்டியவர்கள்.

இன்றைக்குப் பழிக்குப் பழி தீர்க்கும் கொடிய செயலைத்தான் அதிகம் காண்கிறோம். அரசியல் கொலை, ஆணவக்கொலை, சாதி, சமய, இனக்கொலை போன்றவை அன்றாட செய்திகள். வெறுப்புணர்வும் பகை உணர்வும் காட்டாற்று வெள்ளமாய்ப் பொங்கி அனைத்து உயிர்களையும் அடித்துக்கொண்டு போவதைப் பார்க்கிறோம். இதற்கு மணிப்பூர் வன்முறை சிறந்த உதாரணம். வெறுப்பு என்ற தீய குணத்தால், ஒருவர், தன்னையும், உறவுகளையும் இழக்கிறார். குடும்பங்களில் உறவுகள்மீது காட்டும் வெறுப்பு, படிப்படியாக உறவுகளையே விலகச் செய்துவிடுகிறது. நம் உறவுகள் ஏதோ ஒரு சூழலில் நமக்குத் தீமை செய்திருக்கலாம் அல்லது நமக்கு எதிராகப் பேசி இருக்கலாம். எத்தனை நாளைக்குப் பகையையே நினைத்துக்கொண்டு வெறுப்பிலே வாழப்போகிறோம்?

மனத்திலிருந்து வெறுப்பு என்ற தீயசக்தியை வேரோடு அறுத்துவிட்டு, உறவுகளில் வளர முயற்சிப்போம். சில காயங்கள் மருந்தால் சரியாகும். சில காயங்கள் மறந்தால் சரியாகும்! திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “வன்முறை மற்றும் வெறுப்பின் சூழலிலிருந்து வெளிவந்து உலகை இதயத்தின் கண்களால் உற்றுநோக்குவோம்.” இயேசு-தாவீது-பவுல் இவர்களைப் போன்று வெறுப்புணர்வைத் தவிர்த்து, அன்புணர்வை வளர்ப்போம். ஏனெனில், வெறுப்பற்ற வாழ்வுதானே தெய்வீகமானது!