news-details
சிறப்புக்கட்டுரை
உலகம் உன் கையில் (டிஜிட்டல் சகாப்தம் – 01) (புதிய தொடர்)

5,125 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டமாயன் (MAYA) காலண்டர், 21.12.2012-இல் முடிவடைந்தது. அந்த நாள் உலகின் கடைசி நாளாக இருக்குமென்று பலர் அஞ்சியது, வரலாற்றில் ஒரு நாளாக எழுதப்பட்டுவிட்டது.

ஜோகன்னஸ் ஸடோபர் என்ற ஜெர்மானிய கணித வல்லுநரும், சோதிடருமான (Astrologer) இவர், பெரிய வெள்ளம் 25.02.1524-இல் உலகைச் சூழ்ந்துகொள்ளுமென்றும், கிரக மாற்றங்கள் ஏற்படுமென்றும் கணித்தார். பலர் நம்பினர். அதேபோன்று மழை வந்தது, ஆனால் சிறிதளவே.

76 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஹேலி வால்நட்சத்திரம் (Halley comet) நாம் வாழும் உலகிற்கு அருகில் வருவது இயற்கை. அவ்வாறு 1910-இல் இந்த வால்நட்சத்திரம் வந்த நிலையில், அதனால் விஷ வாயு பரவும் அல்லது வானலோகக் கிரக மோதல்கள் எழும், உலகம் அழியும் என்று கூறப்பட்டது. அதுவும் நிகழவில்லை.

1806-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில், உலக முடிவைக் குறிக்கும்படியாக, பெட்டைக் கோழி ஒன்றுகிறிஸ்து வருகிறார்என்று எழுதப்பட்ட முட்டை இடுவதாகச் செய்தியைப் பரப்பினார். இதனைக் கேள்வியுற்று பலர் அதைச் சென்றும் கண்டனர். பின்னர் அதை எழுதியது அந்தக் கோழியின் சொந்தக்காரர் என்று தெரியவந்தது.

1911-ஆம் ஆண்டு பிறந்து 1996-இல் மரித்த பாபா வெங்கா (Baba Venga) என்ற பல்கேரிய தொலைநோக்குத் திறனாளர் (clairvoyant) தன் 12-ஆம் வயதில் பார்வையை இழந்தார்; உலகின் பல நிகழ்வுகளை முன்கணிப்பதில் தேர்ந்தவர்; இவரின் பல கணிப்புகள் நிகழ்ந்துள்ளன. டயானாவின் மரணம், செப்டம்பர்-9/11 நிகழ்ச்சி என்பவைகள் சில. இவர், 2024-இல் .. (A.I.) உலகை ஆளும் திறன் பெறும் என்பதை முன்கணித்துள்ளார்.

1993-ஆம் ஆண்டு வெர்னன் விங்கே (Vernon Vinge) என்ற அமெரிக்கக் கற்பனை எழுத்தாளர், கணினி விஞ்ஞானி, இவரின் முன்கணிப்பு: முப்பது ஆண்டுகளில் மனிதனை மிஞ்சும் அறிவாற்றலைக் (Super human intelligence) கொண்ட தொழில்நுட்பத்தை உலகம் பெற்றுவிடும் என்று. அதோடு நிற்கவில்லை, மனித சகாப்தமும் முடிந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார். நாம் 2023-ஆம் ஆண்டைக் கடந்து ஓராண்டாகிறது. இவ்வாறு உலக அழிவைக் குறித்து முன்மொழிந்தவர்கள் பலர். நிலவரம் இப்படியிருக்க, இந்தச் செய்திகளைப் பரப்புவதன் மூலம் ஆதாயம் சம்பாதிப்போர் சிலர்; ‘எல்லாருக்கும் நடப்பது நமக்கும்என உலக அழிவைக் குறித்து கவலையின்றி சிலர் அவரவர் வேலையைப் பார்ப்பதையும் காண்கிறோம்.

உலகச் சரித்திரத்தில், கடந்தகாலத் தொழில்நுட்பங்கள் பல உருவில் மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன. இன்று நாம் புதிய தொழில்நுட்பத்தைக் காண்கிறோம். பல முந்தையத் தொழில்நுட்ப அலைகள் தொழிலாளர் பிரிவில் சில வேலைத் திறன்களைத் தேவையற்றதாகவும், அதே நேரத்தில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியது. ஆனால், இப்போது நாம் சந்திக்கும் .. (AI) அலை எங்கு அழைத்துச் செல்கிறதென்று உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

டிஜிட்டல் சகாப்தம் (Digital era)

டிஜிட்டல் தொழில்நுட்பம் இதுவரை கண்டிராத வேகத்துடன், எவ்வாறு எதிர்காலமிருக்குமென்று கணிக்க முடியாத  (unpredictable) ஒன்றாக உள்ளது. ரோபோக்களும், .. (AI) சார்ந்த தொழில்நுட்பமும் முழு அளவில் இயங்கும்போது வேலைகளை ஆக் கிரமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் புதிய வேலைகளை உருவாக்கியது என்பதுதான் கடந்தகால வரலாறு.

.. (AI) கடந்த இருபது ஆண்டுகளில் முன்னேறி வரும் (developing countries) உலக நாடுகளின் 50% மக்களிடம் சென்றடைந்து சமுதாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது. வேகமான விஞ்ஞான வளர்ச்சியினால், உலகச் சரித்திரத்தில் எப்போதுமில்லாத அளவிற்கு மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் நிலை இயல்பாகவோ அல்லது தேவைக்கென்றோ உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய 780 கோடி உலக மக்கள்தொகையில் 550 கோடியினரிடம் கைப்பேசி (mobile) உள்ளது; 440 கோடியினர் இணையதளமும் (Internet), 37 கோடியினர் சமூக ஊடக (Social Media) உபயோகிப்பாளர்களாகவும், 25 கோடியினர் மின்னஞ்சல் (email), 28 கோடியினர் முகநூல் (Facebook) பயன்படுத்துவோராகவும் உள்ளனர் என்பது ஓர் ஆய்வின் அறிக்கை.

இன்று ஏறக்குறைய 50% உலக மக்கள் தொகையினர் சமூக ஊடகங்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றனர். ஒருபுறம், இது மக்களிடையே சில வேளைகளில் உண்மைக்கு அப்பாற்பட்ட செய்திகள் பரவ வழிசெய்தாலும், உலகச் சமுதாயத்தினர் தங்கள் குரலை மற்றவர் கேட்க இடமளிப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

இந்நிலையில், உலகளாவிய வேகமான இப்புதுமை தொழில்நுட்ப வளர்ச்சி நாடுகளிடையே இடைவெளியை ஏற்படுத்தவும் இடமளிக்கலாம்; வலிமை பெறும் நாடுகள் தங்களுக்கென்று இணையதளம், .. (AI) கட்டமைப்பு , பண ஆதிக்கம், வர்த்தகம், நிதி ஒழுங்குமுறைகள் என்பன ஒருவேளை, முன்பொரு காலத்தில் உருவாகிய பெர்லின் சுவர் நிலைக்குச் செல்வதாக இல்லாமல் தவிர்க்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலாளர் கூறுகிறார்.

இன்று .. என்ற தொழில்நுட்பம் தொடக்கத்தில் மெதுவாகக் கால்பதித்து இப்போது நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தி வருவதை நாம் வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் உணர்வதில்லை. 2010-ஆம் ஆண்டு .தொழில்நுட்பத்தைக் குறித்து யாரும் பெரும் பொருட்டாக நினைக்கவில்லை. இன்று .. சிறுகச் சிறுகப் பல துறைகளில் ஒரு பெரும் புரட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது .

உலகில் தலைசிறந்த கணினி நுட்ப நிறுவனங்களிலொன்றான மைக்ரோசாப்ட்டின் (Microsoft) தலைவர் நாடெல்லா, .. பற்றிஇப்போதிருக்கும் மின் அஞ்சலின் (email) முக்கியத்துவத்தை 1995-இல் யாரும் உணரவில்லை என்பதைப் போன்று, ..யின் நிலை இருக்கிறது; இன்று இணையதளம் (Internet) இல்லையென்றால் வீட்டிலிருந்து பணி (WFH) சாத்தியப்படுமா? அல்லது பெரும்பான்மை வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குக் கூகுள் (Google) இல்லையென்றால் இருக்குமிடத்திலிருந்து யாரிடம் சென்று பதில் பெற முடியும்?” என்று கூறுகின்றார். வரலாற்றில் இதுவரை மனித வாழ்க்கை முறைகளில் தொழில்நுட்பம் ஓரளவிற்குத் தேவைக்கேற்ப கலந்திருந்ததைக் கண்டோம். இன்று நாம் சந்திக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் பல துறைகளில் குறிப்பாக, மருத்துவத்துறையில் ஏற்படப் போகும் மாற்றங்கள், மனித வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்திடப் போகிறதென்பதை உணரப் போகிறோம்.