யூபிலி-2025 ஆண்டைப் பொருளுள்ள விதத்தில் கொண்டாட, நம் திருத்தந்தை அவர்கள் காலத்தின் அறிகுறிகளில் எதிர்நோக்கைக் கண்டறிய எட்டு அடையாளங்களை நம்முன் வைக்கிறார். ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’ (உரோ 5:5) என்பது ஒரு நம்பிக்கை தரக்கூடிய இறைவார்த்தையாகப் பவுலடியாரின் வரிகளிலிருந்து அவர் எடுத்திருக்கிறார். எதிர்நோக்கு என்பது நாம் எதிர்பார்ப்பது நடக்கும் என்பதுதான் ஆழமான நம்முடைய நம்பிக்கை. எதிர்நோக்கு என்பது இலக்கு மட்டுமல்ல, அது ஓர் ஆள். அந்த ஆள் நம் இயேசுதாம். எனவே, ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’ என்று சிந்திக்கும் நாம், இயேசு நம்மை ஏமாற்றமாட்டார் என்கிற ஒரு நம்பிக்கை செய்தியையும் பெறுகிறோம்.
அதேநேரத்தில்
எதிர்நோக்கு என்பது ஓர் ஆள் என்பதைச் சிந்திக்கும்பொழுது, கிறிஸ்துவின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் குறிப்பாக, கண்டுகொள்ளப்படாதவர்கள்தான்
நம்முடைய இலக்கும் எதிர்நோக்கும் என்பதில் உறுதியாக இருப்போம். இவர்களையும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் ஏமாற்றிவிடக்கூடாது. கண்டிப்பாக நாம் அவர்களுடைய வாழ்வைப் பலமாக்க, நலமாக்க நாமும் நம்பிக்கை செய்தியாக வாழவேண்டும் என்னும் அடிப்படையில் எட்டு அடையாளங்களைத் திருத்தந்தை நமக்குத் தருகிறார்.
1. அமைதிக்கான அழைப்பு
போரின்
சோகத்தில் மூழ்கியுள்ள உலகில் அமைதிக்கான விருப்பம் எதிர்நோக்கின் முதல் அறிகுறியாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை விருப்பம் கொள்கிறார். வன்முறைக்கும் கொடூரமான தாக்குதல்களுக்கும் உள்ளான மனிதகுலம் இப்பொழுது அமைதிக்காக ஏங்குகிறது. ஆயுதங்களின் சத்தமும் அழிவும் இறப்பும் எப்போது நிறுத்தப்படும் என்று குழந்தைகள் கனவு காண்கிறார்கள். “அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்” (மத் 5:9) என்று இயேசு கூறுவதை நாம் இங்கு நினைவுகூர்கிறோம். உரையாடல் வழியாக உறவைப் பலப்படுத்துவதுதான் உலக அமைதியைக் கொண்டு வரும் என்கிற எண்ணம் நமக்குள் தோன்ற வேண்டும். எனவே,
குறிப்பாக அன்பியங்களில் உறவுகளை நாம் கொண்டாடுவோம். பகைமைகளைப் புதைத்துப் பாசத்தை விதைத்து அமைதிக்கான விருப்பம் கொண்டால் நாம் அழகிய அன்பியம் படைக்கலாம். யூபிலி ஆண்டு ஒப்புரவின் ஆண்டு என்பதையும் மனத்தில் நிறுத்தி அமைதிக்கான விருப்பம் கொள்ள நாம் முன்வருவோம்.
2. உயிரைப் பகிர அழைப்பு
உயிரைப்
பகிர்ந்துகொள்ளும் விருப்பம் என்பது இரண்டாவது எதிர்நோக்கின் அடையாளமாய் அமைகிறது. காரணம், மக்கள்தொகை அதிகம் என்கிற பெயரில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்பது உலகத் தலைவர்கள் உண்மையான பிரச்சினையை எதிர்கொள்ள மறுப்பதற்கான ஒரு வழியாகும். பொறுப்பான பெற்றோர் உயிர்களை வாழ விடுகிறார்கள்.
அன்பின்
வளமையின் அடையாளமாகப் புதிய மகன்களையும் மகள்களையும் பெற்றெடுப்பதில் பிரகாசமான எதிர்காலம் அடங்கியுள்ளது. வெற்றுத் தொட்டில்களில் குழந்தையின் சிரிப்பொலியும் அழுகுரலும் கேட்க வேண்டும். துறவற அழைத்தலைச் சிந்திக்கக்கூடிய நாம் இறைஅழைத்தலுக்காகக் குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுக்க அழைக்கப்படுகின்றோம். நம்பிக்கை குறைந்து போகிற நேரத்தில், எதிர்நோக்கு ஏமாற்றம் தராது என்பதை மக்கள் செல்வங்கள் வழியாக வெளிப்படுத்த ஒவ்வொரு தம்பதியினரும் முன்வர, அதன் வழியாக இறையாட்சிப் பணி தொடர நாம் அழைக்கப்படுகின்றோம்.
3. சிறைக்கைதிகளை வாழவைக்க அழைப்பு
“சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” (எசா
61:1-2). இயேசு தமது பணி வாழ்வின் தொடக்கத்திலேயே அருள்தரும் ஆண்டினை நிறைவாக வழங்க நம்மையும் அழைக்கிறார். எனவே, தடுப்புக் காவலின் கடுமையையும், அதன் கட்டுப்பாடுகளையும் பாசமின்மையையும் மரியாதையின்மையையும் அனுபவிக்கக்கூடிய கொடுமையான காலகட்டத்தில் நாம் அவர்களுடைய நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.
மன்னிப்பையோ
மன்னிப்பின் வடிவங்களையோ அவர்களுக்கு வழங்க நாம் அழைக்கப்படுகின்றோம். சிறைக்கைதிகளுடன் நமது நெருக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். புதிய தன்னம்பிக்கையைக் காணச் செய்யவேண்டும். குறிப்பாக, சிறைச்சாலைகளில் பணியாற்றுவதற்குச் சிறைப்பணித்துறை நல்வாழ்வுப் பணியில் தன்னார்வப் பணியாளராக நம்மையே இணைத்துக் கொண்டு பணியாற்றுவது அவர்களுடைய குடும்பங்களின் கவலைகளைத் துரத்துவது என்கின்ற நலமான செயல்களில் இந்த ஆண்டில் செயல்படும்போது, நாம் அவர்களுக்கு எதிர்நோக்கை உறுதிப்படுத்துகிறோம் என்பது புலனாகும்.
2024 டிசம்பர் 26-ஆம்
தேதி நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுதலையைக் கருத்தில் கொண்டு உரோமையில் உள்ள ரெபிபியா சிறைச்சாலையைத் திறந்து வைத்ததை நாம் நினைவு கூர்வோம்.
4. நோயாளர் நலம் காக்க
அழைப்பு
“வாழ்க்கை இதோடு முடிந்தது”
என்று எதிர்நோக்கை இழந்து நிற்கும் நோயாளர்களுக்கு எதிர்நோக்கை உறுதிப்படுத்துமாறு, நமது அருகாமையை அவர்களுக்கு உணர்த்துவது என்பது யூபிலி ஆண்டின் மிக முக்கியமான செயல்பாடு.
நமது
அருகாமையினாலும் பாசத்தாலும் ஆறுதல் வார்த்தைகளாலும் அவர்களின் துன்பங்களை நம்மால் தணிக்க முடியும். நன்றி உணர்வோடு இரக்கத்தின் செயல்பாடுகளால் அவர்களுக்கு நாம் காட்டும்போது அவை எல்லாம் எதிர்நோக்கின் செயல்பாடுகளே.
கவனத்துடனும்
அக்கறையுடனும் அவர்களை அணுகுவது தங்கள் வாழ்நாள்களை அதிகப்படுத்தும். நமது அன்பியங்களில் கண்டுகொள்ளப்படாமல், கவனிக்கப்படாமல் இருக்கக்கூடிய நோயாளர்களைக் கவனிக்க வேண்டிய முழுப்பொறுப்பு நமது அணுகுமுறைகளில்
தெரிய வேண்டும்.
பொருளாதார
நெருக்கடிகளில் இருக்கக்கூடிய நோயாளர்களை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவி செய்து மருத்துவமனைகளில் அவர்களைச் சேர்ப்பது, கவனிப்பது அல்லது வீடுகளில் முடங்கிக் கிடக்கிற பொழுதுகளில், அவ்வப்போது அவர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்வது எல்லாமே யூபிலி ஆண்டின் இரக்கத்தின் செயல்பாடுகளே.
நீங்கள்தான்
எதிர்நோக்கை நோயுற்ற மனிதர்களில் கொண்டு வர முடியும் என்பதை
உணர்ந்து செயல்பட வேண்டும்.
(தொடரும்)