திருத்தந்தை வரைந்த ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’ என்னும் யூபிலி ஆண்டு ஆணை மடலில் எதிர்நோக்கின் அடையாளங்கள் குறித்து (எண்கள் 7-15) விவரிக்கும்போது, காலத்தின் அறிகுறிகள்தான் எதிர்நோக்கின் அறிகுறிகள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
‘உலகில் அமைதிக்கான விருப்பம் எதிர்நோக்கின் முதல் அறிகுறி’ என்று தொடங்கும் திருத்தந்தை அவர்கள், தொடர்ந்து திறந்த மனத்தோடு வாழ்க்கையைப் பகிர்கின்ற அறிகுறியையும், கைதிகளை, நோயுற்றவரை, இளையோரை, புலம்பெயர்ந்தோரை, முதியோரை, வறியவர்களை எதிர்நோக்குக்கான அடையாளங்களாகத் தந்து நமது கவனத்தை அவர்கள்மீது திசை திருப்ப அழைப்பு விடுக்கிறார்.
அகில
உலக நோயாளர் தினத்தைப் பிப்ரவரி பதினொன்றாம் தேதி சிறப்பிக்கக்கூடிய இக்காலத்தில் நோயாளர் கவனிப்புப் பற்றித் திரு அவைக்குக் கூறும் சிந்தனைகளைச் சற்று அலசிப் பார்ப்போம்.
‘அனைவரும் நன்கு கவனிக்கிறார்கள்’ என்னும்
நேர்மறை நம்பிக்கை, எதிர்நோக்கின் அறிகுறியாக நோயுற்ற அனைவருக்கும் காண்பிக்கப்பட வேண்டும்.
தலையணைகளைக்
கண்ணீரால் நனைக்கும் நோயாளர்கள் நமது நெருக்கத்தாலும் உடனிருப்பாலும் ஆறுதல் பெற வேண்டும். நோயுற்றோருக்கு நன்றிக் கடனைச் செலுத்தும் அற்புதத் தருணங்களாக அவர்களோடு உடன் இருக்கும் தருணங்கள் மாற வேண்டும்.
தன்
வேலைகளைச் சுலபமாகச் செய்ய முடியாத நிலைமையில், கண்கள் கண்ணீரால் நிரம்பி வழியும் பொழுதுகளில், கை-கால்கள் அசையா
நிலையில் அவர்களின் கண்பார்வையும், புலம்பல்களும், முனகல்களும் கூர்ந்து கவனிக்கப்பட்டு நன்றிப்பெருக்கின் செயல்பாடுகளாக நமது கவனிப்பு அமைய வேண்டும்.
தனிமை
என்கிற உணர்வை நோயாளர்களுக்குக் கொடுக்காமல், நமது அருகாமை அனுபவம் வழியாகப் புன்னகையை வழங்கலாம். வாழ்நாள்களைக் கூட நமது உடனிருப்பு நீட்டித்துச் செல்லும்; இருளுக்கு அப்பாலும் ஒளியைத் தரிசிக்க முடியும் என்னும் நம்பிக்கையை நம் அருகாமை அனுபவம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் (எ.ஏ.த.4). பல
நேரங்களில் ஏழ்மை நிலையில் பெற்றோர் தங்களைக் கவனிக்க முடியாமல் பிள்ளைகள் தவிக்கிறபோது, மருத்துவமனைகளுக்குச் செல்லாமலேயே நோய்களை இழுத்து வைத்துக்கொண்டு அப்படியே படுக்கையிலேயே தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் அவலங்களையும் இச்சமூகத்தில் பார்க்கிறோம். திரு அவை ஒருபோதும் பொறுத் க்கொள்ளாத கருணைக் கொலையைப் பல பேர் மறைமுகமாகச்
செய்யும் அவலமும் இச்சமூகத்தில் நடைபெறுகிறது.
இந்நேரத்தில்
நோயாளர் நலம் பேணும், செவிலியர்கள், உடனிருப்பாளர்கள், பராமரிப்பவர்களை நம் சமூகம் உற்சாகப்படுத்தி, அமைதியான வழிகளில் அவர்களும் பணிவிடை செய்ய நாம் உதவ வேண்டும்.
இரத்ததானம்,
உறுப்பு தானம் வழியாக நோயாளர் நலம் காக்கும் பணிகளில் இறங்கினால் எதிர்நோக்கு ஏமாற்றம் தராது என்பதை உரக்க இச்சமூகத்திற்குச் சொல்ல முடியும்.
பெரும்பாலும்
நோயாளருக்கெனத் தம்மையே அர்ப்பணித்த இயேசுவின் அடிச்சுவட்டை நாமும் பின்பற்றி, போட்டிப் போட்டுக் கொண்டு நல்ல சமாரியனைப் போல, நம் தகுதிக்கு ஏற்றவாறு காயங்களைக் கட்டவும், அதன் மருத்துவச் செலவுகளை ஏற்கவும் முன்வந்தால், நோயாளர் கவனிப்பு மாண்புக்கான மற்றும் எதிர்நோக்குக்கான பாடலாகவும் அமையும்.
இரக்கத்தின்
தூதர்களான நாம், எதிர்நோக்கு மிகுதியாகச் சோதிக்கப்படும் இடங்களான சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், மக்களின் மாண்பு சிதைக்கப்படும் இடங்கள் இவைகளைச் சந்தித்து நம்பிக்கையூட்டுவதற்கு முன்வர வேண்டும். நொறுங்கிய உள்ளத்தைக் குணமாக்க இந்த யூபிலி ஆண்டில் நாம் செயல்படுவது நல்லது என்று எண் 23-இல் திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
காலங்களை
வீணடிக்காது, அருமையான இந்த யூபிலி ஆண்டைப் பயன்படுத்தி நோயாளர்கள் மனங்களில் நலம் கொண்டு வரும் தூதர்களாக வாருங்கள்; நோயாளர் உள்ளங்களில் பிரகாசத்தைப் பரப்புவோம்.