“இன்றைய மனித வாழ்வின் மகிழ்வும் ஏக்கமும் கவலையும் கிறித்தவர்களுக்கும் முற்றிலும் உரியனவே. கிறிஸ்துவைப் பின்பற்றும் இவர்களின் இதயத்தில் உண்மையான மனிதக் கூறுகள் யாவும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன” என்னும் புகழ்பெற்ற வரிகளுடன் தொடங்குகிறது ‘இன்றைய உலகில் திரு அவை’ என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கொள்கைத் திரட்டு.
காலத்தின்
அறிகுறிகளைத் துழாவி உய்த்துணர்ந்து எதிர்வினையாற்ற நம்மை அழைக்கிறது நம் திரு அவை. அந்த அழைப்பின் அடிப்படையில் நமது இறைவேண்டலும் மரபின் பார்வைகளையும் அனுபவங்களையும் கடந்து, இன்றைய வாழ்வின் உண்மைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும்.
அவ்வாறு
நோக்கும்போது நம்மை உலுக்குகின்ற ஓர் அறைகூவல் சுற்றுச்சூழல் மாசு. அதன் விளைவாகப் புவி வெப்பமயமாதலும், தொடரும் இயற்கைச் சீற்றங்களும் மனித குலத்தை அச்சுறுத்துகின்றன. எனவே, இயற்கையைப் பேணுவதையும், சுற்றுச்சூழலைப் பராமரிப்பதையும் ஓர் அவசரக் கடமையாக மேற்கொள்ள அழைக்கிறது நம் திரு அவை.
நம்
திருத்தந்தை பிரான்சிஸ் ‘சுற்றுச்சூழல் பராமரிப்பின் திருத்தூதர்’ என
அழைக்கப்படுமளவுக்குத்
தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். 2015-ஆம் ஆண்டில் வெளிவந்த திருத்தந்தையின் சுற்றுமடலான ‘இறைவனுக்குப் புகழ்’
(லவு தாத்தோ சி) வெப்பநிலை மாற்றத்தை இன்றைய உலகின் ‘அறநெறிச் சிக்கல்’ என்று குறிப்பிட்டு, அதற்கு விடை காண நல்மனம் கொண்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்தது.
யூபிலி
2025 கொண்டாட்டத்திற்கு
அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், யூபிலிக்கு ஆயத்தமாக நாம் அனைவரும் இறைவேண்டல் செய்யப் பணித்தார். இறைவேண்டலைப் பற்றி விளக்கும்போது, ‘படைப்பின் கடவுளுக்கு நன்றி செலுத்தவும், படைப்பைப் பாதுகாக்கவும் நமது இறைவேண்டல் உதவ வேண்டும்’
என்றார்.
திருவிவிலியத்தைக்
கூர்ந்து நோக்கும்போது, இயற்கை இறைவனின் கைவேலை; எனவே, நாம் இயற்கையை மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்னும் செய்திகள் இழையோடுவதைக் காணலாம். “மண் ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே”
(திபா 24:1-2) என்னும் திருப்பாடல் வரிகள் ஓர் எடுத்துக்காட்டு. எசாயா இறைவாக்கினரின் சொற்களில் “நிலம் புலம்பி வாடுகின்றது. மண்ணுலகம் தளர்ந்து வாடுகின்றது. நாடு அதில் குடியிருப்போரால் தீட்டுப்பட்டுள்ளது” (எசா
24:4-5) என்னும் எச்சரிக்கை மொழிகளைப் பார்க்கிறோம். நிலம், நீர், காற்று, மரம், செடி கொடிகள் மானிடரால் மாசுபடுத்தப்படுவது முற்காலத்திலிருந்து இன்றும் தொடர்வது வருத்தத்துக்குரியது.
திரு
அவை வரலாற்றில் இயற்கையை மதித்துப் போற்றிய பல மாமனிதர்களைப் பார்க்கிறோம்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பிரான்சிஸ் அசிசியார் இயற்கையோடு உறவாடிய ஒரு புனிதர். எனவே, அவர் ‘சுற்றுச்சூழலின் பாதுகாவலர்’ என
அழைக்கப்படுகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட புனித கத்தேரி டெகாக்விதா (Kateri Tekakwitha) ஓர்
அமெரிக்கப் பழங்குடியின இளம்பெண். தனது 19 வயதில் கத்தோலிக்கராகி, 24-ஆம் வயதில் இறையடி சேர்ந்தவர் (1656-1680). இவரைச் சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் பாதுகாவலி என்று அழைக்கிறது திரு அவை.
இன்று
நம் திரு அவை எத்தனையோ வழிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதில் நாம் பெருமையடையலாம். எவற்றையெல்லாம் உலக நாடுகள் பின்பற்ற வேண்டுமோ, அவற்றையெல்லாம் திரு அவையின் தலைநகராம் வத்திக்கான் மாநகரம் செயல்படுத்தி வருகிறது. வத்திக்கான் நகரின் கரும்புகை வெளியீட்டை 2050-ஆம் ஆண்டுக்குள் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்கள் மட்டுமே வத்திக்கான் நகரில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மரபுசாரா எரிசக்தி, சூரியஒளி மின் திட்டம் ஆகியவற்றை மட்டுமே இனி வத்திக்கான் நகரம் பயன்படுத்தும். குப்பை மேலாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து, தேவையற்ற குப்பைகளை அகற்றிவிட்டது. பயன்படுத்தப்பட்ட பல பொருள்களை மறுசுழற்சி
முறையில் மீண்டும் பயன்படுத்துகிறது. ஏராளமான மரங்கள் நடப்பட்டுள்ளன. இவ்வாறு, சுற்றுச்சூழல் பராமரிப்பில் பிற நாடுகளுக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்கிறது திருத்தந்தையின் தலைமையில் இயங்கும் வத்திக்கான் நகரம்.
இன்று
உலகில் 2,800 மறைமாவட்டங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் இணைந்து சுற்றுச்சூழல் பராமரிப்பை முன்னெடுத்தால், அது உலகின்மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்காக ‘இறைவனுக்குப் புகழ் இயக்கம்’(Laudato Si Movement) தொடங்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் இந்தச் சுற்றுமடலை அனைத்து மறைமாவட்டங்களிலும் பரவச் செய்தல், மறைமாவட்ட அளவில் சுற்றுச்சூழல் வல்லுநர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்குதல், நமது வழிபாடுகளில் சுற்றுச்சூழல் பராமரிப்பு தொடர்பான மன்றாட்டுகள், பாடல்கள், மறையுரைகளை இணைத்தல், செயல்திட்டங்களை உருவாக்கி அவற்றைக் கண்காணித்தல், நமது விழாக்கள், கூட்டங்களில் நெகிழி போன்ற சுற்றுச்சூழல் மாசுகளைத் தவிர்த்தல், சுற்றுச்சூழல் போராளிகளுக்கு ஆதரவு அளித்தல் போன்றவற்றைச் செய்ய இவ்வியக்கம் ஊக்குவிக்கிறது.
தனிப்பட்ட
விதத்தில் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?
இறைச்சி
உண்பதைக் குறைத்தல், தனி வாகனங்களைப் பயன்படுத்தாமல் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துதல், நெகிழிப் பயன்பாட்டை அறவே தவிர்த்தல், உணவு, தண்ணீரை வீணாக்காமலும், மாசுபடுத்தாமலும் பயன்படுத்துதல் போன்றவற்றின் வழியாக நாமும் நமது பங்களிப்பை வழங்கலாம்.
தேவையானது
ஒன்றே: இயற்கையைப் பேணலும் இறைவேண்டலே என்னும் விழிப்புணர்வே அது!