(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)
மார்த்தா:
“பாதர், கடந்த முறை நாம் பேசிக் கொண்டிருந்தபோது, கடவுளின் அளப்பரிய ஆற்றல் அருளடையாளங்கள் வழியாக நம்மீது பொழியப்பட்டாலும், பெரும்பாலான மனிதர்கள் அதைப் பெற்றுக்கொள்வதில்லை என்ற கருத்தை முன் வைத்தீர்கள். அது குறித்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!”
அருள்பணி:
“ஒருசில உதாரணங்களைப் பார்க்கலாம்! மழை பொழிந்து கொண்டிருக்கிறது. ஆனால், நாம் பாத்திரத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே வைக்காத வரை மழைநீர் நமதாவதில்லை. பூக்கள் நிறைந்த ஒரு தோட்டம் வழியே நாம் செல்லும்போது அந்த இடம் முழுவதும் நறுமணத்தால் நிரம்பியிருக்கிறது. எனினும், நாம் மூக்கடைப்பால் அவதிப்பட்டோம் என்றால், நறுமணத்தை உணரப்போவதில்லை. தோட்டம் நறுமணத்தை நமக்குத் தந்தாலும், நாம் தயார் நிலையில் இல்லாததன் காரணமாக, அதைப் பெற்றுக்கொள்வதில்லை.”
அன்புச் செல்வன்:
“தந்தையே! மற்றுமோர் உதாரணத்தை நான் தருகிறேன். பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக எத்தனையோ நல்ல அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றோம். ஆனால், பிள்ளைகளிடம் சரியான மனநிலை இல்லை என்றால், அவற்றை உள்வாங்குவதில்லை, தங்களுடையதாக ஆக்குவதுமில்லை.”
அருள்பணி:
“ஆம்! இது கடவுளின் கொடைக்கும் பொருந்தும். கடவுளின் கொடைகள் பொழியப்பட்டாலும், அவற்றை நமதாக்குவதற்கு நம்மிடம் சரியான மனப்பக்குவம் இருக்கவேண்டும்.”
கிறிஸ்டினா:
“அது என்ன தந்தையே!”
அருள்பணி:
“கடவுளின் கொடைகளை நாம் பெற்றுக்கொள்ள, இரண்டு விதங்களில் நம்மை நாமே தயாரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாவதாக, கடவுளுக்கும் நமக்குமிடையேயான உறவில் நாம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இரண்டாவதாக, நம் மனத்தை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.”
அகஸ்டின்:
“ஒவ்வொன்றாக விளக்குங்கள் தந்தையே!”
அருள்பணி: “கடவுளிடம் நாம் அருளைப் பெறுவதற்கும், அவரோடு உறவுகொள்வதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. சாதாரணமாக மனித உறவில்கூட, நாம் சகமனிதரோடு கொள்ளுகின்ற உறவின் ஆழத்திற்கேற்பவே அவரிடமிருந்து
கொடைகளைப் பெற்றுக்கொள்கிறோம். நம் பிறந்த நாளுக்கு வருபவர்களில் எப்பொழுதோ நம்மிடம் பேசும் ஒரு நபரும், நம் நெருங்கிய நண்பர் ஒருவரும் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இரண்டு பேருமே பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள். நிச்சயமாக இருவரும் ஒரே மாதிரியான பரிசுகளை வழங்குவதில்லை. எனவே, கடவுளின் கொடைகளை அதிகமதிகமாக நமதாக்க வேண்டுமெனில், அவருக்கும் நமக்குமிடையேயான உறவை நாம் ஆழப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.”
அகஸ்டின்:
“கடவுளோடு நாம் கொள்ளக்கூடிய உறவை ஆழப்படுத்துவது குறித்து கொஞ்சம் சொல்லுங்கள் தந்தையே!”
அருள்பணி:
“கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையேயான உறவைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், மனிதர்களுக்கிடையேயான உறவைப் பற்றிக் கொஞ்சம் புரிந்துகொள்வது அவசியமானது. மனித உறவில் நான்கு நிலைகள் உள்ளன. முதலாவது, அறிமுக நிலை: ஒரு நபரை நாம் புதிதாகச் சந்திக்கும்போது நிகழ்வது. இரண்டாவது, அறிவு சார்ந்த நிலை. ஒருவருக்கொருவர் தகவல்களையும் அறிவுப்பூர்வமான விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது. மூன்றாவது, உணர்வுநிலை. ஒருவர் மற்றவர்மீது உணர்வுப்பூர்வமாக ஈடுபாடு கொண்டிருப்பது. நான்காவது நெருக்க நிலை (intimate stage). தனக்கும் அடுத்த நபருக்குமிடையேயான ஆழமான தொடர்பை எல்லா நேரங்களிலும் உணரும் நிலை இது.
கடவுளோடு
உள்ள உறவிலும் நாம் இந்த நான்கு நிலைகளில் ஏதாவது ஒன்றில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. சிலர் ஆலயத்திற்கு எப்போதாவது வருவது, ஒருசில குறிப்பிட்ட மனப்பாடம் செய்யப்பட்ட வார்த்தைகளை இறைவேண்டல்களாகச் சொல்வது, கடமை உணர்வோடு கிறித்தவ வாழ்வை அணுகுவது போன்ற செயல்பாடுகளைச் செய்கின்றனர். இது அம்மனிதர்கள் கடவுளுக்கும் தங்களுக்குமிடையேயான உறவில் அறிமுக நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அடுத்ததாக, ஆன்மிக வாழ்வு பற்றிய புத்தகங்களை வாசிப்பது, அதன் பின்னணியில் தன் வாழ்வைப் புடமிடுவது போன்றவை நாம் இறையுறவில் இரண்டாம் நிலையில் இருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. மேற்கண்ட இருவிதமான செயல்பாடுகளை ஆர்வத்தோடும் தேடலோடும் தொடர்ந்து மேற்கொண்டோம் என்றால், நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒருவிதமான உணர்வுப் பிணைப்பு ஏற்படுவதை நம்மால் உணர முடியும். இது நாம் இறையுறவின் மூன்றாம் நிலைக்குள் கடந்து செல்வதைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய உணர்வுநிலைக்குள் நாம் ஆழப்பட ஆழப்பட கடவுளைப் பற்றிய உணர்வு எப்பொழுதுமே நம்மோடு இருந்து கொண்டிருக்கும். இதுவே நான்காவது நிலை.”
கிறிஸ்டினா:
“இறையுறவின் இந்த நான்கு நிலைகளுக்கும், கடவுளின் அருளை நாம் பெற்றுக் கொள்வதற்கும் நேரடித் தொடர்பு உண்டு என்கிறீர்கள். அப்படித்தானே!”
அருள்பணி:
“ஆம்! புனித அவிலா தெரசா ஓர் அழகான உதாரணம் கொண்டு இக்கருத்தை விளக்குகிறார். ஒரு தோட்டத்திற்கு நாம் நீர் பாய்ச்சும்போது, நான்கு வகைகளில் நீர் பாய்ச்ச முடியும். முதலாவதாக, கிணற்றிலிருந்து வாளியின் வழியாக நீரை இறைத்துப் பாய்ச்சுவது. இரண்டாவதாக, இயந்திரங்களின் உதவியோடு நீரை இறைத்துப் பாய்ச்சுவது. மூன்றாவதாக, அந்தப் பகுதியில் ஆற்று நீர் ஓடிக்கொண்டிருந்தது என்றால், அதைப் பாத்திகளுக்குத் திருப்பிவிடுவது. நான்காவதாக, மழையின் வழியாகத் தோட்டம் நீரைப் பெற்றுக் கொள்வது.
நம்
உள்ளமாகிய தோட்டத்திற்கு இறைவனின் அருளாகிய நீரை நாம் பெற முயற்சிக்கிறோம். உறவின் தொடக்கநிலையில் இருந்தோம் என்றால், அது கிணற்றிலிருந்து வாரி இறைத்து நீரைப் பெற்றுக்கொள்வது போன்றது. நம் வாழ்வில் நாம் நிறைய முயற்சிகளை எடுப்பது போன்று தெரியும்! அதனால் கிடைக்கும் பலனோ மிகவும் குறைவானதாக இருக்கும். அதேவேளையில், கடவுளுக்கும் தங்களுக்குமிடையேயான உறவில் நான்காவது நிலையாகிய நெருக்க நிலைக்குச் சென்றவர்களோ, கடவுளின் அருள்மழை எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் தங்களது உள்ளமாகிய தோட்டத்தில் பொழியப்படுவதை உணர்கிறார்கள்.”
அன்புச் செல்வன்:
“தந்தையே! நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது, ஊதாரிமைந்தன் உவமையின் பின்னணியில் ஒரு சிந்தனை எனக்குத் தோன்றுகிறது. மூத்தமகன் தன் தந்தையைப் பார்த்து, தான் அவருக்கு அடிமைபோல் வேலை
செய்ததாகவும், தந்தையோ தன் நண்பர்களோடு கொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட தரவில்லை என்று சொல்வான். தந்தையோ, ‘மகனே! என்னுடையவை யாவும் உன்னுடையவையே’ என்று
சொல்வார். அதாவது தந்தையுடைய சொத்து முழுவதும் தனக்கு உரிமை என்றாலும், மூத்தவனிடம் மகன் என்ற உணர்வை விட, அடிமை என்கின்ற உணர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக, ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட எடுக்க யோசித்திருக்கிறான். இது அவனிடம் இருந்த பிரச்சினைதானேயொழிய, தந்தையுடைய பிரச்சினையில்லை.”
அருள்பணி:
“ஆம்! கடவுளின் அருள் எல்லா இடங்களிலும் எப்பொழுதுமே கொட்டிக் கிடந்தாலும், நமது மனநிலைக்கு ஏற்பவும், நம் உறவு நிலைக்கு ஏற்பவுமே நாம் பெற்றுக் கொள்கிறோம்.”
மார்த்தா:
“கடவுளுக்கும் நமக்குமிடையேயான உறவை ஆழப்படுத்திக் கொள்வது எப்படி பாதர்?”
அருள்பணி:
“கடவுளுடனான உறவு என்பது ஆலயத்தோடு முடிந்துவிடக்கூடிய ஒன்று மட்டுமல்ல! சக மனிதர்களுடனான உறவில்
ஆழப்படும்போதும், இயற்கையுடனான நம் உறவு ஆழப்படும்போதும், கடவுளோடு உள்ள உறவில் நாம் வளர்கிறோம் என்று அர்த்தம். அடுத்தபடியாக, ஆலயத்தில் நாம் கொண்டாடும் அருளடையாளக் கொண்டாட்டங்களை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட முயற்சிப்பதன் வழியாகவும் இறையுறவை நாம் ஆழப்படுத்திக் கொள்ள முடியும்.”
கிறிஸ்டினா:
“அர்த்தமுள்ள அருளடையாளக் கொண்டாட்டம் என்றால் என்ன தந்தையே?”
அருள்பணி:
“ஒவ்வோர் அருளடையாளக் கொண்டாட்டத்திலும் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று, வெளியடையாளச் செயல்பாடுகள். இரண்டு, இவ்வடையாளச் செயல்பாடுகள் சுட்டிக்காட்டும் அனுபவம். பல நேரங்களில் அருளடையாள
நிகழ்வுகளைக் கொண்டாடுபவர்களும் சரி, பங்கேற்பவர்களும் சரி, இரண்டாவது பகுதிக்குள் நுழைவதே கிடையாது. வெளி அடையாளங்களாக இருக்கும் சில வார்த்தைகளையும் செயல்பாடுகளையும் நாம் பிடித்துக்கொண்டு, அவை சுட்டிக்காட்டும் அனுபவத்திற்குள் செல்வதில்லை. சரியான பங்கேற்பு என்பது அடையாளச் செயல்பாடுகள் சுட்டிக்காட்டும் அனுபவத்திற்குள் நுழைய முயற்சி எடுப்பது. அப்போது நம் உள்ளத்திற்குள் இறைவனின் அருள் அபரிமிதமாகப் பொழியப்படுவதை உணர ஆரம்பிப்போம்.”
(தொடரும்)