news-details
ஆன்மிகம்
முக்காலம் உணர்த்தும் தவக்காலம்

வல்லமையான மூன்று மாதங்கள் இன்றிலிருந்து நமக்காகக் காத்திருக்கின்றன. 40 நாள் தவக்காலம்; 50 நாள் பாஸ்கா காலம். சிலுவையை நோக்கிய, பாஸ்காவை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள அழைக்கும் காலமிது. தூய ஆவியாரின் வருகையை நோக்கித் தொடர்ந்து நாம் பயணிக்க, நமக்கு அழைப்பு விடுக்கும் காலம்; இது ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் உன்னதமான காலம். இத்தவக்காலத்தைத் திருநீற்றுப் புதனுடன் தொடங்குகிறோம். இன்றைய நாளுக்கான அருள்வாக்கின் அடிப்படையில் நாம் சிந்திக்கும்போது நிறைய கற்றுக்கொள்கிறோம். “கடவுளை மறந்துவிடாதீர்கள்என்று மீண்டுமாக நினைவுபடுத்துகிறார் இறைவாக்கினர் யோவேல். மக்கள் உடன்படிக்கையை மீறினார்கள்; கடவுளிடமிருந்து தூர விலகிச் சென்றார்கள்; அத்தகைய சூழலில், “நீங்கள் கடவுளோடு நெருக்கமான உறவில் இருக்க வேண்டும்; மீண்டும் அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நீங்கள் வாழ வேண்டும்என்று நினைவுபடுத்துகிறார். மேலும், “இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்களோ தெரியவில்லை; ஆனால்,  இப்போது கடவுளின் பிள்ளைகளாக அவரிடம் திரும்பி வாருங்கள். உடன்படிக்கையின்போது நீங்கள் எப்படி இருந்தீர்களோ, அத்தகைய நிலைக்குத் திரும்பி வாருங்கள் (யோவே 2:12) என அழைப்பு விடுக்கிறார். அவ்வாறே, “தொடக்கத்தில் இருந்த அன்பு உங்களிடம் இப்போது இல்லைஎன்றதொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்.

திருமண வாழ்விலும் சரி, அழைத்தல் வாழ்விலும் சரி, சிறப்பான அழைப்பிலும் சரி... நாம் முன்பிருந்த நிலையில் இருக்கிறோமா? தொடக்கத்திலி ருந்த அன்பு நம்மிடம் இருக்கிறதா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் கூறுகிறார்: “உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை... நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெது வெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன் (திவெ 3:15-16) என்று குறிப்பிடுவது நம்மைப் பார்த்துக் கூறுவது போலவே இருக்கிறது. ‘ஏதோ இந்த வாழ்வுக்கு வந்துவிட்டோம், நாள்களைத் தள்ளி விடுவோம்என்று எண்ணிக்கொண்டு துடிப்பில்லாமல், ஆர்வம் இல்லாமல் வாழ்கின்ற ஒரு வாழ்க்கையைப் பார்த்து இறைவன் அவ்வாறே குறிப்பிடுவார்.

லூக்கா பதிமூன்றாம் அதிகாரத்தில்கோபுரம் இடிந்து விழுந்து 18 பேர் இறந்து விட்டார்கள் (லூக் 13:4) என்று குறிப்பிடப்படுகிறதுஇது ஏன் நிகழ்ந்தது தெரியுமா? மனந்திரும்பாவிடில் நீங்கள் எல்லாரும் அவ்வாறே அழிந்து போவீர்கள் என்பதை நினைவுபடுத்துவதற்காகவே. அத்தி மரத்தின் உவமையை அறிவீர்கள். மூன்று ஆண்டுகள் பழம் ஏதும் இல்லாதபோதும் தோட்டத் தொழிலாளர், “இதை வெட்டிவிட வேண்டாம்; இன்னும் ஓராண்டு இருக்கட்டும். இல்லையென்றால் வெட்டிவிடலாம் (லூக் 13:9) எனக் கெஞ்சிக் கேட்கிறார்மனந்திரும்புவதற்கான, பலன் கொடுப்பதற்கான அவகாசம் நமக்குக் கொடுக்கப்படுகிறது. நாமும் பலன் கொடுக்க, கனி கொடுக்க வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறார். எப்போது அத்தகைய பலன் கிடைக்கும் எனக் காத்திருக்கிறார். உங்களுக்கும் எனக்கும் இறைவன் தரும் அழைப்பாகவே இதை நான் பார்க்கிறேன்.

திருநீற்றுப் புதன் நம்முடைய திருவழிபாட்டு நாள்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. இன்று சிறுமிகள், சிறுவர்கள், இளையோர், குடும்ப உறுப்பினர்கள் யாவரும் இணைந்து இத்திருப்பலியிலே பங்கெடுக்க அழைக்கப்படுகிறோம். இந்நாளில் ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதையும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். அவர் இரக்கமிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர்; பேரன்பு மிக்கவர். இதுதான் அவரிடம் நாம் வருவதற்கான நம்பிக்கையை நம்மிடம் விதைக்கிறது. ஆகவே, குடும்பமாக எல்லாரும் இணைந்து இப்பலியிலே பங்கெடுப்பது திரு அவையின் குரலைக் கேட்டு, ஆயரின் குரலைக் கேட்டு, அருள்பணியாளர்களின் குரலைக் கேட்டு, ‘மனம் மாற வேண்டும்என்பதற்காகவே!

இந்நாளின் இரண்டாவது வாசகத்தில் தூய பவுலடியார் மக்களைப் பார்த்துக் கேட்கிறார்: “கடவுளோடு ஒப்புரவாகுங்கள், எங்களோடு ஒப்புரவாகுங்கள், திரு அவையோடு ஒப்புரவாகுங்கள் (2கொரி 5:20); எங்கள் வழியாக, அருளடையாளங்கள் வழியாக ஒப்புரவாகுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். இதுவே இக்காலத்தில் இறைவன் கொடுக்கின்ற மிக முக்கியமான செய்தி.

இது கடவுளுக்கு ஏற்புடைய காலம்; இதுவே மீட்பின் காலம்; இதுவே தகுந்த காலம். இந்தக் காலத்தில் மனம் மாறவில்லை என்றால், எந்தக் காலத்தில் மனம் மாறப்போகின்றோம்? இந்தத் தவக்காலத்தில் நம்முடைய கண்களை அவர்மீது பதிய வைக்க வேண்டாமா? நமக்காகச் சிலுவையில் துன்புற்று, இரத்தம் சிந்தி நமக்கு மீட்புத் தந்த அவருடைய பாடுகளில் நாம் ஒன்றித்திருக்க வேண்டாமா? பவுலடியார் கூறுவது போல அவருடைய பாடுகளில் குறைவாக இருப்பது நம்மில் நிறைவு பெற வேண்டாமா? ஆகவே, நாம் சிலுவையை உற்றுப்பார்க்க வேண்டும். ஆண்டவரிடம் கூறுவோம், ‘ஆண்டவரே! எங்களுக்காக மரித்தீரே, உம்மைத் தனிமையிலே சிலுவையிலே அறைய விடமாட்டேன். நான் உமக்காகத் துன்புறுவேன்; திரு அவைக்காகத் துன்புறுவேன்; தேவையில் இருக்கும் என் சகோதர- சகோதரிகளுக்காகத் துன்புறுவேன்; உம்முடைய பாடுகளில் நான் பங்கேற்பேன்என உறுதி கொள்வோம். இதற்காகத்தான் ஒப்புரவாக்கியவர் துன்புற்றார்; வேதனையுற்றார்.

இந்தப் புனித காலத்தில் நாம் செய்ய வேண்டிய நற்செயல்களின் பட்டியலில்செபம்என்பது முதற் நற்செயலாக இருக்கிறது. செபிப்பது பெருமைக்காக அல்ல; பாடுவதுகூட பெருமைக்காக அல்ல; மற்றவர்கள் செபிப்பதற்காகத் துணை செய்கின்றோம். நாம் பெரியவர்கள் என்று மார்தட்டிக் கொள்வதற்காக அல்ல; மக்களை ஆண்டவரை நோக்கித் திருப்புவதற்கு வாய்க்காலாக அமைகிறோம். செபம் இறைப் புகழ்ச்சி கொண்டதாக இருக்க வேண்டும்; தற்புகழ்ச்சி கொண்டதாக அமையக்கூடாது. நம் ஆண்டவர் இயேசுவும் செபித்தார்; செபிக்க நமக்குக் கற்றுக்கொடுத்தார். தம் செபத்தில் தந்தையாம் கடவுளுக்கு நன்றி கூறினார். நம் தேவைகளுக்காக மன்றாடினார். நம் ஒற்றுமைக்காக இறைவேண்டல் செய்தார். அவர் பாவம் செய்யவில்லை; எனவே, மன்னிப்புக் கேட்கவில்லை. நாம் பாவிகள் ஆனோம்; ஆகவே, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். இது செபத்தின் ஒரு பகுதி.

மற்றொரு பகுதி, ஆண்டவர் பேசுவதைக் கேட்பது. ஆலயத்திலும் வீட்டிலும் அமர்ந்திருக்கின்ற போது அவர் முன் அமர்ந்து பேசுவதைவிட அவர் பேசுவதைக் கேட்பது செபத்தின் இரண்டாம் படி நிலை. கூர்ந்து நோக்கினால் ஒவ்வொரு முறையும் செபிக்கும்போது நாம் ஆண்டவரிடம் பேசுவதை விட, ஆண்டவர் நம்மிடம் அதிகமாகப் பேசுவார். அந்தக் கெத்சமனி தோட்டத்திலே தந்தையோடு உறவாடும்போது, “தந்தையே, கூடுமானால் இந்தத் துன்பக்கலம் என்னை விட்டு அகலட்டும்என்று வேண்டினார். தந்தையாம் கடவுளும் மகனிடம் பேசினார், “இல்லை மகனே! இந்தத் துன்பக்கலத்தை நீ குடிக்க வேண்டும்என்று கூறினார். அதேபோல, “மகனே! மகளே! உன்னுடைய கடமையைச் செய்; தியாகம் செய்; நேரத்தை ஒழுங்காகப் பயன்படுத்துஎன்று ஆண்டவர் நம்மிடம் பேசுவார். இந்தத் தவக்காலம் ஆண்டவர் நம்மிடம் பேசுவதைக் கேட்கின்ற காலமாக அமையட்டும்.

இந்தத் தவக்காலத்தில் ஒரு முறையாவது திருவிவிலியம் முழுவதையும் படித்து முடித்துவிட வேண்டும் என உறுதி ஏற்போம். முழுவதும் படிக்க முடியாதவர்கள் குறைந்த அளவு அவருடைய வார்த்தையைக் கேட்கும் ஆர்வத்தைப் பெற்றுக் கொள்வோம். ஆண்டவரை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம்அவருடைய பார்வை எப்போதும் நம் மீது இருக்கிறது. மேலும், அவரது குரலைக் கேட்போம்; அவர் குரல் நமக்கு நல்வழி காட்டும்.

தவக்காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய இரண்டாவது நற்செயல்நோன்பு.’ எதற்காக நோன்பு இருக்கிறோம்? நோன்பின் அடிப்படைக் கூறு என்ன? என்பதை நாம் தெளிவுறப் புரிந்துகொள்ள வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் அண்மையில் மிக அழகாகக் குறிப்பிடுகிறார், “நாம் சாப்பிடாமல் இருப்பதால் என்ன பலன்? அதனால் யாருக்கு என்ன பலன்? நாம் சாப்பிடாமல் ஒறுத்தல் மேற்கொள்வது பட்டினிக் கிடப்போருக்கு, தேவையில் இருப்போருக்கு, வயது  முதிர்ந்த ஆதரவற்றோருக்கு உதவக்கூடியதாக அமைய வேண்டும்; அவர்களுடைய பசியைப் போக்கக் கூடியதாக அமைய வேண்டும்என்று குறிப்பிடுகிறார். நோன்பின் தன்மை அடிப்படையில் மற்றவருக்கு அன்பு காட்டுவதாக இருக்க வேண்டும். நம்முடைய உபவாசம் கூட நம்மைச் சுயநலமாக மாற்றிவிடக்கூடாது. நம்மை ஆண்டவருக்கு நெருக்கமானவராக மாற்றவேண்டும். இல்லை என்றால், நம்முடைய உபவாசம் பொருளற்றதாகிப்போகும்.

நோன்பை உபவாசம் என்கிறோம். அதன் அர்த்தம் என்ன? வாசிப்பது... வசிப்பது என பொருள்படுகிறது... யாரை வாசிக்கின்றோம்? யாருடன் வசிக்கின்றோம் என்பது அதன் உட்பொருள். ஆண்டவரை வாசிக்கின்றோமா? அவரோடு வசிக்கின்றோமா? அவர் சாயலில் இருக்கும் மனிதரோடு வசிக்கின்றோமா? என்பதுதான் கேள்வி. ஆண்டவரோடு வசிக்கவும் நம்முடைய சகோதர சகோதரிகளோடு இணைந்திருக்கவும் திரு அவையோடு இணைந்து பயணிக்கவும் உறவுகளோடு ஒன்றித்திருக்கவும் எனப் பல செயல்பாடுகளை இது முன்வைக்கிறது. ஆண்டவரோடு இணைந்திருக்கவில்லை என்றால், அவர் மக்களோடு வசிக்கவில்லை என்றால் இந்த நோன்பு பொருளற்றுப் போய்விடும்.

நாம் கடைப்பிடிக்க வேண்டிய மூன்றாவது நற்செயல்ஈகை.’ இறைவன் நம் உள்ளத்தைக் காண்கிறார். என்ன கொடுக்கின்றோம்? யாருக்குக் கொடுக்கின்றோம்? என்ன மனநிலையில் அதைக் கொடுக்கின்றோம்? என்பதை உற்று நோக்குகிறார். காணிக்கைப் பெட்டியின் அருகில் அமர்ந்து ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கையை உற்றுநோக்கிய இயேசு, அது மேலானது என்று பாராட்டுகிறார். அந்த ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கையைக் கண்ட இயேசு, அதில் அவருடைய கண்ணீரைப் பார்க்கிறார்; வியர்வையைப் பார்க்கிறார்; நேரத்தைப் பார்க்கிறார்! இத்தகைய செயல்பாட்டை, மனநிலையை இறைவன் நம்மிடமும் எதிர்பார்க்கிறார்.

இப்படிப்பட்ட நற்செயல்களைச் செய்ய, மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க மனந்திரும்புதலை மேற்கொள்வோம். கடின உழைப்புக்கு இறைவன் கைம்மாறு கொடுப்பார். இந்தப் பருவத்தில் குழந்தைகள், சிரமப்பட்டுப் படிப்பதைப் பார்க்கிறோம். இறைவன் அவர்களுக்கு மிகுந்த கைம்மாறு அளிப்பார். நம்முடைய உழைப்பை, காணிக்கையை, நற்செயல்களை இறைவன் அமைதியாகப்  பார்க்கிறார். மறந்துவிட வேண்டாம். நிச்சயமாக இறைவன் அதற்கான கைம்மாறை அளிப்பார்.

இந்த நாள், மூன்று காலங்களையும் நமக்கு நினைவூட்டுகிறது. ஒன்று, கடந்த காலத்தின் பாவச் செயல். ஆகவேதான், “உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன் (திபா 51:4) என்று மனம் வருத்தம் அடைகிறோம். இரண்டாவதாக, நிகழ்காலம். “ஆண்டவரே, என் பாவம் எப்போதும் என் மனக்கண் முன் நிற்கிறது (51:3) என்று புலம்புகிறோம். மூன்றாவது, எதிர்காலம். “ஆண்டவரே, தூயதோர் உள்ளத்தை உருவாக்கும் ஆவியை என்மீது பொழிந்தருளும்: உமது ஆவியை என்னிடம் இருந்து எடுத்துவிடாதேயும் (51:10-11) என்று வேண்டுகிறோம்.

நாமும் ஆண்டவரிடம் திரும்பிவரப் புறப்படுவோம். காணாமல்போன மைந்தனை அரவணைத்துக் கொண்டது போல, உம்மிடம் திரும்பி வரும் எங்களையும் அரவணைத்துக்கொள்ளும்; ஆண்ட வரே, எங்களிடமிருந்து தூய ஆவியாரை எடுத்து விடாதேயும்! நாங்கள் திரும்பி வருகிறோம். எங்களை அரவணைத்துக்கொள்ளும் என்று கூறி நமது நம்பிக்கை பயணத்தைத் தொடர்வோம்.