திருவிவிலியத்தில் கடவுளுக்கெனப் பல்வேறு பெயர்கள் உள்ளன. அவை, ‘எல்-ஷடாய்’ (எல்லாம் வல்லவர் - தொநூ 17:1), ‘எபினேசர்’ (உதவி செய்பவர் - 1சாமு 7:12), ‘எல்-ரோயி’ (காண்கின்றவர் - தொநூ 16:13), ‘எலோகிம்’ (படைத்தவர் - தொநூ 1:1; எசா 40:28), ‘யாவே ராஃப்’ (குணமாக்குபவர் – விப 15:26), ‘யாவே யிரே’ (வழங்குபவர் - தொநூ 22:14), ‘யாவே ஷம்மா’ (இருக்கின்றவர் - எசே 48:35), ‘யாவே ஷாலோம்’ (அவரே நம் அமைதி - நீதி 6:24), ‘யாவே சித் கேனு’ (கடவுள் நம்முடைய நீதி - எரே 23:6) மற்றும் பல. இந்தப் பெயர்கள் வெறும் தலைப்புகள் அல்ல; அவை ஒவ்வொன்றும் கடவுளின் தன்மை மற்றும் இயல்பின் பிரதிபலிப்பாகும். கடவுளின் பெயர், அவர் யார்? அவர் நம்முடன் எவ்வாறு தொடர்புகொள்கிறார்? என்பதை வெளிப்படுத்தும் தனித்துவமான செயலைக் குறிக்கிறது.
கடவுளின்
பல்வேறு பெயர்களில் ‘அனாவிம் யாவே’
(Anawim Yahweh) என்பதும்
ஒன்று. இப்பெயருக்கு ‘ஏழைகளின் கடவுள்’ என்று பொருள்கொள்ளலாம். ஏன் கடவுள் ஏழைகள் பக்கம் இருக்கிறார்? ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு போன்ற வாழ்வியல் எதார்த்தங்களை அன்றாடம் எதிர்கொள்பவர்கள் ஏழைகள். இவர்களின் மனம் இயல்பாகவே ஆண்டவரை நோக்கியே எழும். இவர்களுடைய வாழ்க்கை மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதை விடுத்து, ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதாகவே இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் பணத்திலும் உலகப் பொருள்களிலும் மன மகிழ்வைக் காணாமல்,
இறைவன் வழங்கும் கொடை கள் அனைத்திலும் மனமகிழ்வைக் கண்டு, தங்களிடம் இருப்பதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். இத்தகையோரையே இயேசு ‘பேறு பெற்றவர்’
எனக் குறிப்பிடுகிறார்.
பொதுக்காலத்தின்
ஆறாம் ஞாயிறான இன்று தரப்பட்டுள்ள மூன்று வாசகங்களும் இரு வகையான மனிதரை முன்வைக்கின்றன. முதலாவதாக, மனிதர்கள் மீதும், இவ்வுலகப் பொருள்கள்மீதும் நம்பிக்கை வைப்போர்; இரண்டாவதாக, கடவுள்மீது நம்பிக்கை வைப்போர்.
இன்றைய
முதல் வாசகத்தில் (எரே 17:5-8) எரேமியா முன்னுரைத்த இறைவாக்கின் காலம் கி.மு. 598-க்கு
முந்தையதாக இருக்க வேண்டும். இப்பகுதியில் மனிதர்மீது நம்பிக்கை வைப்போர் அடையும் துன்பத்தையும் அழிவையும்; கடவுள்மீது நம்பிக்கை வைப்போர் பெறுகின்ற மகிழ்ச்சியையும் வாழ்வையும் வகைப்படுத்துகின்றார் எரேமியா. யூதாவை ஆண்ட அரசர்களில் கடவுளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து வாழ்ந்த அரசர்களைக் காண்பது மிகவும் அரிது. யூதாவை ஆண்ட மனாசே (2அர 21:2), ஆமோன் (2அர 21:20), யோவகாசு (2அர 23:32), யோயாக்கின் (2அர 24:9), செதேக்கியா (2அர 24:19) போன்ற பெரும்பாலான அரசர்கள் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்கள்மீதே நம்பிக்கை கொண்டனர். இதனால், கடவுள் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தார்கள். எனவே, யூதாவை ஆண்ட அரசர்களும் அரசும் வீழ்ச்சியையே சந்தித்தன.
இன்றைய
வாசகத்தில் எரேமியாவின் இறைவாக்கு யூதா அரசன் யோயாக்கிம் காலத்தில் (2அர 23:36-37) நடக்கிறது. யோயாக்கிம் 11 ஆண்டுகள் எருசலேமில் அரசாண்டார். பாபிலோனியர்கள் யூதா நாட்டின்மேல் படையெடுத்து வந்தபோது, யோயாக்கிம் தனக்கு அருகில் இருந்த எகிப்து நாட்டோடு கரம் கோர்த்து, பாபிலோனியாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார். ஆனால், பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் இக்கிளர்ச்சியை அடக்கி, கி.மு. 598-ஆம்
ஆண்டு யூதாவை முற்றுகைக்கு உட்படுத்துகிறார். இதனால் எகிப்தியர்கள் தாங்கள் கொடுத்த இராணுவப் பலத்தை விலக்கிக்கொண்டு பின்வாங்குகிறார்கள். யோயாக்கிம் கொல்லப்படுகிறார், எருசலேம் கைப்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வைத்தான் எரேமியா இன்றைய இறைவாக்கில் குறிப்பிடுகின்றார்.
மனிதரில்
அதாவது, கடவுள் மீது நம்பிக்கை கொள்ளாமல் எகிப்தியரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர். கடவுள்மீது நம்பிக்கை வைப்போர் வாழ்வு பெறுவர். எரேமியா, தங்கள் சக மனிதர்கள் மேலும்,
தங்கள் சிலை வழிபாட்டின் மேலும் நம்பிக்கை வைக்கின்ற நிலையைச் சாடுகின்றார். எகிப்தியர் என்னும் வலுவற்ற மனிதர்கள்மேல் நம்பிக்கையைப் பதிக்காமல், ஆற்றல் வாய்ந்த கடவுள்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே இன்றைய முதல் வாசகம் நமக்கு விடுக்கும் அழைப்பாகும்.
இரண்டாம்
வாசகத்தில் (1கொரி 15:12,16-20) இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பாமல், இவ்வுலகக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்களையும், இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பி அவருக்குச் சான்று பகர்ந்து வாழும் மனிதர்களையும் வகைப்படுத்துகிறார் திருத்தூதர் பவுல். கொரிந்து நகரக் கிறித்தவர்களில் சிலர், ஒருசில கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் ‘உயிர்த்தெழுதலே இல்லை’ என்று வாதித்து வந்தனர். கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளைப் பொறுத்தவரையில், உடல் என்பது அழிவுக்குரியதாகவும் வலுவற்றதாகவும் கருதப்பட்டது. ஆன்மா என்பது மனித உடலில் சிறைப்பட்டிருக்கிறது. இறப்பு என்பது அழிவுக்குரிய உடலிலிருந்து ஆன்மா பெறும் விடுதலை. எனவே, இறந்தோர் உயிர்ப்பில் மீண்டும் ஆன்மா உடலுக்குள் வரும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தப் பின்புலத்தில் பவுல், மிகவும் பொறுமையோடும் சிந்தனைத் தெளிவோடும் அவர்களுக்குப் புரிய வைக்கிறார்.
பவுலின்
சிந்தனையில் நாம் கடவுளோடும் மனிதரோடும் ஏற்படுத்தும் உறவின் தொடர்பு சாதனமாக உடல் விளங்குகிறது. இவ்வுலகில் மனிதர்கள் இந்த உடலைக் கொண்டே உலகில் உறவுகளை ஏற்படுத்துகின்றனர். இவ்வுடல் இவ்வுலகில் அழிந்த பிறகும் மனிதர் விண்ணுலகில் கடவுளோடும் புனிதர்களோடும் உறவினைத் தொடர முடியும். அது மனிதரின் உடல் தன்மையிலேயே தொடரும். உயிர்க்கும்போது இருக்கும் உடல் அழியாமையை அணிந்துகொள்கிறது. இந்த அழியா உடலையே இயேசு பெற்றார். அவரின் இறப்பில் பங்கேற்கும் நாம் அவரைப் போல அழியா உடல் பெற்று உயிர்ப்போம். ஆனால், அந்த உடல் விண்ணகச் சூழ்நிலைக்கு ஏற்றதாயிருக்கும். தூய ஆவியால் முழுவதும் உருமாற்றமடைந்த உடலாயிருக்கும். இவ்வாறு உயிர்த்தெழுதலே கிறித்தவ நம்பிக்கைக்கு அடிப்படை என்று வலியுறுத்தும் பவுல், அழிந்துபோகும் இவ்வுலக உடலில் தங்கள் நம்பிக்கையைப் பதிய வைக்காமல், அழியாமல் உயிர்க்கும் அந்த உடலின்மேல் நம்பிக்கையைப் பதிய வைக்க அழைப்பு விடுக்கிறார்.
இன்றைய
நற்செய்தி வாசகத்தில் (லூக் 6:17,20-26) இயேசுவின் சமவெளிப்பொழிவை வாசிக்கின்றோம். இயேசுவின் ‘மலைப்பொழிவில்’ (மத்
5:3-10) எட்டுப் பேறுகளைப் பதிவு செய்கிறார் மத்தேயு. ஆனால்
லூக்கா எழுதும் ‘சமவெளிப்பொழிவில்’ இயேசுவின்
போதனைகளை ‘நான்கு வாழ்வின் பேறுகள்’,
‘நான்கு கேடுகள்’ என வடிவமைக்கின்றார்.
இயேசுவின்
‘சமவெளிப் பொழிவு’ என்பது ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டோருக்கு அவர் கொடுத்த நம்பிக்கை மிக்க அழைப்பாகும். ஏழ்மை, அடக்குமுறை, அநீதி போன்ற சூழ்நிலைகள் காரணமாக நலிவுற்ற நிலையில் வாழ்ந்து வந்த பல யூத மக்கள்
‘கடவுளே எங்கள் கதி’ என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். தங்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையே இவர்களின் சக்தியாக இருந்தது. இயேசு இவர்களுக்கே தம் நற்செய்தியை ஒப்படைப்பதோடு, தம்முடைய பணியிலே அவர்களைப் பங்கெடுக்க வைக்கிறார். இறையாட்சியைக் கட்டியெழுப்புவதில் ஏழையரின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதை இயேசு நமக்கு உணர்த்துகிறார்.
ஏழ்மை,
பசி, அழுகை, புறக்கணிப்பு - இவை தன்னிலே பேறுபெற்றவை என்றோ அல்லது அவற்றைக் கடவுள் விரும்புகிறார் என்றோ இயேசு கூறவில்லை. இயேசு இக்கொடுமைகளை மேன்மைப்படுத்தவில்லை; மாறாக, இவற்றால் துன்புறுவோரை மேன்மைப்படுத்துகிறார். ஏழ்மை, பட்டினி, அழுகை ஆகியவை இறைவனை நோக்கி அடிக்கடித் திரும்ப, இறைவனைத் தங்கள் வாழ்வின் ஆதாரம் என்று எண்ணிப்பார்க்க, ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்க இறைவன் செயலாற்றும் தளங்களாக மாறும் என்று அறிவுறுத்துகிறார். இவை நிறைவாழ்வுக்கு வழிகாட்டும் விளக்குகள்! இதற்கு மாறாக, செல்வத்தில், அதிகமான உணவில், மகிழ்வில் ஆழ்ந்திருப்போர் தவறான ஒரு தன்னிறைவு அடைவதால், அவர்களின் பார்வை இறைவனை நோக்கித் திரும்புவதற்கு வாய்ப்புகள் குறைவு எனும் உண்மையையும் இடித்துரைக்கிறார்.
இயேசு,
எசாயாவைப் பின்பற்றி (எசா 65:13-14), மூன்று கேடுகளை முன்வைக்கிறார். பணக்காரர்கள் கடவுளை மறக்கின்றனர்; அத்துடன் இறையருளுக்கு அவர்கள் தங்கள் உள்ளக் கதவுகளைத் திறப்பது கிடையாது (லூக் 12:13-21) என்கிறார். செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி போன்ற வாழ்வியல் எதார்த்தங்களில் ஒருவரின் மனம் மனிதர்கள்மீதும் பணத்தின்மீதும் அதிகாரங்களின்மீதும் தங்கும்; பணத்தை நம்பி வாழ்பவர்கள் கடவுளை நம்புவது கடினம்; பணமும் உலகப் பொருள்களும் உண்மை மனமகிழ்வைத் தருவதில்லை. பணம் அழிவுக்கே இட்டுச் செல்லுமென எச்சரிக்கை விடுக்கிறார். கடவுள் ஏழ்மையையன்று, ஏழைகளை ஆசிர்வதிக்கிறார். அவர் ஏழையரின் கடவுள்! (அனாவிம் யாவே). அவர்களுக்கு எப்போதும் அவர் உறுதுணையாயிருக்கிறார். ஆக, மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதை விடுத்து, ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதற்கான அழைப்பாகவே இருக்கிறது இயேசுவின் சமவெளிப்பொழிவு.
இன்றைய
பதிலுரைப் பாடலும் இயேசுவின் வழி நின்று, “ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் என்றும் கனிதரும் மரம்போலப் பசுமையாக இருப்பர். ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளாத தீயோர் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்” எனக் கூறுகிறது (திபா 1:3,4). ஆகவே, இன்றைய மூன்று வாசகங்களும் குறிப்பிடுவதுபோல, மனிதர்மேல் அல்லது உலகு சார்ந்த செல்வங்களின்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரையே தஞ்சமெனக் கொண்டு, நீரோடையோரம் நடப்பட்ட மரங்களாகச் செழித்து வளர்வோம். திருத்தந்தை குறிப்பிடுவதுபோல, ‘ஏழைகளிடம் அன்புடன் கவனம் செலுத்துவது உண்மையான அக்கறையின் துவக்கம்’
(நற்செய்தியின் மகிழ்வு-199) என்பதை உணர்ந்து, இயேசு கூறிய கேடுகளில் சிக்கிக் கொள்ளாமல், அவர் கூறிய வாழ்வின் பேறுகளால் நம் மனங்களை நிரப்புவோம்.