திருத்தந்தை 8-ஆம் போனிபாசு அவர்களால் கி.பி. 1300-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கத்தோலிக்க யூபிலி ஆண்டு, சிறைக்கைதிகளை விடுவிக்கவும், கடன்களைத் தள்ளுபடி செய்யவும், நல்லிணக்கத்தை மீட்டெடுக்கவும் 50 ஆண்டுகளுக்கொருமுறை கொண்டாடப்பட்ட யூத மதத்தைச் சேர்ந்த நம் சகோதர-சகோதரிகளின் தொன்மை மரபிலிருந்து பிறந்ததாகும்.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற
மையக் கருத்தில் டிசம்பர் 24, 2024 முதல் சனவரி 6, 2026 வரை கொண்டாடப்படும் இந்த யூபிலி ஆண்டின் வாயிலாகத் திருத்தந்தை பிரான்சிஸ் எதிர்காலத்தின் மீது நமக்குள்ள எதிர்நோக்கு, நம்பிக்கை இவற்றைப் புதுப்பிக்கவும், அறச்செயல்கள், ஒறுத்தல் முயற்சிகள், ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெறுதல் மற்றும் திருப்பயணங்கள் வழியாகக் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் தங்கள் நம்பிக்கை வாழ்வில் வேரூன்றித் திளைத்திட இந்த யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்கள் வழிவகுக்கும் என நம்புகிறார்.
நல்லெண்ணம்
கொண்ட மக்கள் யாவரும் எதிர்நோக்கு தரும் இறைவார்த்தையால் ஊட்டம் பெறவும், எதிர்நோக்கின் பயணத்தை நம்பிக்கையுடன் தொடரவும், நாம் வாழும் இக்காலச் சூழலில் நம்மைச் சுற்றி இருக்கும் எதிர்நோக்கு தரும் அறிகுறிகளை இனம் கண்டுகொண்டு, அவைகளினால் ஊக்கம் பெறவும், எதிர்நோக்கு தரும் சொற்களால் செயல்களால் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொள்ளவும், எதிர்நோக்கில் இன்னும் ஆழமாக வேரூன்றி வளர உதவும் செப
வழிபாடுகள், கலந்துரையாடல்கள், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் ஆகியவை வத்திக்கானில் இந்த யூபிலி ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ளன. இக்கருத்தரங்குகள் பெரும்பாலும் இத்தாலிய, ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் நடக்கவிருப்பதால், இக்கருத்தரங்குகளின் மையக்கருத்துகள் மற்றும் அவற்றின் நடைமுறை சாத்தியங்களை நம் தாய்த் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துத் தொகுத்து வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி.
அக்கருத்தரங்குகளுக்கெல்லாம்
தொடக்கமாக அமைந்தது சனவரி 24 முதல் 26 வரை நடந்த ‘தகவல் தொடர்பு உலகமும் யூபிலி ஆண்டும்’ என்ற கருத்தரங்கமாகும். இக்கருத்தரங்கில் பங்குபெற்று பயன்பெற உலகெங்குமுள்ள பத்திரிகையாளர்கள், ஊடகப்பணி செய்வோர், செய்தித்தாள் மேலாளர்கள், ஆசிரியர்கள், பத்திரிகை இயக்குநர் குழுவில் உள்ளோர், காணொளிப் படங்கள் தயாரிப்போர், வரை கலை (கிராபிஃக்) வடிவமைப்பாளர்கள், பதிப்புரிமையாளர்கள், மக்கள் தொடர்பு பணியாளர்கள், சமூக வலைதளங்களை மேலாண்மை செய்வோர், ஒலி-ஒளி தொழில்நுட்ப வல்லுநர்கள், அச்சுக்கலை வல்லுநர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பலர் அழைக்கப்பட்டனர்.
மேற்கூறிய
துறைகளில் பணிபுரியும் சகோதர- சகோதரிகள், தாங்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்பு கருவிகளை, தங்களின் தனித்திறமையை, படைப்பாற்றலை, பல்வேறு துன்பங்களினால் அலைக்கழிக்கப்படும் மனித உள்ளங்களுக்கு நம்பிக்கை, அன்பு குறிப்பாக எதிர்நோக்கு அளிக்கும் அருளடையாளக் கருவிகளாக எண்ணிச் செயல்பட இந்த யூபிலி ஆண்டு அறைகூவல் விடுக்கிறது. ‘தகவல்
தொடர்பு கருவிகள் நன்னெறி ஒழுக்க விதிமுறைகளுக்குள் பயன்படுத்தப்பட்டால், அவை மனித சமூகத்திற்கு ஆனந்தமளிக்கும் பொழுது போக்குக் கருவிகளாகவும், அறிவு புகட்டும் ஆசானாகவும் இருப்பதோடு, நற்செய்தி மதிப்பீடுகள் நிறைந்த இறையாட்சி அவர்களிடையே மலர உதவும் உன்னதக் கருவிகளாகவும் இருக்கும்’
என்ற இரண்டாம் வத்திக்கான் சங்கப் படிப்பினையை (சமூகத் தொடர்புக் கருவிகள் பற்றிய விதித் தொகுப்பு, பத்தி எண். 2, 4) இந்த யூபிலி ஆண்டிலே திரு அவை மீண்டும் வலியுறுத்த விழைகிறது.
வத்திக்கானில்
நடைபெற்ற ‘தகவல் தொடர்பு உலகமும் யூபிலி ஆண்டும்’ என்ற கருத்தரங்கில் பின்வரும் தலைப்புகளில் உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. தகவல் தொடர்பும் எதிர்நோக்கும், ஒரே பயணத்திற்காகத் தகவல் தொடர்பு பணி செய்வோரை ஒருங்கிணைத்தல், பத்திரிகைத் தொழிலை ஓர் இறைப்பணியாகக் கருதுதல், மக்களாட்சிக்குத் துணைபுரியும் பத்திரிகைப்பணி, எதிர்நோக்கையும் அமைதியையும் பகிர்தல் மற்றும் அமைதியின் தூதர்களாகக் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் செயல்படுதல்.
பல்வேறு
மக்களையும் கலாச்சாரங்களையும் உரையாட வைக்கும் உன்னத இடமாக,
நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்புக்குச் சாட்சியாக உலகின் மூலை முடுக்குகளில் இருக்கும் நிகழ்வுகளை, கதைகளை, வாழ்க்கைச் சரித்திரங்களை உலகமெங்கும் பரப்பிடும் கருவிகளாக, தூய்மையான இதயத்திலிருந்து உதித்து மற்றவரை உருகச் செய்யும் அருமருந்தாக, ஏழைகள்,
அகதிகள், அநியாயமாகத் துன்புறுவோரின் குரலாக, யாரையும் ஒதுக்காத, அமைதி மற்றும் உரையாடல்களுக்கு வழிவகுக்கும் நண்பராக, இரக்கம், மன்னிப்பு, ஒற்றுமை இவற்றை வளர்க்கும் தளங்களாகத் தகவல் தொடர்பு கருவிகள் மாற வேண்டுமெனவும் தகவல் தொடர்பு பணி செய்வோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நம்
தனிப்பட்ட வாழ்வில், குடும்ப மற்றும் தோழமை உறவுகளில், பணிபுரியும் இடங்களில் பல்வேறு தகவல் தொடர்பு கருவிகளை, செல்போன் செயலிகளைப் பயன்படுத்தும் நாம், அவற்றை நம்பிக்கை, அன்பு குறிப்பாக, எதிர்நோக்கு என்னும் இறையியல் அறங்களை நம்மிலும் பிறரிலும் வளர்க்கும் வகையில் அவற்றைப் பயன்படுத்துகின்றோமா? என்று சிந்தித்துச் செயல்படுவோம். நாம் பயன்படுத்த நம்மால் உருவாக்கப்பட்ட இந்தத் தகவல் தொடர்பு கருவிகள் மற்றும் சமூக வலை தளங்கள் நம்மை அடிமைப்படுத்தி விடாமல் பார்த்துக்கொள்வோம்.
உலகின்
எந்தப் பகுதியில் இருப்பவரோடும் நம்மைத் தொடர்புகொள்ளச் செய்யும் இச்சாதனங்கள், நம் இல்லத்தில் இருப்பவர்கள், உடன் பணி புரிவோர், மற்றும் நம்மைச் சுற்றி இருக்கும் நபர்களிடமிருந்து நம்மைப் பிரித்துவிடாமல் பார்த்துக் கொள்வோம். நம் சொல்லாலும் செயலாலும் அலைபேசியை, சமூக வலைதளங்களை எங்கே, எப்படி, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என நம் குடும்ப
உறுப்பினர்களுக்கும்,
நம்மைச் சுற்றி இருப்போருக்கும் கற்றுத்தருவோம். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் மற்றும் பல சமூக வலைதளங்களில்
நாம் இடும் அன்றாட பதிப்புகளும் பகிர்வுகளும் எதிர்நோக்கை விதைப்பதாகவும் வளர்ப்பதாகவும் விளைவிப்பதாகவும் இருக்கட்டும். பிறந்திருக்கும் இந்த யூபிலி ஆண்டில் ஆண்டவர் நம் உள்ளங்களையும் இல்லங்களையும் எதிர்நோக்கால் நிரப்புவாராக!