பிப்ரவரி 3-ஆம் தேதி வத்திக்கானில் கிளமெந்தினா அறையில் உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட உலகக் குழந்தைகள் உரிமைகளுக்கான முதல் தினத்தையொட்டி பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘குழந்தைகளை நேசிப்போம்; பாதுகாப்போம்’ என்ற மையக் கருத்தில் திருத்தந்தை ஆற்றிய உரையை எளிய தமிழில் சுருக்கமாகத் தர விழைகிறேன்.
1. குழந்தைகளின் இன்றைய நிலை
மில்லியன்
கணக்கான குழந்தைகள் வறுமையால், போர்களால், கல்வியின்மையால், அநீதியால், சுரண்டலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை நாடுகளில் குழந்தைகளின் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது.
கட்டாயப்படுத்தப்பட்டு
பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல நாடுகளில் குழந்தைகள்
விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கல்வி மற்றும் நல வாழ்வு பணிக்
குழு அதிகக் கரிசனையுடன் குழந்தைகளை அணுக வேண்டி இருக்கிறது. பலவிதமான
குழப்பங்களில் நடமாடும் இளையோரை, தங்களைத் தாங்களே காயப்படுத்தும் இளையோரை இனம் கண்டு, பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
செயல்திறன்
அதிகமாகக் காணப்பட்டாலும் முதியோரைப்போல குழந்தைகளையும் விளிம்பு நிலையினராய்ப் பார்ப்பதும் வேதனைக்குரியது. நம்பிக்கை இழந்த நிலையற்ற எதிர்காலத்தைச் சந்திக்கும் இளையோர், வேலை வாய்ப்பில்லாத இளையோர், படித்தும் பயனில்லாத நிலைகளை எண்ணிப் பார்க்கும் இளையோர், கனவு நனவாகாது என்னும் மனநிலையில் வாழும்
இளையோரைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இயல்பாகவே அவர்கள் சோர்வடைவது உறுதி.
குண்டுவெடிப்பில்
சிதறிப்போகும் குழந்தைகளைப் பார்க்கிறோம். அதிகார மமதையில் குழந்தைகளைக் கொல்வதை
நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. குழந்தைகளின் வாழ்வைவிட இந்த உலகில் உயர்வானது வேறு எதுவுமில்லை. குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பதாகும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றார்கள்; வன்முறையினால் பாதிக்கப்படுகின்றார்கள்; குற்றமிழைக்கும் கும்பல்களால் குழந்தைகள் அனாதையாக்கப்படுகிறார்கள்; ஓரங்கட்டப்படுகிறார்கள். பாதுகாக்க வேண்டியவர்களே குழந்தைகளைக் கொல்வது ஆபத்தானது. சண்டை சச்சரவுகளுக்கும், சமூக மன அழுத்தங்களுக்கும், பெற்றோரின் பிரச்சினைகளுக்கும்
குழந்தைகள் பலியாகின்றனர்.
புலம்பெயரும்போது
அதிகமான குழந்தைகள் கடலில், பாலைவனத்தில், சாலைகளில் இறக்கின்றனர்.
மருத்துவ உபகரணங்கள் இல்லாமல், உதவிக்கு யாரும் இல்லாமல் தவிக்கின்றனர். சூழ்நிலைகள் வித்தியாசமாக இருந்தாலும், ஒரே ஒரு கேள்விதான்: ‘குழந்தைகள் வாழ்வு இப்படித்தான் முடிய
வேண்டுமா?’ இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
2. கேள்விக்குறியாகும் குழந்தைகளின்
எதிர்காலம்
சமத்துவமற்ற
பொருளாதாரம், போர்களின் கொடுமை, போதிய மருத்துவமும் கல்வியும் இல்லாமை போன்றவற்றால் குழந்தைப்பருவம் மறுக்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல. இதனை எதிர்த்துக் கண்டிப்பது அமைதிக்கான ஒரு கூக்குரலாக அமையும். இந்த அநீதியின் சுமை நமது சகோதர-சகோதரிகளில் மிகவும் பலவீனமானவர்களையும் பாதுகாப்பற்றவர்களையும்தான்
அதிகம் பாதிக்கிறது. இது ஓர் உலகளாவிய
தார்மீகப் பிரச்சினை.
நம்
இதயத்தின் கருணையும் இரக்கமும் ஒருபோதும் கடினமாகி விடக்கூடாது. 40 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பல்வேறு பிரச்சினைகளால் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வீடிழந்து நிற்கின்றனர். குழந்தைகள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். சுமார் 160 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
பலர் கடத்தப்படுகிறார்கள். குழந்தைத் திருமணத்தைக் கட்டாயமாக்கியுள்ளனர். மில்லியன் கணக்கில் அகதிகளாய் குடும்பங்களோடு அதேநேரத்தில் தனிமையாக அலைகிறார்கள்.
யார்
துணையும் இல்லாமல் வாழும் குழந்தைகளின் வாழ்வு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கண்ணுக்குத் தெரியாத ஒரு கோடியே ஐம்பது இலட்சம் குழந்தைகளுக்குச் சட்டப்பூர்வ இருப்பு இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கல்வி சுகாதாரப் பராமரிப்பை அணுகுவதில் ஒரு தடையாக இருக்கிறது. சட்டப் பாதுகாப்பு இல்லாததால் அடிமைகளாக விற்கப்படலாம். ரோஹிங்கியா இளையோர் பதிவு செய்யப் போராடுகிறார்கள். அமெரிக்க எல்லையில் உள்ள ஆவணமற்ற குழந்தைகள் தெற்கிலிருந்து அமெரிக்காவை நோக்கி விரக்தியுடன் வருகின்றனர். இவ்வாறு குழந்தைகள் மீதான அடக்குமுறை வரலாற்றில் தொடர்கிறது.
3. குழந்தைகளுக்கான கரிசனையே எதிர்நோக்கின்
ஆதாரம்
நமது
தாத்தா-பாட்டிகளிடம் சிறு வயதில் அனுபவித்த போரைப் பற்றிக்கேட்டால் அவர்களின் நினைவுகளிலிருந்து சோகம் வெளிப்படுகிறது. போர்க்காலம் இருளின் காலம். துர்நாற்றம், குளிர், பசி, அழுக்கு, பயம், உறவுகளை, உடைமைகளை இழப்பது போன்ற வன்முறை நிறைந்த கதைகளைத் தாத்தா வழியாகக் கேட்டபோது முதல் உலகப் போரின் பயங்கரத்தை அறிந்ததாகவும் அது தன் கண்களையும் இதயத்தையும் திறந்ததாகவும் திருத்தந்தை பதிவு செய்கிறார். விலைமதிப்பற்ற வாழ்வைப் போரில் பாதிக்கப்பட்டோரின் கண்கள்
வழியாகப் பார்த்தால் நன்கு
புரிய முடியும். கருக்கலைப்பு தொடர்வது கொடூரமான நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. எந்த ஒரு மதிப்பீடும் இல்லாமல், மரியாதையும் இல்லாமல் தூக்கியெறியும் கலாச்சாரம் தொடர்வது ஆபத்தானது.
செவிசாய்த்தல்
மிக முக்கியம். சிறு குழந்தைகள் கவனிக்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள், நினைவில் கொள்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். குழந்தைகள் தங்கள் பார்வையாலும் அமைதியாலும் நம்மிடம் பேசுகிறார்கள். நாம் அவர்களுக்குச் செவிசாய்ப்போம். நமது பங்களிப்பு குழந்தைகளுக்குப் புதிய உலகைக் காண துணை புரியட்டும். எதிர்நோக்கின் ஆதாரமே நாம் நமது குழந்தைகளின் கனவுகளை, தேவைகளை,
உரிமைகளை, நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் உள்ள கரிசனைதான் என்பதை மனத்தில் பதிய வைப்போம். இதை அடிப்படையாகக்கொண்டு விரைவில் குழந்தைகளுக்கான திருத்தூது ஊக்கவுரை ஒன்று தயாரிக்கப்படும் என்பதையும் திருத்தந்தை உறுதி செய்திருக்கிறார்.