news-details
சிறப்புக்கட்டுரை
வலையும் வாழ்வும் (புதிய தொடர் - 01)

உழவும் உழைப்பும் வாழ்வின் அச்சாணிஎன்று நினைத்திருந்தபோது திடீரென்று உருவான சகாரா பாலைவனப் பெரு வெள்ளம் போல வலைதளமும் சமூக ஊடகமும் குறைந்த கால கட்டத்திலேயே நமது அன்றாட வாழ்வினை முழுவதும் ஆக்கிரமித்து விட்டன. இதயமும் இதயத்துடிப்பும் போல நம் வாழ்வியலோடு இரண்டறக் கலந்துவிட்ட எண்ணிம (Digital) உலகைப் பற்றிய  அறிதலும் புரிதலும் இன்று நமக்குத் தேவைப்படுகின்றது.

நம்மில் பலர் எண்ணிம உலகில் குடியேறுபவர்களாக (digital immigrants) அல்லது எண்ணிம உலகின் பிறப்பாளர்களாக (digital natives) இருக்கக்கூடும். இந்த இரண்டு பிரிவினர்களுக்கான தலைமுறை இடைவெளி அல்லது உறவுச்சிக்கல்களுக்குத் தீர்வு வேண்டுமெனில், எண்ணிமத் தொழில் நுட்பத்தினையும், அதன் தன்மையையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘வலையும் வாழ்வும்என்னும் இத்தொடர் மூலம் எண்ணிம உலகின் மொழியினை நாம் தெரிந்துகொள்ள உதவுவதோடு, அதன் ஆழத்தையும் அகலத்தையும் ஆபத்தையும் அபத்தத்தையும் காட்சிப்படுத்தும் நிலைக்கண்ணாடியாக விளங்க வருகிறது இத்தொடர். வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்...

1. வாட்ஸ் அப் யூனிவர்சிட்டி

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன். வளாகமே வண்ண விளக்குகளாலும் பதாகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் கண்டிருந்தது. சிலர் அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற பேச்சாளர் அரங்கிலே அமர்ந்து, அந்நாளுக்கான பேச்சை ஆர்வமாய்க் கேட்டுக்கொண்டிருந்தனர். அறியாததை அறிந்துகொள்வதிலும் புரியாததைப் புரிந்துகொள்வதிலும் எப்போதுமே மனிதர்களுக்குத் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. இருப்பினும், ஒருசிலர் நண்பர் கூட்டமாய்க் கூடிசெல்பிஎடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்கள் போல ஒவ்வொரு புத்தக அரங்கிலும் சிறார்-பெரியோர் எனப் பெருங்கூட்டம் மொய்த்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அதில் சிலர் குளத்து நீரில் பட்டும் படாமலும் தொட்டுச் செல்லும் தட்டானைப் போல புதிய புத்தகத்தின் மணத்தை மட்டும் நுகர்ந்து ஒரு புத்தகத்தைக் கூட வாங்காமல் வீடு திரும்பியதையும் காண முடிந்தது. பிளாஸ்டிக் டப்பாக்களைச் சேகரித்துவிட்டு, ஒன்றையும் பயன்படுத்தாமல் சுமந்து செல்லும் சாலையோர மனநலம் குன்றிய மனிதரைப் போல பேரார்வத்தில் வாங்கப்பட்ட புத்தகங்கள் பல வாசிக்கப்படாமலேயே வீட்டில் அட்டைப் பெட்டிக்குள் அடைக்காத்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? கோடைகாலத்திலே காட்டு யானைகள் நீரோடைகளைத் தேடி அலைவது போல அறிவு அரங்குகள், கருத்துரைகள், விவாத மேடைகள், புத்தகப் பகிர்வுகள், தத்துவ தர்க்கங்கள், நல்ல புத்தகங்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றை நாடித் தேடுகின்ற ஆர்வம் இந்த டிஜிட்டல் மனிதர்களிடம் இல்லை

1980 முதல் 1994 -க்குள் பிறந்தவர்களை Gen Yஎன்றும், 1995-லிருந்து 2009-க்குள் பிறந்தவர்களைGen Zயினர் என்றும், 2010 முதல் 2024-க்குள் பிறந்தவர்களைGen Alphaஎன்றும், இனிமேல் பிறக்கின்ற தலைமுறையினரை Gen Betaஎன்றும், ‘டிஜிட்டல் சமூகம்அழைக்கின்றது. மனித வாழ்வில் சமூக ஊடகங்களின் ஊடுருவல்களுக்குப் பிறகு குறிப்பாகGen Y, ‘Gen Zமற்றும்Gen Alphaதலைமுறைகளைச் சார்ந்த பெரும்பான்மையினர் ஆழப் படிப்பதிலும், அகல அறிவதிலும் ஆர்வம் இல்லாதிருக்கின்றனர். மழைக்காலத்தில் ரீங்கரிக்கும் புற்றீசல்கள் உதிர்த்துச் செல்லும் ஒன்றுக்கும் பயன்படாத சிறகுகளைப் புத்தகங் களில் சேகரித்து வைப்பது போல, சமூக ஊடகங் களில் பகிரப்படும் மேம்போக்கான பொழுதுபோக்கு வீடியோக்களையும், உறுதிப்படுத்தப்படாத செய்திகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நுகர்வதிலே அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இத்தலைமுறையினரைவாட்ஸ் அப் யூனிவர்சிட்டி மாணவர்கள்என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு.

ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ்என்னும் அமைப்பு 2024-ஆம் ஆண்டிற்கான வார்த்தையாகபிரைன் ராட் (Brain rot) என்று அறிவித்தது. இந்த வார்த்தை அறிவிக்கப்பட்டதிலிருந்தே பேட்டரியில் ஓடும் கார் பொம்மையை ஓரிரு நாளில் உடைத்துப் பார்த்து, உள்ளே என்ன இருக்கின்றது என்று பார்க்கும் குழந்தையின் ஆர்வத்தைப்போலபிரைன் ராட் (Brain rot) என்னும் இந்த வார்த்தைக்குள் அப்படி என்ன இருக்கின்றது என்ற தேடலும் இணையத்தில் அதிகமானது. அப்படி ஆர்வம் கொண்டு தேடலில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன். ‘பிரைன் ராட் (Brain rot) என்பது அதீத மேம்போக்கான இணைய நுகர்வினால் ஏற்படும் மன நலச்சிதைவு அல்லது அறிவாற்றலை வற்றிப்போகச் செய்யும் நிலை என்று சொல்லலாம். எல்லாரும் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறோம்; தனக்குபிரைன் ராட் (Brain rot) அறிகுறி இருப்பதை எப்படி அறிந்துகொள்வது? ஒன்றும் பிரச்சினை இல்லை. அதற்கான சில வழிமுறைகள் இருக்கின்றன. காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் போதும் நீங்கள் தூங்குவதற்கு முன்பாக உங்கள் இன்டர்கிராமில் பூனை பாடுவதிலிருந்து, பாப் பாடகர் நாலுகாலில் நடப்பது வரையிலான ஏராளமான ரீல்ஸ்களை அதிகாலை 2 மணி வரை பார்ப்பவர்களா நீங்கள்? காலை 6 மணிக்கு ஸ்மார்ட் போன் மூஞ்சியில் விழித்த பின்பும் அதிகமான நேரங்களில் கைக்குப் பதினொன்றாம் விரலாக உங்கள் செல்போன் உள்ளதா? புத்தகத்தில் வாசித்த ஒரு பத்தி கூட நினைவில் இல்லாமல், எதையுமே நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் மூளை மந்த நிலையில் இருப்பதை உணர்கின்றீர்களா? இணையத்தில் உலாவுகின்றீர்கள். ஆயினும், எதுவும் உருப்படியாகக் கற்றதாக இல்லை. நுனிப்புல் மேய்ந்ததாகவே இருக்கின்றது என்று உணர்கின்றீர்களா? நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டி அடுப்படிக்குச் செல்போனைப் பார்த்துக்கொண்டே வருகின்றீர்கள், வந்த பிறகுஎதற்கு அடுப்படிக்கு வந்தோம்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்கின்றீர்களா? அப்படியெனில் உங்களுக்குபிரைன் ராட் (Brain rot) அறிகுறி இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

இரவானால் விட்டில்பூச்சிக்கு அதன் பின்பகுதியில் ஒளி அரும்புவதைப்போல இன்றைய மனிதர்களின் முகம் எப்போதும் ஸ்மார்ட்போன் ஒளிபட்டு சுவாலித்துக்கொண்டே இருக்கின்றது. இரவில் அந்த முகங்களில் பல வண்ண ஒளிக்காட்சிகளைச் சற்று கூர்ந்து நோக்கினால் இலவசமாகவே காணலாம்.

பிரைன் ராட்டிலிருந்து (Brain rot) எப்படி வெளி வருவது? முதலிலே வெளிவருவதற்கான ஆர்வம் இருக்க வேண்டும். ‘தாவரக்குடுவைஎன்னும் வகை தாவரங்கள் பூச்சிகளை உண்ணும் தன்மை கொண்டது. பூச்சிகளுக்குத் தேனாசைக் காட்டி அருகில் வரச்செய்து கொன்று விழுங்கும். அதேபோன்று ஸ்மார்ட் போனும் ஆசைக்காட்டி மனிதனின் உயரிய சிந்திக்கின்ற தன்மையைச் சிதைக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் பேராபத்திலிருந்து விடுபட சில வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது சுமார்ட் போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது அல்லது தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது. இதனைடிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) என்று சொல்கிறார்கள். புத்தகங்களை வாசிப்பது, மூளைக்கு வேலை கொடுக்கும் புத்துணர்வுப் புதிர்களில் (Puzzles) பங்கேற்பது, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசுவது, தோட்ட வேலை மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, சரியான உணவு, சீரான தூக்கம் பிரைன் ராட்டிலிருந்து நமக்கு விடுதலை தரும் என்பது உறுதி.

மனிதனின் தனித்துவமே சிந்திக்கின்ற ஆற்றல்தான். எனவேதான் அவனைஅறிவுஜீவி (Rational Being) என்கின்றோம். இந்தச் சிந்திக்கின்ற ஆற்றலை இழந்துவிட்டோமெனில், மனிதனுக்கான முக்கிய அடையாளத்தையே நாம் இழந்துவிட்டோம் என்றாகிவிடும்.

சமூக ஊடகம் நுனிப்புல் மேய்ச்சல் அல்ல; மாறாக, வாழ்க்கையிலிருந்தும் வாய்ப்புகளிலிருந்தும் அதிகமாகக் கற்றல், ஆழக் கற்றல், அகலக் கற்றல் மட்டுமே நம் சிந்தனையைத் தீட்டும் சாணைக்கல் ஆகும்.

சிந்திக்கின்ற ஆற்றலை இழப்பதில் அல்ல; சிந்திக்கின்ற ஆற்றலைக் கடப்பதில் இருக்கின்றது மனித ஞானம்!