1. பின்னணி
மரியா
காட்சி கொடுத்த இடங்களாக லூர்து, பாத்திமா, இலாசலேத், கார்மேல், குவாதலுப்பே, மெட்ஜிகோர்ஜ்,
வேளாங்கண்ணி போன்ற திருத்தலங்கள் கருதப்படுகின்றன. அங்கு மரியாவின் அற்புதங்களையும்
அதிசயங்களையும் நாடி பலர் செல்கின்றனர். அண்மைக் காலங்களில் புதுப்புது வகையான, புதிய
புதிய பெயர்களில் மரியா காட்சி அனுபவங்கள் கொடுப்பதாகவும், புதுமைகள் புரிவதாகவும்
நவீன ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு அவை மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தமிழ் நாட்டில் கர்ப்பிணி மாதா (சென்னை), குழந்தை மாதா (காங்கேயம்), மணல் மாதா (சொக்கன்
குடியிருப்பு), கடல் மாதா (வெள்ளப்பட்டி), மலை மாதா (கொணலை), மழை மலை மாதா (அச்சரப்பாக்கம்),
மின்னல் மாதா (தண்ணூத்து), திருக்கல்யாண மாதா (பொத்தகாலன் விளை) போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக்
குறிப்பிடலாம்.
சில
திருவுருவங்களில் மரியா கண் சிமிட்டுவதாகவும், கண்ணீர் வடிப்பதாகவும், நெற்றியிலிருந்து
இரத்தம் சொட்டுவதாகவும், உடம்பிலிருந்து எண்ணெய் வடிவதாகவும் பரப்பப்பட்டு, மக்கள்
பரவசமாகி, அந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்கு ‘பக்திப் படையெடுப்பதும்’ நடக்கிறது. தீராத நோயிலிருந்து குணம், கடன் தொல்லையிலிருந்து
விடுதலை, திருமண வரன், குழந்தைப் பேறு, தேர்வில் வெற்றி, அரசாங்க வேலை... இப்படி நேரடியாகவோ,
தன் மகன் இயேசுவிடம் பரிந்து பேசியோ மரியா செய்ய முடியாத அற்புதங்களும் அதிசயங்களும்
இல்லை என்று பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால், சாட்டியுரைக்கப்படும் (alleged) மரியாவின் பெரும்பாலான இத்தகைய காட்சி
அனுபவங்களும் புதுமைகளும் திரு அவையின் உரிய அதிகாரத்தினுடைய முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு,
அவை உண்மையானவை, நம்பத்தக்கவை என்று அறிவிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
மரியா
புதுமைகள் செய்ததாக நற்செய்தி ஏடுகளில் பதிவு எதுவும் இல்லை. கானாவூர் திருமணத்தில்
“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்”
(யோவா 2:5) என்று மரியா பணியாளர்களிடம் கூறுவதில்
திராட்சை இரசம் இல்லாத குறையைத் தீர்த்துவைக்க இயேசுவால் முடியும் என்ற தனது
நம்பிக்கையை அவர் வெளிப்படுத்துவதாகவே பொருள் விளக்கம் அளிக்கப்படுகிறது.
இரண்டாம்
வத்திக்கான் சங்கத் தந்தையர்கள் மரியா காட்சியனுபவங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
மேலும், மரியாவின் சிறப்புப் பெயர்களில், ‘அருளை வழங்குபவர்’, ‘இணை மீட்பர்’ போன்ற
வார்த்தைகளும் அவர்களுடைய படிப்பினையில் இடம் பெறவில்லை. மரியன்னைக்குச் செலுத்தும்
வணக்கம் தெளிவான கிறிஸ்தியல் சார் பார்வையை உள்ளடக்கியது என்பது சங்கத்தின் போதனை:
“அன்னையைப் பெருமைப்படுத்தும் பொழுது மகன் அறியப்பட்டு, அன்பு செய்யப்பட்டு, மாட்சிமைப்படுத்தப்படுகிறார்” (திரு அவை, எண் 66). மேலும், “கிறிஸ்து ஒருவரே மீட்பர்,
அவருடன் இணை மீட்பர்கள் யாரும் இல்லை” என்றும், “மரியா கிறிஸ்துவிடமிருந்து
எந்தச் சிறப்புப் பெயரையும் எடுத்துக்கொள்ளவில்லை” என்றும்,
“அவருக்கென்று (இயேசுவைப்) போன்ற மீட்பர் (quasi-redeemer), இணை மீட்பராக (co-redeemer) இருக்கக் கேட்டதில்லை” என்ற
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று கவனத்திற்குரியது.
திருவிவிலியத்தில்
வேரூன்றாத, திரு அவையின் அண்மைக்கால ஆசிரியப் படிப்பினைகளைப் பிரதிபலிக்காத, நற்செய்தியின்
சீடத்துவ வாழ்விற்கு முரணான, மிகைப்படுத்தப்பட்ட மரியா பக்தி வணக்கங்கள், பட்டங்கள்,
திருப்பயணங்கள், திருத்தலங்கள் உருவாவதற்குச் சாட்டியுரைக்கப்படும் மரியா காட்சி அனுபவங்களின்
பங்களிப்பு கணிசமானது. அத்தகைய காட்சி அனுபவங்களைக் கண்டறிந்து அவற்றைப் புறக்கணிப்பதும்,
அதே வேளையில், அருள் வாழ்வு மற்றும் ஆன்மிகக் கனிகளை விளைவிக்கும் காட்சி அனுபவங்களை
ஊக்குவித்து இறைமக்களின் எளிமையான நம்பிக்கையைப் போற்றி வளர்ப்பதும் தனது கடமையெனத்
திரு அவை ஆசிரியம் கருதுகிறது. இக்கடமையைச்
செய்யும் நோக்கில் நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயம் ‘சாட்டியுரைக்கப்பட்ட இயல் நிலை
கடந்த நிகழ்வுகளை உய்த்துணர்வதற்கான’ (Norms
for Discerning Alleged supernatural Phenomena) என்ற தலைப்பில் 17, மே 2024 தேதியிட்ட முக்கிய ஆவணத்தை
வெளியிட்டுள்ளது. இதன் சிறப்புக் கூறுகளையும், இதை நடைமுறையில் பொருத்தி அண்மையில்
பேராயம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றியும் எதிர்வரும் கட்டுரையில் காண்போம்.
(தொடரும்)