நமது இறைவேண்டல், சொற்களையும் எண்ணங்களையும் கடந்து செயல்வடிவம் பெறவேண்டும் என்னும் புரிதல் இன்று மிகவும் தேவைப்படுகிறது. நம் வழிபாடுகளில் நாம் செய்யும் இறைவேண்டல் நம் வாழ்வுக்கு நம்மை இட்டுச் சென்று செயல்வீரர்களாக மாற்ற வேண்டும். அதுவே சிறந்த இறைவேண்டல்.
இறைவேண்டலின்
அடிநாதம் இறைவன் மீதும், பிற மனிதர்கள் மீதும் நாம் காட்டும் அன்பே. அன்பின் நுட்பமான வெளிப்பாடு. குறிப்பாக, துன்புறுவோர் மீதும், துயர் நிறைந்தவர் மீதும் காட்டப்படும் அன்பே பரிவு எனப்படுகிறது. இறைவனின் கனிந்த அன்பை இரக்கம், பரிவு என அழைக்கிறது திருவிவிலியம்.
திருவிவிலியத்தின் பார்வையில் பரிவு பல செயல் வடிவங்களில்
வெளிப்படுகிறது. இதோ, அவற்றில் சில:
1) அவசரத்தில் உதவி: பரிவு என்றாலே அது செயல் வடிவில் வெளிப்படும்போதுதான் சிறப்படைகிறது. செயல் வடிவம் பெற்ற பரிவிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இயேசு உவமையாகக் கூறிய நல்ல சமாரியர்தான். கள்வர் கையில் அகப்பட்டு, குற்றுயிராக விடப்பட்ட அவரைக் கண்ட குருவும், லேவியரும் மறுபக்கமாய் விலகிச் சென்றனர். ஆனால், அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும், எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தான் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார் (லூக்கா 10:33-34). இதுவல்லவோ பரிவின் மிகச் சிறந்த வெளிப்பாடு.
2) உணவு கொடுத்தல்: பசியோடு இருப்பவர்களைப் பார்த்துப் பரிவு கொள்ளும்போது என்ன செய்ய வேண்டும்? அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். பாலைநிலத்தில் தம்மோடு இருந்த மக்கள் திரளைக் கண்டு இயேசு தம் சீடரிடம் “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை. இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை. அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” (மத் 15:32)
என்று கூறினார். இந்தப் பரிவின் வெளிப்பாடாக ஏழு அப்பங்களைக் கொண்டு, நாலாயிரம் பேருக்கு வயிராற உணவு வழங்கினார்.
3) நலமாக்குதல்: இயேசுவின் பரிவு
நோயாளர்களைச் சந்தித்தபோது, குணமாக்குதலின் வழியாக வெளிப்பட்டது. இயேசு பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார். அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார் (14:14) என்று மத்தேயு பதிவு செய்துள்ளார்.
4) கற்பித்தல்: இயேசு கரையில்
இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால், அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் (மாற் 6:34). கற்றுக் கொடுத்தலும் ஒரு பரிவின் செயலே என்பதை அறிந்து நாம் வியக்கிறோம்.
5) மன்னித்தல் பரிவின் மற்றொரு
சிறந்த
அடையாளம்:
“ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர். பாவங்களை மன்னிப்பவர்” (சீஞா
2:11) என்று சீராக்கின் ஞானநூல் இறைவனின் இயல்பை எடுத்துரைக்கிறது. பவுலடியாரும் “ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள். கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்” (எபே
4:32) என்னும் அறிவுரை வழியாக மன்னிப்பைப் பரிவின் வெளிப்பாடாகக் காட்டுகிறார்.
6) செல்வத்தைப் பகிர்தல்:
“உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதர, சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால், அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?” (1யோவா 3:17) எனக் கேள்வி எழுப்புகிறார் புனித யோவான்.
7) கடன்களைத் தள்ளுபடி செய்தல்:
நம்மிடம் பொருளாகவோ, பணமாகவோ கடன் பட்டிருப்பவர்களிடம் அதனைத் தள்ளுபடி செய்வது பரிவின் ஒரு சிறந்த அடையாளம். இயேசுவின்
மன்னிக்க மறுத்த பணியாள் உவமையில் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்த பணியாள் தலைவரின் காலில் விழுந்து மன்றாடியபோது, அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து, அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார் (மத் 18:27). திருவிவிலியம் காட்டும் யூபிலிக் கொண்டாட்டத்தின் மையமாகக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் அமைகின்றது (லேவி 25).
8) தண்டனையிலும் பரிவு: மக்கபேயு மற்றும் அவரது ஆள்கள் இறைவனிடம் மன்றாடியபோது, அவர்கள் எப்போதாவது பாவம் செய்ய நேரிட்டால், கடவுளால் ‘பரிவோடு தண்டிக்கப்பட’ வேண்டுமென்று
மன்றாடினார்கள் (2மக் 10:4) என்னும் செய்தி நமக்கு வியப்பைத் தருகிறது.
சாலமோனின்
ஞானநூலில் இறைவனின் கனிவும் இரக்கமும் நிறைந்த தண்டனை மனம் திரும்புவதற்கான வாய்ப்பு என்ற செய்தி தரப்பட்டுள்ளது. “உம் ஊழியர்களின் பகைவர்கள் சாவுக்குரியவர்களாய் இருந்தும், மிகுந்த கனிவோடும் இரக்கத்தோடும் அவர்களைத் தண்டித்தீர். அவர்கள் தங்கள் தீச்செயல்களை விட்டுவிடும்பொருட்டு, காலமும் வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுத்தீர்” (சாஞா
12:20).
9) இறந்தவர்களுக்கும் பரிவு: வாழ்வோருடன் பரிவின் செயல்கள் முடிந்துவிடுவதில்லை, இறந்தோருக்கும் அது தொடர வேண்டும் என்னும் இனிய செய்தியைத் திருவிவிலியம் நமக்குத் தருகிறது. தோபித்து நூலில் அவரது பல இரக்கச் செயல்களைப்
பற்றி வாசிக்கிறோம். “பசியுற்றோருக்கு உணவும், ஆடையற்றோருக்கு ஆடையும் அளித்து வந்தேன். என் இனத்தாருள் இறந்த யாருடைய சடலமாவது நினிவே நகர மதில்களுக்கு வெளியே எறியப்பட்டிருக்கக் கண்டால், அதை அடக்கம் செய்துவந்தேன். சனகெரிபு கொன்றவர்களையும் அடக்கம் செய்தேன்”
(தோபி 1:17) என அவரே கூறியுள்ளதை
அறிகிறோம். மறைக்கல்வி போதிக்கும் இரக்கச் செயல்களுள், இறந்தோரை நல்லடக்கம் செய்வதும் ஒன்று.
10) கால்நடைகளுக்கும் பரிவு: பரிவுணர்வு வாழ்வோரையும் இறந்தோரையும் தாண்டி, கால்நடைகளையும், எல்லா உயிரினங்களையும் தொட வேண்டும் என்பதே இன்றைய தேவை. இதனைத் திருவிவிலியமும் எடுத்துரைப்பதை அறிந்து வியக்கிறோம். “நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர்” (நீமொ
12:10) என்கிறது நீதிமொழிகள் நூல்.
“நாம் சொல்லிலும், பேச்சிலும் அல்ல; செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்”
(1யோவா 3:18) என்னும் அறைகூவலுக்கேற்ப, தூய ஆவியாரின் கனிகளுள் ஒன்றான பரிவை (கலா 5:22) நாம் செயல்படுத்திக் காட்டுவோமாக! அதுவே சிறந்த இறைவேண்டல்.