news-details
சிறப்புக்கட்டுரை
இந்து இராஷ்டிரத்தின் அரசமைப்புச் சட்டம்!

இந்தியா சனவரி 26 அன்று குடியரசு நாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தது. விடுதலை பெற்ற இந்தியா தனக்கென அரசமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்கிட முனைந்த நிலையில், நாடு முழுமையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உரிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்து அரசியல் நிர்ணயச் சபையை உருவாக்கியது. அறிவர் அம்பேத்கர் அவர்களை வரைவுக் குழுத் தலைவராகக் கொண்டு உருவாக்கிய புரட்சிகர அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.

புதிய இந்தியாவின் அடையாளமாகவும், இந்தியாவின் கொள்கைப் பெட்டகமாகவும், மக்கள் உணர்வின் உள்ளார்ந்த வெளிப்பாடாகவும் இனி உருவாகவிருந்த இந்தியாவின் கருத்தாகவும் (Idea of India) கருதப்பெறும் இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் பிறப்பெடுத்தது.

இந்தியச் சுதந்திரப் போரில் பங்கு எதுவும் பெறாத ஓர் அமைப்பு, இந்தியச் சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் தலைமையேற்று நடத்தப்பெறும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், இந்திய அரசமைப்பின் பண்புகள் இந்துப் பண்பிற்கு எதிரானது என்று கோல்வாக்கர் அவர்களால் அவமதிக்கப்பட்ட நிலையிலும், இதே அரசமைப்பின் மீதுதான் கைவைத்து உறுதிமொழி (Oath) எடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. இவ்வரசமைப்புச் சட்டத்தை இந்தியப் பிரதமர் மோடி அவர்கள்போற்றுதற்குரிய வேதம்எனப் புகழ்ந்ததும் இன்று உலகறிந்த செய்தி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற விவாதங்கள் முழுமையும் அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவை முன்வைத்து நடத்தப்பட்டவைதான் என்பதும், இவ்விவாதத்தின் ஒரு பகுதியில் அறிவர் அம்பேத்கர் இந்திய உள்துறை அமைச்சர் அவர்களால் அவமானப்படுத்தப்பட்டதையும் அறிவோம். மனுஸ்மிருதியையும் சவார்க்கரையும் கொண்டாடும் இன்றைய அரசு, சமயச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தை மதித்ததில்லை என்பதையும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் முக்கிய விழுமியங்கள் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டுள்ளன என்பதையும் எதிரணிகள் ஆணித்தரமாக எடுத்து வைத்தன.

சனநாயகத்தை நம்பாத ஒரு மதவாத கட்சி, சனநாயகம் தந்த தேர்தல் சனநாயகத்தை விடாமல் காத்து வருதலில் என்ன சூழ்ச்சியுள்ளதோ, அதே நிலைதான் அரசமைப்பைக் காப்பதாக அல்லது மதிப்பதாகக் காட்டிக்கொள்ளும் நாடகமும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தொன்று தொட்டு இந்தியா காத்துவரும் முதன்மை மதிப்பீடுகளின் தொடர்ச்சியே இன்றைய அரசமைப்புச் சட்டம். சமத்துவம், சுதந்திரம், நீதி எனும் உயர்விழுமியங்கள் இந்திய நாகரிகம் ஏற்கெனவே காத்துவரும் மதிப்பீடுகளே. இதைத்தான் நம் அரசமைப்புச் சட்டம் பிரதிபலிக்கிறது. இந்தியச் சுதந்திரத்தின் நிலைப் பண்பைக் குறித்து சந்தேகப்பட்டவர்கள்தான் தோற்றுப் போனார்கள் - குடியரசுத் தலைவர் முர்மு அவர்களின் குடியரசு தின உரையின் சுருக்கம். இந்தக் குடியரசு தின உரையின் சாரம் மிகச் சரியானதே. அரசமைப்பின் முகப்புரையில் தரப்பட்டுள்ள அடிப்படை விழுமியங்களின் இன்றைய ஏற்புடைமை பற்றி நமக்கு வேறுபட்ட கருத்து இருந்தாலும், மீண்டும் மீண்டும் வலுவூட்டப்பெறும் இக்கூற்றுகள் நமக்கு மகிழ்வையே தருகின்றன.

நம்பிக்கையற்ற அல்லது பக்தி தன்மையற்ற ஒரு மதவாத கட்சி சனநாயகத்தைக் காக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் சமயச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தை ஏற்குமா?

அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து விழுமியங்களுக்கும் எதிரான ஆர்.எஸ்.எஸ். என்ற மூல அமைப்பு தன் நோக்கை மிகத் தெளிவாகவே இந்திய மக்களிடம் வைத்து வருகிறது. மூலக் கொள்கையில் இவ்வமைப்புகளிடம் எந்தவிதச் சமரசமும் இல்லா  நிலையில், ஆட்சியைத் தற்காலிகமாகக் காத்துக் கொள்ளும் சூழ்ச்சியாகவே இக்கட்சியின் போக்கை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சூழ்ச்சியின் உச்சம்

பாபர் மசூதி உடைப்பிற்குப் பின், விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கியதைப் பலர் மறந்திருக்கலாம். மோடி ஆட்சிக் கட்டிலேறிய முதலாண்டில் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவுக்கெனத் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழில்சோசலிசம், ‘சமயச் சார்பின்மைஎன்ற இரு வார்த்தைகளும் களவாடப்பட்டிருந்தன. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்கள் இந்தியா 1947-இல் பெற்ற சுதந்திரத்தை மறுத்து, ‘இராமருக்கான கோவில் எழுப்பப்பட்ட நாளையே உண்மையாகச் சுதந்திர நாள்என்று அறிவித்தமையின் உள்ளடக்கம் என்ன?

இந்தியச் சுதந்திரப் போரில் பங்கு எதுவுமற்ற ஆர்.எஸ்.எஸ். இப்படித்தான் சிந்திக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்தியச் சுதந்திரம் இந்து நாடு ஒன்றை உருவாக்க உதவவில்லை என்பதாலும், சுதந்திரம் பெற்ற இந்தியா சனாதனக் கொள்கைகளுக்கு முரணான அரசமைப்புச் சட்டத்தை அடிப்படை அடையாளமாக ஏற்றதால், இந்துத்துவ அமைப்புகள் நிலவும் அரசமைப்பை ஏற்றுக்கொள்வதுபோல நாடகமாடி வருகையில், அண்மையில்தர்ம சன்மத் சமய நாடாளுமன்றம் (Religious Parliament) என்று அழைக்கப்பெறும் விசுவ இந்து பரிஷத்தின் அமைப்பொன்று புதிய அரசமைப்புச் சட்டத்தை அறிவித்துள்ளது.

இந்து இராஷ்டிராவுக்கான அரசமைப்பு ஒற்றைச் சட்டமன்றத்தை (unicameral Legislature) நடைமுறைப்படுத்துமாம். இராணுவப் பயிற்சி அனைத்துக் குடிமக்களுக்கும் கட்டாயமாக்கப்படுமாம். அரசு தொகுதி வளர்ச்சிக்குத் தரும் நிதி, சமய நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு மட்டுமே வழங்கப்பெறுமாம். வேளாண்துறை வரிவிலக்குபெறும். இப்பிரதிநிதிகள் வேத பாடசாலையில் கல்வி கற்றவர்களாக இருத்தல் வேண்டும். சமய நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களைத் திரும்பப் பெறும் உரிமையுண்டு. வாக்காளர் எண்ணிக்கையில் 50,000 பேரின் ஒப்புதலைப் பெற்றால் இது நடைமுறைக்கு வரும். இந்தப் புதிய அரசமைப்புச் சட்டம் இராமராஜ்யம், மனுஸ்மிருதி, சாணக்கியரின் அர்த்த சாஸ்திர அடிப்படையில் அமையும். விரைவான நீதிக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். ஒரு நபருக்கு அளிக்கப்பெறும் தண்டனை, அவரைத் திருத்துவதற்கான கருவியாக அமையும். பொய்யான குற்றச்சாட்டுகளுக்குத் தண்டனை வழங்கப்பெறும். இவ்வரசமைப்புச் சட்டப்படி சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். இந்திய மண்ணில் தோன்றிய இந்து, சைனம், சீக்கியம், பௌத்த மதம் சார்ந்தவர்களே வாக்களிக்கும் (Vote) உரிமை பெற்றவர்கள். கல்வி அமைப்பு குருகுல முறையில் மாற்றப்படும். ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குருகுலப் பள்ளிகளாக மாற்றப்படும்இசுலாமியர் நடத்தும் மதராசா பள்ளிகள் மூடப்படும். சாதி அமைப்பு ஒழிக்கப்படும். ஒற்றைத் திருமண முறையும், கூட்டுக் குடும்ப முறையும் ஊக்குவிக்கப்படும். உலக நாடுகள் அனைத்தும் இந்து இராஷ்டிரத்தை அங்கீகரிக்கும் வகையில் பரப்புரை அமையும்.

இவ்வுலகில் கிறித்தவர்களுக்கென்று நாடுகள் உள்ளன; இசுலாமியர்க்கும் உள்ளன; இந்துகளுக்கென்று நாடு எதுவும் இல்லாச் சூழலில், இந்நாட்டை இந்து நாடாக அங்கீகரிக்க இம்முயற்சி தொடரும். புதிய அரசமைப்பின்படி, மத நம்பிக்கைகளும் மதச் சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.

இந்தியா முழுமையிலான நிபுணர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் 501 பக்க இந்த ஆவணம் சங்கராச்சாரியாரின் அனுமதி பெற்றபின் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் (‘டெக்கான் ஹெரால்டு, பெங்களூரு பதிப்பு 26.01.2025).

மேற்கண்ட செய்தித் தொகுப்பினை நாம் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறோம்? எங்கோ கூடிய சில மதவாதிகளின், மத அடிப்படைவாதிகளின் உளறலாக மட்டுமே கருதப் போகிறோமா?

மதவாதிகள் எனச் சிறுமைப்படுத்தப்பட்டு, கண்டுகொள்ளாமல் விட்ட நிலைக்கு இந்த நாடு ஒவ்வொரு நாளும் பதிலளிக்க முடியாமல் திணறி வருகிறது.

வகுப்புவாத இந்துத்துவர்கள் பேசிய அகண்ட பாரதக் கனவு இன்றும் நனவாகாமல் இருக்கலாம்; நிலப்பரப்பில் அகண்ட பாரதக் கனவு நனவாகாமல் இருக்கலாம்; இந்துத்துவர்களின் தொடர் பரப்புரைகளால் இந்திய எல்லை தாண்டி, உலக அளவிலான அங்கீகாரத்தை மோடி தலைமையிலான அரசு பெற்றுள்ளது என்பதே உண்மை. இதுவும் அகண்ட பாரதக் கருத்தியலின் வெற்றிதான் அல்லது மதப் பெரும்பான்மைவாத அரசு, ஒரு பாசிச அரசாகத்தான் இருக்க முடியும் என்ற அடிப்படை அரசியல் ஞானம் கூட இல்லாத உலக அரசுகள் எப்படி மோடி அரசுக்கு அங்கீகாரம் வழங்க முடியும்?

சனநாயகத்திற்கு, சனநாயகம் காக்க உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்திற்கு இந்துத்துவ அரசியலால் ஆபத்து வரும் என்று வகுப்புவாத அரசியலின் போக்கையும் வரலாற்றையும் அறிந்திருந்த அரசியல் அறிஞர்கள் முன்னறிவித்த போதெல்லாம், இது வெறும் கற்பனையென்று நகைத்தவர்கள் அனைவருக்கும் இன்றைய ஆட்சியாளர் தரும் பாடம் என்ன? இந்துத்துவர்களின் சனநாயகத்தின் எதிரான போக்கு உண்மை சனநாயகம் பற்றிய விவாதத்திற்கும், அரசமைப்புச் சட்டம் பற்றிய புரிதலுக்கும் வழிவகுத்தது என்பது ஒரு நேரடி விளைவு என்பதும் உண்மையே. இந்த நேரடி விளைவு வரவேற்கத்தக்கது என்றாலும், காந்தி, நேரு, அம்பேத்கர் தலைமையிலான இந்தியக் கனவுக்கு (Idea of India) நேர் எதிரான போக்கு மக்கள் மனத்தில் திட்டமிட்டு விதைக்கப்பட்டு நியாயம் பெற்று வருதலை மூன்றாம் முறை ஆட்சிப் பொறுப்பேற்ற மோடி ஆட்சி நிரூபிக்கவில்லையா?

நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். எனும் வகுப்புவாத அமைப்பு, தன் பரிவாரங்களை நாடு முழுவதும் விரித்து வருகின்ற சூழலில் இந்திய அரசியல், சமூகப் பண்பாட்டுக் கட்டமைப்புகளைச் சிதைத்து வருவதை இந்தியாவின் சமயச் சார்பற்ற அரசியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியும் எச்சரித்தும் வந்துள்ளனர். இவ்வெச்சரிக்கைகளைத் தொடர்ந்து வந்த ஆட்சியமைப்புகள் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவுதான் இன்று தரப்பட்டுள்ள இந்துத்துவச் சாயலோடு கூடிய அரசமைப்புச் சட்டம்.

பன்மைக்குணம் மிக்க இந்தியாவை ஒற்றைக்குள், ஓர்மைக்குள் முடக்கி, சனநாயகத்தின் குரல் வளையை முறிக்கும் இந்திய மதவாதிகள் 1925-ஆம் ஆண்டிலிருந்தே இதைத்தான் கூறி வருகின்றனர். இன்று அக்குரலின் உச்சம் நம் செவிகளைத் துளைக்கும்போதுதான் வேற்றுமை (Diversity) பற்றி, பன்மைக் குணம் (Pluralizion) பற்றி பெரிய அளவில் பேசத் துவங்கியுள்ளோம். பன்மை ஒழிப்பைத் தன் அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவம் இன்று ஒற்றையை, ஒற்றையை வலியுறுத்தும் எதேச்சதிகாரத்தை, தேசிய இனங்களின் தனித்துவத்தை, அவற்றின் அடையாளத்தை அழித்து வருவதில் எந்த ஒளிவு மறைவுமில்லை.

காஷ்மீருக்கான தனி அந்தஸ்து ஒழிக்கப்படும், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும், இராமருக்கான ஆலயம் எழுப்பப்படும்... இவையெல்லாம் எப்போதுமே இந்துத்துவர்கள் தம் தேர்தல் முழக்கங்களாகக் (Manifestos) கூறி வந்துள்ளனர். சிறுபான்மையினரைச் சமயச் சார்பற்ற கட்சிகள் திருப்தி (appeaserent) செய்யும் வகையில் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் வெறும் உளறல்களாகவே கருதப்பட்டு வந்தன. மதமாற்றுத் தடைச்சட்டங்கள் பா... ஆளும் மாநிலங்கள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளன.

இந்திய மதவாதிகள், ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் மதவாத கட்சிகள் ஒருவகையில் பார்த்தால் நேர்மையானவர்கள். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று உறுதி அளித்தனரோ, அவ்வுறுதி மொழிகளை எழுத்துப் பிசகாமல் நிறைவேற்றி வருகின்றனர். கண்ணீர் விட்டு வளர்த்த சுதந்திரம் கருகிப்போவது உண்மையெனினும் மதவாத சக்திகள் உறுதியானவர்கள்.

நிச்சயமாக அண்மையில் இந்து அமைப்புகள் அறிவித்த புதிய சாசனம் உருப்பெறும் காலம் தொலைவில் இல்லை.