16-வது ஆயர் பேரவையின் இரண்டாவது அமர்வானது கடந்த அக்டோபர் 26, 2024 அன்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி 155 பகுதிகளைக் கொண்ட இறுதி ஆவணமானது உடனடியாக வெளியிடப்பட்டது. ‘இணைந்து பயணித்தல்’ என்பதைப் பிரதிபலிக்கும் விதமாக, ஆயர் பேரவையின் பங்கேற்பாளர்களால் வரைவு செய்யப்பட்ட ஆவணத்திற்கு ஒப்புதல் அளித்து (திரு அவை சட்ட எண் 343), 16-வது ஆயர் பேரவையின் இறுதி ஆவணமாக (Final Document) ஏற்றுக்கொள்ள திருந்தந்தை பிரான்சிஸ் இசைவு தெரிவித்துள்ளார். எனவே, வழக்கமாக ஒவ்வோர் ஆயர் பேரவைக்குப்பின் வெளியிடப்படுகின்ற பேரவைக்குப் பிந்தையத் திருத்தூது அறிவுரை மடல் (Post-Synodal Apostolic Exhortation) என்று எதுவும் வெளியிடப்படாது. இந்த இறுதி ஆவணம் திரு அவையில் கூட்டொருங்கியக்க வாழ்க்கை முறையை வளர்ப்பதில் திரு அவைச் சட்டத்துடன் தொடர்புடைய பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
காலத்தின்
அடையாளங்கள் மற்றும் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கோட்பாட்டு ரீதியாகப் பொதுநிலையினருக்கான பணிகள் என்பதன் முக்கியத்துவத்தை ஆழப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆயர்களின் மாமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாகப் பல இறையியல் கோட்பாடுகள்
வளர்ச்சி கண்டிருக்கின்றது. இறைநம்பிக்கையாளர்களாகிய பொதுநிலையினர் ஒவ்வொருவரும் தாம் பெற்ற திருமுழுக்கால் எழுகின்ற பொது பணிக் குருத்துவத்திற்கான அழைப்பால் உந்தப்பட்டவர்களாய் திரு அவையில் பணியாற்ற அழைக்கப்படுகின்றார்கள். இந்த அறைகூவல் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளில் மிக அதிகமாகவே விரவிக் கிடக்கின்றது. இந்த இறுதி ஆவணமும், திருமுழுக்கினால் எழுகின்ற நம்பிக்கையாளர்களின் பங்கேற்பைப் பல தளங்களில் மிகச்
சிறப்பாக அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது என்பது இதன் தனிச்சிறப்பு.
நிறுவப்பட்ட அல்லது
நிறுவப்படாத
பொதுநிலையினருக்கான
நிலையான
பணிகள்
மறைப்பணியை
மையப்படுத்தி இயங்கும் கூட்டொருங்கியக்கத் திரு அவை குருத்துவத் திருநிலைப்பாடு தேவைப்படாத பொது நிலையினருக்கான நிலையான பணிகளை (stable ministries) ஊக்குவிக்கின்றது. இந்தப் பொதுநிலையினருக்கான பணிகள் நிறுவப்பட்ட அல்லது நிறுவப்படாத தன்மை கொண்டதாக இருக்கலாம். வாசகர், பீடப்பணியாளர் பணிகள் (Motu Proprio Spiritus Domini) மற்றும் வேதியர்
பணிகள் (Motu Proprio Antiquum ministerium)
ஆகியவை வரையறுக்கப்பட்ட திருச்சடங்குகள் வழியாக வழங்கப்படும் நிறுவப்பட்ட, நிலையான பொது நிலையினருக்கான பணிகள் ஆகும். இந்த நிறுவப்பட்ட பணிகள் ஆயரின் ஆணையின்படி செயல்படுத்தப்படும் நிறுவப்படாத பணிகளால் முழுமை பெறுகின்றது. குறிப்பாக, அன்பியங்களை ஒருங்கிணைக்கும் பணி, குழு இறைவேண்டல்களை வழிநடத்தும் பணி, பிறரன்புச் செயல்களை ஒழுங்குபடுத்தும் பணி, ஆலோசனை வழங்கும் பணி, அடக்கச் சடங்குகளை முன்னின்று நடத்தும் பணி போன்ற உள்ளிட்ட பணிகள் இந்த நிறுவப்படாத பணிகளில் அடங்கும். இத்தகைய நிறுவப்படாத பணிகளுக்கு இறைநம்பிக்கையாளர்களின் பொதுச் சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் வண்ணம், இதற்கான ஆணை பொதுவெளியில் வெளிப்படையாக வழங்கப்படுதலின் அவசியத்தையும் இந்த இறுதி ஆவணம் எடுத்தியம்புகின்றது.
நற்கருணை
வழங்குதல், அருள்பணியாளர் இல்லாதபோது ஞாயிறு வழிபாடுகளை வழிநடத்துதல், குறிப்பிட்ட அருள்வேண்டல் குறிகளை (sacramentals) நிறைவேற்றுதல்
உள்ளிட்ட அசாதாரணப் பணிகள் (extraordinary ministries) ஊக்குவிக்கப்படுதல் வேண்டும் என்றும் இந்த இறுதி ஆவணம் எடுத்தியம்புகின்றது. எனவே, பொதுநிலையினருடைய திருமுழுக்கு அடையாளத்தையும், அது விடுக்கும் பொதுப் பணிக்குருத்துவத்துக்கான அறைகூவலையும் இந்த இறுதி ஆவணம் மிக அதிகமாகவே எண்பித்துக்காட்டுவதால், அதற்குத் தேவைப்படும் பயிற்சிகளையும் தளங்களையும் வாய்ப்புகளையும் பொதுநிலையினருக்கு உருவாக்கித் தரவேண்டியது ஒவ்வொரு தலத் திரு அவையின் தலையாயக் கடமையாகும்.
பங்கேற்பு அமைப்புகளும்
பங்களிப்பும்
மறைமாவட்ட
மன்றம் (diocesan synod - தி.அ.ச.எ. 460-466), மறைமாவட்ட
மேய்ப்புப் பணிப் பேரவை (diocesan pastoral council தி.அ.ச.எ.
511), பங்கு மேய்ப்புப்பணி பேரவை (தி.அ.ச.எ. 536), மறைமாவட்ட நிதிக்குழு (diocesan finance committee- தி.அ.ச.எ.492-494),
பங்கு நிதிக்குழு (parish finance committee- தி.அ.ச.எ.
537) ஆகிய பங்கேற்பு அமைப்புகளின் வழியாகப் பொதுநிலையினர் இணைப் பொறுப்பாளர்கள் (co-responsible) என்ற மனநிலையோடு முடிவெடுக்கும் படிநிலைகளில் (decision-making processes) பங்கேற்கப்
போதுமான வாய்ப்புகளைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதை இந்த இறுதி ஆவணம் மிகத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
திரு
அவைச் சட்டத்தில், இதுவரை கட்டாயமாக்கப்படாமல் விரும்பினால் அல்லது வேண்டுமென்றால் அமைத்துக்கொள்ளலாம் என்றிருந்த பங்கேற்பு அமைப்புகளான பங்கு மேய்ப்புப்பணி பேரவை, மறைமாவட்ட மேய்ப்புப்பணி பேரவை இனிமேல் கட்டாயமாக்கப்பட்டு, அனைத்துப் பங்குகளிலும் மற்றும் மறைமாவட்டங்களிலும் கட்டாயமாக அமைக்கப்படுவதை உறுதிசெய்ய இந்த இறுதி ஆவணம் அறிவுறுத்துகின்றது. அத்துடன், ஏற்கெனவே திரு அவைச் சட்டம் மறைமாவட்டங்களிலும் பங்குகளிலும் கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகின்ற பங்கேற்பு அமைப்புகளான பங்கு நிதிக்குழு மற்றும் மறைமாவட்ட நிதிக்குழு பொதுநிலையினரின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அனைத்துப் பங்குகளிலும் மறைமாவட்டங்களிலும் நிறுவப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கின்றது.
இதன்
வாயிலாக, நிதி விசயங்களில் பங்கு மற்றும் மறைமாவட்ட அளவில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் வெகுவாக வளரும் என்பதையும், அத்துடன், நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் இந்தப் பங்கேற்பு அமைப்புகளின் சரியான நடைமுறை வரையறைகள் தடை செய்யும் என்பதையும் இந்த இறுதி ஆவணம் எடுத்துக்கூறுகின்றது.
இதை
உறுதி செய்யும் வகையில் மறைமாவட்டத் தனிச்சட்டங்கள் (diocesan particular laws) தேவையான
வரையறைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும் என்றும் குறித்துக் காட்டுகின்றது இந்த இறுதி ஆவணம்.
(தொடரும்)