news-details
சிறப்புக்கட்டுரை
எலி ஏன் கோவணத்தோடு ஓடுகிறது?

எலி ஏன் கோவணத்தோடு ஓடுகிறது?’ என்று எங்கள் மாவட்டத்தில் ஒரு பழமொழி உண்டு. தங்களுடைய வழக்கத்திற்கும் இயல்புக்கும் தன்மைக்கும் தகுதிக்கும் மாறாக யாராவது சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் நடந்துகொண்டால், இந்தப் பழமொழியைச் சொல்லிஇவர் இப்படி நடந்து கொள்வதற்கு என்ன காரணம்?’ என்று தேடுவார்கள். எலிக்குக் கோவணம் அவசியம் இல்லை. ஆனால், அப்படி ஒன்றைக் கட்டிக்கொண்டு அது ஓடுகிறது என்றால், அங்கே ஏதோ ஒன்று விபரீதமாக நடக்கிறது என்று ஊகிக்க முடியும்.

சென்னை ..டி. இயக்குநர் காமகோட்டி. இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுமையும் அறியப்பட்ட ஒரு முதல்தர உயர்கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இவர் மெத்தப் படித்தவர்; சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்; பல ஆராய்ச்சிகள் செய்து முனைவர் பட்டமும் பெற்றவர்; அனுபவம் பெற்ற பேராசிரியர். அப்படிப்பட்ட ஒருவர், “பசுவின் மூத்திரம் குடித்தேன்; பதினைந்து நிமிடங்களில் காய்ச்சல் சரியாகிவிட்டது. அந்த மூத்திரத்தில் பல நோய்களைக் குணமாக்கும் மருத்துவக் குணங்கள் உள்ளனஎன்று அறிவியலுக்கு எதிரான செய்தியைப் பொதுத்தளத்தில் ஏன் பகிரவேண்டும்? ஒன்றிய அரசு நடத்தும் புகழ்பெற்ற ஓர் உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர் இதைப்போன்று பேசும்போது, கல்வி அறிவு இல்லாத பொதுமக்கள் நம்பத்தானே செய்வார்கள்! அப்படி நம்பி பசுமூத்திரத்தைக் குடிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுகாதாரக் கேடுகளுக்கு யார் பொறுப்பு? காமகோட்டி பொறுப்பேற்பாரா?

கடைவீதிகளில் இரவு நேரங்களில் லேகியங்களை விற்பனை செய்யும்லேகிய வியாபாரிஇப்படிப் பேசினால் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இப்படிப் பேசுவது யார்? சென்னை ..டி. இயக்குநர்! கோமியத்தில் நோய்களைக் குணமாக்கும் தன்மை இருக்கிறது என்பதை உலகச் சுகாதார நிறுவனமோ அல்லது எந்தவோர் உலகளாவிய சுகாதார அமைப்போ ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, கோமியம் குடித்தால் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும், கோமியத்தில் உள்ள ஈக்கோலை, சால்மோனல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் போன்றவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுநீர் பாதைத்தொற்று, வயிற்றுப் போக்கு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பது பல மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இதையெல்லாம் அறியாதவரா காமகோட்டி? அறிந்தும் ஏன் அப்படிப் பேசுகிறார்?

தமிழிசை சௌந்தரராஜன் ஓர் அலோபதி மருத்துவர். இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர். அவரது கணவர் புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியர். சிறுநீரக நோய்கள் சம்பந்தப்பட்ட நிபுணர். அப்படிப்பட்ட தமிழிசை காமகோட்டியின் அபத்தமான பேச்சை வரிந்து கட்டிக்கொண்டு மூர்க்கத்தனமாக ஆதரிக்கிறார். “மாட்டுக்கறியைச் சாப்பிடுபவர்கள் மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் என்ன?” என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்கிறார். பதநீரைக் குடிக்க முடியும்; பனை ஓலையைச் சாப்பிட முடியுமா? இதைத் தமிழிசை அறியமாட்டாராஅறிவார். அறிந்த பின்னரும் ஏன் இப்படி அபத்தமாகப் பேசுகிறார்?

இராஜ்பவனில் இருக்கும் ஆளுநர் இரவி மேனாள் .பி.எஸ். அதிகாரி. அவருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? திருவள்ளுவரைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் இரவி எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தார்? இல்லற வாழ்வின் அனைத்துப் பரிணாமங்களையும் வாழ்ந்து தெளிந்த ஒரு மகத்தான குடும்பத் தலைவரான வள்ளுவப் பெருந்தகையைக் காவியுடை தரித்த சந்நியாசியாகச் சித்தரிக்கும் அதிகாரத்தை இரவிக்குத் தந்தது யார்? ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று வாழ்ந்த அவருக்குப் பூணூல் போட்டு, சாதி அடையாளம் தந்தது எப்படி? இது தவறு என்று ஆளுநர் இரவிக்குத் தெரியாதா? அது தன்னுடைய வேலையல்ல என்பதும் புரியாதா? அவருக்குத் தெரியும். அவருக்குப் புரியும். தெரிந்தும் புரிந்தும் இரவி ஏன் இப்படிச் செய்கிறார்?

பா... தலைவர் அண்ணாமலை ஒரு மேனாள் .பி.எஸ். அதிகாரி. டங்ஸ்டன் சுரங்கத் தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் மதுரை மாவட்ட விவசாயிகள் மத்தியில் உரையாற்றுகிறார்: “இந்தச் சுரங்கத் தொழிலால் இப்பகுதியின் பொருளாதாரம் வளரும், வேலை வாய்ப்புகள் பெருகும். இதனை எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்; இதனை எதிர்க்கும் தி.மு.. கூட்டணிக் கட்சிகள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். மக்களின் எதிர்காலத் தேவை அறிந்து பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட இந்தச் சுரங்கத் திட்டத்தை மக்கள் வரவேற்க வேண்டும்என்று பகிரங்கமாகப் பேசினார். பின்னர் அவரே விவசாயிகளை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று மக்களுக்குப் பாதகமாக இருக்கும் இந்தச் சுரங்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். உடனே அந்த ஒன்றிய அமைச்சரும் அந்தத் திட்டத்தை இரத்து செய்துவிட்டதாக அறிவிக்கிறார். “அரிட்டாப்பட்டி மக்கள்மீது அன்பும் கருணையும் கொண்டு, திட்டத்தைக் கைவிட்ட மோடிக்கு அந்த மக்கள் காலங்காலமாக நன்றியுடன் இருப்பார்கள்என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். அன்று பேசியதுநாற வாய்!’ இன்று பேசியதுஎந்த வாய்?’ என்று மக்களுக்குத் தெரியாதா? இந்தக் கபட நாடகம் மக்களுக்குத் தெரியும் என்று அண்ணாமலைக்குத் தெரியாதா? பின்னர் ஏன் அண்ணாமலை இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்?

தமிழ்த் தேசியம், சமூகநீதி, சுயமரியாதை, தமிழர்களின் இனமானம் என்றெல்லாம் மேடைதோறும் பேசிக்கொண்டிருந்த சீமான் ஏன் திடீரென்று தந்தை பெரியாரைத் தரக்குறைவாகப் பேசுகிறார்? எண்பது ஆண்டுகளாகக் கலப்படமற்ற பொதுநல உணர்வுடன், தனக்கென இருந்த அனைத்தையும் இந்த மண்ணின் மக்களுக்காக வஞ்சகமின்றி வாரி வழங்கிய அந்த மனிதப்புனிதரைமக்களின் எதிரிஎன்று சீமான் தூற்றவேண்டிய அவசியம் என்ன?

தந்தை பெரியாரின் தியாகத்தை அறியாதவரா சீமான்? அவரது தொண்டைப் புரியாதவரா சீமான்? அறிந்தும் தெரிந்தும் சீமான் ஏன் இப்படித் தரம் தாழ்ந்து  நடந்துகொள்கிறார்?

உத்தரப்பிரதேசத்தில் பிரயாகையில் மகா கும்பமேளா எனும் புனிதமான நிகழ்வு நடக்கிறது. ‘உலகின் மிகப்பெரிய ஆன்மிகக் கூடல்என்று அந்த நிகழ்வைப் பெருமையுடன் அழைக்கின்றனர். இந்தியாவில் இருந்து மட்டுமல்ல; உலகமெங்கிருந்தும் இப்புனிதமான நிகழ்வுக்கு மக்கள் வருகின்றனர். பண்டித நேரு கூட இதனைப் பாரத ஆன்மிகத்தின் மிகப் பிரமாண்டமான நிகழ்வு என்று தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். எத்தனை ஆண்டுகளாக இந்தப் புனித நிகழ்வு நடக்கிறது என்ற நிச்சயமான வரலாறு தெரியவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க ஓர் ஆன்மிக நிகழ்வு.

கோவிந்த வல்லப பந்திலிருந்து, கமலபதி திரிபாதி உள்பட பல மாபெரும் தலைவர்கள் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்துள்ளார்கள். இறைவனையும் மன அமைதியையும் தேடி வரும் யாரையும் அங்கே தடை செய்ததில்லை. ஏனென்றால், அது மனிதமும் தெய்வீகமும் தழுவிக் கொள்ளும் ஆன்மிகக் கூடல். இதை அறியாதவரா முதலமைச்சர் ஆதித்தியநாத்?   அறிந்தும் தெரிந்தும் அங்கே போய் அமைச்சரவை கூட்டம் நடத்தி ஆன்மிகக் கூடலை, அரசியல் நிகழ்வாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

காமகோட்டி, தமிழிசை, ஆளுநர் இரவி, அண்ணாமலை, சீமான், ஆதித்தியநாத் - இவர்கள் அனைவரும் வெவ்வேறு பின்புலங்களைச் சார்ந்தவர்கள். ஆனால், ஒரேஎஜமானுக்காகஉழைப்பவர்கள். அவரவர்களின் உழைப்புக்கேற்ப கூலி கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

சிலருக்குப் பதவி! சிலருக்குப் பணம்! சிலருக்கு அதிகாரம்!

எலி ஏன் கோவணத்தோடு ஓடுகிறது என்பது இப்போது புரிகிறதா?