(தந்தை அன்பு செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அகஸ்டின்: “தந்தையே, கிறிஸ்து தனக்குள் இருந்த கடவுளின் ஆற்றலை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றார் என்றும், அத்தகைய உயர்நிலை ஆற்றலே அவரது பிரசன்னமாக ஆலயத்தில் குடியிருக்கிறது என்றும் நான் அறிந்துகொண்டது இந்த வார ஞாயிறு திருப்பலியில் நான் புதிய கண்ணோட்டத்தோடு பங்கெடுக்க உதவியது. கடவுள் ஆலயத்தில் இருக்கிறார் என்பதை வெறுமனே நம்பிக்கை அளவில் மட்டும் அணுகாமல், அறிவுப்பூர்வமாக அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் கடந்த வார உரையாடல் அமைந்திருந்தது.”
கிறிஸ்டினா: “கிறிஸ்துவில் செயல்பட்ட ஆற்றலே அவர் செய்த பல்வேறு நற்செயல்களுக்கான - அதாவது குணமளித்தல், வல்லமையோடு போதித்தல், பாவங்களை மன்னித்தல் போன்றவற்றிற்கான - காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அது மட்டுமல்லாமல், அவரது ஆற்றல் இன்றும் செயல்படுவதன் காரணமாக மேற்காணும் நற்செயல்பாடுகளை நாமும் இன்று பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்து கொண்டேன்.”
மார்த்தா: “பாதர், சென்ற வாரம் அகஸ்டினும் கிறிஸ்டினாவும் நான் எதுவும் சொல்லாமலேயே ஆலயத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.”
அன்பு செல்வன்: “தந்தையே! ஜேம்ஸ் ரெட்பீல்டு (James Redfield) என்பவர் எழுதிய ‘The Celestine Prophesy’ என்ற புத்தகம் என் நினைவிற்கு வருகிறது. அப்புத்தகத்தில் உலகின் எல்லா உயிரினங்கள் வழியாகவும் பிரபஞ்சத்தின் ஆற்றல் பாய்ந்துகொண்டே இருக்கிறது. இந்த ஆற்றலை விழிப்புணர்வோடு கையாள்கின்ற தன்மை மனிதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட மாபெரும் கொடை என்று சொல்கிறார்.”
அருள்பணி: “ஆம்! மனிதரைத் தவிர மற்ற அனைத்திலும் பிரசன்னமாயிருக்கின்ற ஆற்றல், ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட நிலையில் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளது. ஆனால், மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரம் எத்தகையது எனில், தங்களது உடல்நிலையையும் மனநிலையையும் சரியாக வைத்துக்கொள்வதன் மூலம், தங்களை ஆற்றலின் உச்சத்திற்கே எடுத்துச் செல்ல முடியும். கிறிஸ்துவைப் பொறுத்த அளவில் அவர் தம் ஆற்றலை அதன் உச்சத்திற்கே எடுத்துச் சென்றவர். அதிலும் சிறப்பாக உயிர்ப்பிற்குப் பின்பு ஆற்றலின் முழுவடிவமாகவே விளங்கினார். எனவேதான் மூடியிருந்த கதவுகளை அவரால் ஊடுருவ முடிந்தது. மேலும், இத்தகைய உயிர்த்த நிலையில் அவரின் ஆற்றலுக்கும் கடவுளின் ஆற்றலுக்கும் இடையே வேறுபாடு இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு இரண்டும் ஒத்த நிலைக்குச் சென்றன. கிறிஸ்து தமது ஆற்றல் நிலையில் கடவுளோடு ஒத்த நிலையில் இருக்கின்ற வேளையில், தனித்துவம் வாய்ந்தவராகவும் விளங்குகின்றார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.”
மார்த்தா: “இப்பொழுது நாம் பேசிக் கொண்டிருக்கும் ஆற்றலுக்கும், சில வாரங்களுக்கு முன்பாக நாம் பேசிய அருள்செல்வத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?”
அருள்பணி: “நல்லதொரு கேள்வி! நிச்சயமாகத் தொடர்பு உண்டு. அருள்செல்வம் என்பது நம் அகவாழ்வை உயர்நிலையில் வைத்திருக்க உதவும் ஒன்று என்று நாம் பார்த்தோம். ஒரு மனிதருக்குள் ஆற்றல் பெருகுகின்ற போது, அவருக்குள் இருக்கின்ற அகச்செல்வங்கள் உயிர்பெற்று எழ ஆரம்பிக்கின்றன. ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களாகிய நாம் பூமியில் படைக்கப்பட்டபோது, வாழ்வை நிறைவாக வாழ்வதற்குத் தேவையான அத்தனை அருள்வளங்களோடுதான் உருவாக்கப்பட்டோம். எனினும், பல வேளைகளில் நமக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் அருள்வளங்கள் வெளிப்படாமல் புதைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து விடுகின்றன. கடவுளின் ஆற்றலை நமக்குள் உள்வாங்குகின்றபோது, உறங்கிக் கொண்டிருக்கின்ற அருள்வளங்கள் உயிர்பெற ஆரம்பிக்கின்றன.”
அன்பு செல்வன்: “தந்தையே, என் மனத்திற்கு ஓர் உதாரணம் தென்படுகிறது. ஒரு நிலத்தில் விவசாயி பல்வேறு வகையான விதைகளை விட்டு அங்கிருந்து போய்விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்திற்குத் தண்ணீர் கிடைக்கும் வரை, விதைகள் புதைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். தண்ணீர் பாய ஆரம்பிக்கின்றபோது, புதைக்கப்பட்ட விதைகள் புதுவாழ்வு பெற ஆரம்பிக்கின்றன.”
அருள்பணி: “சரியாகச் சொன்னீர்கள். பொருள் செல்வத்தைப் பொறுத்த மட்டிலும், திறமைகளைப் பொறுத்த மட்டிலும் மனிதர்களுக்கிடையே பிறப்பின்போது வேறுபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஞானம், தன்னம்பிக்கை, தன்னுணர்வு (self-awareness), அன்பு, மகிழ்ச்சி போன்ற அருள்வளங்கள், அதாவது அருள்செல்வங்கள் கடவுளால் எல்லா மனிதர்களுக்கும் அபரிவிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், ஆற்றல் நிலையில் நாம் பலவீனர்களாக இருப்பதன் காரணமாக மேற்காணும் வளங்கள், செடியாகாத விதைபோல, வெளிப்படாமலேயே மறைந்து விடுகின்றன.”
மார்த்தா: “எனவே, அருளடையாளக் கொண்டாட்டங்கள் வழியாக நாம் இறைவனின் அளப்பரிய ஆற்றலை நமதாக்கி, வாழ்வைச் சிறப்பாக வாழ்வதற்கான அருளை நாம் பெற்றுக்கொள்கிறோம். அப்படித்தானே பாதர்?”
அருள்பணி: “ஆம்! இதுவரை நாம் உளவியல் பின்னணியிலும், அறிவியல் பின்னணியிலும் பார்த்த கருத்துகளை இறையியல் பின்னணியில் உங்களுக்கு எடுத்துச்சொல்ல விரும்புகிறேன். அருளடையாளக் கொண்டாட்டங்களின் பய(ல)ன்களாகக் கீழ்கண்டவற்றைத் திரு அவை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.”
அ) “திருவருள்சாதனங்கள் கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டு, திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை புலன்களுக்கு எட்டாத ஆற்றல்மிக்க அருளின் அடையாளங்கள் ஆகும். இவற்றின் வழியாக, அருள்வாழ்வு நமக்கு வழங்கப்படுகிறது” (கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு, எண். 1116).
ஆ) கிறித்தவ மரபில் திருவருள்சாதனங்களைக் கடவுள் உலகினருக்கு தம்மை வெளிப்படுத்தும் தளமாகவும், மனிதர்களோடு தம் உறவை வைத்துக் கொள்ளும் தளமாகவும் பார்க்கின்ற தன்மை இருந்து வருகிறது. இப்படிப்பட்ட வெளிப்பாடு மற்றும் உறவின் வழியாக கடவுள் திரு அவையையும், இந்த உலகையும் புனிதப்படுத்துகின்றார், புதுப்பிக்கின்றார்.
இ) இயேசுவின் மானிட வாழ்க்கை மூலம் ஒட்டுமொத்த உலகமே, முக்கியமாக மானிட வாழ்வு, புதிய அர்த்தம் பெற்றது என்று சொன்னால் அது முற்றிலும் உண்மை. பணமோ, வசதியோ, பதவியோ மனிதத்தன்மைக்கான அளவுகோலாக இருக்க முடியாது; மாறாக, தனக்குள் உறையும் இறைவனைக் கண்டுகொள்வதே முழுமனித வாழ்வு என்ற புதிய நெறிமுறையை அவர் விட்டுச் சென்றார். அந்தப் புதிய நெறிமுறையை வாழ்வாக்குவதற்கான வழியும் வல்லமையும் திருவருள்சாதனங்கள் வழியாக நமக்குத் தரப்படுகின்றன.
ஈ) திருவருள்சாதனக் கொண்டாட்டத்தில் ஒரு நபர் ஈடுபாட்டோடும், அர்ப்பண உணர்வோடும் பங்கெடுக்கும்போது கீழ்க்கண்ட மூன்று மாற்றங்கள் அவரில் நடைபெற ஆரம்பிக்கின்றன: 1. மனமாற்றம், 2. வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான உள்ள உறுதி அதிகமாதல், 3. சமூகத்தோடு இயைந்து வாழுகின்ற தன்மையில் அதிக ஈடுபாடு.
உ) ஒவ்வொரு திருவருள்சாதனக் கொண்டாட்டத்தின் மூலம் கடவுளோடும் சக மனிதர்களோடும் உள்ள உறவில் நாம் மேலும் மேலும் வலுவடைகின்றோம்.”
கிறிஸ்டினா: “தந்தையே! நீங்கள் சொல்வதைக் கேட்கின்றபோது, ஒரு கத்தோலிக்கக் கிறித்தவராக இருப்பது எவ்வளவு பெரிய கொடை என்கின்ற உணர்வை என்னில் ஏற்படுத்துகிறது. இருப்பினும், எனக்குள் ஒரு கேள்வி எழும்பிக் கொண்டுதான் இருக்கின்றது. கடவுளின் அளப்பரிய ஆற்றல் ஆலயத்தில் இருந்தாலும், ஆலயத்திற்குச் செல்லும் பலர், அதைப் பெற்றுக்கொள்வது போல தெரியவில்லையே!”
அருள்பணி: “கொடைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக அவை பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. அது குறித்து அடுத்த வாரம் நாம் விவாதிக்கலாம்.
(தொடரும்)