மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த அலோன்சோ ஆல்வரஸ் பாரெடா (Alonso Alvarez Parreda) என்பவர் இயக்கிய ஓர் உணர்வுப்பூர்வமான ஆறு நிமிடக் குறும்படம் ‘ஓர் அடையாளத்தின் கதை’ (The Story of a Sigh). ஒரு பார்வைத் திறனற்ற முதியவர் சாலையோரம் அமர்ந்து, தனது அருகில் ஓர் அறிவிப்புப் பலகை வைத்து உதவி கோருகிறார். அந்தப் பலகையில், ‘என்மீது பரிவு காட்டுங்கள், நான் பார்வையற்றவன்’ (‘Have Compassion, I am Blind’) என்று எழுதப்பட்டிருந்தது. அந்த அறிவிப்புப் பலகையைப் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை. அப்போது அந்தப் பக்கமாக வரும் இளைஞர், அந்தப் பார்வைத் திறனற்றவரின் அருகிலே வந்து, அந்த அறிவிப்புப் பலகையைக் கையில் எடுத்து, ஏதோ எழுதி, அவர் அருகில் வைத்துவிட்டுப் போய்விடுகிறார். சில நிமிடங்களில் அந்தப் பக்கமாகச் செல்கிறவர்கள் ஒவ்வொருவரும் அந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்துவிட்டு, அந்தக் குவளையில் தங்களிடம் இருந்த காசைப் போடுகிறார்கள். மாலைக்குள் குவளை நிரம்பிவிடுகிறது. தரையிலும் சில நாணயங்கள் சிதறிக்கிடக்கின்றன. கை நிறைய அதை அள்ளி மகிழ்ச்சி அடைகிறார் அந்த முதியவர்.
மாலையில்
அந்த இளைஞர் பார்வையற்றவரின் அருகில் வந்து அவர் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியைப் பார்த்தபடி நிற்கிறார். அந்த முதியவர் இவரின் காலணிகளைத் தடவிப்பார்த்து, காலையில் வந்தவர் இவர்தான் என அறிந்துகொண்டு, “அப்படி என்னதான்
எழுதினீர்கள்?” என வினவுகிறார். “இன்று
மிக அழகான நாள்; ஆனால், அதை என்னால் பார்க்க இயலவில்லை (‘Today is a Beautiful day; and I can\\\'t see it’) என்று எழுதினேன்”
என்று சொல்லிக் கடந்து செல்கிறார்.
ஒரு
வார்த்தையின் ஆற்றலை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்தக் குறும்படம். சரியான வார்த்தைகள் நம் வாழ்வையே மாற்றிவிடும் என்பதற்கு இந்த அழகிய காணொளி சிறந்த எடுத்துக்காட்டு. மனிதரின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள். சொற்கள் வெறும் சத்தங்கள் அல்ல; அவை விதைகள். விளைநிலத்தில் விதைக்கப்படும்போது வளர்ந்து செழிப்பதோடு மற்றொரு விதையாகவும் மாறுகிறது. இடம் அறிந்து விதைத்தால், அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் பலன் மிகப்பெரிது.
ஆண்டின்
பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு வாசகங்கள் ஒரு மனிதரின் நற்குணம் அல்லது நல்மதிப்பீடு என்பது அவரவர் பேசும் சொற்களையும் செயல்களையும் மையமாகக் கொண்டு அமைகிறது எனப் போதிக்கிறது.
சீராக்கின்
ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம் மனித வாழ்வின் அறநெறி மற்றும் வாழ்வியல் நெறியைப் பற்றிப் போதிக்கிறது. இவ்வாசகம் ஒரு மனிதரை அவரது சொற்களையும் உரையாடலையும் கொண்டு கணிக்கலாம் என்கிறது. இரண்டு உவமைகள் வழியாக ஆசிரியர் விளக்கம் அளிக்கிறார். முதல் உவமை: ‘சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது. அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது.’ இரண்டாவது உவமை: ‘குயவரின் கலன்களைச் சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை உரையாடல் பரிசோதிக்கின்றது.’ அதாவது, மாவு சலிக்கும்போது உமி சல்லடையின் மேலே தங்குவதுபோல, மனிதர்கள் பேசும்போது அவர்களின் பேச்சில் எவ்வளவு குறைபாடுகள் இருக்கின்றன என்பதை அவரிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் காட்டிவிடுகின்றன. குயவன் உருவாக்கிய மண்பாண்டங்கள் உறுதியானவையா, உறுதித்தன்மையற்றவையா என்பது சூளைக்குள் போடப்பட்டுச் சோதிக்கப்படுகிறது. அதுபோலவே ஒரு மனிதரின் உரையாடல் மூலம் அவரது தரமும் பண்பும் அறிவும் சோதிக்கப்படுகிறது என ஆசிரியர் விளக்கம்
தருகிறார்.
உரையாடல்
என்பது மனிதனின் உள்ளத்தை வெளிக்காட்டும் ஒரு கருவி. ஒரு மனிதர் நல்லவரா? கெட்டவரா? என்பது அவர் பேசும் பேச்சைக் கொண்டும், உரையாடல் வழியாகவும் கண்டுகொள்ள முடிகிறது. மேலும், ஒரு மனிதரின் நற்குணத்தையும் நல்மதிப்பீட்டையும் அவரது வெளிப்புற அடையாளங்களைக் கொண்டு அறிந்துகொள்ள முடியாது. மாறாக, அவர் பேசும் சொற்களையும் உரையாடலையும் கொண்டே அறிந்துகொள்ளலாம். ஒருவர் பேசும் நல்ல சொற்களே நல்ல செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. நற்சொல்லும் நற்செயலும் ஒரு மனிதரின் உயர்ந்த பண்புகள். நல்ல சொற்களோடு நல்ல செயல்களும் இணைந்திருக்கின்றன. நல்ல சொற்கள் ஒரு மனிதரை மதிப்படையச் செய்கிறது; பிறரை மகிழ்விக்கிறது; நம்பிக்கையைக் கொடுக்கிறது; ஊக்கமளிக்கிறது. நல்ல செயல்கள் ஒரு சமூகத்திற்குப் பெரும் நன்மைகளைக் கொண்டு வருகிறது. எனவே, நல்ல செயல்கள் செய்வதை ஒருபோதும் நிறுத்திவிடக் கூடாது என இன்றைய இரண்டாம்
வாசகம் வழியாகப் போதிக்கிறார் திருத்தூதர் பவுல்.
கொரிந்து
நகரக் கிறித்தவர்களில் சிலர் கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் உயிர்த்தெழுதலே இல்லை என்று வாதித்து வந்தனர். ‘நாம் இறந்தவுடன்தான் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே... பிறகு ஏன் உழைக்க வேண்டும்?’ எனச் சிலர் கேள்வி எழுப்பினர். இந்தப் பின்புலத்தில் ‘சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே? கிறிஸ்துவின் உயிர்ப்பு இறந்தோர் அனைவருக்கும் கிடைக்கும் கொடை’ என்று அக்களிக்கிறார் பவுல். கிறிஸ்துவில் இறந்தோர் அனைவரும் கிறிஸ்துவில் உயிர்ப்பர் எனப் போதிக்கிறார். கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்பிக்கையாளர் அனைவருக்கும் இறவாமையைப் பெற்றுத்தருகிறது என்று கூறிக் கடவுளுக்கு நன்றிகூற விழைகிறார்.
தொடர்ந்து,
‘உறுதியோடு இருங்கள். நிலையாய் இருங்கள். ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள். நீங்கள் உழைப்பது ஒருபோதும் வீண்போகாது’ என்று
அறிவுரை வழங்கி, நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்களே உயிர்ப்பின் கனிகள் என நமக்கு ஊக்கமளிக்கிறார்.
‘கை தவறினாலும், நற்செயல் தவறக்கூடாது’ என்பார்கள்.
அதாவது தவறு செய்யாத மனிதர்கள் என்று யாருமில்லை; ஆனால், நற்செயல் செய்யாமல் ஒருபோதும் இருக்கக்கூடாது எனப் பவுல் சுட்டிக்காட்டுகிறார்.
இன்றைய
நற்செய்தி வாசகத்தில், இயேசு இரண்டு உருவகங்களை வாழ்க்கைப் பாடமாகக் கற்றுத்தருகிறார். முதலில் ‘பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவாரல்லவா?’ என்று இயேசு எழுப்பும் இந்தக் கேள்விகள் யார், யாருக்கு வழிகாட்ட வேண்டும் என்பதைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. உடல் அளவில் பார்வையிழந்தோர் மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலாது என்பதை இயேசு இவ்வுருவகம் வழியே வலியுறுத்தவில்லை. மாறாக, வழிகாட்ட விரும்பும் குரு, தன் சீடர்களைவிட, தெளிவான பார்வை பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இந்த அணுகுமுறையிலேயே
திருத்தந்தை பிரான்சிஸ், ‘பிறருக்குக் கற்பிக்கும் பொறுப்பிலுள்ளோர் குறிப்பாக, ஆன்மிக மேய்ப்பர்கள், அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், சட்ட வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தங்கள் கடமையுணர்ந்து, மக்களை நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டும்’
எனக் கேட்டுக்கொள்கிறார் (ஞாயிறு மூவேளைச் சிந்தனை, மார்ச் 3, 2019).
இயேசு
குறிப்பிடும் இரண்டாவது உருவகத்தில், ‘நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?’ எனக் கேள்வி எழுப்பும் இயேசு, தன் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அடுத்தவரின் குறையைப் பெரிதுபடுத்திப் பார்க்கும் ஒருவரின் வெளிவேடத்தைத் தன்னாய்வு செய்து பார்க்க அழைக்கிறார். இயேசுவின் இச்சிந்தனையை வள்ளுவர் ‘குற்றங்கடிதல்’ எனும்
அதிகாரத்தில்,
‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற
மாகும் இறைக்கு’
(குறள் 436)
என்கிறார்.
அதாவது, முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கிய பிறகு, பிறர் குற்றத்தைக் கண்டு வழிகாட்டும் தலைவருக்கு எந்தக் குறையும் இருக்காது என்கிறார். திருத்தந்தை ‘நம் குறைகளைக் காண மறுத்து, மற்றவர்களின் குறைகள் குறித்து அதிகம் அசைபோடுதல், மற்றவர்களைக் குறித்து புறங்கூறி, மனிதர்களிடையே முரண்பாடுகளையும் பகைமையையும் தீமைகளையும் விதைத்தல் போன்ற பழக்கங்களைக் கைவிட்டு, தங்கள் பாவங்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்த நாம் முன்வர வேண்டும்’
என அழைப்பு விடுக்கிறார் (ஞாயிறு மூவேளைச் சிந்தனை, மார்ச் 3, 2019).
இறுதியாக,
‘கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமில்லை; ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்’; ‘உள்ளத்தின்
நிறைவையே வாய் பேசும்’ எனும் இயேசுவின் சொற்கள் வழியாக, ஒருவரின் நன்மதிப்பீடு அவரது நற்சொல்லிலும் நற்செயலிலும் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
எனவே,
நம் பார்வையில் மரக்கட்டைகளாகத் தைத்து நிற்கும் குறைகளைத் தூர எறிந்து, தெளிவான பார்வையுடன் பிறரது குறைகளை அகற்ற உதவிகள் செய்யவும், அவர்களை உன்னத வழிகளுக்கு அழைத்துச் செல்லவும் இறைவன் நமக்கு அருள்தர வேண்டுமென்று செபிப்போம். நல்வார்த்தைகளால் பிறரை ஊக்கப்படுத்துபவர்களாகவும்,
நற்செயல்களால் நற்கனியைக் கொடுக்கக்கூடிய நல்ல மரங்களாகவும் வாழ்வோம். நலம் தரும் வார்த்தைகள்தான் நற்செய்தி. அவற்றை நம் ஆண்டவர் இயேசு நமக்குத் தந்திருக்கிறார். இயேசு தரும் நலமான வார்த்தைகளை இதயத்தில் ஏந்தி, பிறரைப்பற்றி நாம் எப்போதும் நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் எவரையும் தவறாகத் தீர்ப்பிடாமல், ஆண்டவரின் வார்த்தைகளின்மீது அடித்தளமிட்டவர்களாகவும் இறைவேண்டலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாழ்வோம். நம் வாழ்வு வெறும் பேச்சுகளில் அன்று; செயல்களில் காட்டப்பட வேண்டும். நல்ல சொல்லைப் பேசவும்
நல்ல செயலைச் செய்யவும் ஆண்டவர் அருள்புரியட்டும். நற்சொல்லும் நற்செயலுமே ஒரு நல்ல மனிதரின் அடையாளம்!