குடியாட்சி (Republic) என்றால் என்ன?
இதன்
பொருள் ‘பொது அலுவல்’ சம்பந்தப்பட்டதாகும். இந்தியாவை ஆள்வோருக்கு அதிகாரம் யாரிடமிருந்து வருகிறது? அந்த அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியவர்கள் யார்? கடவுளா? அல்லது அவர்களது பண பலமா? அல்லது
சமூக அந்தஸ்தா? அல்லது அவர்களே உருவாக்கியதா?
குடிமக்களாகிய
‘நாம்தான்’ அந்த
வாக்கு செலுத்துவதன் மூலம் வழங்கியுள்ளோம். ஐந்தாண்டிற்கு ஒருமுறை அந்த அதிகாரத்தைக் கொடுப்பதும் பறிப்பதும் யார் கையில் இருக்கிறது? மக்களாகிய நம் கையில்தான் உள்ளது. அப்படியென்றால், நமது வாக்கு எவ்வளவு மதிப்பு மிக்கது? சக்தி படைத்தது! அது விலை பேசப்படலாமா? அல்லது வாக்கு இயந்திரங்கள் வழியாகத் திருடப்பட அனுமதிக்கலாமா? மக்களாகிய நாம் இது குறித்து அமைதியாக இருந்தால், குடியாட்சி முறையில் நாம் ஆள்படவில்லை என்பதுதான் உண்மை.
குடியாட்சி
என்பது மன்னர் ஆட்சி போல் பரம்பரை பரம்பரையாக வாரிசுவழி வருவதல்ல; குடியாட்சியின் தத்துவத்தில் ஆட்சியாளர்கள் அதிகாரத்தோடு பிறப்பதில்லை; மாறாக, மக்களால் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதியாக ஆட்சியில் பணியாற்றுபவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகப் பணியாற்றும் பணியாளர்கள். மக்கள் யாரை வேண்டுமானாலும் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கலாம். ஆண், பெண், திருநங்கைகள், திருநம்பிகள், ஏழைகள், சமூகத்தில் பின் தங்கியவர்கள், படிப்பறிவில்லாதவர்கள், குடியாட்சி முறையில் வாரிசு அரசியல் எல்லாக் கட்சியிலும் நடத்தப்படுகிறது. இதுவா உண்மையான குடியாட்சி முறை?
குடியாட்சியில்
யார் மையமாக இருக்கிறார்கள்? மக்கள்தானே! அப்படியென்றால் அவர்களது குரல்கள், அடிப்படைத் தேவைகள், அனைத்து வகை நலன்கள் அடிப்படை உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இன்று மக்கள் வாக்களிப்பதைத் தவிர அரசுக்கும் மக்களுக்கும் எந்தத் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். ஆகவே அரசு தனது விருப்பம்போல் செயல்படுகிறது.
இந்திய
அரசியலமைப்புச் சட்டம் காட்டும் வழிகாட்டும் நெறிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, கட்சிக் கொள்கைகளை முன்னுறுத்தி ஆட்சி செய்கிறது. மத அடிப்படைவாதக் கொள்கை
இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் கொள்கையல்ல; இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் நெறிமுறைகளும் அல்ல; மதச்சுதந்திரம் என்பது எல்லாருக்கும் உண்டு என்பதை அரசியல் சட்டம் கூறுகிறது.
இந்தியாவில்
மக்கள் தாங்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை நம்பி மூன்று நிலையில் - ஒன்றிய, மாநில, பஞ்சாயத்து - உள்ளவர்களுக்குப் பகிர்ந்தளித்திருப்பதால் அவர்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களோடு கலந்தாலோசித்து, கருத்துகளைப் பகிர்ந்தளித்து, விவாதம் செய்து ஆட்சி நடத்த வேண்டும். இதுதான் குடியாட்சி நடைமுறையாகும்.
எனவே,
அரசு அதன் நிர்வாகம், உருவாக்குதல் போன்ற அனைத்திலும் மக்களின் பங்கேற்பு, கலந்துரையாடல், விவாதங்கள் அவசியம் நடைபெற வேண்டும்.
குடியாட்சி முறை
சந்திக்கும்
சவால்கள்கள்
இன்று
பாராளுமன்றத்தில் இயற்றப்படும் பல சட்டங்கள், மசோதாக்கள்
மக்களிடம் எந்த ஒரு கலந்துரையாடலும் செய்யாமல், இது மக்களின் அன்றாட வாழ்வுக்கு அவசியமானதா? சனநாயகக் குடியரசு ஆட்சி முறையை வலுப்படுத்துவதாக உள்ளதா? என்றெல்லாம் கேட்காமல், அவசரம் அவசரமாக நிறைவேற்றுகிறார்கள்.
அண்மையில்
இயற்றப்பட்ட ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா எந்த ஒரு கலந்துரையாடலும் செய்யாமல், மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் போதிய கால அவகாசம் தராமல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகளின் விவரங்களைப் பெறுவதற்கான வெளிப்படைத்தன்மைக்கு எதிராகத் தேர்தல் விதிமுறைகளை மாற்றியமைத்தது. இரண்டுமே குடியாட்சி முறைக்கு எதிரான செயலாகும். இதில் வருந்த வேண்டியது என்னவென்றால், மக்களுக்கு இதுகுறித்து தெரியாது, அக்கறையும் இல்லாதது. எது நடந்தாலும் அது குறித்துப் பேசாமல் அமைதியாக இருத்தல். எனவே, அரசு தவறாகச் செயல்படுவதற்கு, இன்னும் அதிகமாக அவர் சனநாயகத்திற்கு எதிராக இருப்பதற்குக் காரணம் மக்கள் பேரமைதியில் வாழ்வதுதான்.
குடியாட்சி முறையை
உயிர்பிப்பது
எப்படி?
இந்திய
அரசியலமைப்புச் சட்டம் மக்களாகிய நாம் நமக்கென்று உருவாக்கியது. அதனால்தான் ‘மக்களாகிய நாம்’ என்று முகவுரையே தொடங்குகிறது. மக்கள்தான் அரசின் மையம்; எனவே, மக்கள்தான் அதிகாரம், மக்களுக்காகத்தான் அரசு. மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் குடியாட்சி முறைக்கும் எதிரானது என்ற விழிப்புணர்வு தேவை.
இது
குறித்த விழிப்புணர்வுக் கல்வியை எல்லாத் தலங்களிலும், எல்லா நிலையினருக்கும் - குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சிவில் சமூகத்தினர், சமயவாதிகள் கொடுக்க வேண்டும். சுருங்கக்கூறின், ஒவ்வொரு குடிமகளும் / குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று.
குடிமக்களின்
இணைந்த இயக்கமான குடிமைச் சமூகத்தின் (Civil Society) பங்களிப்பு
என்பது முக்கியமானதாகும். அவர்கள் அரசைக் கண்காணிப்பதும், அவர்களைக் கேள்விக்குட்படுத்துவதும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிர்ப்பந்திப்பதும், புதிய மக்கள் மையக் கொள்கைகளை உருவாக்கச் செய்வதும், அரசு செய்யும் தவறுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதும் அதன் தலையாயக் கடமையாகும்.
குடிமைச்
சமூகம் அரசியல் கட்சியல்ல; மாறாக, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து, சனநாயகத்தை, குடியாட்சியை, மனித உரிமைகளை, மக்கள் நலவாழ்வை உறுதி செய்கிற அமைப்பாகும். இதன் பங்களிப்பானது இன்றைய உலக அரசியலரங்கில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதை ஐக்கிய நாட்டு சபையும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது.
இறுதியாக...
திரு
அவை மற்றும் அதன் உறுப்புகளான மறைமாவட்டம், பங்கு, கல்வி நிலையங்கள், சமூக செயல்பாட்டுத் தலங்கள் அனைத்தும் ஒரு குடிமைச் சமூகமாகச் செயல்பட குடிமைச் சமூகங்களைத் தங்கள் பகுதியில் உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும். அருகில் உள்ள குடிமைச் சமூகங்களை இணைக்க வேண்டும். இணைந்து வருதல், விவாதித்தல், செயல்படுதல் குடியாட்சி முறையை உயிர்ப்பிக்கும்.
எனவே,
கற்றுக்கொள்வோம் - இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்களைக் கண்காணிப்போம்
- அரசு என்ன செய்கிறது, எப்படிச் செய்கிறது? அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுகிறதா? வன்முறையற்ற,
சமத்துவ அமைதி சமூகத்தை - மகிழ்வும் ஒற்றுமையும்-பன்மைத்துவமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவோம்.
இந்திய
அரசியல் அமைப்புச் சட்ட ஆவணம் நமது புனித நூலாகட்டும்; பாராளுமன்றமும் சட்டமன்றமும் நமது கோவில்களாகட்டும்; மனித உரிமைகளும் கடமைகளும் நமது வாழ்க்கை முறைகளாகட்டும்; அப்பொழுதுதான் பிரிவினை வாதத்திற்கும் அனைத்து வன்முறைகளுக்கும் முடிவு கட்ட முடியும்.