ஆண்டவரை மகிழ்விக்கும் முழு மனித விடுதலைப் பணிகள்!
கிறிஸ்து
பிறப்பின் 2025-ஆம் ஆண்டை யூபிலி ஆண்டாகக் கொண்டாடி, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற
கருப்பொருளில் சிந்தித்துப் பயணிக்க அன்போடு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 24 செவ்வாய் அன்று மாலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவைத் திறந்து நம்பிக்கையின் யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்த திருத்தந்தை, தொடர்ந்து டிசம்பர் 26 வியாழன் முதல் மறைச்சாட்சியாளரான தூய ஸ்தேவான் திருவிழாவன்று உரோமையிலுள்ள ரெபிபியாவின் சிறையில் இரண்டாவது புனிதக் கதவையும் திறந்து, திருப்பலி நிறைவேற்றி அங்கு வாழும் சிறைக்கைதிகளுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
நம்பிக்கையின்
யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்த திருத்தந்தை, தான் நிறைவேற்றிய கிறிஸ்து பிறப்புத் திருப்பலி மறையுரையில், “புனிதக் கதவு திறக்கப்பட்டதன் வழியாக நாம் புதியதொரு
யூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ளோம். நமது அன்னை பூமிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, அநியாயக் கடன்களால் ஏழை நாடுகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள் மற்றும் பழைய, புதிய வகையான அடிமைத்தனங்களால் சிறைபிடிக்கப்பட்ட அனைவருக்கும் நம்பிக்கையை அளித்து இந்த உலகையே மாற்றியமைப்பதற்கு நம்மை அழைக்கிறது இந்த யூபிலி ஆண்டு” என்றார்.
யூபிலி
ஆண்டு என்பது, இஸ்ரயேல் மக்கள் ஏழாம் ஆண்டு ஓய்வு ஆண்டு, 50-ஆம் ஆண்டு யூபிலி ஆண்டு என வகுத்து அனைவருக்கும்
ஓய்வு அளித்து, ஓய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தார்கள். யூபிலி என்ற எபிரேயச் சொல், ஆட்டின் கொம்பை ஊதி, ‘அருள்தரும் ஆண்டினை’ முழக்கம் இடுவதைக் குறிக்கிறது. ஆண்டவர் அருள்தரும் ஆண்டு என்பது புதுப்பிப்பு, ஓய்வு, கடன் தள்ளுபடி, மற்றும் அடிமைகளுக்கான சுதந்திரத்தின் ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது. இது சமூக நீதி மற்றும் ஆன்மிக மறுமலர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக அமைந்திருந்தது. சுற்றுப்புறச் சூழல் மதிக்கப்பட்டு வந்தது. யூபிலி ஆண்டு நிலத்துக்கு மட்டுமன்று, உழைப்பவர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஓய்வு தரும் ஆண்டு; கடன்பட்டோர் கடனிலிருந்து விடுதலை பெறும் ஆண்டு; அடிமைப்பட்டோர் விடுதலை பெற்றுச் சுதந்திரமாகச் செல்லும் ஆண்டு; இவ்வாறு சுழற்சி சமுதாயத்தை மீண்டும் உருவாக்கும் ஆண்டு (காண். லேவி 25). மக்களுக்கு விடுதலை, சொத்துகள் மீட்பு, ஓய்வு இவையே யூபிலி ஆண்டுக்கான முக்கியக் கூறுகள்.
இறைவாக்கினர்
எசாயா யூபிலியை ‘ஆண்டவர் அருள்தரும் ஆண்டு’
(எசா 61:2) என வெளிப்படுத்துகிறார். யூபிலி ஆண்டில்
தீட்டப்படும் திட்டங்கள் யாவும் நல்லவையே; சிந்திக்கப்படும் சிந்தனைகள் யாவும் மிக உயர்ந்த எண்ணங்களே; ஏட்டிலே எழுதப்படும் எழுத்துகள் யாவும் சிறந்த வரலாற்று ஆவணங்களே. ஆயினும், இவை யாவும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா?
யூபிலி என்றாலே முழு மனித விடுதலைப் பணிகள்தானே! ஆனால், கடைப்பிடிப்பதில் திரு அவையிலும் கிறித்தவச் சமூகத்திலும் எத்துணை நழுவல்கள்?
ஆண்டின்
பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு இயேசுவின் இரக்கமிகு விடுதலைப் பணிகள்தான் இயேசுவைப் பின்பற்றும் கிறித்தவர்களின் பணிகள் என்பதை வலியுறுத்துகின்றது.
நாசரேத்தின்
தொழுகைக்கூடத்தில் இயேசு அருள்தரும் ஆண்டினைத் திட்டவட்டமாக அறிவித்து, தம் பொதுப்பணியை விடுதலைப் பணியாகத் தொடங்கினார். அவர் வாசித்த எசாயாவின் சொற்கள், பல சமுதாயச் சிந்தனைகளை
எழுப்பக்கூடியவை. ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோருக்குப் பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டைப் பற்றிய அறிவிப்பு (எசா 61:1,2) போன்ற இயேசுவின் பணிவாழ்வின் கொள்கை விளக்க அறிக்கைக்கு விளக்கம் தேவையோ! ஏழைகள், சிறைப்பட்டோர், பார்வையற்றோர் இவர்கள்தாம் இயேசுவின் இலக்கு மக்கள். உடலளவிலும் மனத்தளவிலும் கட்டுண்டு கிடந்த மனித சமுதாயத்தை விடுவிக்கவே தாம் வந்ததாகக் கூறினார். இயேசுவின் வருகையிலே ‘அருள் தரும் ஆண்டு’
(லூக் 4:19) தொடங்கிவிட்டது. அன்றைய சமூகக் கட்டமைப்பு, பொருளாதார வரிச்சுமை, சமச்சீரற்ற சமயக்கொள்கை, இறுக்கமான வாழ்வியல் சூழல் என இத்தனை இடர்ப்பாடுகளுக்கு
மத்தியில் வாழ்ந்த மக்களுக்கு விடுதலை வழங்குவதே தம் பணி வாழ்வின் இலக்கணம் எனக் குறிப்பிட்டார் (மத் 11:28).
சமுதாய
நீதி பற்றிய
கனவுகள் என்றாவது, எப்போதாவது நனவாகுமா என்று ஏக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களுக்கு இன்றே, இப்போதே அவை நனவாகிவிட்டன, நிறைவேறிவிட்டன (லூக் 4:21) என்று இயேசு கூறிய வார்த்தைகள் நம்பிக்கையை வளர்த்த முதல் பாடங்கள். இயேசு ஒருவரே முழு மனித விடுதலையை அளிப்பவர் (யோவா 8:32). யூத யூபிலி மரபுக்குப் புதிய பொருளை வழங்கி, தம்மைக் கடவுளின் இரக்கத்தின் உருவமாக உருவாக்கினார்.
வெறும்
சமூக அடிமைத்தனத்திலிருந்து மட்டுமல்ல, எல்லாவிதமான நோய்களிலிருந்தும் இயேசு நம்மை மீட்கிறார். அவர் சாதாரணமாக நம்மை மீட்கவில்லை. சிலுவையில் மரணத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்வதன் வழியாக, இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம் (எபே1:7).
முதல்
வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பெறும் மீட்பை அல்லது விடுதலை வாழ்வைப் பற்றிப் பார்க்கிறோம். பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு எருசலேம் வந்த இஸ்ரயேல் மக்கள் இறைவாக்கினர் நெகேமியாவின் தலைமையில் மீண்டும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினர். நெகேமியா பாழடைந்து கிடந்த எருசலேம் நகரின் மதிலைப் பல எதிர்ப்புகளிடையே மனம் தளராது
கட்டியெழுப்பினார். மோசே, இஸ்ரயேல் மக்களை மீட்டு, திருச்சட்டம் வழங்கி, பாலைநிலத்தில் அவர்களை வழிநடத்தி வந்தது எதையும் அறியாதவர்களாக இருந்த எருசலேம் மக்களுக்கு, குருவும் மறைவல்லுநருமான எஸ்ரா மோசேயின் சட்டத்தை மீண்டும் நிலைப்படுத்துகிறார். மறந்துபோன மோசேயின் அடிப்படைப் போதனைகளை எஸ்ராவும் நெகேமியாவும் முன்னின்று பட்டியலிடுகின்றனர். எஸ்ரா விளக்கமாக வாசிக்க அவர்கள் அதன் பொருளைப் புரிந்துகொண்டு, ஆண்டவரை வாழ்த்தினர்; ‘ஆமென்! ஆமென்!’ என்று பதிலுரைத்தனர்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதனர் (நெகே 8:6). ஆண்டவருடைய சட்டங்கள் தண்டிக்க அல்ல; மாறாக, வாழ்வு கொடுக்கவே என்பதை எடுத்துரைக்கும் எஸ்ரா, ஆண்டவரின் புனித நாள் மகிழ்ச்சியின் நாள்; எனவே, வருந்த வேண்டாம் எனக் கூறுகிறார்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் ‘உடல் உருவகம்’ பற்றிப் பேசுகிறார். பவுலின் காலத்தில் ‘உடல்’ பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஓர் உருவகம். மெனேனியு என்ற உரோமை அரசவை உறுப்பினர் உடலை உருவகமாகப் பயன்படுத்தி, அரசாள்வோர் உயர்ந்தவர் என்றும் மற்றவர்கள் அவர்களுக்காக உழைப்பவர்கள் என்றும் கூறினார். மேலும், அரசாள்வோரை அவர் உடலின் மத்தியில் காணப்படும் வயிற்றுக்கு ஒப்பிட்டார்; மற்ற உறுப்புகள் எல்லாம் உழைக்கும் மக்களைக் குறிக்கும் என்றார். அதாவது அவர்கள் அனைவரும் வயிற்றுக்காகவே உழைப்பவர்கள் என்றார். ஆனால், பவுல் இந்த உருவகத்தில், ஒவ்வோர் உறுப்பும் முக்கியமானது என்றும் குறிப்பாக, சிறிய, மறைவான உறுப்புகள்கூட மதிப்புப் பெற்றவையாயிருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டுகிறார். எனவே, நாம் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தாமல், வேற்றுமை பாராமல், ஒரே மனத்தோடும் நோக்கோடும் ஒற்றுமையில் வாழும்போது கிறிஸ்துவை அனுபவிக்க முடியும். அப்போதுதான் நாம் கிறிஸ்துவின் உடலாகிறோம் என்ற உயரியக் கோட்பாட்டை முன்வைக்கிறார்.
இவ்வாறு
இன்றைய இறைவாக்குகள் அனைத்துமே எதிர்நோக்கு, அமைதி, மன்னிப்பு, சுதந்திரம் மற்றும் நீதியை வளர்ப்பதற்கும், சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் நமக்கு அழைப்பு விடுப்பதாக இருக்கிறது.
இந்த
யூபிலி ஆண்டில், விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாகக் கடவுள் நம்மீது பொழிகிறார். இந்த யூபிலி, நமக்கு எதிர்நோக்கின் காலமாக அமைந்துள்ளது. இது கடவுளைச் சந்திப்பதில் உள்ள மகிழ்ச்சியை மீட்டெடுக்கவும், நமது ஆன்மிக வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளவும் நம்மை அழைக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நற்செய்தியின், அன்பின் மற்றும் மன்னிப்பின் எதிர்நோக்கைப் பெறுவதற்கான அருமையானதொரு வழியை இந்த யூபிலி ஆண்டு நமக்குத் திறந்துள்ளது. ‘எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது’
(உரோ 5:5) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்கு ஏற்ப நம் ஒவ்வொருவருக்குமே ஏமாற்றம் தராத எதிர்நோக்கை யூபிலி ஆண்டு அளிக்கின்றது.
ஆகவே,
ஆண்டவரின் அருள்தரும் ஆண்டு நமக்கு உணர்த்தும் கடமைகள் என்ன? முதலில், யூபிலி ஆண்டில் குடும்பங்களில் அன்பு நிரப்பப்பட வேண்டும். சகோதர உறவுகளைப் புதுப்பிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பொறாமை, சண்டைகள், பிரித்தாளும் சூழ்ச்சி ஆகியவற்றிற்கு நம் குடும்பங்களில் ஒருபோதும் இடமளித்தல் கூடாது. உண்மையான யூபிலி என்பது நமது இதயத்தின் உள்ளே இருக்கின்றது.
இரண்டாவது,
மனித மாண்பும் மனித உரிமைகளும் மறுக்கப்பட்டு இன்னல்களை அனுபவிக்கும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையின் அடையாளங்களாய் நாம் பிரதிபலிக்க வேண்டும். முதியோர் இல்லம், மாற்றுத்திறனாளிகள் இல்லம், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லம், அகதிகள் முகாம், சிறைக்கைதிகள் இருக்கும் இடம் முதலியவற்றைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து உதவிகள் செய்ய முன்வருவோம். மூன்றாவது, மிக முக்கியமாக, நம் சமூகத்தில் சாதியத் தீமைகளுக்கும் நுகர்வு கலாச்சாரத்திற்கும், ஏழை எளிய மக்களைப் புறக்கணித்து வாழும் இயல்புக்கும், பணம்-பதவி மோகங்களுக்கும் நாம் அடிமையாகாமலும் பிறரை அடிமையாக்காமலும் இருப்போம். ஆண்டவரை மகிழ்விக்கும் முழு மனித விடுதலைப் பணிகளைச் சிரமேற்கொள்வோம்.