news-details
தலையங்கம்
வரலாறு படைத்திருக்கும் ‘நம் வாழ்வே’நீ வாழ்க! வளர்க!

உலகை மாற்றவல்ல உன்னத ஆயுதம்  எழுத்துஎன்றார் இங்கிலாந்து நாடக எழுத்தாளர் டாம் ஸ்டபோர்டு. ஒலி, உடல் மொழிக் கூறு, எழுத்து, ஓவியம், காட்சி என ஊடகம் பரிணாமப்பட்டாலும்எழுத்துஎன்பது எல்லாத் தளங்களிலும் தவிர்க்க முடியாத ஒன்று; அது தனிப்பெரும் ஆற்றல் கொண்டது.

ஊடகம் - சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி; கலாச்சாரப் பண்பாட்டை எடுத்துச் சொல்லும் கருவி; ஒரு சமூகத்தை அறிவுசார் சமூகமாக மாற்றும் புரட்சிமிகு ஆயுதம். ஊடகத்தின் இந்த முக்கூறுகளும் சமூகத்தையே மையம் கொண்டவை; சமூக மாற்றத்தையே இலக்காகக் கொண்டவை. இங்கு வரலாறு வாசிக்கப்படுகிறது; வாசிப்பு வாழ்வாக்கப்படுகிறது! ஆகவேதான், “இதழியல் துறை, வாசகர்களைத் தங்கள் வரலாற்றைச் சுவாசிக்கச் செய்கிறதுஎன்கிறார் அமெரிக்க இதழியலாளர் ஜான் ரிச்சர்ட் ஹர்சி.

அவ்வாறே, நேற்றைய நிகழ்வு இன்றைய செய்தியாகி, நாளைய தலைமுறைக்கு ஆவணமாகிறதுவரலாறாகப் பதிவாகிறது! அவ்வகையில், தனது 50 ஆண்டுகாலப் பதிவுகளைச் செய்தியாக்கி, எதிர்வரும் தலைமுறைக்கு ஆவணமாக்கும் வகையில், தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழானநம் வாழ்வுஇதழும் இன்று வரலாறு படைத்திருக்கிறது.

அகவை 50 என்பது ஓர் இதழுக்கு நீண்ட நெடிய பயணம்; அது ஒரு வரலாற்றுச் சாதனை. அதுவும் சமூக மதிப்பீடுகளை, கிறிஸ்துவின் இறையரசு விழுமியங்களைத் தழுவிக்கொண்டுஉண்மையை உரக்கச் சொல்லிசமரசமின்றிப் பயணிப்பது என்பது ஒரு சவால்; அதில்நம் வாழ்வுவெற்றி கண்டிருக்கிறது. ‘நம் வாழ்வுவார இதழ் இந்த அளவுகோலில் 50 ஆண்டுகாலம் பயணித்திருப்பதே மிகப்பெரிய சாதனை!

ஊடக உலகம் அனுப்புநர் - பெறுநர் என்ற தளத்தில் பயணித்தாலும், ஒரு செய்தி எங்கிருந்து வருகிறது அல்லது யாரிடமிருந்து வருகிறது என்பதைப் பொறுத்து அதனுடைய முக்கியத்துவம் கணிக்கப்படுகிறது; கவனிக்கப்படுகிறது.

சமநீதிச் சமத்துவம் கொண்ட சமூகச் சிந்தனைகளை, வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிந்தனையில் தளம் கண்ட அரசியல் சாசன வழி நின்று நம்மைச் சிந்திக்கத் தூண்டும் அரசியல் கட்டுரைகளை, அறநெறிச் சமூகம் பேணும் வாழ்வியல் நெறிமுறைகளைத் திருவிவிலிய, ஆன்மிக, உளவியல் தளங்களில் உரசிப் பார்த்து, கருத்துகளைச் சுமந்து வரும்நம் வாழ்வுபலராலும் இன்று வரவேற்கப்படுகிறது; பாராட்டப்படுகிறது. காரணம், இது பொதுச் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்கிறது; ஆக்கப்பூர்வமான மதிப்பீடுகள் கொண்ட செயல்பாடுகளை முன்வைக்கிறது; ‘நம்எனும் அடைமொழியே அதற்குச் சான்று. மானுட இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் அடி நாதம்வாழ்வு.’ இந்த வாழ்வு ஒரு மாபெரும் கொடை! அதைப் பொருளுள்ள வகையில் தனதாக்கிக்கொள்ள இச்சமூக உறுப்பினர்களுக்கு வழிகாட்டும் ஒரு புரட்சிக் குறியீடே (Revolutionary Icon) ‘நம் வாழ்வு!’

இத்தகையச் சிறப்புமிக்க கத்தோலிக்க வார இதழானநம் வாழ்வுஇன்று பொன்விழாக் கண்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. ‘சேர்ந்தே இருப்பது மதுரை மண்ணும் தமிழ் மனமும்எனப் பெருமை கொள்ளும் வகையில், முச்சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில் பிறப்பெடுத்தநம் வாழ்வுஎன்னும் வார இதழின் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பொன்விழா மதுரையில் நிகழ்ந்தது மட்டற்ற மகிழ்ச்சிக்குரியது. இந்நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த நல் உள்ளங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் நன்றி நிறைந்த உள்ளத்தோடு எண்ணிப் பார்க்கிறேன். சிறப்பாக இவ்விழாவின் நன்றித் திருப்பலிக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவரும், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயருமான மேதகு முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களுக்கும், பாராட்டு விழாவிற்குத் தலைமை வகித்த மதுரை மேனாள் பேராயர் மேதகு முனைவர் அந்தோணி பாப்புசாமி அவர்களுக்கும், விழாவிற்கு முன்னிலை வகித்த பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு முனைவர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தமிழ்நாடு கிறித்தவர்களின் முகமாய், முகவரியாய், இளையோரின் எழுச்சி நாயகனாய், கிறித்தவ நல்லிணக்கத்தின் அடையாளமாய் விளங்கும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. இனிகோ இருதயராஜ் அவர்களுக்குச் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பொன்விழா ஆண்டில் முதன்மை ஆசிரியராக இவ்விழாவை முன்னெடுத்துச் செல்ல என்னே யான் பெற்ற பெரும் பேறு! இவ்விதழோடு கொண்ட பற்றாலும், என்னோடு கொண்ட நட்பாலும் இவ்விழாவில் கலந்து கொண்ட நம் வாழ்வின் மேனாள் - இந்நாள் வெளியீட்டுச் சங்கத் தலைவர்கள், மேனாள் முதன்மை ஆசிரியர்கள், மேனாள் - இந்நாள் வெளியீட்டுச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், துறவற சகோதரர்கள், இவ்விழாவில் விருது பெற்ற எழுத்தாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், படைப்பாளிகள், கவிஞர்கள், வாசகர்கள், சந்தாதாரர்கள், வர்த்தக நிறுவனத்தார், பெருந்திரளாகக் கூடியிருந்த இறைமக்கள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சம்நிறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க விழா, சீரும் சிறப்புமாக நடைபெற ஆசியும் ஆலோசனையும் வழங்கிய மதுரை உயர் மறைமாவட்டத் திருத்தூது நிர்வாகி மேதகு ஆயர் அந்தோணிசாமி (பாளை மறைமாவட்ட ஆயர்) அவர்களுக்கும், பேராதரவும் பெரும் ஒத்துழைப்பும் நல்கிய மதுரை உயர் மறைமாவட்ட நொபிலி மறைப்பணி நிலைய இயக்குநர் அருள்பணி. பால் பிரிட்டோ அவர்களுக்கும், தூய பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் அருள்பணி. லூயிஸ் அவர்களுக்கும், ஞானஒளிவுபுரம் பங்கு-தூய வளனார் ஆலயப் பங்குத்தந்தை அருள்பணி. A. ஜோசப் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விழாவின் பல்வேறு ஏற்பாடுகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் தாராளமான பொருள் உதவி நல்கிய நன்கொடையாளர்கள், வர்த்தக நிறுவனத்தார் அனைவருக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, இவ்விழாவிற்குத் திட்டமிட்ட முதல் நாளிலிருந்து இந்நாள் வரையிலும் எமக்கு வழிகாட்டுதலும் ஆக்கமும் ஊக்கமும் தந்து, இவ்விழாவின் வெற்றிக்குப் பெரிதும் துணையிருந்தநம் வாழ்வுவெளியீட்டு சங்கத்தின் தலைவரும், சிவகங்கை மறைமாவட்ட ஆயருமான மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணைந்து இறைவனுக்கு நன்றிகூறும் இப்பொன்விழா தருணத்தில், வாருங்கள்... இணைந்து பயணிப்போம்! கூர்முனை புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்