news-details
சிறப்புக்கட்டுரை
இந்திய அரசமைப்பின் அடிப்படை!

ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டம் என்பது அந்த நாட்டு மக்களின் வரலாற்றையும், எதிர்காலத்தை நோக்கியக் குறிக்கோள்களை மையமாக வைத்தும் உருவாக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளையும் சட்டங்களையும் உள்ளடக்கியதாகும். நம்முடைய இந்திய அரசமைப்புச் சட்டமும், நம் நாட்டு மக்கள் எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் சட்டங்களையும் கொண்டுள்ளது என்ற சிறப்பைப் பெற்றது.

இத்தனை புகழ் மிகுந்த நம்முடைய அரசமைப்பை மாற்றுவதற்கான பல முயற்சிகளைத் தற்போதைய ஒன்றிய அரசு சில ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்கின்றது. ஆனால். சனநாயகத்தை வலியுறுத்தும் அனைவரும் இதை மிகவும் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏனெனில், தற்போது நம்மிடத்தில் உள்ள  அரசியலமைப்புச் சட்டம் அனைத்துச் சாராருக்கான உரிமைகளை உள்ளடக்கிய கூறுகளையும் தன்னகத்தில் கொண்டுள்ளதாகப் பெரும்பான்மை மக்கள் நம்புகின்றனர். அத்துடன், அரசமைப்பை முழுமையாக மாற்றுவது என்பது நாட்டில் எண்ணற்றக் குழப்பங்களை ஏற்படுத்தும் என்ற அச்சமும் நம்மைச் சூழ்கின்றது.

இதுவரை நம்முடைய அரசமைப்புச் சட்டம் 106 முறை திருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதனுடைய அடிப்படை அமைப்பானது மாற்றத்திற்குரியது அல்ல என்று 1973-இல் கெசவனாந்த பாரதிக்கும் கேரள அரசுக்கும் நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற நம் அரசமைப்பு உருவான விதத்தையும் அதன் சாராம்சங்களையும் அறிந்து கொள்வதே அதைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.

பிரித்தானிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து ஆகஸ்டு 15, 1947-இல் விடுதலை பெற்ற இந்தியாவிற்கென்று தனித்த அதிகாரம் பெற்ற அரசமைப்புச் சட்டம் என்றும் எதுவும் இல்லை. பிரித்தானிய ஆட்சிக் கலத்தில் பின்பற்றப்பட்ட சட்டங்களை அடிப்படையாக வைத்து, இந்திய அரசமைப்பை உருவாக்குவதற்காகத் தற்போதைய பாராளுமன்றம் போல், பல்வேறு இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 389 பிரதிநிதிகள் அடங்கிய அரசமைப்புச் சபையானது கூட்டப்பட்டது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகிய டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள், அரசமைப்பு அமைப்பு சபையின் தலைவராகவும், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்ட வரைவுக் குழுவின் தலைவராகவும் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர். அச்சமயத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியாவின் பிரதமராகவும், சர்தார் வல்லபாய் பட்டேல் துணைப் பிரதமராகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 26, 1949 - இல் அரசமைப்புக் குழுவால் இந்திய அரசமைப்புச் சட்டமானது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் ஜனவரி 26, 1950 -இல் நடைமுறைக்கு வந்தது. அந்நாளை நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு இந்தியத் தாய்த் திருநாடானது தன்னுடைய 76-வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது. இவ்வுலகிலேயே மிக நீளமான அரசமைப்பைக் கொண்ட நம் இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்  அனைத்துக் கூறுகளும் இந்திய அரசமைப்பின் முகவுரையில் மிகச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி என்.. பால்கிவாலா அவர்கள் முகவுரையை அரசமைப்புச் சட்டத்தின் அடையாள அட்டை என்று வர்ணிக்கின்றார். இந்திய அரசமைப்பின் சட்டத்தையும், அதை உருவாக்கியவர்களின் மனத்தையும் அதனுடைய முகவுரையின் வெளிச்சத்துடன் அணுகும் போது, அதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். எனவே, அரசமைப்பின் முகவுரையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

இந்திய மக்களாகிய நாம்என்ற சொல்லாடலுடன் தொடங்கும் முகவுரை மக்களாட்சி சார்ந்த இறையாண்மையைத் தெளிவாக ஏற்கின்றது. இந்திய அரசின் அதிகாரம் அனைத்தும் மக்களிடமிருந்து பிறக்கின்றது. இதை மையப்படுத்தும் விதமாக, “அரசமைப்பு அதன் வேர்களை, அதிகாரத்தை, இறையாண்மையை மக்களிடமிருந்து பெற வேண்டும்என்று டாக்டர் அம்பேத்கர் கூறுகின்றார். எனவே, நம்முடைய அரசமைப்புச் சட்டம் மக்களை முன்னிறுத்துகின்றது என்பதை இவ்வார்த்தைகள் தெளிவாக விளக்குகின்றன.

இதையடுத்து வரும் இறையாண்மை, சமநலச் சமுதாயம், சமயச்சார்பின்மை, மக்களாட்சி மற்றும் குடியரசு ஆகிய வார்த்தைகளில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து அம்சங்களும் அடக்கப்பட்டு விட்டன. இதில் சமநலச் சமுதாயம் மற்றும் சமயச்சார்பின்மை என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பொழுது முகவுரையில் இடம்பெறவில்லை. 1976-இல் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தில் இவ்விரு வார்த்தைகளும் முகவுரையில் சேர்க்கப்பட்டன.

இந்தியா இறையாண்மை (Sovereign) கொண்ட நாடு, இதன் ஆட்சி அதிகாரம் எந்த ஒரு வெளிநாட்டிடமிருந்தோ, அமைப்பிலிருந்தோ தரப்படுவதில்லை. விடுதலைக்கு முன்பு பிரிட்டானிய முடியின் பிரதிநிதியாக இந்தியாவில் வைஸ்ராய்கள் இருந்தார்கள். ஆனால், தற்போது இந்தியாவில் வைஸ்ராய் என்ற பதவியே கிடையாது. இந்த இடத்தை மக்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் நிரப்புகின்றார். இவர் இந்தியாவின் முதல் குடிமகனாக மக்களைப் பிரதிபலிக்கின்றார். நாட்டின் இத்தனை உயர் மதிப்பு கொண்ட குடியரசுத் தலைவரை அழைக்காமல், நம்முடைய தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் மே, 28 2024-இல் திறக்கப்பட்டது. இது இந்தியாவின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய செயல் என்றுதான் கருதப்பட வேண்டும்.

1976-இல் 42-வது திருத்தச் சட்டத்தின் மூலம் சமநலச் சமுதாயம் (Socialist) என்ற சொல் அரசமைப்பில் சேர்க்கப்படும் முன்பே, அரசின் இயக்கநெறிக் கோட்பாடுகள் வழியாக அரசமைப்பில் சமத்துவக் கொள்கை நிலவியது. அதுவரை மறைமுகமாக இருந்த கருத்துகள், தற்போது வெளிப்படையாகவும் சட்டப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் சரிநிகர் வாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு நம் அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டது. இந்தியா சனநாயக சமத்துவ முறையைப் பின்பற்றுகின்றது. இந்தியாவின் சமத்துவக் கொள்கை பொதுவுடைமை மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றைச் சம அளவீட்டில் கொண்ட கலவையான பொருளாதாரத்தைக் கொண்டது. இந்தியாவின் வளங்கள் மற்றும் இன்ன பிற முக்கியமான துறைகளை அரசு தன் கையில் வைத்திருக்கும், மற்ற துறைகள் தனியாரின் வசம் இருக்கும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அரசுத் துறை நிர்வாகத்தில் வளர்ச்சி இல்லை என்று கூறி, அரசின் முக்கியத் துறைகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. இந்திய மக்கள் போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுத்தும் இரயில்வே துறையிலும் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் நுழைந்துவிட்டன. இந்தத் துரிதமான தனியார்மயமாக்கல், இந்தியாவைச் சமவுடைமைத் தத்துவத்திலிருந்து நகர்த்தி முழுமையான முதலாளித்துவத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் அபாயம் உள்ளது.

இந்திய சனநாயகச் சமத்துவத்தின் முக்கிய நோக்கம் ஏழ்மை, அறியாமை, நோய் மற்றும் சமவாய்ப்புக்கு எதிராக எழும் சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். இதைத்தான் நம் அரசமைப்பின் ஆசான்கள் நாம் பயணிக்க வேண்டிய பாதையாகக் காட்டுகின்றார்கள்.

இந்தியா ஒரு சமயச்சார்பற்ற நாடு. இந்தக் கருத்தை தற்போது மத்தியில் ஆளும் அரசின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் முழுமையாக ஏற்க மறுக்கின்றனர். 2015-இல் மத்திய செய்தி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சமூகநலச் சமுதாயம் மற்றும் சமயச்சார்பின்மை ஆகிய வார்த்தைகள் தவிர்க்கப்பட்டன. சிறுபான்மை மக்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவின் அரசியல் ஆட்சிமுறை எந்த ஒரு மதத்தைச் சார்ந்ததாகவும் இருக்கக்கூடாது என்பதில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உறுதியாக இருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், அரசமைப்பில் சுதந்திரம் குறித்த அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் 25 முதல் 28-ஆம் கட்டுரைகளை நம்முடைய அரசமைப்பின் பிதாக்கள் இடம்பெறச் செய்தனர். இது இன்றைய பொழுதில் நம் நாட்டின் சமயச் சார்பின்மையைக் காக்கும் அரணாகத் திகழ்கின்றது.

இந்திய அரசின் முடிவுகள் எந்த ஒரு மதத்தைச் சார்ந்ததாகவும் இருக்கக்கூடாது. ஆனால், ஆளும் பா...வின் ஆட்சியில் இது நடைமுறையில் உள்ளதா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கின்றது.

மேலும், இந்தியா ஒரு சனநாயகக் குடியரசு நாடாகும். நம் நாடு பாராளுமன்ற சனநாயகத்தைப் பின்பற்றுகின்றது. சனநாயகம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நம்முன் வந்து நிற்பதுமக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சிஎன்ற ஆபிரகாம் லிங்கனின் வார்த்தைகள்தாம். பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால்தான் நம் நாட்டில் தேர்தலானது அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றது.

மத்தியில் பாராளுமன்றமும், மாநிலத்தில் சட்டமன்றமும் அரசின் கொள்கைகளை வடிவமைக்கின்றன. எனவே, இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம் நிலவுகின்றது. இருப்பினும், இன்றுவரை அது முழு வடிவை எட்டவில்லை. நம்முடைய கூட்டாட்சித் தத்துவம் அமெரிக்காவின் மாகாணக் கூட்டாட்சியைப் போலல்லாமல், சற்று சிக்கல் நிறைந்தது. இந்தக் கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாக வேரறுக்கவும், மக்களின் சிந்தனைகளை மாநிலத்தை விடுத்து மத்தியை நோக்கித் திருப்பவும்ஒரே நாடு! ஒரே தேர்தல்!’ என்ற திட்டத்தை நம்முடைய ஆளும் அரசு கொண்டு வந்துள்ளது. இது நமது நாட்டின் சனநாயகப் பண்புகளையும் அதன் இயல்புகளையும் மட்டுப்படுத்துகின்றது.

நம்முடைய அரசமைப்பு ஆசான்கள் சமத்துவம், நீதி பரவலாக்கல், தனிமனித உரிமைகள், வழிபாட்டு உரிமைகள் ஆகியவற்றை நிலைநிறுத்துவதை மையமாகக் கொண்டு நம்முடைய அரசமைப்பை வடிவமைத்தனர். ஆனால், நம்முடைய ஆளும் அரசு அந்த அரசியலமைப்பின் அம்சங்களுக்குத் தொடர்ந்து ஊறு விளைவிக்கிறது. இறுதியாக, நம் அரசமைப்பையே மாற்ற எத்தனித்து விட்டது. எனவே, நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது.

நம்முடைய வாக்குரிமை நமக்குத் தேர்தலின் போது மட்டும்தான்; ஆனால், நம்முடைய அரசமைப்பு அனுதினமும் நமது உரிமைகளைக் காத்திட நமக்குத் துணை நிற்கின்றது. அம்பேத்கரின் வார்த்தைகளின்படி அரசமைப்பைக் கற்று, அதைப் பிறருக்குக் கற்பித்து, அரசமைப்பையும், நம்முடைய உரிமைகளையும் காப்பதற்கு ஓரணியில் திரள்வோம்! வளமான சமதர்ம, சமயச் சார்பற்ற சனநாயகத்தைக் கட்டி எழுப்புவோம்!