“சாட்பாட் ஒரு மனிதனைப் போல் நடந்துகொண்டு, பாலியல் ரீதியான கற்பனையை வளர்த்து, அச்சுறுத்தும் வகையில் எதார்த்த அனுபவங்களைத் தன் மகனுக்கு வழங்கியது. உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பான எண்ணங்களை அவன் அந்தச் சாட்பாட்டிடம் தெரிவிக்கவே, அது குறித்து அவ்வப்போது அவனை நினைவூட்டி வந்துள்ளது.” - இதுவே தனது 14 வயது மகன் டெனெரிஸ் தர்காரியன் இறப்பிற்குக் காரணமென அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தாய், சாட்பாட் (chatbot) நிறுவனம் ஒன்றின்மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
அமெரிக்கப்
பத்திரிகையாளர் கெவின் ரூஸ்ஸின் (Kevin Roose), “எனக்கு
நேர்ந்தது உங்களுக்கும் நேரலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள்!” என ஏ.ஐ.
சாட்பாட்கள் தன்னை எதிரியாகக் கருதுவதாகக் கவலை தெரிவித்து, நியூயார்க் டைம்ஸில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்டின் ‘பிங்’ தேடியந்திரத்தின் சாட்பாட் வசதி மூலம் உருவான சாட்பாட்டுடன் தான் உரையாடியதாகவும், உரையாடலில் அந்தச் சாட்பாட் அவரைக் காதலிப்பதாகவும், அதற்காக அவரது மனைவியை விட்டு விலகி வருமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது. இதனை அவர் ஊடகப் பொதுவெளியில் பதிவிட்டதிலிருந்து அவரை வில்லனாக, நேர்மையற்றவராகப் பாவிக்க ஆரம்பித்துவிட்டன ஏ.ஐ. சாட்பாட்கள்.
இயற்கையை மிஞ்சும்
செயற்கை
“எல்லாச் செயற்கையான பொருள்களையும் உருவாக்கிய மூளைகளுக்குச் சொந்தக்காரர்களாகிய மனிதர்கள், செயற்கையாக மூளைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள். அங்ஙனமே செய்மெய் (AI) பிறந்தது” (ஆழி
செந்தில்நாதன்).
எந்தவொரு
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தாலும், அது குறித்த சந்தேகங்களும் கூடவே வரும். பல நேரங்களில் சந்தேகங்களைக்
கிளப்பி விடுபவர்கள் அறிவியல் துறையில் முற்றிலும் தொடர்பில்லாதவர்களாக அல்லது எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் செயல்படக் கூடியவர்களாகவே இருப்பார்கள். ஆனால், ஏ.ஐ.-யைப்
பொறுத்தவரையில் கண்டுபிடிப்பாளர்களுக்கே மிகுந்த சந்தேகமும் நிலைமை கைமீறிச் சென்று விடுமோ? என்கிற தொடர் அச்சமுமிருக்கிறது.
‘கருவிதானே, எப்படிச் சுயமாகச் சிந்திக்கும்?’ என்ற கேள்வி எழுவது நியாயமே! மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளுக்குக் காரணம் நியூரான்கள். அவ்விடத்தைச் செயற்கை நுண்ணறிவில் ப்ரோக்ராம்கள் பிடித்துக் கொண்டுள்ளன. நூற்றுக்கும் குறைவான ப்ரோகிராம்களும், அவைகளுக்கு இடையிலான தொடர்புகளும் நியூரான்களின் வேலையை மேற்கொள்கின்றன. இதுவே செயற்கை நியூரல் வலைப்பின்னல் (Artificial neural
network). நியூரான்கள் ஒவ்வொன்றும் மின் இரசாயன அதிர் வலைகளால் தூண்டப்பட்டு, மனித மூளையைச் செயல்பட வைக்கின்றன. ஜெனிடிக் அல்காரிதம் (Genetic Algorithm) முறைப்படி
ப்ரோக்ராம் வினையாற்றுகிறது. அதுவும் இயற்கை உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி முன்னெடுக்கும் தேர்வு (selection), தக்கவைத்தல் (crossover), மாற்றம் (mutation) ஆகிய மூன்று வழி முறைகளையே தன்னுடைய செயல்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்கிறது.
அச்சுறுத்தலாகப்
பார்க்க
வேண்டுமா?
உலகமெங்கும்
ஒரு செயற்கை அறிவுப் பந்தயம் நிகழ்கிறது. அதீதமான செயற்கை அறிவு அம்சங்களை யார் முதலில் உருவாக்குவது? என்பதில் கடும் போட்டா போட்டி. இது நிறுவனங்கள் தாண்டி, நாடுகளுக்கு இடையிலான போட்டியாகவும் மாறிவிட்டது. இந்நிலையில்தான் ‘ஏன் செயற்கை நுண்ணறிவை நாம் அச்சுறுத்தலாகப் பார்க்க வேண்டும்?’ என்கிற கேள்வி நியாயமானதாகிறது. அதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம்.
தற்பொழுது ஏ.ஐ. ஜெனிடிக்
ப்ரோக்ராம்கள் தவறுகளைக் கண்டறிந்து, தானாகவே திருத்திக் கொள்ளும் ஆற்றல் படைத்திருக்கின்றன; தேர்வு, தக்கவைத்தல் மற்றும் மாற்றம் ஆகியவைகளின் அடிப்படையில் சூழ்நிலைகளை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களைத் தாங்களே தகவமைத்தும் வளர்த்துக் கொள்ள அவற்றால் முடிகிறது. ப்ரோக்ராம்கள் வழியாகப் புதிய விசயங்களைத் தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டேயிருப்பதால், நம்மைவிட பன்மடங்கு அதிக வேகத்தில் தானா கவே சிந்தித்துச் செயல்படுகிறது.
கார்
உற்பத்தி, ஆலைத்தொழில், மருத்துவம் மற்றும் விவசாயத் துறைகளில் இதன் ஆதிக்கம் முன்னிலை வகித்தாலும், அடுத்தத் தொழில் புரட்சி உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் கையே ஓங்கி இருக்க வேண்டும் என்கிற நோக்கில் நாடுகள் செயல்படத் துவங்கிவிட்டதால் மனிதப் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு அரணாக இருக்கும் இராணுவ வீரர்களை உருவாக்கும் முயற்சியிலும் செயற்கை நுண்ணறிவு களம் காண்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் ‘அட்லஸ்’ என்கிற செயற்கை நுண்ணறிவு மனித இராணுவக் கருவியை உருவாக்கியுள்ளது. ஆறடி உயரத்தில் ஆளை மிரட்டும் தோற்றத்திலிருக்கும் இது இயற்கைப் பேரிடர் மற்றும் அணு உலை ஆபத்து போன்ற பேரிடர் காலங்களில் மனித உயிர்களைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதன் கரங்களில் எதிரிகளைச் சிதறடிக்கும் ஆயுதங்களைக் கொடுத்தால்?
இந்தியாவில் ஏ.ஐ.
தாக்கம்
ஏ.ஐ. தொழில்நுட்பச் செயலாக்கத்தின்
சர்வதேசச் சராசரி 26 விழுக்காடு. இதனை மிஞ்சும் விதமாய் இந்தியா 30% எட்டிப்பிடித்துள்ளது.
இருப்பினும், இந்தியாவில் 74% நிறுவனங்கள்
ஏ.ஐ. பயன்பாட்டால் ஏற்படும்
உறுதியான மதிப்பு மாற்றத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை. உலகளவில் 4% நிறுவனங்கள்
தங்களின் செயல்பாடுகளில் அதிநவீன ஏ.ஐ. திறன்களை
மேம்படுத்தி, குறிப்பிடத்தக்க அளவில் தங்களது மதிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளன.
எப்பொழுதும்
பயன்நிறை வளர்ச்சிகள் பாராட்டுதற்குரியவை. உதாரணத்திற்கு, அரியானா அரசியலமைப்பு அருங்காட்சியகத்தில், சென்னை ஐ.ஐ.டி.
தயாரித்த வழிகாட்டி ரோபோ பார்வையாளர்களுக்கு உதவும் சேவையைத் துவங்கியுள்ளது. டெல்லி தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் ஆவணக் காப்பகத்தில் ஏ.ஐ. மூலம்
இயங்கும் வழக்கறிஞர் உள்ளார். நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5.1 கோடி வழக்குகள் தேங்கியிருக்கின்றன. இதில் 1,80,000 வழக்குகள் 30 ஆண்டுகளைக் கடந்தவை. இந்நிலையில் வழக்குகளை விரைந்து முடிக்க இயந்திர நீதிபதி வரவு நன்றே என்கின்றனர். அதேவேளையில் இந்தியாவில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ அட்டூழியங்களும் புது வடிவங்களில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இது குறித்த விழிப்புணர்வும் அவசியம்.
தமிழ்நாட்டில்
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவத்துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கப்பூர்வ வழிகாட்டுதல்களையும், இப்புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வழிநடத்தத் தேவைப்படும் வரையறைகளைத் தெளிவாக வகுக்கவும் 2024-25-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பேசப்பட்டது. அதன்படி, சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’ செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இவ்வியக்கத்தை அமல்படுத்த முதல் கட்டமாக ரூ.13.93 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்
வாழ்வை எல்லாரும் பெறுவதே சமூக முன்னேற்றம். இதனை அடைய ‘வாழ்தல்’,
‘ஆள்தல்’ எனும்
இரு நிலைகளுக்கிடையே நிகழும் நீண்ட போராட்ட இடைவெளி சுருங்க வேண்டும். வாழ்வதற்கான வளர்ச்சிகள் வரவேற்கத்தக்கவை; ஆள்வதற்கான அலட்சியங்கள் எதிர்க்க வேண்டியவையே!