news-details
ஞாயிறு மறையுரை
சனவரி 12, 2025, ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) எசாயா 40:1-5,9-11; தீத்து 2:11-14; 3:4-7; லூக்கா 3:15-16, 21-22

அவரோடு அவராக... அவரில் அவர் வழியாக..!

மனித வரலாற்றில் ஆழமான எண்ணங்களையும் காயங்களையும் பதித்துச் சென்ற நிகழ்வு இரண்டாம் உலகப் போர். மனித குலத்தையே வேதனையிலும் வெட்கத்திலும் தலைகுனிய வைக்கும் வரலாற்றுப் பிழை இந்தப் போர். இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்டநாத்சிவதைமுகாம்கள் (நச்சு வாயுச் சூளை), மனித வரலாற்றில் ஆழமான காயங்களை விட்டுச் சென்றுள்ளன. பலர் நச்சு வாயுச் சூளையில் உயிரிழந்தனர். இன்னும் பலர் அந்த வாயுச் சூளைகளுக்குச் செல்வதற்கு முன்னரே உள்ளத்தால் இறந்து, நடைப்பிணங்களாக வலம் வந்தனர்.

இந்த வதைமுகாமிலிருந்து உயிரோடு வெளியேறியவர்களில் பலர் உடலாலும் உள்ளத்தாலும் நொறுங்கிப் போய், தங்கள் மீதி நாள்களைக் கழித்தனர். மிகச்சிலரே அந்த வதைமுகாம்களிலிருந்து வெளியேறி உள்ளத்தளவில் போதுமான நலத்துடன் நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வைத் தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர் விக்டர் பிராங்கல் (Viktor E. Frankl) என்ற ஆஸ்திரிய நாட்டு மேதை.

புகழ்பெற்ற நரம்பியல் நிபுணராகவும், மனநல மருத்துவராகவும் வாழ்ந்த விக்டர் பிராங்கல், தன் வதைமுகாம் அனுபவங்களையும், அவற்றிலிருந்து தான் வெற்றிகரமாக வெளிவர தனக்கு உதவியாக இருந்த உண்மைகளையும் தொகுத்து, ‘Man\'s Search for Meaningஅதாவது, ‘அர்த்தத்திற்காக மனிதனின் தேடல்என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார். இந்தக் கொடிய சூழல்களிலிருந்து, தான் உயிரோடும் ஓரளவு உள்ள நலத்தோடும் வெளியேறியதற்கு இரு காரணங்களை அவர் கூறுகிறார். ஒன்று, தன் மனைவி தன்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார் என்ற உணர்வு; மற்றொன்று, தான் எழுதி முடித்திருந்த ஒரு புதிய நூலின் கைப்பிரதியைத் தன் கண்முன்னேநாத்சிபடையினர் அழித்து விட்டதால், அந்நூலை மீண்டும் எப்படியாவது எழுதி முடிக்க வேண்டும் என்று தனக்குள் எழுந்த ஆவல்.

நம் வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை நாம் எதிர்கொண்டாலும், இரண்டு காரணிகள் நம்மை இயங்க வைக்கும் ஆற்றல் கொண்டவை. 1) தன்மீது அன்புகூரும் மனிதர்கள் உள்ளனர் என்ற உள்ளுணர்வு. 2) என்னுடைய கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு. இந்த இரண்டு நோக்கங்களும்தான் பலரையும் வாழ வைக்கின்றன. அன்புகூரும் மனிதர்கள் உள்ளனர் என்ற உள்ளுணர்வுதான் இவ்வுலகையும் இயங்க வைக்கின்றது.

ஆண்டின் பொதுக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழா நமக்கு உணர்த்தும் இரண்டு செய்திகள்: 1) நம்மில் ஒருவராக நம்மோடு வந்துள்ள இயேசுவின் அன்பை உணர்வது, 2) அவரில் அவர் வழியாக இணைந்து நற்செயல்கள் புரிவது.

இந்தச் சமூகத்தில் மாற்றங்களை விரும்பிச் செயல்படும் எவரையும் அவ்வளவு எளிதாக இச்சமூகம் அங்கீகரிப்பதில்லை. சமூக மாற்றத்திற்கான நற்செயல்களைச் செய்யும்போது, பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். சிலர் தங்கள் நற்பெயரை இழக்க நேரிடலாம். சிலர் பெரிய விலையாகத் தங்கள் உயிரையே கொடுக்க நேரிடலாம். இதுபோன்ற சவால்கள், எதிர்ப்புகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும், சமூக மாற்றத்திற்காக அர்ப்பணத்துடன் ஈடுபடும் உன்னதமான மனிதர்கள் இன்னமும் நம் மத்தியில் வாழத்தான் செய்கிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இயேசுவின் திருமுழுக்கு அன்றைய பாலஸ்தீன சமூகத்திற்கு இயேசு கொடுத்த சமூகப் பொறுப்புணர்வு மிக்கப் பதிலிறுப்பு எனலாம். பாலஸ்தீன சமூகம் ஏற்றத்தாழ்வுகளும் ஏழ்மைப் பிணிகளும் சமூகப் புறக்கணிப்பும் பாலின வேறுபாடுகளும் நிறைந்த சமூகம். மனிதரைக் கடவுளின் சாயலாகப் பாராமல், சட்டங்களுக்குள் முடக்கிவைத்து, உயர்வு-தாழ்வு பாராட்டிய சமூகம். யாரேனும் மாற்றத்திற்காகக் குரல் கொடுத்தால்சமயத் துரோகிஎனக் குற்றம் சாட்டிய சமூகம். ஏழை - பணக்காரன், ஆள்பவன் - அடிமை, உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்று பிளவுபட்ட, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமுதாயத்தைப் பார்த்துச் சோர்ந்து போன யூத மக்கள், எப்போது இந்த வேறுபாடுகள் மறையும் என்று காத்துக் கிடந்தனர். முப்பது ஆண்டுகள் நாசரேத்தூரில் வாழ்ந்த இயேசு, தம்மைச் சுற்றி நடந்த பல அநீதிகளைக் காண்கிறார். அதற்கு விடைதேடும் ஓர் இளைஞராக, முதலில் மக்களோடு மக்களாகத் தம்மைக் கரைத்துக்கொள்கிறார்; உறுதியுடனும் துணிவுடனும் திருமுழுக்குப் பெற யோவானிடம் வருகிறார்.

முதலில், மக்களோடு மக்களாகக் கலந்து இயேசு திருமுழுக்குப் பெற வருகிறார் (லூக் 3:21). மக்களை மீட்க வந்தவர் மக்களோடு மக்களாக வருவதா? இயேசு தன்னிடம் வருவதைக் கண்டு திகைத்து நிற்கிறார் திருமுழுக்கு யோவான். “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை (3:16) என்று மக்களிடம் அடிக்கடிக் கூறி வந்தவர் யோவான். “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்என யோவான் தன் நிலை உணர்ந்து கூறினாலும், தம்மைத் தாழ்த்தி திருமுழுக்குப் பெற முன்வருகிறார் இயேசு. யோவானைவிட பெரியவர் என்ற எண்ணம் எதுவுமின்றி, பாவிகளோடு பாவம் செய்யாத தம்மையும் இணைத்துக்கொள்கிறார். “பாவிகளோடு இருக்க விரும்பி, அவர்களோடு வரிசையில் நின்ற இயேசுவின் செயல், மேலிருந்து கொண்டே நம்மை மீட்க இயேசு விரும்பவில்லை; மாறாக, பாவங்களைத் தம்மீது சுமந்துகொண்டு, நம்மை மீட்க கீழிறங்கி வந்தவர் அவர் என்பதைக் காண்பிக்கின்றது (மூவேளைச் செப உரை, 10.01.2021). இத்தகைய எளிய மக்களோடு மக்களாக இயேசு திருமுழுக்குப் பெறச் செல்வது அவர்கள்பால் அவர் கொண்டிருந்த அன்பையும் அவர்கள் வாழ்வு மாற்றத்தில் அவர் காட்டிய அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.

இரண்டாவதாக, இயேசுவின் திருமுழுக்கு அவரது சமூகப் பொறுப்புணர்வை நமக்கு உணர்த்துகிறது. திருமுழுக்கு இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது. இறையாட்சிப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு அவரது திருமுழுக்கு நடந்தேறுகிறது.

பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் (லூக் 3:3) என்றுதான் திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளில் பறைசாற்றி வந்தார். மீட்பர் வரும்போது தாங்கள் புனித நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு வெளிச்சடங்கின் மூலம் மனம் மாறிப் புதிய வாழ்வு வாழ விரும்பியவர்களுக்கு யோவான் திருமுழுக்கு அளித்து வந்தார். எனவே, மனமாற்றத்திற்கான திருமுழுக்கு இயேசுவுக்குத் தேவை இல்லை. பின்பு ஏன் அவர் திருமுழுக்குப் பெறவேண்டும்? பாவிகளாகிய நம்முடன் தம்மை ஒன்றிணைத்துக்கொண்டு கடவுளைத் தேடும் நமது மீட்பின் பாதையில் உடன் இணைகிறார். மேலும், சமூகத்தில் நிலவி வரும் அநீதி அமைப்புகளின் தொடர் செயல்பாடுகளுக்குத் தாமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகத் திருமுழுக்குப் பெறுகிறார். ஆக, சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற உழைப்பதும், நமக்கான சமூகப் பொறுப்புகளை ஏற்பதும் தேவையானது என்பதையே இயேசுவின் திருமுழுக்கு நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில் நாம் நமது திருமுழுக்கு நாளையும் சற்று எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறோம். கடவுளின் குழந்தைகளாக, திரு அவையின் உறுப்பினராக நாம் பிறந்த நாள் நம் திருமுழுக்கு நாள். “என் அன்பு மகனே, நீ வானதூதரின் நண்பன், இறைவனின் குழந்தை, இயேசுவின் சகோதரன், தூய ஆவியின் ஆலயம்என்று திருமுழுக்குப் பெற்ற குழந்தையைப் பார்த்துக் கூறுவார் புனித பிரான்சிஸ் சலேசியார். “என் திருமுழுக்கு நாளே என் வாழ்வின் மிக முக்கியமான நாள் எனக் கருதுகிறேன்என்றார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால்.

நாம் பெற்றவைகளுள் உயர்ந்த கொடை நம் திரு முழுக்கு. திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளுக்குச் சொந்தமானவர்களாகிறோம் மற்றும் மீட்பின் மகிழ்ச்சியைக் கொண்டுள்ளோம்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (‘டுவிட்டர்செய்தி, 14.01.2019).

நிறைவாக, திருமுழுக்கை நாம் பெறுவதால் பலவித மாற்றங்களை நமக்குள் பெறுகின்றோம். நாம் பிறப்பு நிலைப் பாவத்திலிருந்து விடுதலை பெற்று கடவுளுக்குள் புதுப்பிறப்பு அடைகின்றோம் (2கொரி 5:17). கிறிஸ்துவோடு இணைந்து இருக்கும்படி திரு முழுக்குப் பெற்ற நாம், கிறிஸ்துவை ஆடையாக அணிந்து கொள்கின்றோம் (கலா 3:27). கடவுளின் ஆவியால் தூய்மையாக்கப்பட்டு அவருக்கு ஏற்புடையவராகின்றோம் (1கொரி 6:11). வேற்றுமை களைந்து ஒற்றுமை தழைக்க நாம் அனைவரும் திருமுழுக்குப் பெற்றுள்ளோம் (1கொரி 1:13). கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமைப்பேற்றால் அவரைஅப்பா தந்தையேஎன அழைக்கின்றோம். அவருடைய பங்காளிகளாகவும், அவருடைய துன்பங்களிலும் பங்கு பெறுகின்றோம் (உரோ 8:16-17). இறைவன் உறையும் ஆலயமாகத் திகழ்கின்றோம் (1கொரி 6:19). உலகமெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புப் பெறுகின்றோம் (மாற் 16:15).  எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினராகவும், அரச குருக்களின் திருகூட்டத்தினராகவும், தூய மக்களினத்தினராகவும், அவரது உரிமைச் சொத்தான மக்களாகவும் திகழ்கின்றோம் (1பேது 2:9).

எனவே, கடவுளின் பிள்ளைகளாகிய நாம் எல்லாரும் அவர் அன்பில் வாழ்வோம். இறைத்திட்டத்தை மகனுக்குரிய கீழ்ப்படிதலுடனும் எளிமையுடனும் தாழ்ச்சியுடனும் நிறைவேற்றிக் காட்டிய இயேசுவைப் போன்று சமூக மாற்றத்திற்காக உழைக்க முன் வருவோம்.