பொங்கல் விடுமுறையாதலால் பாவையின் கணவர், குழந்தைகள் வேந்தன்-அஞ்சனம், கணவரின் தங்கை பியூலா அனைவரும் கிளம்பி சிலம்புச் செல்வியின் வீட்டுக்குச் சென்றனர்.
போகும்
வழி நெடுகிலும் கரும்பைக் கட்டு கட்டாகக் கட்டி நிறுத்திக் குவித்து வைத்திருந்தனர். புது மஞ்சளும் இஞ்சியும் பெருமளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தன.
வீதியெல்லாம்
என்னவோ போல் வித்தியாசமாக இருக்கிறதை “என்ன அது... என்ன அது?” என வேந்தன் கேட்டுக்கொண்டே
வந்தான்.
“சரி, எல்லாவற்றையும் கேட்டாயே... வீடுகளின் நிலைப்படிகளில், வாசலில் என்று பூளைப் பூவையும், வேப்பிலையையும் சேர்த்துக் கட்டிச் செருகி வைத்திருக்கிறார்களே….. அதை
நீ கவனிக்கவில்லையாக்கும்?” என்று கேட்டாள் பாவை.
“அது என்னங்க அம்மா பூளைப்பூ?”
“வெள்ளையாக, சிறிதாக மூக்குத்தி அளவில் காணப்படுகிறதல்லவா! அதுதான் பூளைப்பூ. பொங்கல் சமயத்தில் மட்டும்தான் இந்தப் பூ விளையும். கோவையில்,
பூளைப்பூ அதிகமாக விளைந்த பகுதியை ‘பூளைமேடு’
என்றனர். அப்பெயர் மருவி இப்பொழுது பொருள் தெரியாமல் ‘பீளமேடு’ என்று கூறுகிறார்கள். பூளைப்பூ அழகு; வேப்பிலை கிருமிநாசினி. எனவே, இரண்டையும் சேர்த்து வைப்பது நமது தொன்றுதொட்ட மரபாக இருந்து வருகிறது. இது மட்டுமில்லை பாவை, பூளைப் பூவிற்கு மருத்துவக் குணம் மிகுதி. ஈரத்தை உறியும் ஆற்றல் பூளைப் பூவிற்கு உண்டு. வேப்பிலையும் சூடு தைக்குளிர் தரையெல்லாம் நடுங்கும் என்பார்கள். சுற்றுப்புறச் சூழலில் உள்ள பனியின் அளவைச் சமச்சீராக்கித் தருவதற்காக இறைவன் நமக்குக் கொடுத்த கொடையே பூளைப்பூ.”
பேராசிரியரான
தன் அண்ணா சொல்வதை மருத்துவரான பியூலா கேட்டு வியந்த வண்ணம் இருந்தார்.
‘பொங்கலோ பொங்கல்’
- இப்படி மூன்று முறை அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் முழங்கினர். சிலம்புச் செல்வியின் வீட்டிற்குள் பாவை குடும்பத்தினர் நுழைவதற்கும், பொங்கல் முழக்கம் எழுவதற்கும் சரியாக இருந்தது. முழக்கத்தைத் தொடர்ந்து பெண்களும் வயதானவர்களும் சேர்ந்து நாவால் குலவை இட்டனர்.
“என்ன குழந்தைகளா, எல்லாம் உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா! முதலில் பொங்கல் சாப்பிடுங்கள். பிறகு பொங்கல் பண்டிகை பற்றி என்ன விவரம் வேண்டும், கேளுங்கள் நான் சொல்கிறேன்” - சிலம்புச்
செல்வியின் மாமனார் சமயச் சொற்பொழிவாளர் அன்புடன் கூறினார்.
முந்திரி,
கல்கண்டு, நெய் என்று மணத்த பொங்கல் பிள்ளைகளை மயக்கியது. விருப்பமாகக் குழந்தைகள் உண்டனர்.
“குழந்தைகளா, வெறும் பொங்கல் மட்டும் சாப்பிட்டால் எப்படி? அதிரசம், முறுக்கு, பணியாரம் எனப் பலகாரங்களும் இருக்கின்றனவே. அவைகளையும் ஒரு கை பாருங்கள்” என்றார் பெரியவர்.
“தாத்தா, பொங்கலுக்கு முதல் நாள் தீ எதுக்கு வைக்கிறாங்க?”
இது அஞ்சனத்தின் ஐயம்.
“ஒரு வருடமாக வீட்டில் சேர்ந்திருக்கும் பழைய குப்பைகளை எல்லாம் வெளியே எடுத்துப் போட்டுத் தூய்மை செய்வார்கள். வெளியே எறிந்துவிட்டால் சுற்றுப்புறம் மாசுபடும். ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’
என்பார்கள். அந்த முறையில் பழைய குப்பைகளை நெருப்பு வைத்துச் சாம்பலாக்கிப் போக்கி விடுவர். பழைய குப்பைகளைப் போக்கும் நிகழ்வை ஒரு பண்டிகையாகவே நம் முன்னோர் முறைப்படுத்திக் கடைப் பிடித்தனர். அதைத்தான் போகிப் பண்டிகை என்கின்றோம்.”
“தைப்பொங்கலுக்கு ஏன் தாத்தா யாரும் தலைக்குக் குளிப்பதில்லை? தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறார்கள் இல்லையா?”
“தீபாவளி சமயம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு ஏற்ற வகையில் வெப்பம் இருக்கும். பொங்கலின் பொழுது கடும் பனிக்காலமாக இருக்கிறது இல்லையா! அதனால் எண்ணெய் தேய்த்துத் தலைக்கு நீராடல் என்பது முக்கியத்துவம் பெறாது. ஆனால், தீபாவளி நமது பண்டிகை இல்லை. வட நாட்டாருடையது.”
“அப்படியானால் பொங்கல்தான் தமிழர் பண்டிகையா தாத்தா?” அஞ்சனா வினவினாள்.
“ஆமாம். உழவுத் தொழில்தான் நம் தமிழர்களின் முக்கியத் தொழில். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.”
“தை பிறந்தால் வழி
பிறக்கும்’-ன்னு
ஏன் சொல்றாங்க தாத்தா?” இது
வேந்தன்.
“தை மாதம் நன்மைகள்
பெருகுமாம். நல்லது செய்யக்கூடியதும் ஆதாரமாக இருக்கக்கூடியவற்றையெல்லாம்
பெண்ணாகக் கூறுவது மரபு. மலை, கடல், ஆறு இவற்றைப் பெண்ணாகத்தான் நாம் பார்க்கிறோம். அதைப்போல் ஓராண்டு காலம் உழவர்கள் உழைத்த உழைப்பெல்லாம் தை மாதத்தில் நெல்மணிகளாகப்
பெருக்கெடுக்கின்றன. அந்த நெல் சோறாகப் பொங்கிப் பசியைத் தீர்க்கின்றது. இதேமாதிரி நன்மைகளின் ஊற்றாக இருக்கும் தைப்பொங்கலைத் தமிழர்களின் புது வருடப் பிறப்பாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது மிகப் பொருத்தம்தானே”
“அது சரி தாத்தா. வீட்டுக்கு வெள்ளை அடிச்சிருக்கீங்க சரி, மாட்டுக்கு எதுக்கு வண்ணம் பூசியிருக்கீங்க?” - இது அஞ்சனத்தின் வினா.
“சாம்பார் இல்லாத கல்யாணமா? எருதுகள் இல்லாமல் உழவுத் தொழிலா? உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை மதிக்கும் வகையில் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவதுதான் மாட்டுப் பொங்கல். அன்றைக்கு மாடுகளுக்கு வேலைகள் கொடுக்கமாட்டார்கள். முதல் நாளிலேயே மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவர். கொம்பின் நுனியில் மணிகளைக் கட்டி அழகு செய்வர். மாட்டுப் பொங்கலன்று சங்க காலத்தில் இருந்தே துள்ளி வரும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு நடந்து வருகிறது. அதற்கு ‘ஏறு தழுவுதல்’
என்று முல்லைக்கலி குறிப்பிடுகிறது.”
“அது சரி. ‘காணும் பொங்கல்’ன்னா என்ன தாத்தா?”
“அழகு அஞ்சனா! சொல்றேன்
கேளு. மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் ஒருவர் ஒருவரைச் சென்று கண்டு மகிழ்வதும் பெரியவர்களைக்
கண்டு ஆசிர்வாதம் வாங்கிக்கொள்வதும்தான் காணும் பொங்கல்.”
“தாத்தா... பொங்கல் விழாவில் இத்தனை செய்திகள், தமிழர் மரபு, வாழ்வியல் இருக்கின்றனவா! ஆச்சரியமாக இருக்கிறதே!”
“ஆமாம். தமிழர் வாழ்வியல் இது... மறந்துவிடாதீர்கள். மனத்தில் கொள்ளுங்கள்.”