news-details
ஆன்மிகம்
மரியா இறைவனின் அன்னை

நான், குவாடலூப் என்ற தீவில் (1990-1995) ஐந்து ஆண்டுகள் பணி செய்தேன். மரியாவைப் பற்றி மறையுரையாற்றிய போது அவரைகடவுளின் தாய்என்று கூறினேன். திருப்பலி முடிந்ததும் பேராசிரியர் ஒருவர் வந்து என்னிடம், “மரியா இயேசுவின் தாய்என்பது பொருத்தமானதே. ஆனால், ‘கடவுளின் தாய்என்று ஒத்துக்கொள்ள எனது மனம் மறுக்கிறதுஎன்றார். “மரியா கடவுளின் படைப்பு. அவர் ஒரு பெண். எப்படி உருவம் இல்லாத முழு முதற் தலைவன், தமது படைப்புப் பொருளாகிய மரியா ஈன்றெடுத்த மகனாகப் பிறக்க முடியும்? இது அறிவுக்கு ஒவ்வாததுஎன்று கூறினார். எனக்கு அவரது எண்ணங்கள், சிந்தனைகள் ஏற்றுக்கொள்ளும்படி பதில் அளிக்க இயலவில்லை. திருவிவிலிய விளக்கம், இறையியல் விளக்கம், கடவுளின் வெளிப்பாடு என்பதெல்லாம் அவருக்கு விநோதமாக இருந்தது. எனினும், “கிறித்தவம் ஒன்றுதான் கடவுளுக்கு ஒரு தாய் தேவைப்படுகிறாள் என்று கூறுகிறதுஎன்கிறார் கார்ல் ரானர். இவரது கூற்று உண்மை வாய்ந்தது என்பது நமக்குத் தெரியும். இயேசு மனிதனாகவும் கடவுளாகவும் இருந்தார் என்பதைக் கிறித்தவம் ஒத்துக்கொள்கிறது. எனவே, இயேசுவை ஈன்றெடுத்தபோது மரியா கடவுளையே ஈன்றெடுத்திருக்கிறார் என்று திட்டவட்டமாகக் கூறமுடியும்.

கடவுள் செயல்

மரியா கடவுளின் அன்னை என்பது புலன்களாலோ, சிந்தனையாலோ, தர்க்க ரீதியாலோ நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல; அது ஓர் இறையியல் உண்மை! அது கடவுள் தம்மை வெளிப்படுத்தியதால் நாம் தெளிவாக ஏற்கும் ஒரு திருவிவிலிய உண்மை. திருவிவிலிய உண்மையை அறிய நம்பிக்கையோடு திருநூலை ஏற்க வேண்டும். கடவுள் நம் மத்தியில் உறைபவர். அதை ஊனக்கண்களால் காணவியலாது. மாறாக, நமது அகக்கண்களால் அவரைக் காணவியலும். மரியாவைத் தனிப்பட்ட விதமாக அன்பு செய்வதும் தேர்ந்தெடுப்பதும் கடவுள் செயல். கடவுளின் அருளின்றி, கிறிஸ்துவின் துணையின்றி மரியாவைப் பற்றிப் பேச இயலாது. மரியியல் கிறித்தியலில்தான் துவங்குகிறது. மரியா கடவுளின் தாயாவது கடவுள் செயல். மனிதச் செயலல்ல. மனிதன் தனது சிந்தனையால் பலவற்றைசரிஎன்றும், சிலவற்றைதவறுஎன்றும் கூறுகிறான். சில மறையுண்மைகளை ஏற்க மறுக்கிறான். எனினும், கடவுள் தமது செயல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஆண்டவர் செயல்கள் நமக்கு வியப்பாக உள்ளன.

கடவுள் மனிதனாகப் பிறந்து அவரது பெற்றோருக்குக் கீழ்ப்படிவது (லூக் 2:51), ஞானத்திலும் சிறந்து வலிமையில் உயர்ந்து கடவுளுக்கு உகந்தவராய் வாழ்வது (லூக் 2:40) வியப்புக்குரியனவாக உள்ளன. மரியா ஒரு தாய் என்ற முறையில் இயேசு கிறிஸ்துவை ஈன்றெடுத்தார். அவர் கடவுளாயும் மனிதனுமாயிருந்தார். தனது மகனின் வழிமுறைகளும், செயல்பாடுகளும் வாழ்வு முறைகளும் புரியாத வண்ணமாய் மரியாவுக்கு இருந்தன. மரியா அவற்றைப் பற்றித் தியானித்து வந்தார் (லூக்கா 2:13).

மரியாவின் சிறப்பு

ஒரு கடவுளை மனிதனாக ஈன்றெடுத்தது கடவுள் செயல் என்றாலும், மரியாவின் ஒத்துழைப்பை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

கடவுளின் தாய் எனினும், மரியா ஒரு பெண்தான். மனிதன் மனிதனை ஈன்றெடுக்க முடியும். மரியாவோ கடவுளை ஈன்றெடுக்கும் பேறு பெற்றார்.” கடவுளின் திருவடிகளைச் சொர்க்கமாகக் கொண்ட மரியாவின் திருவடிகளும் ஒருவகையில் சொர்க்கம்தான். இயேசு மரியாவைஅம்மாஎன்றழைத்ததால், நாமும் அவரைஅம்மாஎன்றழைக்கலாம். ஏனெனில், நாம் இயேசுவின் நண்பர்கள் (சகோதர-சகோதரிகள்) (யோவா15:15). ‘நேரில் நின்று பேசும் தெய்வம் அம்மா, ‘அம்மாவை வணங்காமல் உயர்வில்லையேஎன்று கவிதை வரிகள் கூறுகின்றன. இயேசுவை மீட்பராக உலகுக்கு வழங்கிட உதவியவர் மரியா.

மனிதனான கடவுள்

இறைவார்த்தை (இயேசு) மனிதர் நடுவே வாழ விருப்பம் கொண்டது (யோவா 1:14). மனிதர் நடுவே வாழ அவர் (இயேசு) தேர்ந்தெடுத்த வழிதான் ஒரு பெண்ணின் வழியாக இவ்வுலகில் வந்திருக்க முடிவெடுத்தது (கலா 4:5). இவர் ஓர் ஆணின் துணையின்றிப் பெண்ணின் வழியாக உலகிற்கு வருகிறார் (யோவா 1:13). கடவுள் மனிதனாக இவ்வுலகில் வருவதற்குப் பல வழிகள் இருந்திருக்கலாம். ஆனால், இறைவன் தேர்ந்த வழி மரியா என்ற பெண்; அவர் ஈன்றெடுத்தவரே இயேசு.

இயேசு மனிதரும் இறைவனுமாவார். அவர் மனிதப்பிறவி எடுத்தாலும், மனிதனுக்கிருந்த தேவைகள், பலவீனங்கள் இருந்தன. அதாவது, பசியுற்றார், தாகமுற்றார், தளர்வுற்றார், நிராகரிக்கப்பட்டார், இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார். மற்ற பலவீனங்கள் தெய்வ வலிமையால் மேற்கொள்ளப்பட்டன. நற்செய்தியாளர் சொல்வது போல் அவர் பாவம் தவிர மற்றனைத்திலும் மனிதனாகவே வாழ்ந்தார்.

என்னிடம் பாவம் உண்டு என்று உங்களில் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா?” (யோவா 8:46, 1பேது 2:22, எபி 4:15, 1யோவா 3:5) என்று இயேசு துணிவுடன் சவால் விடுகிறார். இயேசு மனிதராயினும் அவரது தெய்வீக நிலை அவரது இறப்பிற்குப் பின்பே அல்ல; உயிர்த்தெழுதலுக்குப் பின்பே அதிகமாகத் தெரியலாயிற்று. ‘இயேசு இறை மகன். அவர் கட்புலனாகாத கடவுளின் சாயல் (கொலோ 1:15). அவர் அனைத்து ஆற்றலும் நிறைந்தவர். அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர் (கொலோ 1:16). “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே; என்னிடம் நம்பிக்கைகொள்பவர் இறப்பினும் வாழ்வார் (யோவா 11:25,26). “அவர் வாக்காகவும் கடவுளாகவும் இருந்தார் (யோவா 1:1).

மறைபொருள்

இறைமகன் மனிதனாக, தாய் ஒன்று வேண்டும். அந்தத் தாய்தான் மரியா. அவர் கன்னி மரியாவின் வழியாக இவ்வுலகில் பிறந்தார். மனிதனாயினும் இறைமகன் மனிதனாக அவர் உதவியாயிருந்தார். இறைவனை ஈன்றெடுத்தார். இதை ஒத்துக்கொள்ள மனித எண்ணங்கள் மறுத்தாலும், இது மறைபொருள் என்பதை மறந்துவிடக் கூடாது.

புலன்களால் தொட்டு, கண்டு, நுகர்ந்து, சுவைத்து, கேட்டு உணரலாம். இவை மனித எல்லைக்கு உட்பட்டவை. சிலவற்றைச் சிந்தனைகளால் உணரலாம். சான்றாக 5+5=10 அல்லது 5x5=25 என்பதும் சரியே. இதற்குப் புலன்களின் உதவி தேவையில்லை, மனது போதும். மேலும், தர்க்க ரீதியைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்க இயலும். ‘தூத்துக்குடியில் உள்ள மக்கள் நல்லவர்கள். அருண் தூத்துக்குடியைச் சார்ந்தவன். எனவே அவன் நல்லவன்என்று கூறலாம். ஆய்வுகளும் யூகித்துச் செயல்படுவதும் பல மறைவான குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவியிருக்கின்றன. இவை நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், நாம் எங்கிருந்து வந்தோம்? நமது மூலம் என்ன? எங்கு செல்கிறோம்? நமது முடிவு என்ன? இறப்பிற்குப் பிறகு நாம் வாழ்கின்றோமா? என்பதையெல்லாம் நாம் கண்டுபிடிக்க இயலாதவை.

சான்றாக, ஆறு நாள்களில் கடவுள் உலகைப் படைத்தார் என்பதை அப்படியே நாம் புரிந்துகொள்வது சரியல்ல; ஆறு நாள்கள் கடவுள் எடுத்துக் கொண்டாரெனில், அது அவரது வல்லமை, எல்லையற்றத்தன்மை எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மாறாக, அதை ஓர் அடையாளமாக, தொன்மமாக, படிமமாக, குறியீடாக, புதிராகக் கொள்ளும்போது பல்வேறு அர்த்தங்களை நாம் உணர முடிகிறது. மனிதனின் படைப்பு, ஆண் - பெண் படைப்பு, அவர்கள் பாம்பால் ஏமாற்றப்படுதல், மனித உள்ளுணர்வை, வாழ்வின் உயர்வை, சபலங்களை, மனித பலவீனங்களைக் கண்டு பிடிக்கும் கூறுகளாகப் பார்க்கலாம்.

இறையியல் உண்மை

இயேசு மனிதன் என்பதும், அவரே இறைவன் என்பதும் மனிதச் சிந்தனையால் ஏற்க முடியாதது. அது இறையியல் உண்மை. கடவுளே அதை வெளிப்படுத்தாவிடில், அதை ஏற்பது கடினம். இயேசுவைக் கடவுள் என்றும், மனிதன் என்றும் பிரித்துப் பார்ப்பது ஏற்புடையதல்ல. மாறாக, ஒருவரில் (இயேசு என்ற மனிதரில்) இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் இணைந்துள்ளன. மனிதனாகவும் கடவுளாகவும் வாழ்ந்த அவர்தான் சிலுவையில் இறந்தார்; சாவை வென்றார்; உயிர்த்தெழவும் செய்தார். ஒரு மனிதரில் துலங்கிய பரம இரகசியம் இது. இதை ஆய்ந்து பார்ப்பவர் குறைகளைக் காண்பர். நம்பி ஏற்பவர் நிறைவைச் சுவைப்பர்.

இயேசுவின் பிறப்பு நிகழ்வுகள்

மரியா தன் தலைமகனைப் பெற்றெடுத்தார்; பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார் (லூக்.2:7). இவ்வாறு இயேசுவின் பிறப்பு லூக்காவினால் கூறப்படுகிறது. மற்ற நற்செய்தியாளர்கள் இயேசு பிறந்த செய்தியைக் கூறவில்லை. எனினும் லூக்காவும் மத்தேயுவும் வெவ்வேறு மறையுண்மைகளை முன் வைக்கின்றனர். ‘மரியா இறைவனை ஈன்றெடுத்தார்எனக் கூறவில்லை; ஆனால், ஈன்றெடுத்த மகன் எப்படிப்பட்டவர் என்பதை அவரவர்கள் புரிந்த வண்ணம் படைத்துள்ளனர்.

மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்! அவரது பெயர் இயேசு; அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் (மத்1:21). மேலும், “குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள். நெடுஞ்சாண் கிடையாக விழுந்து குழந்தையை வணங்கினார்கள் (மத் 2:14). வணக்கமும் ஆராதனையும் பெறுபவர் கடவுள் ஒருவரே. காணிக்கைகளும் அவருக்குக் கொடுக்கப்படுகின்றன (மத் 2:12). இதனால் இயேசு வெறும் மனிதர் அல்லர், தெய்வீகம் (இறைமை) நிறைந்த ஒரு குழந்தை என்பது தெளிவு.

இந்த இயேசுதாம் மரியாவின் மைந்தர். “அவர் ஈன்ற குழந்தை தூயது. அவர் இறைமகன் எனப்படுவார் (லூக் 1:35). மேலும், “அவர் பெரியவர், உன்னத கடவுளின் மகன், அவரது ஆட்சிக்கு முடிவே இராது (லூக் 1:32,33) என்பதெல்லாம் பிறக்கப் போகும் மரியின் மைந்தன் இறைமகன், அவர் கடவுள் இயல்பைக் கொண்டவர் என்று வெளிப்படுத்தப்பட்டது. “இயேசுவில் கடவுள் ஏற்பாடு செய்துள்ள மீட்பை சிமியோனின் கண்கள் கண்டுகொண்டன (லூக் 2:30,31). இவையெல்லாம் இறைவனின் வெளிப்பாடு. இறைவன் தம்மை, தம் மகனை வெளிப்படுத்துகிறார். இத்தகைய மகனை ஈன்றெடுக்கச் சம்மதம் தந்தவர்தான் மரியா. அவருக்குத் தெரியும், தான் தாயாவதும், அதுவும் கடவுளுக்கே தாயாவதும்! இவை அவரது மனத்தில் நிழலாடிய உண்மைகள்.

தொடக்கத் திரு அவை

தொடக்கத் திரு அவை நம்பியதை ஆரியுஸ், நெஸ்டோரியுஸ் போன்றவர்கள் மறுத்தனர். மரியா மனிதனான இயேசுவுக்குத் தாய். கடவுளுக்குத் தாயல்ல என்ற அவர்களின் கூற்றில் சிந்தனை, தர்க்க ரீதியான உண்மை இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், சிந்தனையும் தர்க்கமும் மெய்யியலும் முடியும் தருணத்தில் உருவாவதே இறைவனைப் பற்றிய உண்மைகள்.

நாம் புலன்களால், சிந்தனைகளால் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும்நாம் கடவுள் படைப்புகள்; அவரது பிள்ளைகள்; அவரால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்என்பது வெளிப்பாடு. நம்பிக்கையின் உண்மைகள். அவைகளை நிரூபிக்க முடியாததெனினும், அவை மற்ற உண்மைகளை விட உயர்ந்தவை. அவைதான் நம்பிக்கையாளர்களை வாழ்வித்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், ஒரு கிறித்தவன் நம்பிக்கையால் வாழ்கிறான்.

இந்த உண்மையைத் தெள்ளத் தெளிவாக நமக்குச் சொல்வதுதான் நிசேயா பொதுச்சங்கம் (325). அங்கு துவங்கிய மறையுண்மையை எபேசில் கூடிய திருச்சங்கம் (431) ‘மரியா இறைவனின் தாய்என்ற பிரகடனத்தின் வழியாய் உறுதிப்படுத்தியது. கவனிப்போம் - இது மறையுண்மை. இவ்வுண்மைகளை ஏற்க இறை நம்பிக்கை வேண்டும். இறை வெளிப்பாடு உண்மையானது எனத் தெரிந்திருக்க வேண்டும்.

கடவுளைப் பற்றிப் பேசும்போது நாம் உள்ளார்ந்த உணர்வு நிலைகளுக்குச் சென்றுவிடுகிறோம். புலன்களை, சிந்தனைகளை, மனித ஆய்வுகளைக் கடந்த இறைவனை நம்பிக்கையால் அணுகுவோம். கோடிக்கணக்கான மக்கள் ஏற்று, நம்பிக்கையுடன் வாழ்ந்த மறையுண்மைதான்மரியா இறைவனின் தாய்.’ இது கடவுளுக்குப் பெருமையென்றாலும், மனுக்குலத்தின் பெருமை. ‘மனிதனும் தெய்வமாகலாம்என்ற கூற்றின் பின்புலம் இதுவே.