news-details
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 2, 2025, ஆண்டின் பொதுக்காலம்; 4 ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) மலா 3:1-4; எபி 2:14-18; லூக் 2:22-40 - ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

தம் அன்பு மகனை நம் கரங்களில் ஒப்படைக்கும் இறைவன்!

கடவுளின் படைப்பு அனைத்தும் நல்லவை, சிறப்பானவை, அவரது நன்மைத்தனத்திற்குச் சான்றானவை. கடவுள் நமக்குத் தரும் நிபந்தனையற்றக் கொடைகள் அனைத்தும் முதல்தரமானவை. கடவுளின் அருள் கொடைகளுக்கு நன்றிச்செயலாக நாம் அவருக்குத் திருப்பிச் செலுத்துபவையே காணிக்கைகள். காணிக்கை என்பது தியாக உணர்வின் வெளிப்பாடு. தியாகம் என்பது அன்பை அளக்கும் அளவுகோல். இறைவனை உண்மையாக அன்புகூர்பவரே இறைவனுக்காக எதையும் தரத் தயாராகிறார்.

இந்த உலகில் எதுவும் நம்முடையது அல்லவே! ஒரு வேளை உழைப்பு நம்முடையதாக இருந்தாலும், விதையும் விதையைத் தாங்கிப் பிடிக்கும் மண்ணும், விதை முளைக்க உயிர் கொடுக்கும் நீரும், முளைத்த செடி ஓங்கி வளர ஒளியும் இறைவன் தந்ததல்லவா! எனவே, ‘நான் கொடுப்பவை என்னுடையதல்ல; அது இறைவனுடையது. இறைவனுடையதை இறைவனுக்கே திருப்பிக் கொடுக்கிறேன்என்ற உணர்வோடு ஒப்புக்கொடுப்பதுதான் காணிக்கை! இந்த உணர்வோடுஆண்டவர் அருளிய செல்வத்தை(திபா 127:3) மரியாவும் யோசேப்பும் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொண்டு வருகின்றனர்.

மோசே வழியாகதலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய் (விப 13:2) எனக் கடவுள் கட்டளை பிறப்பித்திருந்தார். சட்டங்கள் நிறைவேற்றுவதன் வழியாக, நல்ல அறநெறி வாழ்வு வாழ்வதன் வழியாக மீட்பைக் கண்டுகொள்ள முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர்கள் யோசேப்பு-மரியா. இவர்கள் தங்கள் குழந்தை பிறந்த நாற்பதாவது நாள் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்து அர்ப்பணித்த இந்த நாளைஅர்ப்பணத்தின் நாளாகவும், ‘அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் நாளாகவும்சிறப்பித்து மகிழ்கிறோம். இந்த உலக நாளை 1997-ஆம் ஆண்டில் உருவாக்கியவர் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்.

கோவிலுக்குப் படைக்கப்பட்டவை அனைத்தும் ஏழைகளுக்கே சொந்தம் என்று திருவிவிலியம் கூறுவதுபோல, கோவிலில் ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு முழுமையாக ஏழைகளுக்குச் சொந்தமாகிறார். இக்குழந்தை இவ்வுலகிற்காக அர்ப்பணிக்கப்பட்ட குழந்தை என்பதை உணர்கிறோம். இயேசு தம்மையே அப்பமாகவும், சிலுவையில் தம் உடலையே பலிபொருளாகவும் உடைத்துக்கொடுப்பதன் அடையாளமாக இந்த அர்ப்பணம் அமைகின்றது.

இயேசுவின் பெற்றோர் குழந்தையைக் கோவிலில் அர்ப்பணிக்கும்போது, சிமியோனும் அன்னாவும் கோவிலில் இருக்கின்றனர். சிமியோன் நேர்மையாளர்; இறைப்பற்று மிக்கவர். அன்னா ஓர் இறைவாக்கினர்; கைம்பெண். கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி, அல்லும் பகலும் திருப்பணி செய்து வருபவர். ‘நமக்குள்ளேயே நாம் முடங்கிவிடுவதன் வழியாகத் தனிமையை நாம் வெற்றிகொள்ள முடியாது. கடவுளை நோக்கிக் குரல் எழுப்புவதன் வழியாக வெற்றி காணமுடியும்என்பதை உணர்ந்து வாழ்ந்தவர். இவ்விருவரும் மரியா-யோசேப்பைப் போன்றுஇஸ்ரயேலில் எஞ்சியுள்ளோர் (மீக் 2:12) குழுவைச் சார்ந்தவர்கள். இவர்கள் இறைவாக்கினர் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து, தாழ்மையிலும் பற்றுறுதியிலும் தம் வாழ்நாள்களைக் கழித்து வந்தனர். இவர்கள் இறைவன் அனுப்பவிருக்கும் மீட்பரை எதிர்பார்த்திருந்தவர்கள்; இறைவன் மக்களைத் தேற்றும் நாளுக்காகக் காத்திருந்தவர்கள். இவர்கள்மீது கடவுள் அருள் பாலித்து, இவர்களுக்குத் தம் மகனைக் கண்டு மகிழ்வுறும் பேற்றை அளிக்கிறார்.

பொதுவாக, கோவிலுக்குக் கொண்டு வரும் குழந்தைகளைக் குருக்களிடமே பெற்றோர் கொடுப்பர் (1சாமு 2:20). ஆனால், இங்கே சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்துகின்றார். கடவுளின் அருஞ்செயலைக் காணும் சிமியோன்எனது வாழ்நாள் தவப்பயனைப் பெறப்போகின்றேன்; எனது மண்ணக வாழ்வு பொருள் கொண்ட ஒன்றாக முடியப் போகின்றதுஎன்பது போன்ற உணர்வை வெளிப்படுத்துகின்றார். மேலும், சிமியோன்ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்!’ (லூக் 2:29) என்று தன்னுடைய இறப்பைப் பற்றியும், ‘மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன (2:31) என்று மகிழ்ச்சிப் பெருக்கோடும் கடவுளைப் புகழ்கின்றார்.

தன் சொந்த இல்லத்திற்கு இறைவன் வருவார்; அதுவும் யாரும் எதிர்பாராத வகையில் வருவார்; அவரது வரவு எப்படி இருக்கும் என்பதை முன்னறிவிக்கும் விதமாக, ‘இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும் (2:34) என இறைவாக்கு உரைக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் நாளைப்பற்றி மலாக்கியும் இவ்விதம் கூறுகிறார்: “நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்... அவர் வரும் நாளைத் தாங்கக்கூடியவர் யார்?” (மலா 3:1,2).

யூதாவில் நிலவிய அறநெறி மற்றும் சமயப் பிரச்சினையைப் பற்றி இறைவாக்குரைக்கின்றார் மலாக்கி. இறைவாக்கினர் மலாக்கி காலத்தில், குருக்களும் மக்களும் சமயக் கடமைகளில் தவறினர். மக்கள் கொணரும் முதல்தரமான காணிக்கைகளைத் தங்களின் சொந்த உடமைகளாக்கிக் கொண்டு, இரண்டாந்தரக் காணிக்கைகளை அதிக விலைக்கு மக்களுக்கு விற்று (2:1-3) திருப்பீடத்தைத் தீட்டுப்படுத்தினர். பலர் ஆண்டவருக்குச் சேரவேண்டிய காணிக்கையை முறைப்படி செலுத்தவில்லை. அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, அவரை அவமதித்தனர்; அவரது திருப்பெயரைக் களங்கப்படுத்தினர். இந்தப் பின்புலத்தில், கடவுள் தம்முடைய தூதரை அனுப்புவார்; அவர்தம் மக்களைத் தூய்மைப்படுத்துவார்; அந்நாளில் தீர்ப்பளிக்கப்படும், ஒப்புரவு ஏற்படும், விடுதலை அருளப்படும்; ஆலயமும் தூய்மை அடையும். கட்டளைகளைக் கடைப்பிடித்துத் தூய்மையுடன் ஒழுகுபவர்களுக்கு ஆண்டவரின் நாள் ஆசிரின் நாளாக அமையும்என முன்னுரைக்கிறார் மலாக்கி.

மக்களின் அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டும் அரசியல் மெசியாவாகவும், கோவில் வழிபாட்டைத் தூய்மைப்படுத்தும் குருத்துவ மெசியாவாகவும் மீட்பர் வருவார் எனக் காத்திருக்கின்ற சிமியோன் உடன்படிக்கையின் தூதராம் இயேசுவைக் கண்டுகொள்கின்றார். சிமியோனின் இச்செயலைக் குறித்து திருத்தந்தை, “தன் வாழ்நாள் முழுவதும், சிமியோன் இறைவனின் வருகைக்காகப் பொறுமையுடன் காத்திருந்தார். தன் நீண்ட வாழ்வில் துயரங்களும், சோர்வும் உண்டானாலும், அவரது உள்ளத்தில் நம்பிக்கையின் ஒளி அணையாமல் எரிந்துகொண்டிருந்தது. தன்னைச்சுற்றி நடந்த நிகழ்வுகளால் துயருற்று, மனத்தளர்ச்சி அடையாமல், பொறுமையுடன் இருந்ததால்தான்நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டனஎன்று சிமியோனால் இறைவனிடம் கூறமுடிந்ததுஎன்று கூறினார் (பிப்ரவரி 03, 2021).

சிமியோன் அன்னை மரியாவைப் பார்த்து, “உமது உள்ளத்தையும் ஒரு  வாள் ஊடுருவிப் பாயும்என்ற இறைவாக்கு, தந்தை கடவுள் தம் மகன் இயேசுவுக்காக வைத்திருக்கும் பணி என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இயேசு நன்மைகளைச் செய்யும்போது இச்சமூகம் அவரை எதிர்க்கும்; இறுதியில் அவரது உயிரையே பறிக்கத் திட்டமிடும். ஓய்வுநாளில் நோயாளர்களை நலப்படுத்துதல், கோவிலைத் தூய்மைப்படுத்த சாட்டையை எடுத்தல், பாவிகளுடன் உணவருந்துதல், பிறர் குற்றங்களை மன்னித்தல் இவை அனைத்துமே அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான சவால்களே. பொருளற்ற சட்டங்களால் மக்களைத் துன்புறுத்திய பரிசேயக் கூட்டங்களை வன்மையாகக் கண்டித்தார் இயேசு. நீதியை நிலைநாட்ட தீமையைத் தீக்கிரையாக்கினார். எனவேதான் இயேசுஎதிர்க்கப்படும் அடையாளமாகவும் (லூக் 2:34), ‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் (2:35) எனவும் சிமியோன் மரியாவை நோக்கிக் கூறினார்.

எனவே, மனித மீட்புக்குச் சிலுவையின் பாதையைத் தவிர வேறு பாதையை இறைவன் காணவில்லை. நமது மீட்பின் பயணத்தில் இயேசு எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. எவ்வித ஆறுதலுமின்றி கூட இருந்தவர்கள் கைவிட்ட நிலையை அனுபவித்தார். மனித ஊன், இரத்தம், சாவு இவற்றைப் பகிர்ந்து நம்மை மீட்டார். ‘துன்பம் ஒரு நல்ல ஆசிரியர்தானே!’ ‘துன்பமே நமது அர்ப்பணத்தில் வலிமை சேர்க்கிறது. பிறரோடு இணைந்து உழைப்பது, துன்புறுவது, மகிழ்வுறுவது இவையே கிறிஸ்து நமக்குக் காட்டும் மீட்பின் பாதையாகும்என்கிறது இரண்டாம் வாசகம்.

இன்றைய விழா நமக்குச் சொல்லித் தரும் முக்கியப் பாடங்கள் என்ன? முதலில், நம்மையே நாம் முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கும்போதுகடவுள் அனுபவம்பெறுகிறோம். நம் அர்ப்பணத்தில் கடவுளைக் காண்கிறோம்; அவரது திட்டத்தை அறிந்துகொள்கிறோம்; மீட்பின் கருவியாகிறோம். இரண்டாவது, ஒவ்வோர் அர்ப்பணமும் நம்மை உலகின் பொதுச் சொத்தாக்குகின்றன. மக்களுக்காக நாம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளோமெனில், மக்களுக்காகப் பணியாற்ற நாம் முன்வரவேண்டும். ஆண்டவருக்கு அஞ்சி, அவரது பெயரை நினைத்து, நீதிநெறி பிறழாது வாழ்வோரின் பெயர்கள் மட்டுமே கடவுளின் நூலில் இடம் பெறும் (மலா 3:16) என்பதை நினைவில் கொள்வோம்.

மூன்றாவது, இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த மரியா - யோசேப்பு, சிமியோன், அன்னா ஆகிய நான்கு பேரும் பல்வேறு விதங்களில் வேறுபட்டவர்கள்; எனினும், இவர்கள் இறைவனை அணுகி, அவரால் வழிநடத்தப்பட தங்களை அனுமதித்தவர்கள். இறைவனின் பாதையில் நடப்பதற்குரிய விருப்பத்தையும், தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதற்கு அனுமதிப்பதையும் கிறித்தவ வாழ்வு எதிர்பார்க்கிறது என்பதை இந்த நான்கு பேரிடமிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.

நிறைவாக, அர்ப்பண உலக நாளைச் சிறப்பிக்கும் இன்று அர்ப்பண வாழ்விற்கெனத் தங்களை அர்ப்பணித்துள்ளவர்களையும், வயதில் முதிர்ந்து, உடலால் தளர்ந்துள்ள அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரையும் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம். உடல், உள்ள ரீதியான பல்வேறு சவால்கள், சோதனைகள், தடுமாற்றங்கள் என எத்தனை தடைகள் வந்தாலும், அன்னை மரியாவைப்போல மனவுறுதியோடு வாழ இவர்களுக்காக வேண்டிக்கொள்வோம். இன்றைய நாளில் உருகி ஒளி கொடுக்கும் மெழுகுதிரியைச் சுமக்கும் நாம் ஒவ்வொருவரும் குழந்தையின் வடிவில் வரும் இறைவனை நம் கரங்களில் ஏந்தி இறைவனின் ஒளிக் கீற்றுகளாக ஒளிர்ந்திடுவோம்.