news-details
சிறப்புக்கட்டுரை
இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI)-இன் ‘மறைத்தூதுப் பணி (MISSION) 2033’

மேய்ப்புப் பணித்திட்டம்

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவைக்கான வழிகாட்டு நெறிமுறை விளக்கக் கூட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதிகமாக வலியுறுத்திக் கூறும் கூட்டொருங்கியக்கச் செயல்முறைகளின் விளைவுகளை நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டத்தை உணர்ந்துகொள்ள இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (Conference of the Catholic Bishops of India) “2033-இல் கடவுள் திரு அவையை எவ்வாறு இருக்க அழைக்கிறார்?” (Where is God calling the church to be by 2033) என்ற வினாவிற்கு விடையளிக்கும் விதமாக, 34-வது அகில இந்திய ஆயர் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒரு மேய்ப்புப் பணித்திட்டச் செயல்முறையில் தீவிரமாகக் களமிறங்கத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் இந்தியா முழுவதிலும் அதற்கான களப்பயிற்சிகளும் களப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, பலருடைய கருத்துகளை உள்வாங்கி, அவைகளை ஒன்றிணைத்துமறைத்தூது பணி 2033’ (MISSION-2033) என்ற இலக்கை முன்வைத்து இந்தியா முழுவதற்குமான மேய்ப்புப் பணித்திட்டக் கையேடு ஒன்று உருவானது.

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை தனதுமறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப் பணித்திட்டக் கையேடு அதன் தலைவர் கர்தினால் பிலிப் நேரி அவர்களால் 2024, செப்டம்பர் 11-ஆம் தேதியன்று வெளியிட்டது. ‘மறைத்தூதுப் பணி 2033’ என்று தலைப்பிடப்பட்ட இறுதி வடிவ மேய்ப்புப் பணித் திட்டம் ஆவியானவரில் மனம் திறந்த உரையாடல்களின் (Spiritual Conversation) பலன் ஆகும். எனவே, ஒவ்வொரு தனிநபரும் இத்திட்டத்தை மறைமாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் செயல்படுத்த அவர்களால் இயன்ற பங்களிப்பை உய்த்துணர வேண்டும். இத்திட்டத்தின் மையம் தேசியப் பணிக் குழுக்களின் மீது நிலைபெற்றிருப்பினும்இத்திட்டத்தின் பலன்கள் நமது மாநில மற்றும் மறைமாவட்டத் திரு அவைகளைத் தொடர்ந்து அனைத்துப் பங்குகளையும் சென்றடைந்து நன்மை பயக்கும்.

எல்லா நிலைகளிலும் நமது நம்பிக்கை, வாழ்க்கை மற்றும் மறைத்தூதுப் பணியின் தரத்தை ஆழப்படுத்த கடவுள் நம்மை அழைக்கிறார். 2033-ஆம் ஆண்டு நம்முடைய மீட்பின் மாபெரும் யூபிலியைக் கொண்டாடும்போது, இந்த மேய்ப்புப் பணித் திட்டத்தின் பலன்களைக் கண்டு நாம் சான்று பகர்வோம்.

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்ட கையேட்டில் அடங்கியுள்ள மேய்ப்புப் பணித் திட்டங்களை நமது தமிழ் நாடு திரு அவைக்கு எடுத்துச் செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைக் கூட்டமானது டிசம்பர் 12, 2024 அன்று  மதுரை உயர் மறைமாவட்டத்தில் அமைந்துள்ளபில்லர்’ (PILLAR) மையத்தில்  நடைபெற்றது. இத்திட்ட விளக்கக் கூட்டத்தை தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலரும்கோட்டாறு  மறைமாவட்ட ஆயருமான  மேதகு நசரேன் சூசை அவர்கள் தலைமையேற்று நடத்தினார். தமிழ்நாடு ஆயர் பேரவையின் இணைச்செயலரும், ‘மறைத்தூதுப் பணி 2033’-இன் மாநில ஒருங்கிணைப்பாளருமான அருள்பணி. பிரான்சிஸ் ஜோசப் இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

தமிழ்நாடு மாநிலத் திரு அவையும் அதிலுள்ள ஒவ்வொரு மறைமாவட்ட தலத் திரு அவையும் இந்த மறைத்தூது பணி குறித்த மேய்ப்புப் பணித் திட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு திரு அவையின் பணிக் குழுக்களின் செயலர்களும், மறைமாவட்டப் பணிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும் இக்கூட்டத்திற்கு அழைப்பு பெற்றிருந்தனர். ஏறக்குறைய 40 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தின் கருத்தாளராகமறைத்தூதுப் பணி 2033’-இன் தேசிய ஆலோசகர் அருள்பணி. ஜோ சேவியர் சே.. அவர்கள் அந்நாளின் அமர்வுகளைச் சிறப்பாக வழிநடத்தினார்.

மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்கள் தனது துவக்க உரையில் கீழ்க்காணும் கருத்துகளை முன்வைத்தார்:

நமது தமிழ்நாடு திரு அவை பல சிறப்பான முன்னெடுப்புகளைச்   செய்துகொண்டிருக்கின்றது. திரு அவையின் மேய்ப்புப் பணிக்குழுக்கள் தனித்தனியே தங்களது பணிகளைப் பல்வேறு விதங்களில் செய்துகொண்டிருக்கின்றன. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பணிக் குழுக்களிடையே சரியான ஒருங்கிணைப்பும் திட்ட இலக்குகளும் இன்னும் சிறிது அதிகமாகத் தேவைப்படுகின்றன.

ஒருசில மறைமாவட்டங்களில் தங்களுடைய திரு அவை குறித்த சரியான புள்ளி விவரங்களைச் சேகரித்தும், தங்களுடைய இன்றைய நிலையைத் தெளிவாக அறிந்தும், பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தங்களுக்கான மேய்ப்புப் பணித் திட்டங்களையும் இலக்கையும் நிர்ணயித்து பயணிப்பதும் மிகவும் பாராட்டுக்குரியது.

மாநில அளவிலான செயல்திட்டங்கள் அனைத்தும் மறைமாவட்டங்கள், மறைவட்டங்கள், பங்குத்தளங்கள் என இறுதிவரை சென்று சேர்வதில்லை. இதற்கு மாநிலப் பணிக்குழுக்களின் செயலர்களுக்கும் மறைமாவட்டப் பணிக் குழுக்களின் செயலர்களுக்கும்  உள்ள தொடர்புகளும், பணிக் குழுவின்  மறைமாவட்டச் செயலர்- மறைவட்டம்-பங்கு இவைகளுக்கிடையே உள்ள தொடர்புகளும் உறுதி செய்யப்பட வேண்டியது தேவையான ஒன்று.

பணிக்குழுக்களின் திட்டமிடல், செயல்பாடுகள் மற்றும் திறனாய்வுக் கூட்டங்கள் சரியான கால இடைவெளிகளில் நடைபெறாமல் இருப்பது தெரிய வருகிறது. மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு இடையே இணக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவது மேய்ப்புப்பணித் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கான காரணிகளுள் மிக முக்கியமானதொன்றாக இருப்பதால், மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு இடையிலும், அருள்பணியாளர்களுக்கும் பொதுநிலை இறைமக்களுக்கு இடையேயும் இணைந்த செயல்பாடுகளை மேம்படுத்துவது கண்டிப்பாகத் தேவை.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பார்வையில் நமது திருத்தந்தை செயல்படுத்தி வரும் கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான வழிமுறையைத் தவிர திரு அவைக்கு வேறு சிறப்பான வழியில்லை. இதன் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தமறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப்பணித் திட்டத்தை உள்வாங்கி இறைமக்களிடம் கொண்டுபோய் சேர்க்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்என்று தன் உரையை நிறைவு செய்தார்.

ஆயரைத் தொடர்ந்து அருள்பணி. ஜோ சேவியர் சே.. அவர்கள்மறைத்தூதுப் பணி 2033’ தொடர்பான வழிமுறைகளை விளக்கினார். அவர் உரையிலிருந்து எழுந்த முக்கியக் கருத்துகள்:

இந்தியக் கத்தோலிக்கத் திரு அவை தற்போது நேர்மையாகவும் உண்மையாகவும் தனது இலக்கு நோக்கிய வளர்ச்சிப் பாதையில் நகர்ந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. இருப்பினும் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகமாகவே உள்ளது.

இந்தியாவில் பல இடங்களில் திரு அவை பொது நிலை இறைமக்களை விட்டு அந்நியப்பட்டு, தொடர்பின்றி உள்ளது. இதை ஆழ்ந்து சிந்திக்கவும், அதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுத்தவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இளையோர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், புலம் பெயர்ந்தோர் இவர்களுக்கான பணிக்குழுக்கள் இப்பிரிவினரோடு மிகுந்த ஈடுபாடு காட்டுவது தேவையான ஒன்றுஎன்றார்.

ஒரு நிறுவனம் எவ்வாறு தனது இலக்கு நோக்கிய செயல்பாடுகளிலும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த செயல்பாடுகளை எவ்வாறு இலக்கு நோக்கி துல்லியமாகத் திட்டமிடுகிறது என்பது காணொளி மூலம் விளக்கப்பட்டது.

பின்னதாக நடத்தப்பட்ட குழு அமர்வு பகிர்வில் பின்வரும் நான்கு வினாக்கள் ஆய்வுக்கு விடப்பட்டு, அவற்றின் பகிர்வு முடிவுகள் பெறப்பட்டன.                        

(தொடரும்)