news-details
ஞாயிறு மறையுரை
சனவரி 05, 2025, ஆண்டவருடைய திருக்காட்சி (மூன்றாம் ஆண்டு) எசா 60:1-6; எபே 3:2-3,5-6; மத் 2:1-12

இயேசுவின் ஒளியில் இறைவாழ்வை நோக்கி...!

இன்று நாம் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழாவைமூன்று அரசர்கள் திருநாள்என்றும், ‘மூன்று ஞானிகள் திருநாள்என்றும் அழைக்கிறோம். கடவுள் அனைத்துலக மக்களுக்குமானவர் என்பதே இவ்விழாவின் மையப்பொருள். “இறைவன் மனுக்குலத்தை நாடி வருவதையும் மனிதர்கள் இறைவனை நாடிச் செல்வதையும் இணைக்கும் ஓர் அழகிய திருநாள் இத்திருக்காட்சித் திருநாள்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இடையர்கள், சிமியோன், அன்னா, மரியா, யோசேப்பு என யூத இனத்தவருக்கே தம்மை வெளிப்படுத்திய இறைவன், பிற இனத்தவர்களாகிய கீழ்த்திசை ஞானிகளுக்கும் தம்மை வெளிப்படுத்துகிறார். ‘இறைவனின் வெளிப்பாடு ஒரு சிலருக்கானதல்ல; இனம், சமயம், மொழி, பண்பாடு என அனைத்து எல்லைகளையும் கடந்து, மெசியா அனைத்துலக மக்களுக்குமானவர்என்பதை இவ்விழா நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், “பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர் (60:3) என எசாயா முன்னறிவிப்பது மெசியா அனைத்துலக மீட்பர் என உணர்த்துகிறது. வெவ்வேறு நாடுகளையும் இனங்களையும் பண்பாடுகளையும் சார்ந்தவர்களாக மக்கள் இருந்தாலும், கடவுளின் மீட்பு அனைவருக்கும் பொதுவானது என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. கீழ்த்திசையிலிருந்து எருசலேமுக்குப் பயணம் செய்த ஞானிகள் யூதரல்லாதவர்கள், தெரிந்துகொள்ளப்படாதவர்கள், திருவிவிலியத்தை அறியாதவர்கள், வாக்களிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள்! இருப்பினும், மெசியாவின் பிறப்பினால் பெறப்படும் மீட்பு தங்களுக்குமானது என்பதை நம்பியே பயணப்பட்டனர்.

ஞானிகள் குழந்தை இயேசுவை வணங்கிவிட்டு, தங்கள் பேழைகளைத் திறந்து பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகிய பரிசுப் பொருள்களை அளித்ததை இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்த ஞானிகளிடமிருந்து பயனுள்ள சில பாடங்களை நாம் இன்று கற்றுக்கொள்வோம்.

முதலாவது, யார் இந்த மூன்று ஞானிகள்? மத்தேயு நற்செய்தி 2-ஆம் அதிகாரத்தில் மட்டுமே இம்மூவரைப் பற்றிய சிறு குறிப்புகள் இடம்பெறுகின்றன. இவர்கள் விண் ஆய்வாளரையோ, கிழக்கு நாடுகளின் ஓர் அறிஞரையோ, எதிர்காலத்தைக் கணிப்பவர்களையோ குறிக்கலாம்இவர்கள் உண்மையைத் தேடித்தேடி நிலையற்ற மனங்கொண்ட யூதரல்லாப் புறவினப் பெரியோர். மெல்கியோர், கஸ்பார், பல்தசார் என்பதே இவர்கள் பெயர்கள் என மரபு கூறுகிறது.

வானதூதர்களால் அறிவிக்கப்படாமல் தாங்களாகவே வானியல் விண்மீன்கள் பற்றிப் படித்து இறைவன் பிறப்பை அறிந்து, அறிமுகமில்லாத இடத்திற்குப் பயணம் செய்கிறார்கள் இந்த மூன்று ஞானிகள். இரவில் மட்டுமே கண்களுக்குத் தெரியும் விண்மீன்களைப் பின்தொடர்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல; மேலும், சாலைப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. அதுவும் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே ஒரு சிறு விண்மீனை மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல இரவுகள் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். இத்தனை இடர்கள், குழப்பமான கேள்விகள், ஆபத்தான மற்றும் வியப்புகள் நிறைந்த பயணத்தைக் குறித்துக் கவலை கொள்ளாமல், மனவேதனை அடையாமல், ஏமாற்றம் காணாமல், குறைகூறாமல் அவர்கள் தொடர்ந்து பயணித்தார்கள்; குழந்தையைக் கண்டு வணங்கினார்கள். ஞானிகள் போல நாமும் இடர்களுக்கு மத்தியிலும் இறைவனை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பது இவ்விழா உணர்த்தும் முதல் பாடம்.

இரண்டாவது, இயேசுவைக் கண்டு வணங்குவதற்கு நீண்ட மற்றும் கடினமான பயணத்தை எதிர்கொண்ட மூன்று ஞானிகள் ஒரு விண்மீனின் அற்புதமான அடையாளத்தால் வழிநடத்தப்பட்டு, இறுதியாக அவர்கள் தங்கள் இலக்கை அடைகின்றனர். தாங்கள் தேடி வந்த குழந்தை, கற்பனை செய்த விதத்தில் அல்ல; மாறாக, அவர் எளியவராகவும் ஏழையாகவும் இருக்கிறார் என்பதை எண்ணி அவர்கள் அந்த மீட்பரை ஏற்றுக்கொள்கின்றனர். புறத்தோற்றங்களைக் கடந்து பார்ப்பதற்கு அவர்களால் முடிந்தது. வறியோரிலும், சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் இருப்போரிலும் பல நேரங்களில் மறைந்திருக்கும் ஆண்டவரை வணங்குவதற்கு இந்த ஞானிகளின் செயல் நம்மைத் தூண்டுகிறது.

மனுக்குலத்திற்காகத் தம்மைத் தாழ்த்திக்கொள்ள முன்வந்த பாலன் இயேசுவில் இறைவனைக் கண்டு, வியப்பில் ஆழ்ந்து, மகிழ்ந்து, நெடுஞ்சாண்கிடையாய் தாழ்மையுடன் விழுந்து குழந்தையை வணங்குகின்றனர் (மத் 2:11). வணங்குதல் என்பது, உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மற்றும் மிக மதிப்புமிக்கவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு செயல். ஞானிகள் யூதர்களின் அரசர் எனத் தாங்கள் அறிந்து வைத்திருந்த ஒருவரை வணங்குகின்றனர்.

ஞானிகள் இறைவனை வணங்கியதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடும்போது, “ஆண்டவரை வணங்குதல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது நொடிப்பொழுதில் நடப்பதுமல்ல; மாறாக, அதற்குக் குறிப்பிட்ட ஆன்மிகப் பக்குவம் தேவை. மேலும், அது ஒரு நீண்ட அகவாழ்வுப் பயணத்தின் கனியாகும்என்கிறார் (திருக்காட்சித் திருவிழா மறையுரை, 06.01.2021). மேலும், “நம் வாழ்வில் ஆண்டவரை நுழைய அனுமதிப்பதே வணங்குதலாகும். அவரது ஆறுதல், இவ்வுலகில் இறங்கிவரவும், அவரது கனிவான அன்பு நம்மை நிரப்புவதற்கும் அனுமதிப்பதே வணங்குதல் என்பதன் பொருள்என்கிறார் (‘டுவிட்டர்செய்தி, 08.01.2020).

குழந்தையையும் அதன் தாயையும் காணும் ஞானிகள் இரண்டு முக்கியமான அடையாளங்களை நமக்கு உணர்த்துகின்றனர். ஒன்று, உண்மையான ஞானத்தை இங்கே காண்கிறார்கள். எனவேதான் உண்மையான ஞானத்துக்கு முன்னால், உலக ஞானம் பணிந்து விழுந்து கிடக்கிறது. இங்கே இயேசுவே உண்மையான ஞானமாகவும், அந்த ஞானத்தை வைத்திருப்பவராக மரியாவையும் மத்தேயு காட்டுகிறார். மற்றொன்று, பொன், பொருள், அறிவு, ஞானம், பெயர், புகழ் என எல்லாம் பெற்றிருந்தும், உண்மையான செல்வம் என்பது புகழ், வெற்றி ஆகியவற்றில் இல்லை; மாறாக, பணிவு, பொறுமை, அமைதி, ஏழ்மை, எளிமை போன்றவற்றில்தான் கடவுளைக் கண்டு வியப்படைய முடியும் என்பதை ஞானிகள் கற்றுத் தருகின்றனர்.

என்னுடைய பணிவு எப்படிப்பட்டது? எனது வீண் பெருமை என் ஆன்மிக முன்னேற்றத்தைத் தடுக்கிறதா? கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் திறந்த மனத்துடன் இருக்க நான் பணிவுடன் செயல்படுகிறேனா? நான் எப்போதும் இயேசுவை அறிந்துகொள்ளும் தேவையில் இருக்கிறேனா? போன்ற கேள்விகளை இன்று நாம் கேட்கத் தூண்டுகின்றனர் இந்த ஞானிகள்.

மூன்றாவது, தூரத்திலிருந்து விண்மீனின் வழிகாட்டுதலுடன் வந்து எளிய உருவில் குழந்தை இயேசுவைக் கண்டுகொண்டு, அவர்முன் தெண்டனிட்டு வணங்கிய ஞானிகள் அவருக்கு விலை உயர்ந்த காணிக்கைகளை வழங்குகின்றனர். ‘ஏரோதிடம் திரும்பிப்போக வேண்டாம்எனக் கனவில் எச்சரிக்கப்பட்டதும், அவர்கள் அகமாற்றம் அடைந்தவர்களாக, வேறு பாதையில் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர் (மத் 2:12). இயேசுவுடனான சந்திப்பிற்குப் பிறகு, யாரும் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது.

குழந்தை இயேசுவோடு ஞானிகள் மேற்கொண்ட சந்திப்பு அவர்களை, அங்கேயே கட்டிவைக்கவில்லை; மாறாக, அவர்களின் மகிழ்ச்சியை, அவரவர்  இடங்களில் பறைசாற்ற வைத்தது. இறைவனைச் சந்தித்தவர்கள், தங்கள் பழைய வாழ்வுப் பாதையில் நடைபோட முடியாது. ஆண்டவரைக் காணும் தேடலை நிறுத்திக் கொள்ளாமல் தொடர் தேடலில் ஈடுபட்டார்கள். ஆண்டவர் அரண்மனையிலும் அரசக் குடும்பத்திலுமல்ல; எளிமையிலும் ஏழ்மையிலும் தம்மை வெளிப்படுத்த இயலும் என்பதை உலகுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

ஒரு பயணம், எப்போதும் மனத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பயணம் மேற்கொண்டபின் நாம் முன்பிருந்ததுபோல் இருப்பதில்லை. ஒரு பயணத்திலிருந்து கிடைத்த உள்ளார்ந்த வளர்ச்சியை முதலில் அனுபவிக்காமல், எவரும் ஆண்டவரை வணங்குவதில்லை. படிப்படியான செயல்முறை வழியாகவே நாம் ஆண்டவரை வணங்குகிறவர்களாக மாறுகிறோம். நாமும் இறைவனைச் சந்தித்தபின் சுதந்திரமாக, நம் பாதையில் பயணிக்க இறைவனால் விடப்படுகிறோம். அந்தப் பாதை நாம் வந்த பாதையே எனினும், நாம் நம்மில் மாற்றம் பெற்றவர்களாக உள்ளோம் என்பதை ஞானிகள் நமக்கு உணர்த்துகின்றனர்.

நிறைவாக, விண்மீன் காட்டிய பாதையில் சென்று இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றிய ஞானிகளைப்போல், நாமும் தடைகள் பல எழுந்தாலும், தளரா உள்ளத்துடன், உன்னதக் குறிக்கோள்கள் என்ற விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண முயல்வோம். விண்ணக வாழ்வுக்குரியவற்றைத் தேடுவதில் நாம் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். ‘இயேசு எங்கே பிறந்திருக்கிறார்?’ என்ற கேள்விதான் ஞானிகள் இயேசுவைத் தேடிக் கண்டுகொள்ள உதவியது. அதுபோல, நமது வாழ்வில் நம் உள்ளத்தில் எழும் கேள்விகள் வழியாக நம்மோடு பேசும் கடவுளின் குரலைக் கேட்போம்.

தீமையின் மாயை, வீண் விவாதங்கள், பொய்யான இன்பத்தை வலியுறுத்தும் உலகப்போக்குகள் போன்ற இவ்வுலக ஒளியில் சிக்கிக்கொள்ளாமல், ஞானிகள் மூவரைப் போன்று, இறை ஒளியைப் பிரதிபலிக்கும் நிலவாக நாம் ஒவ்வொருவரும் செயல்படுவோம். கடவுளை நோக்கி நம் கண்களை உயர்த்தி (எசா 60:4), நம் இதயங்களில் பதிந்திருக்கும் விருப்பங்களைக் கேட்போம். அவர் நமக்கு மேலே ஒளிரச்செய்யும் விண்மீன்களைப் பின்பற்றுவோம். இறைவனிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாகவும் நாம் மாறுவோம்.