news-details
சிறப்புக்கட்டுரை
புனித பேதுரு பாப்பிறைக் குருத்துவக் கல்லூரி பொன்விழா

பெங்களூரில் அமைந்துள்ள போற்றுதலுக்குரிய நமது புனித பேதுரு பாப்பிறைக் குருத்துவக் கல்லூரி இறைவனின் அளப்பரிய ஆசிரால் ஆல்போல் தழைத்து, தனது பொன்விழா ஆண்டில் (1976-2026) அடியெடுத்து வைத்துள்ளது. இப்பொன் விழா நிகழ்வுகள் மூன்று நிலைகளில் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளன. முதலாவதாக, யூபிலி தொடக்கக் கொண்டாட்டம் 2025, ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய நாள்களிலும், இரண்டாவது நிகழ்வாக, முன்னாள் மாணவர்களுடன் சர்வதேச மாநாட் டுக் கொண்டாட்டம் 2025 செப்டம்பரிலும், மூன்றாவது நிகழ்வாக, யூபிலி நிறைவுக் கொண்டாட்டம் 2026 ஜனவரியிலும் நிகழ்த்தப்பட உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பொன்விழாவைக் கொண்டாடும் விதமாக இக்கல்லூரியின் பெருமையையும் புகழையும் அறிய முற்படுவோம்.

புனித பேதுரு பாப்பிறைக் குருமடத்தின் வரலாறு (1778-1976), பாப்பிறைக் கல்லூரி உருவாக்கம் (1976) வரலாற்றுப் பார்வை

புனித பேதுரு குருமடமானது 1778-இல் பாண்டிச்சேரியில்பாரின் மிஷன் சொசைட்டி ஆப் பாரிஸ்- MEP சபையினரால் உருவாக்கப்பட்டது. 1790-இல் புனித வளனார் பெரிய குருமடமாகச் (Grand Seminaire)) செயல்படத் தொடங்கியது. 1934-ஆம் ஆண்டில் இக்குருமடம்புனித பேதுரு குருமடம்என்ற பெயரில் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. 1962-இல் வத்திக்கான் நகரின் உர்பானியானா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதன் வழியாக இறையியல் இளங்கலைப்பட்டம் வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றது. ஜனவரி 6, 1976-ஆம் ஆண்டு உரோமைக் கத்தோலிக்கக் கல்விக்கான பேராயத்தின் Ecce vir Orienóஎனும் ஆணை கடிதத்தின் மூலம் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரி நிறுவப்பட்டது.

மறைத்தூதுப் பணியியல் (Missiology) மற்றும் விவிலிய இறையியல் (Biblical Theology) துறைகள் உருவாக்கம்

உரோமை ஆட்சிப் பீடத்தின் அனுமதியுடன், இந்தியாவில் மறைத்தூதுப் பணியியல் படிப்பிற்கான முதல் கல்வியகம் என்ற பெருமையுடன் முதுகலை பயிலும் ஏழு மாணவர்களைக் கொண்டு 1976 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நாள் வரை 121 மாணவர்கள் முதுகலைப் பட்டத்தில் தேர்ச்சியும், 1989 முதல் இன்று வரை 51 பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். ஜூலை 1, 1981-இல் விவிலிய இறையியலில் முதுகலைப் பாடத்திட்டமானது கொண்டு வரப்பட்டது. துவங்கிய ஐந்து ஆண்டுக்குள் விவிலிய இறையியலில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் வழங்குவதற்கான பாடத்திட்டங்களோடு உயர்ந்தது. விவிலிய இறையியல் துறை இதனைத் துவங்கியபோது ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்தாலும், பின்னர் தொடர்ந்து அதிகரித்து வந்து தற்போது வரை 303 பேர் விவிலிய இறையியலில் முதுகலைப் பட்டமும் (Licentiate) 65 பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

கல்லூரியின் பரிணாம வளர்ச்சி: நூலகமும் (1978) நிரந்தர அங்கீகாரமும் (1985)

MEP தந்தையர்கள், மறைந்த அருள்முனைவர் பியர் பென்வென் மற்றும் அருள்முனைவர் லூசியன் லெக்ராண்ட் ஆகியோரின் முற்போக்குச் சிந்தனை புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தது. நம் நினைவில் வாழும் கர்தினால் துரைசாமி சைமன், பேராயர் மைக்கேல் அகஸ்டின், பேராயர் ஆனந்தராயர், அருள்தந்தை ஜே.பி. செக்வேரா மற்றும் பல மூத்த பேராசிரியர்களுக்கும், அருள்தந்தை ஜோசப் பிரான்சிஸ், அலாய்சியஸ் சேவியர் ஆகியோருக்கும் இக்கல்லூரி மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளதுமெய்யியல், விவிலிய இறையியல் மறைத்தூதுப் பணியியல் மற்றும் திரு அவைச் சட்டம், மறை அறிவியல் ஆகிய துறைகளில் உயர் கல்வி வழங்கும் கல்வியகமாக இன்று உயர்ந்துள்ளது.

1976 -ஆம் ஆண்டு முதல் குறிப்பிடத்தக்க பல முன்னேற்றங்களை உயர் கல்வியகம் கண்டுள்ளது. 1978-இல் இக்குருமடத்தின் இரு நூற்றாண்டு நினைவாகப் புனித பேதுரு நூலகமும், முதுகலை மாணவர்களுக்கான தங்குமிடமும் கட்டப்பட்டன. இறையியல் அறிவை ஆழப்படுத்த கத்தோலிக்கக் கல்விக்கான பேராயம் 1985-இல் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரிக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கியது.

பொதுநிலையினருக்கான பாடத்திட்டங்கள் (1980) திரு அவைச் சட்டப் படிப்பிற்கான மையம் (1981)

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு பொதுநிலையினரை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு, இறைமக்களுக்கு இறையியலைக் கொண்டு செல்ல புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரி 1980-களிலேயே பல்வேறு பாடத்திட்டங்களை உருவாக்கி, இன்றுவரை கற்பித்துக் கொண்டிருக்கிறது.

1983 -ஆம் ஆண்டு புதிய திரு அவைச் சட்டம் வெளியிடப்பட்ட பிறகு, இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI) உத்தரவின் பேரில் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரியில் திரு அவைச் சட்டம் பயிலும் மையத்தை 1987-இல் தொடங்கியது. அடுத்த ஆண்டே (1988) கத்தோலிக்கக் கல்விக்கான பேராயம் ஒப்புதல் அளித்ததன் பேரில் புனித பேதுரு திரு அவைச் சட்ட மையமானது வத்திக்கான் நகரின் உர்பானியானா பாப்பிறை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டது. இன்று வரை 410 மாணவர்கள் முதுகலை உயர் கல்வியை நிறைவு செய்து இந்தியத் திரு அவைக்குச் சிறப்பான பணியாற்றி வருகின்றனர்.

மெய்யியல் (1991) மறைசார்ந்த அறிவியலில் உயர் கல்வி  (Higher Institute of Religious Education HIRS - 2022) 

புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரி மெய்யியல் முதுகலைப் பட்டப்படிப்பை வழங்க 1991-ஆம் ஆண்டு தனித்துறையைத் துவக்க அங்கீகாரமும் பெற்றது. 1992, ஜூன் முதல் அதற்கான பாடத் திட்டங்களை வகுத்துக் கற்பிக்கத் தொடங்கியது. மறைசார்ந்த அறிவியலில் உயர் கல்வி (Higher Institute of Religious Science - HIRS) ஜூன் 2022 -இல் தொடங்கப்பட்டு, பொதுநிலையினருக்கும் அர்ப்பணிப்பு வாழ்விலுள்ள சகோதர, சகோதரிகளுக்கும் மறைசார்ந்த அறிவியலில் இளங்கலைப் பட்டமும் (Bachelor of Religious Science), முதுகலைப் பட்டமும் (Licentiate in Religious Science) பெறுவதற்கான வழிவகையைத் தருகின்றது.

இணைய வழி இறையியல் கல்வி (St. Peter\'s Online Theology –SPOT 2023)

இறையியல் கல்வியை நேரிடையாகச் சென்று பயில முடியாதவர்களுக்கு இணையம் வழியாகக் கற்பிக்கும் முறையைப் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரி 2023 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. பொதுநிலையினர் மற்றும் அர்ப்பண வாழ்வு சபையினருக்கான இரண்டு வருட இறையியல் பட்டயப் படிப்பு மற்றும் இறையியல், விவிலிய இறையியல், மறைத்தூதுப் பணியியல், திரு அவைச் சட்டம் ஆகிய துறைகளில் ஒருவருட சான்றிதழ் படிப்பிற்கான கல்வியை 950 நபர்களுக்கு வழங்கி வருகிறது.

புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரி ஆளுகையின் கீழ் இந்தியாவில் செயல்படும் 9 இறையியல் கல்லூரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரியின் நோக்க மும் எதிர்கால திட்டமும்

இந்தியத் திரு அவை எதிர்கொள்ளும் இன்றைய சவால்களைத் தத்துவ மற்றும் இறையியல் அறிவுடன் சந்திக்க இக்கல்லூரி முற்படுகிறது. திரு அவை சார்ந்த மேற்படிப்புகளில், அறிவியல் ஆய்வுகளில் ஆர்வத்தோடு ஈடுபட பயிற்சியும், இந்தியக் கலாச்சார, தார்மீக, மத மற்றும் தத்துவ மரபுகளின்படி ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும் இக்கல்வியகம் உதவுகிறது. மெய்யியல், இறையியல், திரு அவைச் சட்டம், மறைத்தூதுப் பணியியல் துறைகளின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன

புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரியானது மென்மேலும் வளர்ச்சி பெற்று இந்தியத் திரு அவைக்குப் பணியாற்ற வாழ்த்துவோம்.