திரு அவை வரலாற்றில் யூபிலி கொண்டாடும் வழக்கம் 13 -ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது. ஓர் ஆண்டு புனித ஆண்டாக அறிவிக்கப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்வாண்டில் பாவங்களுக்குரிய தண்டனை நீக்கம் திருத்தந்தையால் வழங்கப்பட்டது. அதிலிருந்து யூபிலி ஆண்டு ஆண்டவரின் இரக்கத்தையும் மீட்பின் பேறுபலன்களையும் மிகுதியாகப் பெறும் ஆண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது புனித ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது.
யூபிலி
ஆண்டில் புனித வாயில் திறக்கும் பழக்கமும் ஏற்பட்டது கி.பி. 1550 -இல்
தான். இவ்வாண்டு புனித பேதுரு, புனித பவுல், புனித மேரி மேஜர், புனித இலாத்தரன் பேராலயங்களில் புனித வாயில்கள் எக்காள முழக்கத்தோடு திறக்கப்பட்டன. இவ்வாயில்கள் வழி நுழைவது மனிதர்களின் வாழ்வுப் பயணம், இறைவனை நோக்கிய ஆன்மிகப் பயணம் என்பதையும், இறைக்குடும்பத்தின் உறுப்பினர்கள், இறைவனுக்குச் சொந்தமானவர்கள் இவர்கள் என்பதையும் குறித்துக் காட்டுகின்றது. கி.பி. 2000 -ஆம்
ஆண்டில் நாம் கொண்டாடவிருக்கும் யூபிலி 28-வது யூபிலியாகும்.
யூபிலி
என்பது மகிழ்ச்சி. அது நமக்கு நன்றி கொண்டாட்டம். திருவிவிலியத்தில் யூபிலியானது சமூக நீதி, ஒப்புரவு, விடுதலை ஆகியவற்றின் கொண்டாட்டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
“திருச்சபைக்கு யூபிலி என்பது சுருக்கமாக ஆண்டவர் அருள்தரும் ஆண்டாகும். பாவ மன்னிப்பு, பாவங்களுக்குரிய தண்டனை நீக்கம்,
பிணக்கம் கொண்டோர்கிடையே இணக்கம், நிறைந்த மனமாற்றம்... போன்றவற்றிற்குரிய ஆண்டாகும். மற்றக் காலங்களைவிட மிகுதியாகப் பேறுபலன்களை வழங்குதல் யூபிலி ஆண்டுகளின் மரபாகும். மனிதாவதாரத்தை நினைவுகூரும் யூபிலிகளோடு 100, 50, 25 ஆண்டுகள் இடைவெளியில் மீட்பு, இயேசுவின் சிலுவை, கொல்கொதாவில் அவரது இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவாகக் கொண்டாடப்படும் யூபிலிகளும் உள்ளன. இந்தச் சமயங்களிலும் திரு அவை ‘ஆண்டவர் அருள்தரும் ஆண்டை’ அறிவித்து, அவருடைய அருளால் விசுவாசிகள் பலன்பெறச் செய்கிறது! இந்த
நோக்கில், கிறிஸ்து பிறப்பின் இரண்டாயிரம் ஆண்டுகளின் நிறைவு தனிச்சிறப்புடைய ஒரு பெரிய யூபிலியாகும்.
“கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிறித்தவம் மனுக்குலத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளை மனத்தில் கொண்டால், இது கிறித்தவர்களுக்கு மட்டுமல்லாது, மனுக்குலம் முழுமைக்குரிய விழாவாகும். இரண்டாயிரம் ஆண்டுகள் நிறைவுறும் இந்த முக்கியமான வேளையில் திரு அவை கடவுள் முன்வைக்கும் உருக்கமான வேண்டுதல்களில் குறிப்பிடத்தக்கது கிறித்தவர்களின் பல்வேறு பிரிவினரிடையேயும் ஒற்றுமை வளர்ந்து நிறைவு பெறவேண்டும் என்பதாகும்.”
1994 நவம்பர் 10-இல்
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் வெளியிட்ட ‘மூன்றாம் ஆயிரம் ஆண்டு வரும் வேளையிலே’
என்ற மறைத்தூது திருமுகத்தில் இந்தக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன்படி மாபெரும் யூபிலி 2000-க்கான உடனடித் தயாரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
முதல் கட்டம்:
திருவருகைக்காலம்
1994 முதல் கிறிஸ்து அரசர் திருவிழா 1996 வரை என்பதாகும். இதன் ஆய்வுப்பொருள்: கிறிஸ்தியல், நம்பிக்கை, பிறரன்பு, மன்னிப்பு, மனமாற்றம், கிறித்தவ ஒன்றிப்பு, சகிப்புத்தன்மை, இன்றைய வாழ்வில் திரு அவை, சான்று பகர்தல், கடவுளுக்கும்-மனிதருக்குமான ஒரே நடுநிலையாளரும், உலகத்தின் ஒரே மீட்பரும் கிறிஸ்துவே என்னும் உண்மை.
இரண்டாம் கட்டம்:
திருவருகைக்காலம்
1996 முதல் கிறிஸ்து அரசர் திருவிழா 1999 வரை. இதன் ஆய்வுப் பொருள். மூவொரு கடவுள் (1996), இயேசு கிறிஸ்து (1997), தூய
ஆவி (1998), தந்தையாம் இறைவன் (1999).
வத்திக்கானில்
1995 ஜூன் மாதம் இப்பணிக்காகத் தனியொரு செயலகம் தொடங்கப்பட்டது.
யூபிலி-2000
(மதுரை
மறைமாநில
பேராயர்
மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்களின் இறைச்
செய்தி
- 02.01.2000)
“கிறிஸ்து
கடவுளோடு இருந்தவர்; கடவுளாக இருந்தவர்”
(யோவா 1:1-2). அவர் மனு வுரு எடுத்த இந்த மாபெரும் மறைபொருள் நிகழ்ந்த இரண்டாயிரம் ஆண்டினை மாபெரும் யூபிலி ஆண்டாகவும், புனித ஆண்டாகவும் கொண்டாடத் திரு அவை நம்மை அழைக்கிறது.
‘யூபிலி’ என்ற சொல், ‘ஜோபெல்’ என்ற எபிரேய வார்த்தையால் குறித்துக் காட்டப்படுகிறது. இவ்வார்த்தை முதலில் ஆட்டுக்கடாவையும், பின் அறிவிப்பு செய்யப் பயன்படுத்திய அதன் கொம்பையும் குறித்தன (விப 19:13). பழங்கால இஸ்ரயேலில் ஒவ்வொரு 50-வது ஆண்டும் சிறப்பான ஆண்டாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டுக்
கொம்பினாலான எக்காள முக்காளத்தோடு இந்த 50-ஆம் ஆண்டு ஆடம்பரமாகத் தொடங்கப்பட்டதால் இது ‘ஜோபெல் ஆண்டு’ என்று அழைக்கப்பட்டது. ‘ஜோபெல்’ என்ற எபிரேயச் சொல்லுக்கு ‘ஜூபிலுஸ்’
அல்லது ‘ஜூபிலும்’
என்று இலத்தீன் சொல் பயன்படுத்தப்பட்டது. இதற்கு, ‘இடையர்களின் மகிழ்ச்சிக் குரல்’ என்பது பொருள். இவ்வாறு இடையர்களின் மகிழ்ச்சிக் குரல் இஸ்ரயேல் மக்கள் கொண்டாடிய ஜோபெல் ஆண்டுடன் இரண்டறக் கலந்து ‘யூபிலி ஆண்டு’ என்று வழக்கில் உள்ளது.
யூபிலி ஆண்டின்
நோக்கங்கள்
நான்கு
அடிமைகளுக்கு
விடுதலை
(லேவி
25:10): மனிதர்கள்
கடவுளின் சாயலிலும், உருவிலும் படைக்கப்பட்டவர்கள் (தொநூ 1:27). எனவே, அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தம். வேறு எவருக்கும் அவர்கள் அடிமைகளாக முடியாது. ஆகவே அடிமைகளுக்கு விடுதலை அழுத்தம் பெற்றது.
கடன்களுக்கு மன்னிப்பு
(இச
15: 1-2): கடன்களை
மன்னித்தல் மனிதரிடையே உறவைப் புதுப்பித்து புது வாழ்வைக் கொணர்கிறது. மகிழ்ச்சியைக் கொணரும் வாய்ப்பாக அமைகிறது. ஆகவே கடன்கள் மன்னிக்கப்பட்டன.
சொத்துகள் மீட்பு
(லேவி
25:13-14,23): மண்ணுலகு
இறைவனுக்குச் சொந்தம். மனிதர்கள் நிலத்தின் கண்காணிப்பாளர்களே. எனவே அவர்கள் தங்கள் சுயநலத்திற்காகத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட படைப்புகளைப் பாழ்படுத்த உரிமை இல்லை என்பதை இவ்வம்சம் வலியுறுத்துகிறது.
நிலத்திற்கு ஓய்வு
(லேவி
25: 11-12): நிலத்திற்கு
ஓய்வு வேண்டும் என்பது மனிதர்கள் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. இவ்வாறு யூபிலி ஆண்டு உலக வாழ்வில் மனிதர்கள் இழந்துபோன உரிமைகளைப் பெறுதலாகிய சமூக நீதியையும் சமத்துவத்தையும் அருள் வாழ்வில் இறைவனோடும் பிற மனிதரோடும் ஒப்புரவாகி மகிழ்வுடன் வாழும் புது வாழ்வின் பரிமாணங்களையும் வெளிப்படுத்துகின்றது.
புதிய
ஏற்பாட்டில் “ஆண்டவர் அருள் தரும் ஆண்டை அறிவிக்க அவர் என்னை அனுப்பினார்” (லூக்
1:18-19) என்று இயேசு கூறுகின்றார். கிறிஸ்துவில் மலர்ந்த அருள் தரும் ஆண்டு அதாவது ‘யூபிலி ஆண்டு’ மனமாற்றத்தை வலியுறுத்துகின்றது. உலக மதிப்பீடுகளின்படி வாழ்வதை விடுத்து, மாற்று மனநிலை கொண்டிருத்தலையும் பகிர்வையும் பிறரோடு கொள்ளும் உறவில் நீதி, பொறுமை, அடக்கம் ஆகியவற்றையும் கொண்டு ஆவியில் நிறைந்த உரிமை மக்களாய் வாழ அழைப்பு விடுக்கின்றது.