news-details
சிறப்புக்கட்டுரை
புனித பிரான்சிஸ் அசிசி ஆலயத்தின் வரலாறு

1972-ஆம் ஆண்டு கோவை மாநகரத்தில் உள்ள கணபதி பகுதியில் 25 கத்தோலிக்கக் கிறித்தவக் குடும்பங்கள் வசித்து வந்தன. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாத்திமா அன்னை ஆலயத்திற்கு அவர்கள் இறை வழிபாட்டிற்குச் சென்று வந்தார்கள். கப்புச்சின் அருள்பணியாளர்களின் ஆன்மிக வழிகாட்டுதலின்படி, கணபதி பகுதிவாழ் கத்தோலிக்கக் கிறித்தவ மக்கள் வழிநடத்தப்பட்டார்கள்.

மேனாள் ஆயர் மேதகு அம்புரோஸ் ஆண்டகை அவர்களின் பெரும் முயற்சியால் கத்தோலிக்க ஆலயம் கட்ட கணபதி, அத்திபாளையம் பிரிவில் உள்ள அசிசி நகரில் 50 செண்ட் நிலம் 1980-ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. பின்பு அந்த இடத்தில் கணபதி இறைமக்களின் ஆன்மிகத் தேவைகளை உணர்ந்து சிற்றாலயம் கட்டிட முடிவு செய்யப்பட்டு 03-05-1987 அன்று மேனாள் ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணி நிறைவுற்றது. கோவை கணபதி பகுதி தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்து வந்தது. இறைமக்கள் கணபதி பகுதியில் குடியேறும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. கணபதி பகுதியில் கத்தோலிக்கக் குடும்பங்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்தது. சிற்றாலயம் போதவில்லை. ஆலய விரிவாக்கம் தேவைப்பட்டது. கோவை கணபதி பங்கில் உள்ள முக்கியஸ்தர்கள் ஆலய விரிவாக்கத்திற்கு மேனாள் ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களை அணுகினர். ஆயர் அவர்கள் ஆலய விரிவாக்கத்திற்கு ஒப்புதல் வழங்கி, மேலும் ஆலயம் அருகில் இடம் வாங்குவதற்கும் அனுமதி வழங்கினார்.

01-06-1990 அன்று கோவை காந்திபுரம் பாத்திமா அன்னை ஆலயத்திலிருந்து கணபதி பகுதி இறைமக்களைப் புகழ்மிக்க புனிதர் பிரான்சிஸ் அசிசி அவர்களைப் பாதுகாவலராகக் கொண்டு தனிப்பங்காக உருவாக்கி ஆலய விரிவாக்கப் பணியும் தொடங்க அனுமதி வழங்கினார். 09-10-1994 அன்று ஆலய விரிவாக்கம் நிறைவு பெற்று மேனாள் ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் தொழில்களில் மேலும் வேகமாக வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாறியதால், வெளியூர் வாழ் மக்கள் குடியேறும் எண்ணிக்கை மென்மேலும் வேகமாக அதிகரித்தது. 1500 குடும்பங்களுக்கு மேல் புகழ்மிக்க புனித பிரான்சிஸ் அசிசியாரின் பாதுகாப்பில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இறைவழிபாட்டுக்காக வருகின்றார்கள். விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலயத்தில் மேலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, திருப்பலியில் கலந்து கொள்பவர்களில் 50 சதவிகிதம் பேர் வெளியில் நின்று திருப்பலி காணும் நிலை ஏற்பட்டது. அருள்பணியாளர் மற்றும் இறைமக்கள் கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்களை அணுகி புதிய ஆலயம் கட்ட அனுமதி கேட்டனர். முறையான அரசாங்க அனுமதி பெற்று உறுதித் தன்மையுடன் ஆலயம் கட்டிட அறிவுறுத்தி, ஆயர் அனுமதி வழங்கினார்.

2014 ஆம் ஆண்டு பழைய ஆலயம் முற்றிலும்  இடிக்கப்பட்டு புதிய ஆலயத்தின் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக கட்டட உறுதித்தன்மையில் தடங்கல் ஏற்பட்டதால் கோவை ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்கள் ஆலயக் கட்டுமான பணிகளை உடனே நிறுத்தக் கட்டளை பிறப்பித்தார். உறுதித் தன்மையில் உள்ள குறைபாடுகளையும் விதிமீறல்களையும் கண்டறிய ஏழு அருள்தந்தையர்கள் கொண்ட சிறப்புக் குழுவையும், அரசாங்கக் கட்டடப் பொறியாளர்களையும் நியமனம் செய்தார். அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட  பின்னர், உறுதித் தன்மையில் உள்ள குறைபாடுகளும் விதிமீறல்களும் உறுதி செய்யப்பட்டன. கட்டடத்தைத் தாங்கக்கூடிய உறுதித்தன்மை இல்லாததால் ஆயர் அவர்கள் ஆலயப் பணிகளை முற்றிலுமாக உடனே நிறுத்த அருள்பணியாளர்களுக்கு மீண்டும் கட்டளை பிறப்பித்தார்.

திருவழிபாட்டிற்காக ஆலயம் இல்லாமல் கணபதி பிரான்சிஸ் அசிசி பங்கு மக்கள் பெரும் வேதனையை அனுபவித்து வந்தனர். ஆன்மிக வழிபாடின்றி சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசி ஆலய இறைமக்களின் உறவுகள் சிதையத் தொடங்கின. இறைமக்களின் அடிப்படைத் தேவையான மகிழ்ச்சி முற்றிலும் குறைந்தது.

புனித பிரான்சிஸ் அசிசி ஆலய புதிய அருள்பணியாளராக ஜான்பால் வின்சென்ட் அவர்களை, புதிய ஆலயக் கட்டுமான பணிகளை உடனடியாகத் துவங்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடனும், இறைவேண்டலோடும் மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்கள் 2016-ஆம் ஆண்டு நியமனம் செய்தார். கோவை மறைமாவட்ட மேதகு ஆயர், முதன்மை அருள்பணியாளர், பொருளாளர் அருள்பணியாளர், புனித பிரான்சிஸ் அசிசி ஆலய அருள்பணியாளர், பங்கு முக்கியஸ்தர்கள், இறைமக்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் புதிய ஆலயக் கட்டுமான பணிக்கான அனைத்துக் காரியங்களும் இறையருளால் புதியதாகத் தொடங்கப்பட்டது. குறைபாடுகளுடன் கட்டப்பட்ட கட்டடம் முழுவதும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அரசாங்கக் கட்டட அனுமதி, ஆலயம் கட்ட முறையாகப் பெறப்பட்டது. 09-12-2018 அன்று மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. உறுதியான முறையில் நடைபெற கட்டுமான பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங் (130 x 130), ஆலய உட்புறம் (100 x 100), பால்கனி (50 x 100) என்று இறைவனுக்கு நன்றி செலுத்த, இறைமக்கள் திருப்பலியில் செபித்திட பிரமாண்டமான புத்தம் புதிய ஆலயம் உருவாகியுள்ளது.

இறைவனது உடனிருப்பாலும், இறை அன்னையின் பரிந்து பேசுதலாலும் கோவை ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்களின் அறிவுத்தெளிவாலும், நிர்வாக ஆளுமையாலும் தொலைநோக்குப் பார்வையாலும் கோவை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர் ஜான் ஜோசப் ஸ்தனிஸ் அவர்களின் முழு முயற்சியாலும் கோவை மறைமாவட்டப் பொருளாளர் அருள்பணியாளர் அந்தோணி செல்வராஜ் அவர்களின் முழு ஒத்துழைப்பாலும் கோவை கணபதி அசிசி நகர், புனித பிரான்சிஸ் அசிசி ஆலய அருள்பணியாளர் ஜான் பால் வின்சென்ட் அவர்களின் அர்ப்பணிப்பாலும், புனித பிரான்சிஸ் அசிசி ஆலய இறைமக்கள் அனைவரின் நம்பிக்கை நிறைந்த இடைவிடாத செபத்தாலும், ‘நமது வாழ்வு கடவுளால் உயர்த்தப்பட்டதுஎன்ற உண்மையான எண்ணம் கொண்ட நன் கொடையாளர்களாலும் கோவை மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளின் பங்கு அருள்பணியாளர்கள், இறைமக்கள், பிற மத சகோதர-சகோதரிகள் வாரி வழங்கிய பொருளுதவியால் பிரமாண்டமான புனித பிரான்சிஸ் அசிசி ஆலயம் இறைவனின் மகிமைக்காகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அசிசி ஆலயக் கட்டுமான பணிக்காகக் கடுமையாக உழைத்தவர்கள், திறமையாக உழைத்தவர்கள் அனைவருக்கும் வாழ்நாள் நன்றிகள்.

நம் வாழ்வுவாசகர்களும் இறைமக்களும் ஆலய அர்ச்சிப்பு விழாவில் குடும்பமாகக் கலந்துகொண்டு இறை வரங்களைப் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கின்றோம்; அழைப்பில் மகிழ்கின்றோம்.