news-details
சிறப்புக்கட்டுரை
அரங்கேறும் அரசியல் சூழ்ச்சிகள்

அரசியல் சிந்தனையின் அவையச் சிதைவு; தலைவர்களின் அறிவுசார் வறட்சி; நவீன சிந்தனைக்கு ஏற்பட்ட துயர முடிவு; அரசியலில் நேர்மையும் நெறியும் குறைந்துவிட்டது. உரையாடல் சுருங்கிப்போய்விட்டது. தொலைநோக்குப் பார்வை நலிந்துவிட்டது  (யோகேந்திர யாதவ்ஆனந்த விகடனில்எழுதிய கட்டுரையிலிருந்து).

இந்திய ஒற்றுமை இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான திரு. யோகேந்திர யாதவ் அவர்களின் கருத்தில் தொனிக்கும் இவ்வார்த்தைகள் எவையுமே மிகையானவை அல்ல; இன்றைய அரசியல் போக்கை அலசிப் பார்ப்போர் எவருக்கும் இவ்வார்த்தைகள் வியப்பைத் தராது என்பதே உண்மை.

அரசியல் களங்களில் எப்போதுமே நேர்மையும் நாணயமும் முழுமையாக இடம்பெறவில்லை எனினும், நிலவும் இன்றைய அரசியல் போக்கின் ஒவ்வொரு பகுதியும் யாதவ் அவர்களின் கூற்றை நியாயப்படுத்துகின்றன. குறிப்பாக, ஆளும் அரசியலாரின் நேர்மையற்ற, நாணயமற்ற தகிடுதத்தங்கள் நேர்மை வேண்டிநிற்கும் குடிமக்களை அரசியல் அணுகலிலிருந்தும், இவ்வரசியல் மேற்கொள்ளும் சமூகத்திலிருந்தும் எட்டி நிற்கவே செய்து விடுகிறது. அரசியலாரின், குறிப்பாக ஆளும் அரசியலாரின் அனைத்து அரசியல் வடிவங்களும் சூதும் வஞ்சமும் பொய்யும் நிறைந்தே காணப்பெறுகின்றன. வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்க்கின்ற ஆற்றல் படைத்தோர் இப்போக்கில் காணும் பொய்மையை உணர்ந்தறிய முடியும். இவ்வாய்ப்பினைப் பெறாத புதிய சமூகம், உண்மை அறியும் வாய்ப்பினை எப்படிப் பெறும்?

தி இந்துநாளிதழில் (12, டிசம்பர் 2024) மேற்கண்ட தலைப்பு பொருந்துமாறு ஒரு செய்தி வெளிவந்துள்ளது. ஆளுநர் இரவி அவர்கள் குமரி மாவட்டத்தில்அய்யா வழி ஆய்வு மையம்ஒன்றைத் துவங்கி வைக்கிறார். இந்த அய்யா அவர்கள், தான் சார்ந்த சமயத்தை விட்டு விலகாமல், உள்ளே இருந்து புரட்சி செய்தவர். அன்றைய திரு விதாங்கூர் சமஸ்தானத்தின்மேல்சாதிஆதிக்கத்தையும், வணங்கும் கடவுளைக்கூட சாதிய மேலாதிக்கத்தார் தமதாக்கிக் கொண்டதையும், இந்து மதத்திற்குள்ளே இருந்து கொண்டு எதிர்த்துக் கலகம் செய்தவர்அய்யாஎன்று அழைக்கப்பெறும் முத்துக்குட்டி.

இவ்வாறு கடவுளரைக்கூட சமநிலையில் வழிபட மறுத்த சனாதனத்தை வெறுத்தொதுக்கிய அய்யா அவர்களைப் பற்றிய ஆய்வகத்தை, முழுமையாகச் சனாதனத்தை நம்பும் ஒருவரை வைத்துத் தொடக்க விழா நிகழ்த்துவது வேடிக்கையல்லவா?! அவர் சொல்கிறார்:

பிரதமர் மோடி போன்று, இந்நாடு பற்றியிருக்கும் சனாதனத் தர்மம் பற்றித் தெளிவான புரிதல் உள்ளவர் எவரும் இல்லை. பிரதமர் மோடி அவர்கள் இந்நாட்டின் 140 கோடி மக்களையும் எந்தவிதப் பாகுபாடுமின்றி வழிநடத்துகிறார். மோடி அவர்கள் அய்யாவின் உள்ளடங்கிய கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். சனாதனத் தர்மம் என்பது அனைவரையும் சமமாகப் போற்றுவது.”

சனாதனத்தை ஆளுநர் இரவி நம்பலாம்; பிரதமர் மோடி நம்பலாம். ஆனால், அய்யா வைகுண்டர் ஏற்றுக்கொண்டவரா? இரவி எப்படி வேண்டுமானாலும் புரட்டலாம். ஆனால், இம்மனிதரை எந்த அடிப்படையில் விழா நடத்துவோர் அழைத்தனர் என்றுதான் நமக்குப் புரியவில்லை. இதில் ஏதேனும் சூதும் இருக்கலாமோ?

சூது கவ்விய புது அரசியல் வரவு

அண்மையில் நிகழ்ந்தேறிய அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீடு தொடர்பாக எழுந்த சர்ச்சையில் புகுந்த சூது எனும் கேட்டைப் பலர் புரிந்திருக்கலாம்; பலர் புரிய மறுக்கலாம். ஆனால், இந்நிகழ்வுகளில் புகுந்து நாடகமாடிய சூது என்னும் கயமையை நாம் புரிந்துகொள்ளல் இன்றைய கட்டாயத் தேவை.

மதச்சார்பற்றக் கூட்டணியுள் வலுவான ஆளுமையாக இயங்கும் திருமாவளவனின் உறுதியான நிலைப்பாட்டைத் தகர்க்கும் அளவில் நடந்த வஞ்சகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கட்சிகள் பல தம் பகைமையை மறந்து ஒன்றுபட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் தலைமையிலான அரசையும் ஆதரித்து வருவதை நாம் நன்கறிவோம். சமீபத்தில் உருவாகியுள்ள ஒரு தாக்குதல் அணியில் புதிதாகச் சேர்ந்துள்ளவர் நடிகர் விஜய். பாசிசத்தைப் பாயாசமாகச் சித்தரித்தவர் இவர். இக்கூற்றோடு தி.மு.. அரசையும் தன் முதல் மாநாட்டில் சாடிச் சென்றவர். பல நாள்களாகக் காணாமல் போனவர் தனக்கு அறிமுகமே இல்லாத அல்லது இவரின் எந்த நிலையிலும் அறியத் தேவையில்லாத ஓர் உன்னதமான அரிய மனிதர் பற்றிய நூல் ஒன்றை வெளியிட அழைக்கப்பெறுகிறார். என்ன வேடிக்கை இது? விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவனைச் சரியாக உள்ளிழுத்து, கூட்டணியைச் சிதைக்க முயன்ற சதி எப்படியோ உடைந்த பின்பும் ஏற்கெனவே திட்டமிட்ட சதி உயிர்ப்புக்குள்ளாக சதியின் வழி தொடர்ந்தது. அம்பேத்கர் பணியிலும் வாழ்விலும் அவர்தம் அர்ப்பணத்திலும் சிறிதும் தொடர்பற்ற ஒரு நடிகரிடம் நூல் வெளியிடும் வாய்ப்பு வழங்கப்பெறுகிறது. இவர் கூட்டிய முதல் மாநாட்டின் முகப்பில் இவர் வைத்த அம்பேத்கர் படம் ஒன்றே அம்பேத்கருக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு.

இம்மேடையை உருவாக்கி, நூல் வெளியீட்டை நடத்தியவிகடன்பிரசுரத்தின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை கேள்விக்குள்ளாகிறது. அம்பேத்கர் நூலை வெளியிடத் தெரிவு செய்யப்பட்ட மனிதர், அதற்கான அரங்கு எல்லாம் வணிக நோக்காய் இருப்பினும், இதன் பின்னிருக்கும் அரசியல் சூது மற்றும் வஞ்சத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆயினும், ‘ஆனந்த விகடன்என்னும் வணிக ஊடகம் விஜய் என்னும் நடிகரை வைத்து ஆடிய விஷம நாடகத்தை மக்கள் அறிந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வருவோம்... இந்நிகழ்வில் அம்பேத்கர் பேரன் கலந்துகொள்கிறார். அம்பேத்கரின் சித்தாந்தத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட நீதியரசர் சந்துரு கலந்துகொள்கிறார். சந்துரு தன் உரையில் அம்பேத்கரைப் பற்றிப் பேசிய விசயங்கள் இன்னும் பொதுவெளிக்குப் பெரிதாக வரவில்லை. நடிகர் விஜய் பேசும் முன்னரே சந்துரு பேசி முடித்த நிலையில், விஜய் தனது நீண்ட உரையில் என்ன பேசினார்? சந்துரு அவர்கள் அம்பேத்கரின் அர்ப்பணத்தை, அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை, அவர் சந்தித்த சவால்களை எடுத்துக்காட்டிவிட்டு, ஒன்றியத்தை வழிநடத்தும் இன்றைய ஆட்சியாளர் என்ன செய்கின்றனர் என்று கேள்விக்குட்படுத்தினார். அம்பேத்கர் பேரன் இன்று பிணையில் இருக்கிறார். ‘உபாஎன்ற கொடிய கறுப்புச் சட்டம் மூலம் அருள்தந்தை ஸ்டேன் சுவாமி கொலை செய்யப்பட்ட நிலை பற்றியெல்லாம் அவர் பேசினார். இராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடம் காட்டி வருவதன் அவசியத்தை எடுத்துக்காட்டினார்.

நடிகர் விஜய் அவர்களுக்கு சந்துரு முன்வைத்த விசயங்கள் புரியாமல் இருக்க வாய்ப்புண்டு. அதனை நாம் புரிந்துகொள்கிறோம். அம்பேத்கரைப் பற்றிய நூல் ஒன்றினை வெளியிடத் தகுதி பெற்றவரா இவர்? எத்தகுதியும் அற்ற ஒருவர் அம்பேத்கர் பற்றி என்ன பேசினார் என்பது இங்கு முக்கியமல்ல. ஆனால், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட்டணியை உடைக்கும் பணியைச் செய்த சதிக் கூட்டத்துள் இவரும் இணைந்துகொண்டதுதான் பெரிய அவலம்.

திருமா கூட்டணியின் அழுத்தத்தால் விழாவில் கலந்துகொள்ளவில்லைஎன்றும், ‘அவர் எங்கள் நினைவில்தான் இருப்பார். கூட்டணி பலம் மைனஸ் ஆகிவிடும்என்ற பேச்செல்லாம் யாரைக் குறி வைத்து? அரசியல் ஞானம் திரு. விஜய் அவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ... அரசியல் சூதாடிகள் வலையில் அருமையாக விழுந்துள்ளார் விஜய் அவர்கள். நடந்த அந்த நூல் வெளியீட்டு விழாவின் ஒவ்வோர் அசைவிலும் ஒரு சதியின் நிழல் இருந்தது என்பதே உண்மை.

ஊழலே பிரச்சினையாம்!

விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ச்சுனா அவர்களும் விஜய் கூட்டணியில் புதிய அவதாரம் எடுத்து சதிக்கூட்டத்துள் இணைந்துள்ளார். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஊழல் நிறைந்த அரசு என்று வசைபாடினார் இவர். ஆளும் அரசுகள் எவையாக இருந்தாலும், அவை ஊழலற்ற அரசாக இருக்க வேண்டுமென்பதில் இரு வேறு கருத்தில்லை. சமூக நீதியை உள்ளடக்கமாகக் கொண்ட இந்தத்திராவிட மாடல் அரசுஊழல் கறைபடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆவல். ஆனால், ஊழல் எனும் நோய் சனநாயகத்தின் பெயரால் அமைந்து வரும் அனைத்து அரசுகளின் பொது இயல்பாய் இருக்க, திராவிட முன்னேற்றக் கழக அரசு மட்டுமே ஊழல் கறை படிந்த அரசாகச் செயல்படுவதாகக் குறிவைத்துக் குற்றம் சாட்டுதலில் ஒரு சூது இருப்பதையே அனுமானிக்க முடிகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்துள்ள கூட்டணி ஒரு கொள்கைக் கூட்டணி. ஆனால், இந்தியாவில் வளர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் அணியோ சனநாயகத்தையும், சனநாயகம் காக்க உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தையும் உருக்குலைக்கின்ற வகையில் உருவான கூட்டணி. இக்கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளும் குறைந்தபட்சபுரிதலோடுஇணைந்தவைதாம்.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தலைமையேற்றுள்ள தி.மு..வைச் சாடும் எதிர்ச் சக்திகள் இக்கூட்டணியின் பலத்தைக் குலைக்கும் நோக்கிலேயே இன்று தீவிரமாகச் செயல்படுகின்றன. இச்சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே திருமாவை வெளியே கொணர்வதற்கான முயற்சி! இச்சூதாட்டத்திற்கு திருமா பங்காளியாகவில்லை என்பதுதான் இவர்களுக்கு ஏமாற்றம்.

முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுமீது ஊழல் புகாரைச் சுமத்தி, தலைநகரில் பெரிய அளவில் போராட்டம் நடத்தியவர் அன்னா ஹசாரே. ஊழல் புகார்களை மட்டுமே முன்வைத்து போராட்டம் நடத்திய இவர் வகுப்புவாதம் பற்றியோ, பிரிவினைவாதம் பற்றியோ, மதவாதிகள் பேசிய பொய்த்தேசியம் பற்றியோ கவலைப்படவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ வேண்டும் என்ற மதவாதிகளின் ஒரே கனவுக்கு இந்ததியாகிதுணை போனார். ஊழலை எதிர்த்த போராளி அன்னா ஹசாரே இன்று காணாமற்போனார். பத்தாண்டு கால மோடி அரசு ஊழலற்ற அரசு என்று இவரால் இன்று கூற முடியுமா?

நாடு முழுவதும் ஒரு சித்தாந்தப் போரை முன்னெடுக்க வேண்டிய கட்டாயச் சூழல் இன்று. சனநாயகமும் சமயச் சார்பின்மையும் காக்கப்பெற வேண்டிய நிலையில், திட்டம் போட்டு நடத்தப்படும் சதிகளை, இச்சதிகளின் பின்னிற்கும் வஞ்சகர்களை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?

ஆர்.எஸ்.எஸ். துவங்கிய காலம் முதல், இதன் கிளை அமைப்புகளாகிய அனைத்துப் பரிவாரங்களும் ஒரு சூழ்ச்சியின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன. இறுதியாக, தாம் கட்டமைக்க விரும்புகின்ற இந்து இராஷ்டிராவுக்கான படிக்கற்களை வெகு தந்திரமாகக் கட்டி வருகின்றனர். பாசிஸ்டுகள் சனநாயகத்தை நம்பாதவர்கள்; ஆனால், பாசிசத்தின் வெற்றி சனநாயக வழிதான் நடந்திருக்கிறது என்பதே வரலாறு. இன்றைய அரசு முன்னெடுத்த அனைத்துத் திட்டங்களும் இந்து இராஷ்டிரத்தை முன்வைத்தே செய்யப்படுகின்றன. இராமர் கோவிலுக்கான முன்னெடுப்பின் வெற்றி, காஷ்மீரின் தனித்துவம் அழிப்பு, உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு, புதிய தேசியக் கல்விக்கொள்கை என்பனவெல்லாம் இந்து இராஷ்டிரத்தை நியாயப்படுத்துவன. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம்என்பன இவர்களின் இலக்கு. ஒற்றைமயம் என்பது இந்து இராஷ்டிரத்தின் இறுதி இலக்கு. இவ்விலக்கை நாடாளுமன்ற சனநாயகம் மூலம் வென்றெடுக்க மதவாதிகள் எடுத்து வைக்கும் அடியை நாம் மறந்துவிடக்கூடாது.

1991-இல் கொண்டு வந்த ஆலயங்களின் பாதுகாப்புச் சட்டம், 1947-ஆம் ஆண்டில் வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ, யாருக்கானதாக இருந்தனவோ அவைகளைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்யக்கூடாது என்ற விதி இருந்தபோதும், பாபர் மசூதி இந்துகளுக்கானதாக உச்ச நீதிமன்றத்திற்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் மூலம் மீறப்பட்ட நிலையில், அவ்விடத்தில் இராமருக்கான பெரிய ஆலயம் உருவாகியது. இவ்விதி தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், இன்று .பி.யின் சம்பலில் மசூதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. காசியின் கான்வாப்பில் மசூதியின் பாதிப்பகுதியில் இந்துகள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.

இவையெல்லாம் எங்கோ நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள் அல்ல; அனைத்து நிகழ்வுகளும் ஒரே நோக்கில் பின்னப்பட்ட சூழ்ச்சிகளே ஆகும்.