news-details
ஆன்மிகம்
கொடுத்தலே இறைவேண்டல் (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 33)

இறைவேண்டல் என்றால் சொற்கள், செபங்கள், பாடல்கள், வழிபாடுகள் என்பதையும் கடந்து அது பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது என்பதை நாம் உணர வேண்டும். இறைவேண்டல் என்பதை நாம் புரிந்துகொள்ளும் பார்வையை விரிவாக்கி, நம் இறைவேண்டல் தளங்களைப் பெரிதாக்க அழைக்கிறது இறைவார்த்தை. அதன்படி கொடுத்தலும் இறைவேண்டலே.

கொடுப்பது என்பது அடிப்படையில் ஓர் இறையியல்பு. கடவுள்தாம் கொடுப்பவர். நாம் அனைவரும் அவரிடமிருந்து பெறுபவர்களே. “உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்போது அவரும் ஞானத்தைக் கொடுப்பார்என்று கூறும் யாக்கோபு, அதற்கான காரணத்தை இவ்வாறு கூறுகிறார்: “அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர் (யாக் 1:5).

இந்தக் கொடுத்தல் பண்பை இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டு இறைவனுக்கும் பிறருக்கும் கொடுப்பவர்களாக மாறவேண்டும். எனவேதான், “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்\" (லூக் 20:25) என்றார் இயேசு. கடவுளுக்கு உரிய ஆராதனை, இறைப்புகழ்ச்சி, அர்ப்பணம் ஆகியவற்றை நாம் கொடுக்க முன்வர வேண்டும். இந்தக் கொடுத்தலும் ஓர் இறைவேண்டலே. இந்தப் புரிதலின்படி எப்போதெல்லாம் நாம் கடவுளுக்கு ஆராதனை, புகழ்ச்சி, கையளிப்பு, காணிக்கை ஆகியவற்றைக் கொடுக்கிறோமோ, அப்போதெல்லாம் நாம் இறைவேண்டல் செய்கிறோம் என்று பொருள் கொள்ளலாம்.

இந்த உண்மையை எபிரேயர் திருமடல் விவரித்து நம்மை வியக்க வைக்கிறது. “அவர் வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக! அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும் (எபி 13:15) என்கிறது அம்மடல். பாருங்கள், இறைப்புகழ்ச்சியைஉதடுகள் செலுத்தும் காணிக்கைஎன்று அழகாக அழைக்கிறது இத்திருமடல். அதன்படி, நாம் உதடுகளால் காணிக்கை செலுத்தும்போது, அது கடவுளுக்கு உகந்த இறைப்புகழ்ச்சியாக மாறுகிறது.

கொடுத்தலும் ஓர் இறைவேண்டலே என்பதைச் சற்று ஆய்வு செய்யும்போது, அது இறைவேண்டலின் உயர்ந்த தளங்களுள் ஒன்று என்பதை நாம் உணர்கிறோம். “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவா 15:13) என்பது இயேசுவின் அருள்வாக்கு. எனவே, இறைவேண்டலின் செயல் வடிவமான கொடுத்தலை நாம் நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டும். முதலில் கடவுளுக்கு நம் நேரத்தை, அன்பை, ஆராதனையை, புகழ்ச்சியைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். ‘செபிக்க நேரமில்லைஎன்பது எவ்வளவு பெரிய முரண்பாடு! நாம் இருப்பதும், இயங்குவதும், வாழ்வதும் கடவுளின் இரக்கத்தினால்தானே! நம் வாழ்வும், நம் நேரமும் கடவுளின் கொடைதானே! அவருக்கு நன்றி செலுத்தவும், அவரை ஏத்திப்போற்றவும் நேரமில்லை என்பது இறைநிந்தையல்லவா! எனவே, நம்மிடம் இருப்பவை அனைத்திலும் சிறந்தவற்றை நாள்தோறும் தவறாது கடவுளுக்குக் கொடுப்போமாக. அதுவே சிறந்த இறைவேண்டல்.

இந்தப் பார்வையைச் சற்று நீட்டித்தால், மனிதருக்குக் கொடுப்பதும் இறைவேண்டலே என்பதை நாம் காணலாம். எனவே, மனிதருக்கும் நமது நேரம், அன்பு, பாராட்டு, பணம், திறமைகள், ஆற்றல்கள், மன்னிப்பு என எவற்றையெல்லாம் கொடுக்க இயலுமோ, அனைத்தையும் கொடுப்போம். அதுவே நம் சிறந்த இறைவேண்டல் என்பதை உணர்வோம்.

கொடுப்பது ஓர் இறைவேண்டல் மட்டுமல்ல, அது ஓர் ஆசியும் கூட. பிறருக்கு நாம் கொடுக்கும்போதெல்லாம், கடவுள் நமக்குத் திருப்பித் தருகிறார். “கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக் 6:38) என்ற இயேசுவின் அருள்மொழி, கொடுப்பதன் மேன்மையையும், ஆசியையும் எடுத்துச் சொல்கிறது. அது மட்டுமல்ல, “மிகச் சிறியோராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 25:40) என்னும் இறைமொழி மனிதருக்குக் கொடுப்பவையெல்லாம், கடவுளுக்கே போய்ச்சேர்கின்றன என்கிறது.

எனவே, கொடுப்பதை ஒரு வாழ்வியல் நெறியாக மாற்றிக்கொள்வோம். உண்மையில் உழைப்பதன் நோக்கமே நலிவுற்றோருக்குக் கொடுக்கவே என்னும் வியப்பான செய்தியைப் பவுலடியாரிடம் கற்றுக்கொள்கிறோம். “பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன் (திப 20:35) என்கிறார் பவுல்.

கொடுக்கும்போது நாம் இரண்டு மனநிலைகளை நமதாக்க வேண்டும். ஒன்று, தேவைக்கு மேல் உள்ளவை அனைத்தும் கொடுக்கப்பட வேண்டும். “உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு; உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்து விடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே (தோபி 4:16) என்பது தோபித்து தன் மகனுக்குக் கொடுத்த அறிவுரை. இரண்டாவது, “மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர் (2 கொரி 9:7).

கொடுப்பதே பேறு, கொடுப்பதே இறைவேண்டல், கொடுப்பதே இறையாசி. அதை முக மலர்ச்சியோடு, உளமாரச் செய்வோம்.