“எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது” (உரோமையர் 5:5) என்று உரோமை மக்களுக்குப் புனித பவுல் எடுத்துரைத்த நம்பிக்கையான இறைவார்த்தை 2025-ஆம் ஆண்டிற்கான யூபிலி ஆண்டின் மையக்கருப்பொருளாக அமைந்துள்ளது. ‘எதிர்நோக்கின் பயணிகள்’ என்ற மையச்சிந்தனையோடு, வாழ்வைக் கொண்டாட இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம் இந்த யூபிலி ஆண்டு.
யூபிலி
ஆண்டு என்பது மக்கள் தங்களின் நம்பிக்கையைப் புதுப்பிக்கவும், தங்களின் பாவங்களுக்காக வருந்தவும் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கவும் திருப்பயணம் மேற்கொள்ளவும் பிறரன்புப் பணிகளைச் செய்யவும் முழுமையான இன்பத்தோடு வாழ்வதுதான் என்பதை லேவியர் 25:8-13 இறைவார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த இறைவார்த்தைதான் யூபிலி ஆண்டிற்கான அடித்தளம்.
எபிரேய
வார்த்தையான ‘யோபெல்’ (yobel)
அடிமைகளின் விடுதலை ஆண்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இது ஒவ்வொரு 50-வது வருடமும் விடுதலையின் ஆண்டாகக் கொண்டாடப்பட குறிக்கும் வார்த்தை. iobeleus என்ற
இலத்தீன் வார்த்தை yobel என்ற
எபிரேய வார்த்தையிலிருந்து வந்தது. இலத்தீன் வார்த்தை iubilare என்பதற்கு
‘மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிப்பது’ என்பது
பொருள். ‘ஜூபிலி’ என்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் வார்த்தையான iobelens என்பதிலிருந்து
வந்தது. பெரும்பாலும் மன்னர்களின் ஆட்சியுடன் தொடர் புடைய கொண்டாட்டங்களைக் குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
வரலாற்றில்
யூபிலி ஆண்டு எப்பொழுது தொடங்கப்பட்டது? கி.பி. 1300-ஆம்
ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி திருத்தந்தை எட்டாவது போனிஃபாஸ் முதல் யூபிலி ஆண்டைக் கொண்டாடினார். ஒவ்வொரு 100 வருடத்திற்கு ஒருமுறை எனக் கொண்டாடப்பட்ட யூபிலியை, 1343 -ஆம் ஆண்டில் திருத்தந்தை ஆறாம் கிளமெண்ட் 50 வருடங்களுக்கு ஒருமுறை என மாற்றியமைத்தார். 1389-ஆம் ஆண்டில்
திருத்தந்தை ஆறாம் அர்பன் கிறிஸ்துவின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றம் கொண்டு
வந்தார். பின்னர் 1470-ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் பவுல் 25 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடலாம் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். இந்த முறையைத்தான் இன்றும் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
வரலாற்றில்
இரண்டு வகையான யூபிலி ஆண்டைக் கொண்டாடி வருகின்றோம். ஒன்று, வழக்கமான யூபிலி; மற்றொன்று, சிறப்பான தருணங்களில் கொண்டாடப்படும் யூபிலி.
சிறப்புத் தருணங்களில்
கொண்டாடப்பட்ட
யூபிலிகள்
• 1933-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பத்திநாதர் 1900-ஆம் ஆண்டை இயேசுவின் மரணத்தைக் குறிக்கும் வகையில் சிறப்பு யூபிலியை முதன்முறையாகக் கொண்டாடினார்.
• 1983-ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதலின் 1950-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் யூபிலி ஆண்டு அறிவிக்கப்பட்டு, சிறப்பு செய்யப்பட்டது.
• 2016 -ஆம் ஆண்டு மக்கள், இறைவனின் இரக்கத்தை முழுமையாக அனுபவிக்க இரக்கத்தின் மாபெரும் யூபிலி ஆண்டாகக் கொண்டாடப்பட்டது.
• வருகின்ற 2033-ஆம் ஆண்டை, இயேசுவின் 2000-ஆம் ஆண்டு இறப்பு, உயிர்ப்பைக் கொண்டாடும் வகையில் சிறப்பான யூபிலியாகக் கொண்டாடலாம் என்ற திட்டமும் உள்ளது.
இவ்வருட
யூபிலி ஆண்டின் முக்கியத்துவம் என்பது இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளிவந்த 60-வது வருடத்தை நினைவுகூருதல்; மேலும், இயேசு பிறந்து 2025 வருடத்தின் நிறைவை நினைவுகூர்ந்து கொண்டாடுவது இந்த யூபிலி 2025-இன் நோக்கம். இந்த யூபிலி ஆண்டைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி வத்திக்கானில் தொடங்கினார். 2026 -ஆம் ஆண்டு ஜனவரி 06 -ஆம் தேதியுடன் யூபிலி நிறைவுபெறுகின்றது.
யூபிலி
ஆண்டின் தொடக்க நிகழ்வு டிசம்பர் 24 -ஆம் தேதி வத்திக்கானிலுள்ள புனித பேதுரு பேராலயத்தின் புனிதக் கதவுகளைத் திருத்தந்தை திறந்துவைத்து ஆரம்பித்தார்.
புனிதக்
கதவு என்பது வெளிப்புற அடையாளத்தைவிட ஆன்மிக அடையாளம் என்பது முக்கியம். ஆயன் தன் மந்தைகளைத் தன் கொட்டிலுக்குள் வருவதை உறுதி செய்வதுதான் இந்தப் புனிதக் கதவின் நோக்கம். புனிதக் கதவுக்குள் மக்கள் நுழைவது என்பது தங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்துள்ளது எனத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
“கத்தோலிக்கத் திரு அவை கிறிஸ்துவின் ஒவ்வொரு செயலிலும் பெருமை கொள்கிறது. இருப்பினும், அவளுடைய உயர்ந்த மகிமை சிலுவையாகும்” என
நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த எருசலேமின் புனித சிரில் கூறியுள்ளார். அப்படிப்பட்ட புனித சிலுவை, யூபிலி ஆண்டின் புனிதக் கதவு வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. இச்சிலுவை இத்தாலிய கைவினைக் கலைஞர் ரிக் கார்டோ இஸி என்பவரால் உருவாக்கப்பட்டது. சிலுவையின் மறுபுறம் 2025 யூபிலின் அதிகாரப்பூர்வ இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது, இது உலகம் முழுவதிலுமிருந்து வரும் நம்பிக்கையாளர்களின் சின்னமாகும்.
யூபிலி
ஆண்டின் இலச்சினையில் நான்கு உருவங்கள் உள்ளன. அவை நான்கு வெவ்வேறு நிறங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இது உலகின் நான்கு திசைகளிலிருந்து வரும் மக்களைக் குறித்துக்காட்டுகின்றது. அவர்கள் ஒவ்வொருவரும் பிணைப்போடு, இணைந்து வருகின்றார்கள். இது அவர்கள் ‘திருப்பயணிகள்’ என்பதையும்,
அனைவரும் தனித்தனியாக இல்லாமல், இணைந்து, ஒற்றுமையுடன் வருவதைக் குறித்துக் காட்டுகின்றது. அவர்கள் அனைவரும் சிலுவையை நோக்கி வருகின்றார்கள். சிலுவை என்பது நம்பிக்கையின் சின்னம். அமைதியற்ற நீர் குறியீடு என்பது வாழ்க்கையில் நாம் அமைதியற்ற நிலையில் இருக்கின்றோம்; நாம் அமைதியோடு வாழ நங்கூரமாக இருக்கும் சிலுவையைப் பற்றிக்கொண்டு வாழ்வதைக் குறித்துக்காட்டுகின்றது.