பொங்கல் திருவிழா! எனக்கு மிகவும் பிடித்த சமூகத் திருநாள் இது. பள்ளிக் காலத்தில் நடிகைகள் படம் போட்ட வாழ்த்து அட்டைகளைப் பகிர்ந்து கொள்வோம். அந்தப் பழக்கம் இப்போது வழக்கொழிந்து விட்டது. விளையாட்டுப் போட்டிகள் முன்பை விட உற்சாகமாகவும் விரிவாகவும் நடத்தப்படுகின்றன. எல்லா ஊர்களிலும் ஆண்கள் பானை உடைக்கிறார்கள். பெண்கள் கோலம் போடுகிறார்கள். போலிஸ் பாதுகாப்போடு, இளைஞர்கள் காளைகளை அடக்குகிறார்கள். ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு அரிசி, கரும்பு, சேலை, வேட்டி போன்ற பண்டங்கள் உள்ளடக்கிய பரிசுத் தொகுப்பு கொடுக்கின்றது. இந்த வருடம் 1000 ரூபாய் ரொக்கம் கிடையாதாமே? டிவியில் இப்போதுதான் சொன்னார்கள். அதைக் கேட்டதிலிருந்து என் வீட்டில் சமைக்கின்ற அம்மா பயங்கர ‘அப்செட்’ என்பதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.
பொங்கலுக்குப்
பல்வேறு நோக்கங்கள் கற்பிக்கப்பட்டாலும், ஆதாரமாக அது ஓர் அறுவடைத் திருவிழா. உலகின் எல்லாப் பண்பாடுகளிலும் அறுவடையைக் கொண்டாடும் மரபு இருக்கிறது, திருவிவிலியக் கலாச்சாரம் உள்பட. இயேசு பொங்கல் கொண்டாடினார். வருடத்திற்கு ஒரு முறை அல்ல; மூன்று முறை! இயேசுவும் சமகால யூதர்களும் கொண்டாடிய மூன்று முக்கியச் சமயத் திருவிழாக்கள் அடிப்படையில் மூன்று தானியங்களின் அறுவடையை ஒட்டி அமைந்தவை. விரிவாகப்
பார்க்கலாம்.
பாஸ்காத் திருவிழா!
இதுதான்
வருடத்தின் முதல் திருவிழா. வரலாற்று ரீதியாக இவ்விழா இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாடியது. இது வாற்கோதுமை (barley) அறுவடையின் முடிவில் நடைபெற்றது. இஸ்ரயேல்
நாட்டில் வருடத்தின் தொடக்கத்தில் மகசூலான தானியம் வாற்கோதுமை. வசந்தகாலத்தில் அறுவடை செய்யப்பட்டது. பாஸ்கா திருவிழாவைக் கொண்டாட எருசலேமுக்கு வந்த மக்கள்
எல்லாரும் தங்களோடு ஒரு கைப்பிடி அளவு வாற்கோதுமையைக் கொண்டு கடவுளுக்குப் படைத்தார்கள். பாஸ்காவிற்கு
அடுத்த நாள் குரு, வாற்கோதுமை அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டை எடுத்து ஆண்டவருக்கு முன் ஆரத்திப் பலியாகச் செலுத்தினார். ‘இவர்
வழியாக’ சமயத்தில்
நம் பிள்ளைகள் தூப, தீப ஆரத்தி காட்டுவது போல.
வாற்கோதுமை
மிக விரைவில் விளையும் ஒரு தானியம். 6 முதல் 8 வாரங்கள் போதும் என்கிறார்கள். மிக வலிமையான தானியமும் கூட. சீக்கிரம் கெட்டுப் போகாது. வெப்பம், குளிர் போன்ற கால நிலைகளைத் தாங்கிப்பிடித்து நீண்ட காலம் இருக்கும். இறைவாக்கினர் எலிசா காலத்தில் மூன்று ஆண்டுகள் இஸ்ரயேல் நாட்டில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் உணவுக்கு வழியில்லாமல் தவித்தனர். அப்போது பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புதுத்தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தன் கோணிப்பை நிறைய முற்றிய தானியக் கதிர்களையும் கொண்டு வந்து எலிசாவிடம் கொடுத்தார் (2அர 4:42) என்று சொல்லப்பட்டுள்ளது. அவரிடம் உணவுப் பொருள் இருந்தது ஓர் இனிய ஆச்சர்யம்! பல நாள்களுக்கு முன்
விளைந்து அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் அவை. இன்னும் கெட்டுப் போகாமல் இருந்தன. அவற்றைக் கொண்டு அப்பங்கள் செய்ய முடிந்தது. வாற்கோதுமையின் ‘நிலைத்திருக்கும்’ பண்பு
இங்கே குறிப்பிடத்தக்கது.
யோவான்
6-ஆம் பிரிவில் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் புதுமையில், அவருடைய மூலதனமாக இருந்தது என்ன? ஒரு சிறுவன் கொடுத்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் (யோவான் 6:9). எல்லாரும்
வயிறார உண்டபின் “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்”
என்று இயேசு சொல்கிறார். அவை அடுத்த சில வேளைகளுக்கும் பயன்படும். கெட்டுப் போகா. நீதித்தலைவர்கள் கிதியோனும் அவருடைய படைவீரர்களும் ஒரு ‘வாற்கோதுமை அப்பம்’ என்று குறிப்பிடுகிறார்கள். மிதியானியருக்கு எதிரான போரின்போது, போர்க்களத்தில் ஒருவன் தன் தோழனிடம் தான் கண்ட கனவு பற்றிச் சொல்கிறான்: “நான் கனவு ஒன்று கண்டேன். வட்டமான ஒரு வாற்கோதுமை அப்பம் மிதியானியரின் பாளையத்திற்குச் சுழன்று வந்தது. அது கூடாரத்திற்கு வந்து அதன்மேல் மோதிக் கீழே விழுந்தது. அது கூடாரத்தைத் தலை கீழாகப் புரட்டியது. கூடாரம் கீழே விழுந்தது”
(நீதித் தலைவர்கள் 7:13). கிதியோனின் வலிமைமிகு வாள்தான் அந்த வாற்கோதுமை அப்பம்.
வாற்கோதுமை
தானியத்தின் வலிமையும், விரைவில் விளையும் தன்மையும், நிலைத்திருக்கும் பண்பும், நம்பிக்கையளர்களின் ஆன்மிக முதிர்ச்சிக்கும், எந்தச் சூழ்நிலையிலும் தளராமல் இருந்து சான்று பகர்தலுக்கும் ஓர் உருவகமாக உள்ளது.
பெந்தகோஸ்து திருவிழா!
இது
இரண்டாவது முக்கிய யூதத் திருப்பயணத் திருவிழா. பாஸ்கா விழா முடிந்து ஏழு வாரங்கள் கழித்து, 50-ஆம்
நாள் கொண்டாடப்பட்டது. இது ஒரு கோடை விழா. வரலாற்று ரீதியாக இந்நாள் இஸ்ரயேல் மக்களுக்குச் சீனாய் மலையில் கடவுள் மோசே வழியாகப் பத்து கட்டளைகள் தந்த நிகழ்வை நினைவுகூர்ந்தது. இது கோதுமை அறுவடையின் முடிவில் நடைபெற்றது. விழா நாளில் தலைமைக் குரு செலுத்த வேண்டிய முக்கியக் காணிக்கை இரண்டு கோதுமை அப்பங்கள். “ஏழாவது ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில், ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள். நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபதுபடி அளவுள்ள மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி, இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு முதற் பலனின் ஆரத்திப்பலியாகக் கொண்டு வாருங்கள்”
(லேவியர் 23:16-17).
நல்ல
கோதுமை விளைச்சலைக் கொடுத்த கடவுளுக்கு பெந்தகோஸ்து நாளில் நன்றி செலுத்தப்படுகிறது. கோதுமை மத்திய தரைக்கடல் நாடுகளின் மிக முக்கிய உணவுப் பயிர். 10,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பயிரிடப்பட்டு வருகிறது. நிலம் தானாகக் கோதுமையைக் கொடுக்காது. மனிதர்
தங்கள் உழைப்பினாலும் கோதுமையை விளைவித்துவிட முடியாது. கடவுளின் ஆதரவு கோதுமை விளைச்சலுக்குத் தேவை என்று மக்கள்
நம்பினார்கள். திருப்பாடல் ஆசிரியர், “வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே”
(திபா 128:2) என்றும், “அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்” (திபா
147:14) என்றும் சொல்வதைக் கவனிக்க வேண்டும். ‘கொழுப்பான’
கோதுமை ஆண்டவருடைய சிறப்பு அருளின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. “பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் ஆகியவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச்சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார்” (இணைச்
சட்டம் 32:14).
திருவிலியத்தில்
கோதுமை மடிதலுக்கும், மறு உயிர்ப்புக்கும் உருவகமாகச் செயல்படுகிறது. “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்; அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்” (யோவான்
12:24) என்று இயேசு சொல்கிறார்.
கூடாரத் திருவிழா!
இது
இலையுதிர் காலத்தில் கொண்டாடப்பட்ட மூன்றாவது திருப்பயணத் திருவிழா. வரலாற்று ரீதியாக இந்நாள் இஸ்ரயேல் மக்களின் 40 ஆண்டு கால பாலைவனப் பயணத்தில், அவர்கள் கூடாரங்களில் தங்கியிருந்த நிகழ்வை நினைவுகூர்ந்தது. விவசாயப் பின்புலத்தில் இது திராட்சைப் பழங்களின் அறுவடைக்கு நன்றி செலுத்தும் விழா. வருடத்தின் ஏழாம் மாதத்தின் 15-ஆம் நாள் ஆரம்பித்து, தொடர்ந்து ஏழு நாள்களுக்குக் கொண்டாடப்பட்டது. எல்லா யூத ஆண்களும் இதில் பங்கெடுக்க எருசலேமுக்கு வரவேண்டும். எருசலேமைச் சுற்றி உள்ள பகுதிகளில், தற்காலிகமாகக் கூடாரங்கள் அமைத்து, அதில் தங்கி மக்கள் இவ்விழாவில் பங்கெடுத்தார்கள். ஏழு நாள்களும் ஆண்டவருக்குப் பலி செலுத்தப்பட்டது. அதில் முக்கியமானது, ஒவ்வொரு
நாளும் திரு உறைவிடத்தில் திராட்சை மதுபானத்தை ஊற்றிச் செய்யும் நீர்மப்படையல் (எண்ணிக்கை 28:7), எட்டாம் நாளில் நடைபெறும் ஒரு சிறப்புக் கூட்டத்தோடு (எண்ணிக்கை 29:35) விழா நிறைவுக்கு வந்தது. தலைமைக்குரு சிலோவாம் குளத்திலிருந்து ஒரு பொற்குடத்தில் தண்ணீர் மொண்டு வந்து, ஆடம்பரமாகப் பீடத்தின் மீது ஊற்றும் வழிபாடு இவ்விழாவின் மற்றொரு சிறப்பு அம்சம்.
திராட்சை
இரசம், தண்ணீர் என்று ‘நீர்மை’ கூடாரத் திருவிழாவில் ஆதிக்கம் செலுத்துகிறது. மழைக்காலத்துக்குச் சற்றுமுன் கொண்டாடப்பட்ட இத்திருவிழாவில், நல்ல மழையைக் கடவுள் தர வேண்டும்; அடுத்த
வருடமும் நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று மக்கள் வேண்டினார்கள்.
புதிய
ஏற்பாட்டில் தண்ணீர் ஒரு மிக முக்கிய இறையியல் சொல்லாடல். யோவான் நற்செய்தியில் மட்டும் ‘தண்ணீர்’ என்ற சொல் 22 முறை வருகிறது. சமாரியப் பெண்ணுடனான நீண்ட உரையாடலில் இயேசு தம்மை ‘வாழ்வு தரும் தண்ணீர்’ என்று நிலைநாட்டுகிறார் (யோவான் 4:10). யோவான் நற்செய்தி 7-ஆம் பிரிவில், இரகசியமாகக் கூடாரத் திருவிழாவில் பங்கேற்கும் இயேசு, விழாவின் இறுதியான பெருநாளில் எழுந்து நின்று உரத்தக் குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்; மறைநூல் கூறுவது போல், அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வுதரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்”
(யோவான் 7:37-38) என்று கூறுகிறார். இயற்கை நீராதாரங்களைக் கொண்டாடிய ஒரு விழாவில், இயேசு வாழ்வு தரும் தண்ணீரை அறிமுகப்படுத்தினார்.
இந்தப்
பொங்கல் திருநாளின்போது அரிசியோடும் கரும்போடும், மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று திருவிவிலியத் தானியங்களையும் நினைவுகூர்வோம்.
வாற்கோதுமை
போல நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், கோதுமை மணி போல மடிந்து உயிர்த்தெழவும், திராட்சைப் பழம் சுட்டிக்காட்டும் வாழ்வின் ஊற்றில் மூழ்கி எழவும் பொங்கல் திருநாள் நமக்குக் கற்றுத் தரட்டும்.
பொங்கலோ
பொங்கல்! இயேசுப் பொங்கல்!
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)