தவளை ஒன்றைக் கொதிக்கும் நீரில் தூக்கிப் போட்டால், அது உடனே துள்ளி வெளியே குதித்து விடும். ஆனால், குளிர்ந்த நீரில் தூக்கிப் போட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேற்றினால் அந்தத் தண்ணீரிலேயே இருந்து வெந்து செத்துவிடும். வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும்போது அந்த வெப்பத்தின் தாக்கத்தை தவளை உணர்வதில்லை. நம் நாட்டு மக்களும் அந்தத் தவளையைப்போல் இருக்கிறார்களோ என்று நான் அடிக்கடி நினைப்பது உண்டு.
கடந்த
பத்து ஆண்டுகளாக மோடி அரசு பின் பற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களைத் தொடர்ந்து சிதைத்து வருவதால், தேசத்தின் பொதுச்சொத்துகளைப் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் வரை முறையில்லாமல் சுருட்டிக் கொழுக்க அனுமதிப்பதால், சனநாயக நிறுவனங்களைச் சீரழிப்பதால், இயற்கை வளங்களைத் தனியார் கொள்ளையிட அனுமதிப்பதால், சாதிமத மோதல்களைத் திட்டமிட்டு உருவாக்கி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுப்பதால் நாடு ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
நாட்டின்
முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி, மோடிமயமாக்கப்பட்டிருக்கும்
முதலாளித்துவ கார்ப்பரேட் ஊடகங்கள் தொடர்ந்து செய்து வரும் பொய்ப்பிரச்சாரம், கள எதார்த்தங்களை மக்களிடமிருந்து
திட்டமிட்டு மறைக்கும் கபட விளம்பர யுக்திகள், அனைத்துப் பிரச்சினைகளையும் மதமயமாக்கும் அடையாள அரசியல் போன்ற சதிகளால் சாமானிய மக்களின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. அவர்களது கண்களைத் திறக்க செய்து, எதார்த்தங்களைக் காணவைத்து அதர்ம அரசியலை முடிவுக்குக் கொண்டுவர உண்மைகளைத் தொடர்ந்து நாம் மக்கள் மன்றத்தில் வைப்போம்.
புயலும்
சூறாவளியும் பேரழிவும் வரும்போது அது வருவதற்கான அடையாளங்களையும் சூழ்நிலைகளையும் வானிலை விஞ்ஞானிகள் முன்கூட்டியே அறிந்து அறிவிப்பதைப்போல, பெரும் பொருளாதாரப் பேரழிவு வரக் காத்திருப்பதைப் பொருளாதார அறிஞர்கள் கடந்த சில மாதங்களாகச் சில குறியீடுகளைக்காட்டி நாட்டு மக்களை எச்சரிக்கின்றனர்.
தன்னுடைய
ஆட்சிக் காலத்தில் ஏழை மக்களின் வாங்கும் சக்தி (purchasing power) தொடர்ந்து அதிகரித்து
வருவதாக உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியை நமது பிரதமர் வாய் கூசாமல் அடிக்கடிக் கூறி வருகிறார். ஆனால், அவரது அரசின் பல துறைகள் வெளியிடுகின்ற
அதிகாரப்பூர்வத் தகவல்களும், ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள், சர்வதேசத் தர நிர்ணய அமைப்புகள்
போன்ற நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களும் பிரதமர் சொல்வதற்கு முற்றிலும் முரணான தகவல்களைத் தருகின்றன.
127 நாடுகளைக் கொண்ட
உலகளாவிய பட்டினிக் குறியீடு பட்டியலில் இந்தியா 105-வது இடத்தைப் பெற்றுள்ளது. பட்டினிக் குறியீட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மிகவும் மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. 13.7% மக்கள் ஊட்டச்சத்துக்
குறைபாட்டுடனும்,
35.5% குழந்தைகள் வளர்ச்சிக் குன்றியவர்களாகவும், 18.7% குழந்தைகள் எடை
குறைந்தவர்களாகவும்,
3% குழந்தைகள் ஐந்து வயதுக்கு முன்னரே இறந்து விடுவதாகவும் அந்தப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ச.க. அரசின்
‘நிதி ஆயோக்’ சொல்லும் தகவல்கள் இதைவிட அதிர்ச்சியானவை. வறுமை ஒழிப்பில் இந்திய விழுக்காடு 72. பட்டினி ஒழிப்பில் இந்திய விழுக்காடு 52. தரமான கல்வியை வழங்குவதில் இந்திய விழுக்காடு 61. பாலினச் சமத்துவத்தில் இந்திய விழுக்காடு 49. குறைந்த விலை, சுத்தமான ஆற்றல் குறியீட்டில் இந்தியா 68. இந்தத் தகவல்கள் வெளியான அதே நாளில், “இந்தியா கடந்த சில ஆண்டுகளில் வலிமை மிக்க தேசமாகவும், மதிப்பிற்குரியதாகவும் உருவெடுத்துள்ளது” என்று
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.
பொருளாதாரம்
‘வென்டிலேட்டர் சப்போர்ட்டில்’ இருக்கிறது
என்பதைச் சில முக்கியத் தகவல்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அடித்தட்டு
மற்றும் நடுத்தர மக்களின் ‘நுகரு தல்’
(consumption) மிகவும் குறைந்து வருகிறது. உணவுப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைத் தேவைகளுக்கான பொருள்களைச் சந்தைகளில் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தும் இந்த மக்கள் கைகளில் பணப் புழக்கம் இல்லாததால் இப்பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் மூடப்படும் அபாயத்தில் இருக்கின்றன. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தொழிலாளர்களின் ஊதியங்களில் கடந்த எட்டு வருடங்களாக எவ்வித மாற்றமும் இல்லை. கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற அத்தியாவசியச் சேவைகளின் கட்டணங்கள் கூடிக்கொண்டே வருவதால் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் உணவுக்காகச் செலவிடுகின்ற தொகையினைக் குறைத்துக் கொண்டுள்ளனர். அதை மட்டும்தான் அவர்களால் குறைத்துக் கொள்ள முடியும்.
‘இந்தியப் பொருளாதாரத்தை இழுத்துச் செல்லும் என்ஜின்’ நடுத்தர மக்களே! (Middle Class) அவர்களது
பொருளாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களது சேமிப்பு விகிதம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. வங்கிகளில் தங்க நகைக் கடன்கள் 50% அதிகமாகியுள்ளது. அது மட்டுமின்றி,
அடகு வைத்த நகைகளை மீட்டெடுக்க முடியாத நிலையில் அவர்கள் இருப்பதால் நகைமீது வாராக்கடனும் 30% அதிகரித்துள்ளது.
கார்
விற்பனை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகவும் சரிந்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதால், உற்பத்தி குறைந்து, உற்பத்தி குறைந்ததால் ஜி.எஸ்.டி.
வரிவசூல் குறைந்து கொண்டே வருகிறது. வரிவசூல் குறைந்தால் மோடி அரசு சாமானிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில்தான் முதலில் கைவைக்கும் என்பது நமது கடந்த கால அனுபவம்.
வங்கிகள்
வழங்கும் கடன் விகிதங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள்தாம் அதிகம் வழங்கப்படுகின்றன. தொழில் மற்றும் வியாபாரத் தேவைகளுக்கான கடன் கோரிக்கைகள் குறைந்து கொண்டே வருகின்றன. வங்கிகள் அல்லாத நிதி கம்பெனிகள் (NBFC) வழங்கி
வந்த கடன்களும் இந்தக் காலாண்டில் 13.5% குறைந்துள்ளது.
குறைந்து
கொண்டே வரும் மக்களின் நுகர்தலின் திறம் (Puchasing Capacity), உற்பத்திக்
குறைவால் சுருங்கிப் போன முதலீடுகள், குறைந்து கொண்டே போகும் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் போன்ற துயரச் சோதனைகள் தொடரும் என்றால், அதன் விளைவுகள் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் படுமோசமாக இருக்கும்.
பேரழிவை
நோக்கிச் செல்லும் வேகத்தை அதிகரிக்கும் அடுத்த முக்கியக் காரணி டாலருக்கு எதிராகச் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு. ஏற்றுமதிகள் குறைந்து, இறக்குமதிகள் அதிகரிப்பதும், சர்வதேச நாணயச் சந்தையில் இந்திய ரூபாய்க்குத் தேவையில்லாமல் இருப்பதும் ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள். பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரத்தில் முதலீடு செய்த பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைப் பெரும் இலாபத்தோடு வெளியே எடுத்துச் செல்லும்போது டாலரின் தேவை அதிகரிக்கிறது. அதனால் அதன் மதிப்பு அதிகரிப்பதால் ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு டாலர்களைச் சந்தையில் விட்டு, டாலர்களின் தேவைகளைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நமது அந்நியச் செலாவணியின் கையிருப்பு வேகமாகச் சரிகிறது. வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் ஒரு டாலரின் மதிப்பு 386-ஐத் தொடுகிறது.
நமது
மறதிதானே மோடியின் பலம்! 2013-இல் 40-43 ரூபாயாக டாலர் மதிப்பு இருந்தபோது அன்றைய பா.ச.க.வின் பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கிறதா?
“டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைகிறது என்றால், நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் பிரதமர் கோழை என்று அர்த்தம். கையாலாகாத பேடி என்றும் சொல்ல வேண்டும். பிரதமரின் திறமையின்மையே ரூபாயின் மதிப்பு சரிவதற்கான காரணம்” என்று பேசியவர்தான் மோடி.
நாம்
அதே வார்த்தைகளை அவருக்கு எதிராகப் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில், அவர் நம் தேசத்தின் பிரதமர். அப்படித் தரக்குறைவாகப் பேசும் கலாச்சாரம் நமது மரபணுக்களில் இல்லை.
பொருளாதார
வீழ்ச்சிக்கான காரணங்களை அறிந்து, அவற்றைச் சரிசெய்யும் எந்த முயற்சியிலும் ஈடுபட மோடி அரசு விரும்பவில்லை. மேலும் மேலும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினருடைய தோள்களில் பாரத்தை ஏற்றுகின்ற வகையில் அவர்கள் கட்டுகின்ற ஜி.எஸ்.டி.
போன்ற வரிகளைக் கூட்டிக் கொண்டே வருகிறது. பாப்கார்னுக்கு மூன்று விதமான வரிகளை விதிக்கும் நிர்மலா சீத்தாராமனின் பொருளாதார அறிவைப் பற்றி சுப்பிரமணியசுவாமி சொல்வதைப் போல தரம் தாழ்ந்து விமர்சிக்க நாம் தயாராக இல்லை.
அடித்தட்டு
மக்கள் கைகளிலும், நடுத்தர மக்களின் பைகளிலும் பணம் இருந்தால் அந்தப் பணம் உடனே சந்தைக்கு வந்துவிடும். மக்கள் பொருள்களை வாங்குவார்கள். உற்பத்தி கூடும். வேலை வாய்ப்புகள் பெருகும். பெரும் பணக்காரர்களிடம் பணம் மேலும் மேலும் சேர்ந்தால் தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு மார்க்கெட்டில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்படும். சந்தைக்கு வராது. பொருள்களை வாங்காது. உற்பத்தியைப் பெருக்காது. வேலை வாய்ப்புகளை உருவாக்காது. இந்தக் குறைந்தபட்ச பொருளாதாரப் புரிதல் கூட இல்லாமல் மேலும் மேலும் பணக்காரர்களுக்கே அதிக வசதிகளையும் சலுகைகளையும் தொடர்ந்து செய்து வரும் மோடி அரசின் பொருளாதார பயங்கரவாதத்தை என்னவென்று சொல்வது?
எங்கள்
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘பெற்ற தாய் குலைப்பட்டினி; மகன் கோதானம் கொடுத்தானாம்’ என்று.
பெற்ற தாய் வீட்டில் பட்டினியால் சாகக்கிடக்கிறாள். மகன் பசு மாட்டைத் தானம் கொடுத்தானாம். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடனின் மனைவிக்குப்
பிரதமர் மோடி பரிசாக அளித்த வைர மோதிரத்தின் விலை ரூபாய் இருபது இலட்சத்திற்கும் மேல் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. உலகின் எந்த நாட்டுத் தலைவரும் அவ்வளவு விலை உயர்ந்த பரிசை அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு இதுவரை வழங்கியதில்லையாம்!
‘வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற மக்கள் உலகிலே மிக அதிகமாக இருக்கும் ஒரு நாட்டின் பிரதமர் இப்படியெல்லாம் மக்களின் வரிப் பணத்தைச் செலவிடலாமா?’ என்று நாம் கேட்டால், ‘அவர்கள்’ நம்மை ‘தேசவிரோதிகள்’ என்று
அழைப்பார்கள். நம் மக்களைப் போல நாமும் கண்களை மூடிக் கொள்வோம்; அவர்கள் பார்வையில் அப்போதுதான் நாம் ‘தேசபக்தர்கள்.’ இதுதான் மோடி காணும் ‘புதிய இந்தியா!’