news-details
ஆன்மிகம்
அமைதியில் செயலாற்றுதலினுடைய முன்மாதிரி மரியா - Mary is model of persevering silence (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 06)

1. திரு அவை வாழ்வினுடைய மரியியல் கூற்றைப் பற்றிச் சிந்தித்த பிறகு, இப்பொழுது நாம் அவருடைய எடுத்துக்காட்டாலும் பரிந்துரையாலும் திரு அவைக்கு அளவிட முடியாத ஆன்மிக வளத்தை மரியா வழங்குவதைப் பற்றிச் சிந்திக்கப் போகின்றோம்.

முதலாவதாக, நாம் எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் அவர்களுடைய சொந்த அழைத்தலை ஏற்றுக்கொள்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் விலைமதிப்பில்லாத வழிகாட்டுதலைத் தருகின்ற மரியாவினுடைய  ஆளுமையின் சில சிறப்புக் கூறுகளைப் (significant aspects of Mary’s personality) பற்றிச் சிந்திப்போம்.

நம்பிக்கையின் வழியில் மரியா நமக்கு முன் சென்றிருக்கின்றார்!

வானதூதருடைய செய்தியை நம்பி, மனுவுருவாகும் மறையுண்மையை முதலில் வரவேற்பவராக மரியா இருந்தார் மற்றும் மிகச் சரியாக அதை நிறைவேற்றினார் (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண். 13). ‘நம்பிக்கையாளர்என்ற நிலையில் அவருடைய பயணமானதுஇறைவனுடைய தாய்என்ற அவருடைய நிலைக்கு முன்பே தொடங்கியது. மேலும், அவருடைய பூவுலக அனுபவம் முழுவதும் மிக ஆழமான முறையில் அது வளர்ச்சியடைந்தது. அவருடைய நம்பிக்கையானது ஒரு துணிச்சலான நம்பிக்கையாக (daring Faith) இருந்தது. கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் மனித நிலையில் முடியாத ஒன்றை அவர் நம்பினார்; மற்றும் இயேசுவினுடைய மெசியாவுக்கான ஆற்றல்களை (Messianic powers) வெளிப்படுத்த வேண்டி கானாவூர் திருமணத்தில் அவருடைய முதல் அற்புதத்தைச் செய்வதற்கு அவர்  இயேசுவைத் தூண்டினார் (ஒப்பிடுக. யோவா 2:1-5).

எல்லாச் சூழலிலும் தேவைப்படுகின்ற துணிச்சல் மற்றும் விடாமுயற்சி போன்ற பண்புகளால் கிறித்தவர்களுடைய வாழ்வில் அவர்களுடைய நம்பிக்கையை  நீடித்த முழு ஈடுபாடு கொண்டதொரு பயணமாக என்றென்றைக்கும் வாழ்வதற்கு மரியா கற்றுத் தருகிறார்.

மரியாவின்  தாழ்ச்சிநிறை மறைமுக வாழ்வு!

2. இறை விருப்பத்திற்கான மரியாவினுடைய பணிவு அவருடைய நம்பிக்கையோடு இணைந்த ஒன்றாகும். கடவுளுடைய வார்த்தையை நம்பி கன்னி மரியா அவருடைய வாழ்வில் இறைத்திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடிந்தது. மேலும், கடவுளுடைய உயர்வான திட்டத்திற்கு ஏற்புடையவராகத் தன்னையே கையளித்து, இறைவனால் அவரிடம் கேட்கப்பட்ட அனைத்தையும் அவர் தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இவ்வாறாக, திரு அவையில் கன்னி மரியாவினுடைய உடனிருப்பானது இறைவார்த்தைக்குச் செவிசாய்க்கவும், பல்வேறுபட்ட அன்றாட நிகழ்வுகளில் அவருடைய அன்பான திட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் மற்றும் அதை நிறைவேற்றுவதில் நம்பிக்கையோடு ஒத்துழைப்பதற்கும் கிறித்தவர்களை ஊக்குவிக்கின்றது.

3. இவ்வாறு கடவுளிடம் தங்களையே முழுமையாகக் கையளித்து, தங்களுடைய எதிர்காலத்தைக் காண்பதற்கு, நம்பிக்கையாளர்களின் குழுமத்திற்கு மரியா கற்றுத்தருகிறார். மரியாவினுடைய  தனிப்பட்ட அனுபவத்தில், நம்பிக்கையானது எப்பொழுதும் புதிய காரணங்களோடு வளமையாக்கப்பட்டுள்ளது. இயேசுவினுடைய பிறப்பின் அறிவிப்பிலிருந்தே, அவருடைய கன்னித் திருவயிற்றில் மனுவுருவான இறைமகன் பற்றிய பழைய இஸ்ரயேலுடைய எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்துகின்றார். மரியாவினுடைய  நம்பிக்கையானது நாசரேத்தில் இயேசுவினுடைய வெளிப்படாத வாழ்வு மற்றும் அவருடைய மக்கள் பணி போன்ற தொடர் நிலைகளால் பலப்படுத்தப்பட்டது. சிலுவைப் பயண நிகழ்வுகளைச் சந்தித்தபோதுகூட தன்னுடைய இலக்கில் தடுமாறுவதிலிருந்துமூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்என்று அறிவித்த கிறிஸ்துவினுடைய வார்த்தைகளில் அவர் வைத்திருந்த ஆழமான நம்பிக்கையானது தடுத்தது. மீட்புப் பணியினுடைய நிறைவில் அவருடைய நம்பிக்கையைத் தக்கவைத்து, பெரிய வெள்ளியினுடைய இருளுக்குப் பின்னும் உயிர்ப்பின் நாளுக்காக உறுதியுடன் காத்திருந்தார்.

வரலாறு முழுவதுமே நம்பிக்கையாளர்களின் குழுமமானது அவர்களுடைய துன்பப் பாதையில், ‘ஏற்கெனவேபெற்றுக்கொண்ட மீட்பு மற்றும்இன்னும் அடையப்படாதஅதனுடைய நிறைவு இவைகளுக்கிடையேயும் அவர்கள்நம்பிக்கையின் அன்னையினுடைய உதவியில் நம்பிக்கை வைக்கலாம் என்பதில் உறுதியாய் இருந்தார்கள். இறப்பின் மீது கொண்ட  கிறிஸ்துவினுடைய வெற்றிக்குப்பின் கடவுளுடைய எதிர்காலத் திட்டத்திற்காகக் காத்திருப்பதற்கும் ஆண்டவருடைய வாக்குறுதிக்கு அவர்களையே கையளிப்பதற்கும் எப்பொழுதும் இல்லாததொரு புதிய ஆற்றலை அவர் அவர்களுக்குக் கொடுக்கின்றார்.

4. மரியாவினுடைய எடுத்துக்காட்டானதுஅமைதியின் அருமையைபாராட்டுவதற்கு, மிகச் சிறப்பாகத் திரு அவையைத் தூண்டுகிறதுமரியாவினுடைய அமைதியானது பேசுவதில் அடக்கமாக இருப்பதில் மட்டுமல்லாமல், சிறப்பாக நம்பிக்கையினுடைய ஒரே பார்வையில் மனுவுருவான வார்த்தையினுடைய மறைபொருள் மற்றும் அவருடைய பூவுலக வாழ்வின் நிகழ்வுகளை நினைவுகூர்வதிலும் மற்றும் ஆர்வத்தோடு அவைகளை ஏற்றுக் கொள்வதிலும் இருந்த அனுபவச் செறிவுமிக்கதோர் ஆற்றலுமாகும்.

வார்த்தையை ஏற்றுக்கொண்டதன் விளைவாக, கிறிஸ்துவினுடைய மறையுண்மையைத் தியானிப்பதற்கான ஆற்றலைத் தருகின்ற இந்த அமைதியைத்தான் நம்பிக்கையாளர்களுக்கு அன்னை மரியா கொடுக்கின்றார். பல்வேறு வகையான செய்திகளாலும் நிறைந்திருக்கின்ற சத்தம் நிறைந்ததோர் உலகில், மரியாவுடைய எடுத்துக்காட்டான வாழ்வானது ஓர் ஆன்மிக  வளமையுள்ளதோர் அமைதியைப் பாராட்டுவதில் நமக்கு உதவுகிறது மற்றும் அமைதியில் தியானிக்கும் ஆற்றலை நம்மில் வளர்க்கின்றது.

மரியா தாழ்ச்சிநிறை மறைமுக வாழ்வினுடைய மதிப்பிற்குச் சான்றாகின்றார். வழக்கமாக, நாம் அனைவரும் நமது சொந்த ஆளுமை மற்றும் பண்புகளை அடைவதற்கு வற்புறுத்தப்படுவதும் உரிமை கோருவதும் என முயற்சிக்கின்றோம். எல்லாரும் மதிப்பிற்கும் பெருமைக்கும் ஆசைப்படுகின்றவர்களாக இருக்கின்றோம்.

திருத்தூதர்கள் இறையரசில் மிக முக்கியமான இடங்களைக் கேட்பவர்களாக இருந்தனர் மற்றும் அவர்களில்யார் மிகப் பெரியவர்?’ என்பதைப் பற்றியும் விவாதித்தனர் என்று நற்செய்திகள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. இந்த விசயத்தில் இயேசு தாழ்ச்சி மற்றும் பணியின் தேவையை அவர்களுக்குக் கற்றுத்தந்தார் (ஒப்பிடுக. மத் 18:1-5; 20:20-28; மாற் 9:33-37; 10:35-45; லூக் 9:46-48; 22:24-27). அதற்கு மாறாக, மரியா பெருமையையோ அல்லது சிறப்புத் தகுதி நிலையினுடைய நிலையையோ ஒருபோதும் தேடாமல், தந்தையினுடைய மீட்புத் திட்டத்திற்கு இணங்கியதொரு வாழ்க்கை வாழ்ந்து, கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றவே எப்பொழுதும் முயன்றார்அர்த்தமற்ற வாழ்வு போலத் தோன்றுவதனுடைய பாரத்தை அடிக்கடி உணர்கின்ற அனைவருக்கும், கிறிஸ்துவினுடைய அன்பிற்காக மற்றும் ஒருவருடைய சகோதர- சகோதரிகளுக்காக வாழ்கின்ற வாழ்வானது எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை மரியா வெளிப்படுத்துகிறார்

5. மேலும், மரியா தூய்மையான மற்றும் எல்லா மனிதர்களிடத்தும் கருணை நிறைந்ததொரு வாழ்வினுடைய மதிப்புக்குச் சான்றாகின்றார். முழுவதும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவருடைய ஆன்மாவினுடைய அழகானது கிறித்தவ மக்களுக்கு வியப்பானதொன்றாக இருக்கின்றது. அன்பாலும் கருணையாலும் நிறைந்து, உடல் மற்றும் உள்ளத் தூய்மையில் வாழ்ந்ததன் காரணமாக மரியாவில் கிறித்தவக் குழுமமானது பெண்மைக்கான இலக்கணத்தை எப்பொழுதும் கண்டது.

கற்பினுடைய மதிப்பை நமது சமூகம் அங்கீகரிக்கவில்லையோ? தனிமனித மாண்பு மற்றும் கடவுளுடைய திட்டத்திலிருந்து பாலுணர்வைப் (sexuality) பிரித்ததன் காரணமாகக் கற்பானது மாண்பிழந்திருக்கிறதோ? என்று நாம் வாழும் காலச்சூழலில் எண்ணத் தோன்றுகின்றது. இப்படிப்பட்ட  ‘அவநம்பிக்கை (cynicismகொண்டதொரு கலாச்சாரத்தை நாம் சந்திக்கின்ற சூழலில், நமது மனசாட்சிக்கு ஒளியூட்டுகிற மற்றும் எல்லாப் படைப்புகளுக்கும் ஆண்டவருக்குமான எல்லையற்ற அன்பை நோக்கி வழிநடத்துகிற ஒழுக்கத் தூய்மையினுடைய சான்றாகக் கன்னி மரியா திகழ்கின்றார்.

6. மரியா என்றும் கிறித்தவர்களாக வாழ்பவர்களுக்கு மனுக்குலத்தினுடைய துன்பங்களுக்காக ஆழமான பரிவு கொண்டுள்ளவராகத் தோன்றுகின்றார். இந்த இரக்கம் உணர்வுப்பூர்வமான பரிவில் மட்டும் அடங்கியிருக்கவில்லை; மாறாக, மனுக்குலத்தினுடைய பொருள் சார்ந்த மற்றும் ஒழுக்க இழிநிலை சார்ந்தவைகளோடு நேர் எதிரே நிற்கின்றபொழுது இது வலுவாகவும் திடமாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. மரியாவைப்  பின்பற்றுவதில், திரு அவையானது பூமியிலுள்ள அனைத்து ஏழை மற்றும் துன்பப்படுபவரிடம் அதே மனப்பான்மையைக் கொண்டிருக்க அழைக்கப்படுகின்றது. குறிப் பாக, புத்தாயிரத்தினுடைய தொடக்கத்தில் ஆண்டவருடைய தாயினுடைய-தாய்மைக்குரிய பார்வையானது கண்ணீர், துயரங்களை அனுபவிக்கின்ற எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுடைய துன்பங்களைக் கண்டு, இன்றைய தாழ்த்தப்பட்ட மற்றும் துன்பப்படுகின்ற மக்களை முன்னேற்றுகிற நிலையான மற்றும் கண்ணால் காணக்கூடிய அன்பின் அடையாளங்களை அதிகரிப்பதற்கும், கிறிஸ்துவின் உயிர்ப்பில் பிறந்த புதிய உலகினுடைய வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்துகொள்வதற்கும் தூண்ட வேண்டும்.

7.  தாய் மீதான மனித அன்பு மற்றும் பக்தி நாம் காண்கின்ற திரு அவையினுடைய எல்லைகளைத் தாண்டிச் செல்கிறது மற்றும் மன்னிக்கும் மனநிலைகளை வளர்க்கிறது. தாய் என்ற வகையில், அவருடைய எல்லாக் குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென மரியா விரும்புகிறார். திரு அவையில் மரியாவினுடைய  உடனிருப்பானது முதல் கிறித்தவக் குழுமத்தில் ஆட்சி செய்த அதே உள்ள-ஒன்றிப்பைப் பாதுகாப்பதற்கும் (ஒப்பிடுக. திப 1:14) மற்றும் அதன் காரணமாக நல்லெண்ணம் கொண்ட அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களிடையேயும் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான வழியைத் தேடுவதற்குமான ஓர் அழைப்பாக இருக்கிறது.

அவருடைய மகனிடம் பரிந்து பேசுவதில், அன்பின் பண்பாட்டை (civilization of love) கட்டியெழுப்பிடவும், வேற்றுமைக்கான மனப்பான்மை, பழிவாங்குதல் மற்றும் பகைமைக்கான தூண்டுதல், வன்முறை மீதான அளவில்லாப் பற்று ஆகியவற்றை வென்றெடுத்திடவும், மனுக்குலம் அனைத்திற்குமான ஒற்றுமையினுடைய அருளை மரியா கேட்கின்றார்.

மரியா நம்முடைய மகிழ்ச்சியின் காரணமாக இருக்கின்றார்

8. நிறைய மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ள மரியாவினுடைய உருவங்களில் (iconography), கன்னி மரியாவினுடைய தாயுள்ளம் கொண்ட புன்னகையானது பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய அருள் மற்றும் அமைதியினுடைய முழுமையை வெளிப்படுத்துகிறது. அவருடைய ஆன்மாவினுடைய இந்தச் சாந்தமான தோற்றமானது திரு அவைக்கு ஒரு மகிழ்ச்சியான முகத்தைக் கொடுப்பதில் பயனுள்ள வகையில் பங்காற்றுகின்றது

இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பு அறிவிப்புச் செய்தியில்மகிழ்ந்திரு (khaire ஒப்பிடுக. லூக் 1:28) என்ற வானதூதருடைய அழைத்தலை வரவேற்று,  சீயோனின் மகளுக்கு (Daughter of Sion) இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மீட்பின் மகிழ்ச்சியை (ஒப்பிடுக. எசா 12:6: செப் 3:15-15: செக் 9:9) முதலில் பகிர்ந்துகொண்டவராக மரியா இருந்தார் மற்றும் எல்லாக் காலத்திலும் மனுக்குலத்திற்கு அதைக் கொடுக்கிறார்.

கன்னி மரியாவைஎங்கள் மகிழ்ச்சியின் காரணமே (causa nostrae laetitiae) என்று அழைத்து, வாழ்க்கையினுடைய சோதனைகளுக்கு மத்தியிலும் கூட, நம்பிக்கையிலிருந்து பிறக்கும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும்; மேலும், அவரிடம் தங்களையே அடைக்கலமாக ஒப்படைக்கிறவர்களை முடிவில்லாத மகிழ்ச்சியை நோக்கி வழிநடத்துவதற்குமான திறனைக் கிறித்தவர்கள் அவரில் காண்கிறார்கள்.

மூலம்: Pope John Paul II, Mary is model of persevering silence, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 29 November 1995, p.11.