news-details
ஆன்மிகம்
கடவுளுக்கு மிக அருகில்! (கண்டனையோ, கேட்டனையோ! – 27)

எதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற விருதுவாக்கோடு  ஜூபிலி ஆண்டு-2025 பல இடங்களில் கோலாகலமாகவும், சில இடங்களில் கோலாகலகமாகவும்துவங்கியுள்ளது. ‘Synod on Synodalityஆர்ப்பாட்டங்கள் மெல்ல ஓய்ந்து இப்போது ஜூபிலி!

திரு அவையில் நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்கு ஏதாவது  தலைப்பு தேவை. அடுத்த ஒரு வருடத்திற்குஎதிர்நோக்கு, ‘திருப்பயணம், ‘பயணிகள், ‘இலக்குபோன்ற வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள். காது வலிக்கும். ஆனால், அசரக்கூடாது. ஒவ்வொரு முறையும் அவற்றைக் கேட்கும்போதும் முதன்முறை கேட்பது போலவே உங்கள் முகத்தை வைத்துக்கொள்ளும்படி மிகத் தாழ்மையுடன் உத்தரவிடுகிறேன்.

நாம் எல்லாரும் ஆதாரமாகப் பயணிகள். பிலிப்பியர் திருமுகத்தில் புனித பவுலடியார் கூறுகிறார்: “கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன் (பிலிப்பியர் 3:13). எது? எந்த இலக்கு? என்ன அந்தப் பரிசு?

அண்மையில் என் பங்கில் யாழினி என்ற இரண்டாவது படிக்கும் சிறுமி, நான் வைத்த பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் boycott செய்தாள். “ஏன் போட்டிக்கு வரவில்லை?” என்று கேட்டேன். அவள்ஆமாம், எப்பப் பார்த்தாலும் ஒரு சோப்பு டப்பாவையும், டபாரா தட்டையும் பரிசா தர்றீங்க. இதுக்கு நாங்க கஷ்டப்பட்டு சாக்குக்குள்ள கால விட்டுக்கிட்டு ஓடணும். போங்க ஃபாதர்... நான் வரலைஎன்று பதில் கூறிவிட்டாள். அந்தச் சோப்பு டப்பாவிற்குக் காசு சேர்க்க நான் படும் பாடு அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைஅடுத்த முறையிலிருந்து பெண் போட்டியாளர்களுக்குப் பவுடர், லிப்ஸ் டிக், Fair & Lovely போன்ற பயனுள்ள பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.  

தூய பவலடியார் குறிப்பிடும் பரிசு என்ன? “கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்என்று பிலிப்பியர் 3:14 கூறுகிறது. அதை நிலை வாழ்வு, இளைப்பாறுதல், பேரின்பம், நிறைவு, துன்பங்களற்ற நிலை, விண்ணகம் என்று பல வகைகளில் அர்த்தம் செய்துகொள்ளலாம். இந்த அர்த்தங்கள் எல்லாவற்றையும் தன்னுள் மடித்து வைத்துள்ள ஓர் அழகிய விவிலியப் படிமம் - புதிய எருசலேம் நகர்! விண்ணகத்திற்கு மற்றொரு பெயர் அது. திருவிவிலியத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்கள், இந்த வார்த்தை ஆங்காங்கே தலைகாட்டுவதைக் கவனித்திருக்கலாம். இது ஒரு மிக முக்கிய இறையியல் சொல்லாடல். ரியல் எஸ்டேட்காரர்கள் கொடுக்கும் விளம்பரங்களில், ‘சென்னைக்கு மிக அருகில்என்ற வாக்கியம் கட்டாயம் இருக்கும். புதிய எருசலேம் - கடவுளுக்கு மிக அருகில் உள்ள நகர்!

இறைவாக்கினர் எசாயா நூலில் புதிய எருசலேம் நகர் படிமம்இஸ்ரயேல் மக்களின் மறுசீரமைப்பின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது வரவிருக்கின்ற எதிர்கால ஆசிர்! “இதோ! புதிய விண்ணுலகையும், புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுதுவதுமில்லை. இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும், அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன் (எசாயா 65:18-18) போன்ற வரிகள் ஓர் அலைபாயும் மக்கள் இனத்திற்கு எவ்வளவு நம்பிக்கை தந்திருக்கும் என்று யூகிக்கலாம்அழுகையில்லாத கடவுளால் மிக அந்தரங்கமாகப் பராமரிக்கப்படுகிற ஒரு வாழ்வை எசாயா அவர்கள் முன்வரைந்து காட்டுகிறார். “நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள் (எசா 66:12).

எசேக்கியேல் நூலில், “புதிய எருசலேம் நகர்படிமம் கடவுளுடைய நிரந்தர உடனிருப்பின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. “ஆண்டவரின் மாட்சிமை கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலுள் நுழைந்தது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.” உண்மையில் எசேக்கியேல் நூலில் இந்தப் புதிய நகரின் பெயரே, ‘ஆண்டவர் இங்கு இருக்கிறார்என்பதுதான் (எசே 48:35). 

எசாயா மற்றும் எசேக்கியேலிடமிருந்து இப்படிமத்தைக் கடன் வாங்கும் திருவெளிப்பாடு ஆசிரியர், அதை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்திச் செல்கிறார்.   பழைய ஏற்பாட்டு நூல்களில்புதிய எருசலேம் நகர்வரலாற்றில் வரவிருக்கிற ஒரு வளமான காலத்தைக் குறித்தது. திருவெளிப்பாடு நூலில் அது வரலாறு கடந்த நிலையான பேரின்பத்தைக் குறிக்கும் படிமம். திருவெளிப்பாடு  21 மற்றும் 22-ஆம் பிரிவுகளில் முழுவீச்சில் பயன்படுத்தப்படும்புதிய எருசலேம் நகர்படிமத்தை ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள், இந்த நகரின் சிறப்புகள் என, பத்து பண்புகளை அடையாளம் காட்டுகிறார்கள்அவை இவை...

தலைநகரம்: புதிய படைப்பின் தலைநகராகஎருசலேம் நகர்செயல்படும். “பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும், புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்என்று திவெ 21:1-2 கூறுகிறது. சென்னை, இலண்டன், பாரிஸ் போன்ற உலகின் விருப்ப நகரங்கள் தங்கள் தலைமை அந்தஸ்தை இழக்கும். உலகம்  முழுவதும்ஒரே நாடு, ஒரே தலைநகர்என்ற நிலை ஏற்படும். ‘ஒரே தேர்தல்மட்டும் இருக்காது.         

பொதுத்தன்மை: புதிய எருசலேம் நகரில் எல்லா வகை மக்களும் இருப்பார்கள். மொழி, இன, சமயப் பேதங்கள் இருக்காது. குறிப்பாகஆண்ட சாதியினர்இருக்க மாட்டார்கள். “கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து...” (லூக் 13: 29); “மக்கள் வந்து திருநகரில் குடியமர்வார்கள்கடவுள் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள் (திவெ 21:3). திருத்தந்தை பிரான்சிஸ் திரும்பத் திரும்பக் கூறுவது போல, அங்கேஎல்லாருக்கும், எல்லாருக்கும், எல்லாருக்கும்...’  இடம் இருக்கும்.

புன்னகை நிலம்: திருநகரில் யாரும் அழமாட்டார்கள். கண்ணீர் இருக்காதுஏனென்றால், கடவுள்தாமேகண்ணீர் அனைத்தையும் துடைத்து விடுவார் (திவெ 2:14). சாவு இருக்காது; துயரம் இருக்காது; வலி இருக்காது; ‘ஆதித்யாசானல் போல மக்கள் 24 மணி நேரமும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள் என்று கூறலாம். ஆனால், அதில் ஒரு பிரச்சினை... நேரமும் இருக்காது.

புனித பூமி: திருநகர் ஒரு பாவம் இல்லாத நிலம். ‘பேக்கேஜ் டூர்ஆள்கள் விளம்பரம் செய்வது போல, அப்போது எருசலேம் நகர் உண்மையிலே ஒரு புனித பூமியாக இருக்கும். “தீட்டுப்பட்டது எதுவும் ஒருபோதும் அதில் நுழையாது. அதுபோல் அருவருப்பானதைச் செய்வோரும் பொய்யரும் அதில் நுழைய மாட்டார்கள் (திவெ 21:27).

அழகொளி: பெண்கள் மிக அழகாகத் தெரிவது அவர்களின் திருமண நாளில்தான். புதிய எருசலேம் நகர்  “மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகள்என்று திவெ 21:2 சொல்கிறதுநகரின் அழகுக்கு ஆசிரியர் உத்தரவாதம் தருகிறார். புதிய படைப்பில் நிலா, கதிரவன் போன்றவை இருக்காது; கடவுளின் மாட்சியே நகரின் ஒளியாக இருக்கும் (திவெ 21:23). விலையுயர்ந்த படிகக்கல் போன்று நகரின் ஒளிபளிங்கெனத் துலங்கியதாம் (திவெ 21:11). மின்வெட்டு இருக்காது. ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் வாங்க வேண்டாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை EB பில்-ஐப் பார்த்து மயக்கம் போடும் என் போன்ற ஏழைப் பங்குப் பணியாளர்களுக்கு நிம்மதி தரும் செய்தி இதுவிலையில்லா, நிரந்தர, அழகிய ஒளி!

கோபுரங்கள்: நகரைச் சுற்றி 12 கோபுர வாயில்கள் இருக்கும். புதிய எருசலேம் சதுர வடிவில் அமைக்கப்பட்ட நகர். ஒரு பக்கத்திற்கு மூன்று வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு வகை முத்தால் ஆனது (திவெ 21:21). “இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன (திவெ 21:12). அவற்றின் வழியாக மக்கள்tollகட்டாமல் நுழைவார்கள்.

மாநகரக் காவல்:வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள்என்று திவெ 21:12 கூறுகிறது. திருநகரில் வாழ்வோர் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை. காவலர்கள் இருப்பதால் ஏதும் ஆபத்து வெளியிலிருந்து வரும் என்று அர்த்தம் இல்லை. மக்களின் பாதுகாப்பு உணர்வை அதிகப்படுத்துவதற்காகவே இந்த ஏற்பாடு. திருநகரில் வாழ்பவர்கள் உண்மையிலேயேஉன்னதரின் நிழலில் தங்கியிருப்பவர்ஆவர் (திபா 91:1).

முடிவிலி: புதிய எருசலேம் நகரில் வாழ்பவர்களுக்கு ஆப்பிள் பயன்படும். கடித்துத்  தின்னலாம். ஆனால், ‘ஆப்பிள் வாட்ச்பயன்படாது. ஏனென்றால், அங்கு நேரம் இருக்காது. இரவு இருக்காது. பகல் இருக்காது. போரடிக்காது. காலம் முன்னுக்கும் செல்லாமல், பின்னுக்கும் செல்லாமல், ஆணியடித்த மாதிரி ஒரே இடத்தில் நிற்கும், நிரந்தர ஒற்றைக் கணத்தில் வாழும் முடிவிலி வாழ்க்கை அது. எனவேதான்திருநகரின் வாயில்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும். அங்கு இரவே இராது  என்று திவெ 21:25 கூறுகிறது.

சதுர நகரம்:செம்மையாக ஒருங்கிணைத்துக் கட்டப்பட்ட நகர்என்று திபா 122:3 பழைய எருசலேம் குறித்துச் சொல்லும் வார்த்தைகள் புதிய எருசலேமுக்கும் பொருந்தும். “அந்நகரம் சதுரமாய் இருந்தது; அவர் அளவுகோலைக் கொண்டு நகரை அளந்தார். அதன் அளவு இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர். அதன் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஒரே அளவுதான்என்று திவெ 21:16 கூறுகிறது.

தேசிய நெடுஞ்சாலை 52 வழியாகப் பயணம் செய்தால், டெல்லிக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தூரம் 2,700 கிலோ மீட்டர்கள். ஆக, புதிய எருசலேம் நகரின் ஒரு பக்கம் ஏறக்குறைய இந்தியாவின் வடக்கு-தெற்கு எல்லைகளுக்கு இடையே உள்ள தூரத்தின் அளவை ஒத்தது. திருநகரின் உயரம் இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. Mind-boggling proportions for a city! இது போதாதென்று நகரின் தெருதெள்ளத் தெளிவான கண்ணாடி போன்ற பசும்பொன்னால்செய்யப்பட்டிருக்குமாம்! (திவெ 21: 21). நம் ஆள்கள் வெட்டி வியாபாரம் பண்ணாமல் இருந்தால் சரி!

அரியணை:  புதிய எருசலேம் நகரில் கோவில் இருக்காது. கடவுளும் ஆட்டுக்குட்டியுமே நகரின் கோவிலாக இருப்பார்கள் (திவெ 21:22). நகரின் மையத் தெருவில் கடவுளின் அரியணை வீற்றிருக்கும். கடவுளின் பணியாளர்கள் ஆட்டுக்குட்டியை வழிபடுவார்கள். அவர் முகத்தைக் காண்பார்கள். அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் (திவெ 22:4). அதுதான் அவர்களுடைய ஒரே அடையாள அட்டை. ஆதார் கார்டு தேவையில்லை.

புதிய எருசலேம் நகர் குறித்து வாசிக்க வாசிக்க, அதைப் பற்றிக் கூடுதலாக யோசிக்க யோசிக்க எனக்குத் தோன்றும் சிந்தனையெல்லாம்என்று நுழைவேன் இந்த அழகு நகருக்குள்?!’ என்பதுதான்.

உங்களுக்கு?             

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்).